விஸ்வ ஹிந்து பரிஷத் – நிறுவன தினம் – ஆகஸ்ட் 29

பரிவார் அமைப்புகளில் முக்கியமான விஸ்வ ஹிந்து பரிஷத்தின் நிறுவனதினம் இன்று. 1964ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் நாள் புனிதமான ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் அன்றய சர்சங்கசாலக் குருஜி கோல்வால்கர் மற்றும் ஸ்வாமி சின்மயானந்த மஹராஜ் ஆகியோரால் தொடங்கப்பட்ட இயக்கமானது இன்று ஹிந்துக்கள் இருக்கும் இடமெங்கும் பரவி விரிந்து உள்ளது. கோவில்கள் பராமரிப்பு, பசு பாதுகாப்பு, மதமாற்ற முயற்சிகளை தடுத்து நிறுத்துவது, பாதை மாறிப்போன சகோதர்களை மீண்டும் தாய்மதம் திருப்புதல், பல்வேறு கல்வி மற்றும் சமுதாயப் பணிகளில் மும்முரமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. 

பாரதிய வித்யா பவன் நிறுவனர் குலபதி முன்ஷி, கேஷவ்ராம் காசிராம் சாஸ்திரி, மாஸ்டர் தாராசிங், சத்குரு ஜக்ஜித்சிங், சி பி ராமஸ்வாமி அய்யர் ஆகியோரோடு குருஜி கோல்வால்கர், ஆப்தே, ஸ்வாமி சின்மயாந்த மஹராஜ் ஆகியோர் விஸ்வ ஹிந்து பரிஷத்தை உருவாக்கினார்கள். உலகமெங்கும் உள்ள ஹிந்துக்களின் நலனுக்காக பாடுபடும் இயக்கமாக இது இயங்கும் என்ற குறிக்கோளோடு விஸ்வ ஹிந்து பரிஷத் உருவாக்கப்பட்டது. இயக்கத்தின் முதல் தலைவராக ஸ்வாமி சின்மயானந்த மஹாராஜும் செயலாளராக ஆப்தேயும் பணியாற்றினார்கள். 

மரபான இந்திய மதங்களான சீக்கியம், பௌத்தம், சமணம், மற்றும் பல்வேறு வழிபாட்டு மற்றும் வாழ்வியல் முறைகளை சார்ந்த சமயங்களையும் உள்ளடக்கியதாக விஸ்வ ஹிந்து பரிஷத் விளங்குகிறது. ” அறம் காக்க, அறம் நம்மைக் காக்கும்” என்ற வேத வாக்கியம் இயக்கத்தின் குறிக்கோளாக பொறிக்கப்பட்டு உள்ளது. அரசியல் கலப்பில்லாத இயக்கம் என்பதால், எந்த ஒரு அரசியல் கட்சியில் பொறுப்பு வகிப்பவர்களும் இதில் பொறுப்பில் இருக்க முடியாது என்ற வரையறை உள்ளது. 

பாரத நாட்டின் மூலை முடுக்கிலெல்லாம் விஸ்வ ஹிந்து பரிஷத்த்தின் தன்னார்வலர்கள் தொண்டாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். கோவில்களில் உழவாரப் பணி, எல்லா சமுதாய தாய்மார்களும் பங்குபெறும் திருவிளக்கு பூஜை, மாணவர்களுக்கான சமய வகுப்புகள், பல்வேறு கல்வி நிலையங்கள், குறைந்த கட்டணத்தில் நடைபெறும் மருத்துவமனைகள், ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்கள், பெண்களுக்கான விடுதிகள் என்று பல தளங்களில் விஸ்வ ஹிந்து பரிஷத் செயல்பட்டுக்கொண்டு வருகிறது. பல்வேறு இயற்கை சீற்றங்கள் நாட்டைத் தாக்கும்போது அங்கே முதலில் நிவாரணப் பணிக்கு செல்வது பரிவார் அமைப்பினர்கள்தான். 

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கிளைகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா என்று பல்வேறு நாடுகளிலும் பரவி உள்ளது. ஏறத்தாழ ஆறு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் இன்று விஸ்வ ஹிந்து பரிஷத்தில் உள்ளனர். பலனின் மீது பற்று வைக்காமல் சேவை செய்யும் உறுப்பினர்கள் பலரின் உழைப்பால் சமுதாயத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தால் நீடித்த நிலையான மாற்றத்தை உருவாக்க முடிகிறது. 

(Visited 45 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *