ஆசிர்வதியுங்கள் அனந்த் பை

நான் முதலில் படித்த படக்கதை இந்திரஜால் காமிக்ஸின் வேதாள மாயாத்மா வரும் கதை. டெங்காலி காடுகளின் பழங்குடிகளிடம் அங்குள்ள குறுநில மன்னர்கள் சிங்கங்களை கொண்டு விடுவார்கள். அவற்றிலிருந்து பழங்குடிகளை காப்பாற்றுவார் வேதாள மாயாத்மா. பிறகு முத்து காமிக்ஸ். பிறகு இரும்புக்கை மாயாவியின் ’கொள்ளைக்கார பிசாசு’. பிறகுதான் தெரிய வந்தது – டெங்காலி என்றால் பெங்காலி என்று, வேதாள மாயாத்மாவில் இருந்தது நீதி உணர்ச்சி அல்ல அப்பட்டமான இனவாதம் என்று.

ஆனால் முதன்முதலாக நான் ஒரு இந்திய படக்கதையை பார்த்தது ஆறுவயதில். தமிழில் ஒரு வித பழுப்பேறிய பல வர்ணக்கதையாக ‘சாவித்திரி’. பிறகு சகுந்தலை. பிறகு கண்ணன்.

அமர் சித்திர கதை அப்படித்தான் அறிமுகமானது. இந்திரஜால் காமிக்ஸிலும் முத்து காமிக்ஸிலும் இருக்கும் சித்திரங்களுடன் அமர் சித்திரக்கதையை ஒப்பிட்டால் சித்திரத்தரம் குறைவானதாக அப்போது தோன்றியது. ஆனால் அதையும் மீறி அமர்சித்திரக்கதையில் ஒரு அழகு இருந்தது. ’சகுந்தலை’ சித்திரக்கதையின் பெண்களின் கண்களின் அழகு எத்தனை முயன்றாலும் மேற்கத்திய காமிக்ஸ்களில் வரவே முடியாது. அது குழந்தைகளுக்கு மரபிலக்கியங்களை கொண்டு வருவதில் ஒரு பொற்காலம். நேரு புத்தகாலயாவிலிருந்தும் மனோஜ் தாஸ் என்கிற தேர்ந்த எழுத்தாளர் பல இந்திய காவியங்களையும் இதிகாச புராண பாத்திரங்களையும் அருமையான உரைநடை கதை நூல்களாக வெளியிட்டிருந்தார். ஆனால் அமர்சித்திரகதை அவை அனைத்துக்கும் மணிமகுடம். காமிக்ஸ் என்கிற சித்திரகதை வடிவத்தையும் இந்திய பண்பாட்டின் சிறந்த பொக்கிஷங்களையும் இணைத்துக் கொடுத்த ஒரு புத்துயிர்ச்சி அற்புதம்.

இதன் பின்னணியில் இருந்த மனிதர் அனந்த் பை. அல்லது ’பை மாமா’ (Uncle Pai) என அழைக்கப்பட்டவர். முதலில் இந்திரஜால் காமிக்ஸ் குழுமத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். பட்டப் படிப்பால் அவர் வேதிப் பொறியியலாளர். ஆனால் அவர் செய்த வேதிப்பொறியியல் என்றென்றைக்கும் குழந்தைகள் மனதில் பாரதப்பண்பாட்டின் பெரும் விழுமியங்களை குடியேற்றியது.

எங்கெங்கிருந்து எல்லாம் கதைகளை எடுக்கிறார்! எங்கெங்கிருந்து சரித்திர சம்பவங்களைச் சேர்க்கிறார்! அது குறித்து எப்படி அந்த இடத்துக் காரர்களே வியக்கும்படி துல்லியமான தரவுகளை சுவாரசியமாக கோர்த்து சிறுவர்களுக்கு அளிக்கிறார்! ஒரு காமிக்ஸ் இப்படி தொடர்ந்து பல்வேறுபட்ட ஆராய்ச்சிகளுடன் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது இதுவே முதல்தடவையாக இருக்கும்.

காயங்குளம் கொச்சுண்ணி கதையை அமர்சித்திரகதையில் படிக்கும் கேரளாக்காரருக்கு பெருமிதம் வரும். அமர்சித்திரகதை படித்த வேறுமாநில மாணவனுக்கும் புகைவண்டி காயங்குளத்தை கடக்கும் போது ஒரு உறவுணர்வு ஏற்படும். ஸ்ரீ நாராயணகுருவின் வாழ்க்கை அமர்சித்திர கதையாக எத்தனை மாணவர்களின் வாழ்க்கையில் ஞானச்சுடரேற்றியிருக்கும் என்பதை யார் அறிவார்!

மனோன்மணியமும் அமர்சித்திரக்கதையாக வந்திருக்கிறது. அது ஆன்மாவுக்கும் இறைவனுக்குமான உறவையும் சொல்லும் ஒரு உருவக நாடகம் என்கிற குறிப்பை அமர்சித்திர கதை தருகிறது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கே தெரியாத விஷயம் அது! மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை கோடகநல்லூர் சித்தர் ஒருவரிடம் தீட்சை பெற்று அந்த தாக்கமும் மனோன்மணியத்தில் இருந்தது என்பது வரலாறு. ஔவைக் கிழவியையும், சுப்பிரமணிய பாரதியையும், கண்ணகியையும், ஏன் பிரதாபமுதலியார் சரித்திரத்தையும் கூட, இந்தியா முழுக்க இளம் உள்ளங்களில் சேர்த்த பெருமை அமர்சித்திரக்கதைக்கு உண்டு.

ஞானேஸ்வர், பசவண்ணா என ஆன்மிக-சமூக சீர்திருத்தவாதிகளின் வரலாற்றை அமர் சித்திரக்கதை சொல்லும் அழகே தனி. அம்பேத்கர் ஒரு விடுதியில் தன்னை ஹிந்து என சொல்லுகிறார். ஆனால் அவரை தீண்டத்தகாதவர் என வெளியே தள்ளுகிறார்கள். அமர சித்திரங்களின் மூலமாக மனதில் ஆழமாக பதிந்த வடு அது. தலித்தின் முகத்தில் சாதித்திமிர் அறைந்த அறையை தன் முகத்தில் ஏற்றுக்கொள்ளும் பாண்டுரங்கன்! அந்தக் கதையில், என்றென்றைக்கும் சாதியம் எனும் நஞ்சு நம் குழந்தைகளை அண்டவிடாமல் செய்யும் அருமருந்தும் கிடைக்கிறது.

ஜகதீஷ் சந்திர போஸ் காலனிய அரசில் போராடிய கதையை படிக்கும் போது அறிவியலாளரின் கதையுடன் ஒரு போராளியின் கதையும் கிடைக்கும். எல்லப்ரகாத சுப்பாராவ் என்கிற ஆந்திர வேதி-உயிரியலாளர் குறித்த அமர் சித்திர கதை ஒரு கிளாஸிக். காலனியத்தால் அவதிப்பட்ட நாடுகளின் அறிவியலாளர்கள் போராடிய விதத்தை சித்திரக்கதையாக அளித்த ஒரே பதிவாக அமர் சித்திரக் கதையை மட்டுமே காணமுடியும்.

சீக்கிய குருக்களின் ஞானமும் தியாகமும் காவிரிக்கரை கடந்து நம்மை அடைந்தது அமர் சித்திரக் கதையால். குருகோவிந்த சிங்கின் இரு இளஞ்சிறுவர்களும் ‘எங்களை உயிருடன் புதைத்தாலும் தர்மத்தை விட மாட்டோம்’ என்று சொன்ன தருணங்களைப் படித்து வளர்ந்தவர்களுக்கு, ஆயிரமாயிரம் ஊழல்களால் அதிகார வர்க்கம் மாசு படிந்தாலும், இந்தியாவின் உண்மையான அகநீரோட்டம் எது என்று எப்போதும் புரியும். இன்றைக்கும் மனத்தளர்ச்சி வரும் போது அமர் சித்திரக் கதையின் சீக்கிய குருக்களின் கதைகள் உத்வேகம் தருபவை. “நீங்கள் குருகோவிந்த சிம்மரை போல வாழ்ந்தாலே ஹிந்து என்கிற பெயருக்கு அருகதை ஆவீர்கள்” என்ற சுவாமி விவேகானந்தரின் உபதேசத்தை இதனுடன் இணைத்துப் படிக்கும் போது அது அளிக்கும் மன உற்சாகமே தனி!

வீர சாவர்க்கர் பட்ட கஷ்டங்களை நாம் சிறுவர்களாக அந்த படக்கதைகளின் பக்கங்களில் உணர்ந்தோம். எந்த மக்களுக்காக போராடினாரோ, அதே மக்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு அன்னியரால் கொல்லப் பட்டு, மரணிக்கும் தருவாயிலும் அம்மக்களிடம் கசப்பின்றி அன்பு காட்டி உயிர் தியாகம் செய்த பாகா ஜதீனும், கீதை கையில் ஏந்தி தூக்கு மேடை ஏறிய குடிராம் போஸும் நம் சிறுவயது ஆதர்சங்களாகியது இந்த படக்கதைகளில்தான். பொதுவாக நன்றி மறக்கும் நம் சூழலில், சந்திரசேகர ஆசாதும், பகத்சிங்கும், ஜாலியன்வாலாபாக்கும் நம் மனங்களில் பசுமரத்தாணியாக பதிந்தது அமர் சித்திரக் கதையால்தான்.

ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் கதையும் அவர் சொன்ன கதைகளும் சிறுவயது முதலே என்றைக்கும் நமக்கு இனிய நினைவுகளாக வாழும் சாத்தியத்தை அங்கிள் பை நமக்கு அளித்தார். அதனை நாம் எந்த அளவு பயன்படுத்தினோம் என்பது வேறுவிஷயம். அமர்சித்திர கதைகளில் அதியற்புத ஓவிய உச்சமாக நான் சிறுவயதில் உணர்ந்தது மீரா. அத்தனை உணர்ந்து உணர்ச்சிபூர்வமாக கவிதையாக அந்த சித்திரங்களை வடித்திருந்தவர் ஒரு இஸ்லாமிய ஓவியர். யூசுப் லெயின் (இப்போது யூசுப் பெங்களூரிவாலா) என்பவர்.

மீரா சித்திரங்களுக்கான நாட்கள் தள்ளித் தள்ளி போகவே ஒருநாள் இந்த ஓவியரை அவர் வீட்டிலேயே சென்று சந்திக்கிறார் ஆனந்த் பை. யூசுப் மீரா ஓவியங்களை கண்களில் கண்ணீர் வழிய தீட்டிக்கொண்டிருப்பதை காண்கிறார். இந்த ஓவியங்களை அவர் தீட்டிய போது யூசுப் அரேபிய மரபில் வந்த பெண் ஆன்ம ஞானியான ரபியாவால் தான் நிறைந்திருந்ததாக உணர்ந்தாராம். அமர் சித்திரக்கதையின் மீராவால் தங்கள் இளம்வயதில் தெய்வீக அன்பை உணர்ந்த குழந்தைகள் twice blessed என்றுதான் சொல்லவேண்டும். மீரா கதை சரித்திர சான்றாதாரம் கொண்டதல்ல என்பதையும், அது மீரா குறித்த நாட்டார் கதைகள் வழக்குகளிலிருந்து உருவாக்கப்பட்டது என்பதையும் அமர் சித்திர கதை குறிப்பிடுகிறது. எத்தனை கவனம்! எவ்வளவுக்கு துல்லியம் குறித்த நுண்ணுணர்வு! குழந்தைகளின் அறிவின் மீது மதிப்பு!

அனந்த் பை அமர்சித்திர கதை புத்தகங்களை கொண்டு வருவதுடன் நின்றுவிடவில்லை. அவற்றை கல்விக் கருவிகளாக செயல்படுத்துவதை அறிவியல் கண்ணோட்டத்துடன் பரீட்சை செய்தும் பார்த்தார்.

அமித் தாஸ்குப்தா என்கிற கல்வியாளர் இத்தகைய ஒரு பரிசோதனை டெல்லியில் 1978 இல் நடத்தப்பட்டதை நினைவு கூர்கிறார். டெல்லியின் 30 பள்ளிகளிலிருந்து 961 மாணவர்களுக்கு அமர்சித்திரகதைகளை பயன்படுத்தி வரலாற்றுக்கல்வி அளிக்கப்பட்ட போது, வழக்கமான முறையில் சொல்லிக் கொடுக்கப்படுவதைக் காட்டிலும் நன்றாக மாணவர்கள் அதை உள்வாங்கிக் கொண்டார்கள். அன்று கேந்திரிய வித்யாலயா அமைப்புகளின் கமிஷனராக இருந்த பல்தேவ் மகாஜன், அமர் சித்திர கதைகள் அற்புதமான கல்வி சாத்தியங்களைக் கொண்டிருப்பதாக கூறினார்.

இக்கதைகளின் துல்லியத்தன்மைக்காக அனந்த் பை எடுத்துக் கொண்ட சிரமங்களும் வீண்போகவில்லை. ஒரு முக்கியமான தர்மாச்சாரிய சபையில் கிருஷ்ணனின் வாழ்க்கை சம்பவம் குறித்த சிறு விவாதம். ஒரு தர்மாச்சாரியார் தனது கையில் அமர் சித்திரக்கதையை எடுத்து அதிலிருந்து தமது நிலைபாட்டுக்கு ஆதாரம் காட்டுகிறார்! அமர் சித்திரக்கதையின் நம்பகத்தன்மை எந்த அளவு எல்லா தளங்களிலும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதற்கான ஒரு சம்பவம் இது.

முக்கியமான சூஃபி ஞானிகள், ஷெர்ஷா சூர் போன்ற இஸ்லாமிய ஆட்சியாளர்கள், அஷ்பகுல்லாகான் போன்ற தியாகிகள் ஆகியோரை அமர்சித்திரகதைகளில் நீங்கள் சந்திக்கலாம்.

அங்கிள் பை என அன்பாக அழைக்கப்பட்ட அனந்த் பைக்கு எந்த சித்தாந்த சார்பும் கிடையாது. அவரது ஒரு பெரும் சித்தாந்தம் பாரதப் பண்பாடு. பாரதத்தின் வரலாறு என்பதே அவரது ஒரே பெரும் நோக்கு. அந்த நோக்கில் அவர் உருவாக்கிய பெரிய ஸ்தாபனமே அமர் சித்திரக் கதை. பின்னர் அவர் நடத்திய பார்த்தா என்கிற பதின்ம வயதினருக்கான இதழும் பல அரிய செய்திகளை கொண்டு வந்தது. குறிப்பாக எனக்கு நினைவிருப்பது இந்து கோவில்களுக்கும் இந்திய மசூதிகளுக்கும் அடிப்படையான சில ஒற்றுமை வேற்றுமைகளை எம்.வி.காமத் எழுதியிருந்ததும், பிரபஞ்ச விநோதங்கள் குறித்து வேங்கட ரமணன் என்கிற அறிவியலாளர் எழுதிய தொடரும்.

அமர் சித்திர கதை வெறும் பண்டைய வரலாற்றுடன் நின்றிடவில்லை. சுவாமி சின்மயானந்தர் முதல் கல்பனா சாவ்லா வரை இன்றைய இந்தியாவின் சிற்பிகளையும் அது இளைய தலைமுறையினருக்கு கொண்டுவருகிறது.

பொதுவாக டிவி கார்ட்டூன்களில் மூழ்கி கிடக்கும் இந்த சிறுவர்கள் தலைமுறைக்கு ஒரு வாசிக்கும் பழக்கமாக பாரத பண்பாட்டை கொண்டு சேர்க்கும் கருவியாக அமர்சித்திர கதை போய்ச் சேருமா என சில நேரங்களில் தோன்றுவதுண்டு. ஒரு வாரத்துக்கு முன்னர் என் ஒன்பது வயது மகன், ”பாஹுபலி ”அமர் சித்திரகதாவை எனது கலெக்‌ஷனிலிருந்து அவனே எடுத்து இரவு பத்துமணிக்கு மேல் கொட்ட கொட்ட படித்துவிட்டு, உண்மையான பலம் என்றால் என்ன என்று கேட்கிறான்!

அங்கிள் பை, இந்த நாட்டில் தலைமுறை தலைமுறையாக எங்கள் சந்ததிகள் உங்களுக்கு கடன் பட்டிருக்கின்றோம். மனமகிழ்ச்சியுடன் எங்களை ஆசிர்வதியுங்கள்.

இந்திய காமிக்ஸ் உலகின் பிதாமகரும், அமர் சித்திரக் கதையை உருவாக்கியவரும் ஆன அனந்த் பை தனது 81-வது வயதில் 25-பிப்ரவரி-2011 அன்று மும்பையில் காலமானார்.

தமிழ் ஹிந்து தளத்தில் வெளியான திரு அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை

(Visited 27 times, 2 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *