தமிழ்த் தென்றல் திரு வி. கல்யாணசுந்தர முதலியார் நினைவு நாள்

பெண்ணின் பெருமையைத் தொழிலாளி உரிமையைக்
கண்ணான தமிழின் கவினார்ந்த உண்மையைப்
புண்ணான இந்தி புகுந்தும் சிறுமையை
எண்ணிய எண்ணத்தில் எழுந்த தமிழனைத்தும்
தேனருவி திரு.வி.க.”

  • புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

தமிழ்த்தந்தை திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் நினைவு நாள். இந்நாளில் அவர்தம் தமிழ்த்தொண்டை நினைவுகூர்வது சிறப்பானதாக அமையும்

அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

இவர் 1883 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26 அன்று பிறந்தார். விருத்தாசலனார் – சின்னம்மையார் தம்பதியருக்கு ஆறாவது குழந்தையாகத் தோன்றினார்.

1891 ஆம் ஆண்டு சென்னை இராயப்பேட்டையில் தொடக்கக் கல்வி கற்றார். 1894 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார். சேர்ந்த சில மாதங்களில் கை கால் முடக்கம் ஏற்பட்டது. இதனால் கல்வி தடைப்பட்டது. நான்கு ஆண்டுகள் பள்ளிக்குச் செல்லவில்லை.

மீண்டும் 1898 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் சேர்ந்து மெட்ரிகுலேஷன் வரை பயின்றார். ஆசிரியர் கதிரைவேற் பிள்ளை சார்பாக நீதிமன்றத்துக்குப் போனதால், இறுதித் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்து நின்றார். 1901 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளையிடம் தமிழ் இலக்கியம், சைவ சாத்திரங்கள் பயின்று தேர்ந்தார்.

1906 ஆம் ஆண்டில் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கர் ஆகச் சேர்ந்தார். அக்காலத்தில், பால கங்காதர திலகர் போன்றோரின் விடுதலைக் கிளர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டதனால் அவ்வேலையிலிருந்தும் அவர் நீங்கினார்..

1907 இல் கதிரைவேலர் மறைவு நிகழ்ந்தது. விபின் சந்திர பால் சொற்பொழிவைக் கேட்க நேர்ந்தது அதுமுதல் தேசியத்தின் பொருட்டுப் போராடத் துணிந்தார். 1907 முதல் 1908 வரை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த ஸ்பென்சர் கம்பெனியில் பணி செய்தார். அங்கே இந்திய உரிமைகளைப் பற்றி சக ஊழியர்களிடம் படித்துக்காட்டுவார். இதனால் அக்கம்பெனியின் மேலாளர் திரு.வி.க வை எச்சரிக்க நேர்ந்தது. இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாத திரு.வி.க அப்பணியைத் துறந்தார்.

1907 முதல் 1910 வரை “பெரியபுராண’த்திற்கு ஒரு குறிப்புரையுடன் “நாயன்மார் வரலாற்றை உரைநடையில் எழுதி, பகுதி, பகுதியாக வெளியிட்டார். 1934-இல் இவ்வுரைநடையைப் புதுப்பித்து நயமான நடையில் “நாயன்மார் வரலாறு’ என்னும் தலைப்பில் ஒரு தனி வெளியீடாக்கினார்.

பின்னர் 1909 இல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார்

1908 ஆம் ஆண்டு ஜஸ்டின் சதாசிவ ஐயருடன் தொடர்பு ஏற்பட்டது.

1910 ஆம் ஆண்டு அன்னிபெசண்ட் அம்மையாரைச் சந்தித்தார். அம்மா என்று தான் திரு.வி.க பெசண்டை அழைத்து மகிழ்வார்.

1912-ல் அக்டோபர் 13ம் தேதி அமைதிக்கு உருவான கமலாம்பிகை என்ற நங்கையை திருமணம் செய்துகொண்டார். அவர், ‘‘தனக்குக் கல்வி போதிக்க வேண்டும்’’ என்று தன் கணவரிடம் கோரிக்கைவைத்தார். அதற்கு திரு.வி.க., ‘‘நீ இளமையில் பொன், புடவைகளை அல்லவா கேட்க வேண்டும். அதை விட்டுவிட்டு வேறு எதையோ கேட்கிறாயே’’ என்றார். அதற்கு கமலாம்பிகை, ‘‘எனக்கு நகைகள் இருக்கின்றன. என் அன்னையாரின் விலை உயர்ந்த புடவைகள் பல இருக்கின்றன. நான் என்ன கேட்டாலும் வாங்கித்தர பெரியப்பா இருக்கிறார். ஆகவே, உங்களிடம் விரும்புவது கல்வி மட்டுமே’’ என்று பதிலளித்தாராம். அவர் கேட்டுக்கொண்டபடி அவருக்கு தமிழ் கற்பித்தார் திரு.வி.க. அவர்களுடைய இல்லற வாழ்க்கையின் பயனாக இரண்டு குழந்தைகள் பிறந்தனர். இரண்டும் இறந்துவிட்டன.

1914 ஆம் ஆண்டு சுப்புராய காமத், எஸ்.சீனிவாச ஐயங்கார் தொடர்பு ஏற்பட்டது.

1916 ஆம் ஆண்டு வெஸ்லி கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

1917 ஆம் ஆண்டு பி.பி. வாடிய உடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னாளில் திரு.வி.க தொழிற்சங்கம் தொடங்குவதற்கு வாடியாவின் தொடர்பு தான் காரணமாக இருந்தது.

1917 ஆம் ஆண்டு தேசிய நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டி பணியை விடுத்தார். திசம்பர் 7ஆம் நாள் தேசபக்தன் இதழின் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்விதழ் தான் அவரை அதிகம் சமூகத்துடன் தொடர்புகொள்ளச் செய்தது. நாடு, நாட்டு மக்கள் என்று தன்னுடைய பார்வையை விசாலப்படுத்திக் கொண்டார். தேசபக்தனில் இரண்டரை அண்டுகள் பணியாற்றினார் அதன் பின்னர் அவ்விதழின் செயலாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இதழ்ப்பணியை விடுத்தார்.

1918 இல் இந்தியாவிலேயே முதன் முதலில் தொழிற்சங்கம் தொடங்கினார். சென்னைத் தொழிலாளர் சங்கம் என அதற்குப் பெயரிட்டார். இச்சங்கத்திற்கு திரு.வி.க துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்தார். இதே ஆண்டில் தான் அவரின் துணைவியார் கமலாம்பிகை எலும்புருக்கி நோயால் இறந்துபோனார். மனைவியை இழந்து துக்கத்தில் இருந்த திரு.வி.க-வைப் பலர், மறுமணம் செய்யச் சொல்லி வலியுறுத்தினர். அதற்கு அவர், ‘‘என் வயது 35. இந்த வயதில் ஓர் இளம்பெண்ணை மணம் செய்வது அறமா?’’ என்று அவர்களையே கேட்டு மறுத்துவிட்டார். வேறு சிலரிடம், ‘‘ ‘தேசபக்தன்’ கட்டுரைகளையொட்டி நான் சிறை செல்ல நேரிடலாம் என்று ஊர் பேசுவது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இந்த நிலையில் மறுமணமா?’’ என்று சொல்லி மறுமணப் பேச்சுக்கே இடமில்லாமல் முற்றுப்புள்ளி வைத்தார்.

1919 ஆம் ஆண்டு முதன் முதலாகக் காந்தியடிகளைச் சந்தித்தார். இவ்வாண்டில் தான் பெரியாரின் நட்பும் திரு.வி.கவுக்குக் கிடைக்கப்பெற்றது. திலகரை வ.உ.சி உடன் சென்று சந்தித்தார்.

1920 ஆம் ஆண்டு மத்திய தொழிலாளர் சங்கம் தோற்றம் பெற்றது. பி ரூ சி யில் தொழிலாளர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த நன்கொடையை கொண்டு புதிய வார ஏடு ‘நவசக்தி’ தொடங்கப்பட்டது. அது 22.10.1920 ஆம் நாளிலிருந்து வெளிவரத் தொடங்கியது, ‘நவசக்தி’ வார ஏட்டுக்கு திரு.வி.க. ஆசிரியரானார்.

சென்னையின் கவர்னராக லார்டு வெலிங்டன் பதவி வகித்தபோது, பத்திரிகை ஆசிரியர்களைக் கண்டு பேச விரும்பினார். அதன்படி அனைத்து ஆசிரியர்களும் அவரைச் சந்தித்தனர். அப்போது, ‘‘ஆங்கில அரசாங்கத்தைத் தாக்கி எழுதக் கூடாது’’ என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார் வெலிங்டன். மேலும் திரு.வி.க-வைப் பார்த்து, ‘‘உங்களுடைய எழுத்து வேகம் உடையது என்றும், மக்களைக் கொதித்து எழச் செய்யக்கூடிய தன்மை உடையது என்றும் நான் அறிகிறேன். ஆகையால், வேகத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு அவருடைய எழுத்தில் அனல் பறந்தது.

1921 ஆம் ஆண்டு ஆளுநர் வெலிங்டன் பிரபு இவரை அழைத்து நாடுகடத்திவிடுவதாக மிரட்டினார். ஆனால் அதற்கு திரு.வி.க அஞ்சவில்லை. சர். தியாகராய செட்டியாரின் உதவியால் நாடுகடத்தும் நடவடிக்கை கைவிடப்பட்டது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் மயிலாடுதுறையில் 1925 ஆம் ஆண்டு நடத்திய ‘தேவதாசிகள் முறை ஒழிப்பு’ மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விதவைத் திருமணத்தை ஆதரித்தார். பகுத்தறிவுக்கு ஒவ்வாத ‘பால்ய மணம்’ என்னும் குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். அதை ஒழிப்பதற்கும் அரும்பாடுபட்டார்.

1925ல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சென்னை மாகாண காங்கிரஸ் மாநாட்டில், ஆறாவது முறையாக இடஒதுக்கீடு திட்டத் தீர்மானத்தை பெரியார் கொண்டுவந்தார். அப்போது சென்னை மாகாண காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த திரு. வி. கலியாணசுந்தரனார், பெரியார் கொண்டு வந்த இடஒதுக்கீடு தீர்மானத்தை ஏற்க மறுத்தார். எனவே காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தி அடைந்த பெரியார் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருது விலகினார் இதனால் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது.

அரசியல் மாநாடுகளில் திரு.வி.க. தலைமையேற்றுப் பேசியவற்றைத் தொகுத்து “தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு’ (1928) என்னும் நூலாக்கினார்.

திரு.வி.க. பதினைந்து செய்யுள் நூற்களைப் படைத்து பைந்தமிழ் இலக்கியத்துக்கு அணிகலனாய் அளித்துள்ளார். ‘பொறுமை வேட்டல்’ என்ற தலைப்பில் 1942 ஆம் ஆண்டு வெளி வந்த அவரது நூலை, டாக்டர் மு.வ இருபதாம் நூற்றாண்டின் திருவாசகம் என்று புகழ்ந்து பாடி பாராட்டியுள்ளார்.

தம் மணிவிழாவுக்குப் (1943) பின்னர், தம்மைப் பற்றிச் சில தவறான கருத்துகள் தமிழ்நாட்டில் உலவுவதை அறிந்த திரு.வி.க., உண்மை விவரங்களைச் சொல்லுவதற்காகத் தம் வாழ்க்கை வரலாற்றை, “திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள்’ என்னும் பெரு நூலாக (1000 பக்கம்) எழுதி (1944) வெளியிட்டார்.

‘பி ரூ சி யி;ல்’ ஆலைத் தொழிலாளர்கள் 1947ல் தங்களின் கோரிக்கைகளுக்காக மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தின் போது, போராட்டத்துக்கு ஆதரவளித்த அறுபது வயதைக் கடந்துவிட்ட திரு.வி.கவைக் காங்கிரஸ் ஆட்சி வீட்டுக்காவலில் வைத்தது. ஆம், நாட்டு விடுதலைக்காக பாடுபட்டவருக்கு வீட்டுச் சிறை!

1949 இல் தன்னுடைய ஒரு கண் பார்வையை இழந்தார், பின் இரு கண்களுமே இழக்க நேரிட்டது.

அந்நியரின் பிடியிலிருந்து தன் தாய் நாட்டையும், அந்நியமொழிகளின் ஆதிக்கத்திலிருந்து தன் தாய்மொழியையும் விடுவிக்கத் தொடர்ந்து போராடிய இப்பெருந்தகை 1953-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17-ஆம் நாள் ராயப்பேட்டை கணபதி முதலியார் தெருவில் வசித்த வீட்டில் இயற்கை எய்தினார்.

(Visited 23 times, 1 visits today)
3+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *