உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹிதயதுல்லா – செப்டம்பர் 18

பல்வேறு நிறங்களும் மணங்களும் கொண்ட மலர்களைக் கொண்டு தொடுத்த அழகிய பூமாலைக்கு நிகரானது நமது தேசம். பல்வேறு மதங்களை, இனங்களை, மொழிகளைச் சேர்ந்த அறிஞர்கள் பலரால் உருவாகி, திருவாகி இருக்கும் தேசத்தில் சட்டத்துறையில் கல்வித்துறையிலும் தலைசார்ந்து விளங்கிய நீதிபதி ஹிதயதுல்லா அவர்களின் நினைவுநாள் இன்று. 

ஹிதாயதுல்லாவின் குடும்ப முன்னோர்களே பெரும் படிப்பாளிகள், புகழ் வாய்ந்தவர்கள். அவரது தாத்தா முன்ஷி குதருதுல்லா வாரணாசியில் வசித்துவந்த வழக்கறிஞர். அவர் தந்தை கான் பகதூர் ஹபிப் முஹம்மது வில்லயதுல்லாஹ் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர். உருது மொழியில் புகழ்பெற்ற கவிஞர். இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிய அவர் மத்திய சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றியவர். அவரது சகோதரர்கள் இக்ரமுல்லாஹ் மற்றும் அஹமதுல்லாஹ் ஆகியோர் இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றியவர்கள். இக்ரமுல்லாஹ் தேசப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செயலாளராக உயர்ந்தவர். 

தனது ஆரம்ப கல்வியை நாக்பூரில் உள்ள அரசு பள்ளியிலும் பின்னர் மோரிஸ் கல்லூரியிலும் முடித்த ஹிதயதுல்லா லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் திருத்துவ கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்றார். பின்னர் அங்கேயே சட்டமும் பயின்றார். 

நாடு திரும்பிய ஹிதயதுல்லா நாக்பூர் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். அதோடு அவர் நாக்பூரில் உள்ள சட்ட பல்கலைக்கழகத்தில் சட்டவியல் மற்றும் முஸ்லீம் சட்டங்கள் பற்றிய துறைகளின் ஆசிரியராகவும் பணியாற்றினார். நாக்பூர் உச்ச நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராகவும் பின்னர் அட்வகேட் ஜெனெரலாகவும் நியமிக்கப்பட்டார். 1946ஆம் ஆண்டு நாக்பூர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஹிதயதுல்லா 1954ஆம் ஆண்டு நாக்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பின்னர் 1958ஆம் ஆண்டு நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் அதனைத் தொடர்ந்து 1968ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். மிக இளைய வயதில் அட்வகேட் ஜெனரல், மிக இளைய வயதில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நாட்டின் உச்சநீதிமன்றத்தின் முதல் முஸ்லீம் தலைமை நீதிபதி என்ற பெருமைகளும் இவருக்கு உண்டு. 

1969ஆம் ஆண்டு நாட்டின் குடியரசு தலைவர் திரு சாகிர் ஹுசைன் திடீர் என்று மரணம் அடைய தற்காலிக தலைவராக அன்றய குடியரசு துணைத்தலைவர் வி வி கிரி பொறுப்பேற்றுக் கொண்டார். குடியரசு தலைவருக்கான தேர்தலில் போட்டியிட திரு கிரி தனது பதவியை ராஜினாமா செய்ய, நீதிபதி ஹிதயத்துல்லா 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 24 வரை குடியரசு தலைவராக பணியாற்றினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் 1970ஆம் ஆண்டு டிசம்பர் வரை பணியாற்றிய ஹிதயதுல்லா 1979ஆம் ஆண்டு முதல் 1984ஆம் ஆண்டு வரை குடியரசு துணைத்தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக அன்றய குடியரசு தலைவர் கியானி ஜெயில்சிங் அமெரிக்கா சென்ற போது, மீண்டும் குடியரசு தலைவராக பணியாற்றினார். 

நாட்டின் மிக உயர்ந்த பொறுப்புகளான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசு துணை தலைவர், குடியரசு தலைவர் ஆகிய மூன்று பொறுப்புகளையும் வகித்த ஒரே இந்தியர் ஹிதயதுல்லா மட்டுமே. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைகளை மாற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கோகுல்நாத் எதிர் பஞ்சாப் அரசாங்கம் என்ற வழக்கில் அவர் எழுதிய தீர்ப்பு மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். 

சட்டத்தில் மேன்மையுற்று விளங்கிய திரு ஹிதயதுல்லா கல்விப்பணியிலும் புகழ் பெற்று விளங்கினார். ன் எ நாக்பூர் சட்ட கல்லூரியில் பணியாற்ற அவர் அந்த துறையின் தலைவராகவும் இருந்தார். அதன் பின்னர் பல்வேறு சட்ட கல்லூரிகளில் சிறப்பு பேராசிரியராகவும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வேந்தராகவும் அவர் பல்வேறு காலகட்டங்களில் பணியாற்றினார். பாரத சாரணர் இயக்கம், பாரத செங்சிலுவை சங்கம் ஆகியவற்றின் அகில இந்திய தலைவராகவும் அவர் பணியாற்றினார். 

ஆங்கிலம், உருது, ஹிந்தி, பாரசீகம், பிரெஞ்சு, வங்காள மொழி மற்றும் சமிஸ்க்ரித மொழிகளையும் அவர் அறிந்து இருந்தார். சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான ராய்ப்பூரில் அமைந்துள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகம் அவர் பெயராலே அமைந்துள்ளது. 

தனது எண்பத்தி ஆறாம் வயதில் 1992ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் நாள் ஹிதயதுல்லா காலமானார். நாட்டின் சேவைக்கு வழிபாடு முறை தடையல்ல  என்பதற்கும், தலைமைப் பீடங்களை அலங்கரிக்க எல்லோருக்கும் இங்கே சம உரிமையும் வாய்ப்பும் இருக்கிறது என்பதற்கும் ஹிதயதுல்லாவின் வாழ்க்கையே ஒரு சரியான எடுத்துக்காட்டு. 

எண்ணமும் எழுதும் 

புதுக்கோட்டை அப்துல்லா 

(Visited 53 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *