மூத்த சங்க அதிகாரி மோரோபந் பிங்கலே நினைவுநாள் – செப்டம்பர் 21

தேசத்தின் பணிக்காக தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்து ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் முழுநேர ஊழியராகச் சேர்ந்து, சங்கத்தோடேயே வளர்ந்து, ஸ்வயம்சேவகர்களையே தங்கள் உறவினர்களாக அடைந்து, பாரத தாயின் பணிக்காகவே தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அளித்து, தாயின் பாதத்திலேயே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்த செய்து கொண்டு இருக்கின்ற தேசபக்தர்கள் பலர் உண்டு. அதில் முக்கியமான ஒருவர் மூத்த சங்க அதிகாரி மோரோபந் பிங்கலே அவர்கள். 

1919ஆம் வருடம் டிசம்பர் மாதம் 30ஆம் நாள் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் நகரில் பிறந்த திரு மோரேஸ்வர் நீல்காந் பிங்கலே டாக்டர் ஹெட்கேவர் மற்றும் குருஜி கோல்வால்கர் ஆகியோரால் வார்த்தெடுக்கப்பட்டவர். 1941ஆம் வருடம் தனது ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டப் படிப்பை முடித்த பிங்கலே தனது 26ஆம் வயதில் 1946ஆம் ஆண்டு சங்கத்தின் முழுநேர ஊழியராக தன்னை இணைத்துக் கொண்டார். ஏறத்தாழ அறுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சங்கப் பணியையே தனது வாழ்நாள் தவமாக மேற்கொண்டார். இருபதாண்டு காலத்திற்கும் மேலாக மஹாராஷ்டிர மாநிலத்தின் ஸஹ பிராந்த பிரச்சாரக் பொறுப்பை அவர் திறம்பட வகித்தார். பாரதத்தின் மேற்கு மாநிலங்களில் வேரூன்றி உள்ள ஹிந்துத்துவ ஒருமைப்பாடு அவரின் தளராத செயல்பாட்டின் விளைவுதான். 

1967ஆம் ஆண்டுக்குப் பிறகு பௌதிக் பிரமுக், பிரச்சாரக் பிரமுக் போன்ற பொறுப்புகளையும் பிங்கலே நிர்வகித்தார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஆரம்பகால தளகர்த்தராகவும் பிங்கலே இருந்தார். பரிஷத்தின் வழிகாட்டியாக ( மார்க்க தர்ஷக் ) அவர் இருந்தார். நெருக்கடி நிலையை அடுத்து சங்கம் தடை செய்யப்பட்ட சமயத்தில் சங்கத்தின் அறிவிக்கப்படாத ஆறு சர்சங்கசாலக்களில் பிங்கலே ஒருவர். ஏறத்தாழ இருபது மாத காலம், பாரதம் தனது ஜனநாயக உரிமைகளை இழந்து சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்த நேரத்தில், தலைமறைவாக இருந்து சர்வாதிகாரத்தை எதிர்க்கும் போராட்டத்தை பல்வேறு தளங்களில் பிங்கலே முன்னெடுத்தார். 

1980களின் ஆரம்ப வ வருடங்களில் தமிழகத்தில் தென்காசியை அடுத்த மீனாட்சிபுரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சகோதர்கள் மதம் மாறினார்கள். இந்த நிகழ்வு நாடெங்கும் அதிர்வலைகளை உண்டாக்கியது. ஜாதிகளைக் கடந்து ஹிந்துக்களாக ஒன்றிணைவோம் என்ற கோஷத்தோடும், தீண்டாமையை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் களைந்தெடுக்க வேண்டும் என்ற உறுதியோடு விஸ்வஹிந்து பரிஷத் நாடு தழுவிய ஒருமைப்பாடு யாத்திரையை ( ஏகாத்மதா யாத்ரா ) நடத்த முடிவு செய்தது. வடக்கே காட்மாண்டு முதல் தெற்கே ராமேஸ்வரம் வரை, கிழக்கே புனித கங்கை கடலில் கலக்கும் இடமான வங்காளத்தின் சாகர் தீவில் இருந்து மேற்கே சோமநாதபுரம் வரை, இமயமலையின் ஹரித்துவார் முதல் தென்கோடி கன்யாகுமரிவரை என்று மூன்று பிரிவாக இந்த யாத்திரை நடைபெற்றது. இந்த யாத்திரையை நிர்வகிக்கும் பொறுப்பு பிங்கலே வசம் ஒப்படைக்கப்பட்டது. நாடெங்கும் சுற்றி வந்து இந்த யாத்திரையை திட்டமிட்டு, மிகவும் செம்மையாக பிங்கலே நடத்திக்காட்டினார். சங்க பரிவாரங்களின் சேவையை புரிந்து கொள்ளவும், மதமாற்றம் ஒரு தேசிய அபாயம் என்பதை பொது மக்கள் அறிந்து கொள்ளவும் இந்த யாத்திரை பேருதவியாக இருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஞானரதம், சக்திரதம் என்ற யாத்திரைகள் முன்னெடுக்கப்பட்டன. 

1983ஆம் ஆண்டு ராம் ஜானகி யாத்ராவை பிங்கலே ஒருங்கிணைத்தார். பூட்டிய கதவுக்குப் பின்னால் நடையில் நின்றுயர் நாயகன் ராமச்சந்திரன் சிறைப்பட்டு இருக்கும் காட்சிகளைக் கொண்ட ஏழு ரதங்கள் உத்திரப்பிரதேசம் மற்றும் பிஹார் மாநிலங்களில் வலம் வந்தன. ராமஜன்மபூமியை மீட்டெடுக்கும் போராட்டம் மீண்டும் நாடெங்கும் வலுப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1986ஆம் ஆண்டு வழிபாட்டுக்காக ராமர் கோவிலை திறந்து விட நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்தது. 

மிகப் பெரும் காரியங்களை செய்து முடித்து விட்டு அதற்கான புகழைத் தேடாமல், செய்யும் பணியெல்லாம் பாரதத்தாயின் சேவைக்கே என்று அடுத்த பணியை நாடிச் செல்லும் உதாரண ஸ்வயம்சேவக் என்றே பிங்கலே அவர்களைக் கூறலாம். 

பாரத தாயின் பெருமைமிக்க இந்த மகன் 2003ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் நாள் தாயின் காலடியிலேயே அர்ப்பணம் ஆனார். 

(Visited 11 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *