நீதியரசர் கபாடியா பிறந்ததினம் – செப்டம்பர் 29.

இரண்டு லட்சத்திற்கும் குறைவாக மக்கள்தொகை உள்ள ஒரு மிகச்சிறு சிறுபான்மையினத்தில் இருந்து, அதுவும் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து நாட்டின் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதியாக உயர்ந்த திரு சரோஷ் ஹோமி கபாடியாவின் பிறந்தநாள் இன்று.

1947ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் நாள் எளியநிலையில் இருந்த ஒரு பார்சி குடும்பத்தில் பிறந்தவர் திரு கபாடியா. ஆசியாவின் முதல் சட்டக் கல்லூரியான மும்பை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றவர் திரு கபாடியா. அந்த காலகட்டத்தில் மும்பையில் ஒரு நிறுவனத்தில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றினார். பெரோஸ் தாமானியா என்ற வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்று பின்னர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.

மும்பை காட்கோபர் பகுதியில் 3,000 குடும்பங்களை வெளியேற்ற மும்பை மாநகராட்சி ஆணை பிறப்பித்தபோது, அதனை எதிர்வழக்காடி அந்த ஆணையை ரத்து செய்ய வைத்ததன் மூலம் கபாடியா மும்பையின் முக்கியமான வழக்கறிஞராக உருவானார்.

1991ஆம் ஆண்டு நாற்பத்தி நான்காம் வயதில் திரு கபாடியாவை அரசு மும்பை நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமித்தது. 2003ஆம் ஆண்டு உத்திரகாண்ட் மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2010ஆம் ஆண்டு பாரதத்தின் உச்சநீதிமன்றத்தின் முப்பத்தி எட்டாவது தலைமைநீதிபதியாக கபாடியா நியமிக்கப்பட்டார். தனியார் நிறுவனத்தில் கடைநிலை ஊழியராகத் தொடங்கி உச்சநீதிமன்ற தலைமைநீதிபதியாக வளர திறமையும் உழைப்பும் நேர்மையும்தான் தேவை என்று திரு கபாடியாவின் வாழ்க்கை நமக்கு புலப்படுத்துகிறது. தனது நீண்ட நெடிய நீதிபதி வாழ்க்கையில் பல முக்கியமான தீர்ப்புகளை திரு கபாடியா வழங்கினார்.

நாட்டின் 14ஆவது மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையரைத்             தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அன்றய பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் அடங்கிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் கேரளாவைச் சார்ந்த திரு தாமஸ் அவர்களை சிபாரிசு செய்ய, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது, அதன் முடிவு வராமல் அவரை இந்தப் பதவியில் நியமிக்கக் கூடாது என்று  சுஷ்மா ஸ்வராஜ் மறுத்தார். ஆனால் அரசு தாமஸை அந்தப் பதவியில் நியமித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கலானது. இந்த நியமனம் செல்லாது என்று நீதிபதி கபாடியா தீர்ப்பு வழங்கினார். நாட்டில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் இந்த தீர்ப்பு உருவாக்கியது.

நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது, நீதி வழங்கப்பட்டது என்பது மக்களால் உணரப்படவும் வேண்டும். எந்த ஒரு நாகரிக சமுதாயத்திற்கும் இது ஒரு முக்கியமான கொள்கையாகும். அப்படி மக்கள் நம்பவேண்டுமானால், நீதிபதிகளின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கவேண்டும். நீதிபதிகள் பொதுமக்களோடு, அரசு அதிகாரிகளோடு, அரசியல்வாதிகளோடு ஏன் மற்ற நீதிபதிகளோடுகூட கலந்து பழகுவது என்பது மிகக் குறைவாகவே இருக்கவேண்டும். தங்களுக்கு தாங்களே விதித்துக்கொண்ட இந்த விதிமுறையை நீதிபதி கபாடியா தனது வாழ்க்கை முழுவதும் கடைபிடித்தார். வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் நாட்டின் மனசாட்சியை உலுக்கிய காலகட்டத்தில் நீதிபதி கபாடியா சந்தேகத்தின் நிழல்கூட தன்மீது படாதவாறு வாழந்தார். 

பதவியில் இருந்த காலத்தில், எந்த ஒரு ஊடகத்திற்கும் பேட்டி கொடுக்கவோ அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையோ நீதிபதி கபாடியா தவிர்த்தே வந்தார். தனது இருபத்தி இரண்டு ஆண்டு கால நீதிபதி வாழ்வில் அவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்குக்கள் விசாரிக்கப்படும் முறையை அவர் சீர்படுத்தினார். 

வரைமுறை இல்லாமல் இயற்கையை சிதைத்து சுரங்க பணிகள் நடைபெறுவதை அவர் தடுத்து நிறுத்தினார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பொதுமக்களுக்கு உள்ள உயிர்வாழும் உரிமை என்பது சுகாதாரமான சுற்றுப்புறத்தில் வாழ்வதை உள்ளடக்கியதாகும் என்று அவர் தீர்ப்பு வழங்கினார். 

பார்சி சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதி கபாடியா பொருளாதாரம், ஹிந்து தத்துவவியல், புத்த தத்துவம், கோட்பாடு இயற்பியல் ஆகிய துறைகளிலும் அறிஞராக விளங்கினார். 

நீதிபதி கபாடியா  தனது அறுபத்தி எட்டாவது வயதில் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் நாள் காலமானார். 

(Visited 9 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *