பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்த மருத்துவர் – அக்டோபர் 1
பத்மஸ்ரீ டாக்டர் வெங்கடசாமி
1991ம் வருடம் , ஒரு ஞாயிறு காலை…
” இன்னும் பத்து நிமிடம் தானே இருக்கு..!”
கையைப் பிசைந்து கொண்டு டிரைவரும், முகாம் அமைப்பாளரும் சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஞாயிறு காலை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையிலிருந்து பல குக்கிராமங்களை நோக்கி முகாம்களுக்குப் புறப்படும் வேன்கள் மிலிட்டரி ஒழுங்குடன் அட்டவணையில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு ஒரு நிமிடம் பிசகாமல் புறப்பட்டே தீர வேண்டும்.. இரண்டு பெரிய டிரங்குப் பெட்டிகளில் முகாமுக்குத் தேவையான பொருட்களை ( vision charts, மருந்துகள், பஞ்சு இத்யாதி) ஏற்றி , செவிலியர்கள் ஏறியபின்னரும் டாக்டர் வரவில்லை.. இதோ மணி 6.30 ஆகிவிட்டது…
” ம்.. கிளம்புங்க…” என்றார், chief..
” டாக்டர் ….???”
” அவர் பஸ் பிடித்து வருவார். Camp நடக்கும்… ம்… கிளம்பலாம்”
ஐந்து நிமிடம் லேட் என்பதெல்லாம் “chief ” என்று பயபக்தியோடு எங்களால் அழைக்கப்பட்ட டாக்டர்.வெங்கடசாமி நாயுடு அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாத விஷயம்.
வேன் கிளம்பி , அண்ணாநகரின் அந்தத் தெருமுனையைத் தாண்டி தயங்கி மெதுவாக நிற்க, அந்த டாக்டர் , ஏதோ ஒரு வீட்டு வாசலில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு மூச்சு வாங்க ஓடி வந்து வண்டியில் ஏறிக் கொண்டார்…
அவரோடு சேர்ந்து முழு டீமும் ஆசுவாசப் பெருமூச்சு விட்டது…
அந்த டாக்டர் முகாமிற்கு வந்தாரா, முகாம் நடந்ததா எனக் கேட்டுக் கூடத் தெரிந்துகொள்ளவில்லை , chief… தேவையுமில்லை.. அது நடந்தே தீரும்.. அங்கு ஒழுங்கும் , கட்டளைகளும் ஒரு நாளும் மீறப்பட்டதில்லை…
உலகமெங்கும் டாக்டர்களாலும் மேலாண்மை நிபுணர்களாலும் டாக்டர் “V” என்று பெரும் மரியாதையோடு அழைக்கப்படும் , பத்மஸ்ரீ திரு.வெங்கடசாமி நாயுடு , அக்டோபர 1,1918 ம் ஆண்டு வடமலாபுரம் என்னும் சிறு கிராமத்தில் , ஓரு விவசாயக்குடும்பத்தில், திரு.கோவிந்தப்பாவுக்கும் லஷ்மி அம்மாவுக்கும் பிறந்த ஐந்து குழந்தைகளில் தலைமகன்..
கண்டாங்கிச் சேலையும், பச்சை குத்திய மேனியுமாய் அரைக்காலையும் முக்காலே அரைக்காலையும் மனதிலே லகுவாகக் கூட்டத் தெரிந்த படிப்பறிவில்லாத இந்தத் தாயின் தலைமகனோ , மனக்கணக்கில் ராக்கெட்டின் வேகம் பெற்றிருந்தார்.. நடந்தது, நடப்பது மட்டுமின்றி எதிர்காலத்தில் பல்லாண்டுகளை மனதுக்குள்ளே கணிக்கும் அதீதத் திறன் பெற்றிருந்தார்..
தன்னம்பிக்கை + விடாமுயற்சி+ தொலை நோக்குப் பார்வை + அளவில்லாத மனிதம்+ ஆழ்ந்த ஆன்மீகம்( spirituality) இவையே டாக்டர் V.
சிறுவயதில் ராணுவத்தில் பணியாற்றி , பிறகு மதுரை அரசு (எர்ஸ்கின்) மருத்துவனையில் பலவருடங்கள் கண் பிரிவின் தலைவராக இருந்த டாக்டர் வெங்கடசாமி , Rheumatoid arthritis (psoriasis) என்னும் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு கை விரல்கள் மடங்கிய போது அவரின் வயது முப்பது.. தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடன் பயணித்த தாங்க முடியாத உடல் வலியுடன் , மடங்கிய விரல்களுடன் லட்சக் கணக்கான அறுவை சிகிச்சைகள் செய்ததுடன் உலகமே வியந்து நோக்கும் அரவிந்த் என்னும் ஒரு மாபெரும் சேவை ஸ்தாபனத்தை கட்டமைத்துள்ளார்.
தனது 58 ஆவது வயதில் 1976 ஆம் ஆண்டு ரிடையரான பிறகு , ஒரு கண் மருத்துவமனை தொடங்க எண்ணி அவர் ஒவ்வொரு வங்கியாக ஏறியபோது அவரிடம் அடிக்கடி சொல்லப்பட்ட வாக்கியம், ” ரிடையரான பிறகு ஆயிரங்களில் சிந்திக்க வேண்டும்… லட்சங்களில் சிந்திக்கக் கூடாது..”
ஒவ்வொரு ஞாயிறும் மேற்படிப்பு ( PG residents) மாணாக்கர்களிடம், ” How to build an Institution?” என்று உரை நிகழ்த்தும் போது இந்தக்கதையைக் கூறிச் சிரிப்பார்..
” கடன் தர மறுத்த அந்த வங்கி மேலாளருக்குத் தெரியவில்லை , நான் லட்சங்களில் சிந்திக்கவில்லை, கோடிகளில் சிந்தித்துக் கொண்டிருந்தேன் என்று”
ஒரு வாடகை வீட்டில் 11 படுக்கை வசதிகளுடன், வீட்டில் இருந்த , போர்வைகள் ஜமக்காளங்களைக் கூட உபயோகித்து தன் குடும்பத்தில் உள்ள டாக்டர்களை வைத்து அவர் ஆரம்பித்த அந்த மருத்துவனை தான் இன்று இருபதுக்கும் மேற்பட்ட கிளைகளுடன் அனு தினமும் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சையும் பார்வையும் அளித்துக் கொண்டிருக்கிறது..
தினமும் அவர் தன் டயரியில் எழுதி வைக்கும் குறிப்புகள் மிகப் பிரசித்தமானவை… தனக்குத்தானே பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தார் , அவர்.
” மெக்டொனால்ட் தன் பர்கரை உலகெங்கும் கொண்டு போகமுடிந்தால், ஏன் வைத்தியத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு போக இயலாது…”
” எந்த தொலை தொடர்பு வசதியும் இல்லாத காலத்தில் கௌதம புத்தரால் ஒரு மதத்தை எப்படி நிறுவிப் பரப்ப முடிந்தது..”
தம் கேள்விகளையே முயற்சியாக்கியதால் மதுரையின் ஐந்து மாடி அரவிந்த் மருத்துவமனையிலிருந்து , இன்று சென்னை , பாண்டிச்சேரி, சேலம், கல்கத்தா என பல நகரங்களில், நாடுகளில் கிளைகளாக உருவெடுத்துள்ளது , அரவிந்த்.
கண்புரையினால் பார்வை இழந்து, வருமானம் இன்றி முடங்கிக் கிடந்த பல லட்சம் பேரை அவர் சென்றடைந்த விதம் நூதனமானது..
“உங்களிடம் சிகிச்சைக்குத் தர பணம் இல்லையா..்தேவையில்லை.. நீங்கள் தர வேண்டாம்..
உங்களால் எங்களிடம் சிகிச்சைக்காக வர இயலாதா…. தேவை இல்லை, நாங்கள் உங்களை வந்தடைகிறோம்..”
இவையே அவருடைய தாரக மந்திரங்கள்..
அரவிந்த் மருத்துவமனையில் பணம் கொடுத்தோ இலவசமாகவோ வைத்தியம் செய்து கொள்வது உங்கள் சாய்ஸ்.. ஒரு சாதாரண விவசாயி பணம் கொடுத்து சிகிச்சை செய்து கொள்வதும், ஒரு நாட்டின் எதிர்கால ஜனாதிபதி இலவசப் பிரிவில் சிகிச்சை செய்து கொள்வதுமான அதிசயங்கள் அங்கே நிகழும்.. நிகழ்ந்தது..
ஏனெனில் இரண்டுக்கும் தரத்தில் ஏற்றத்தாழ்வில்லை என்பது உலகமே அறிந்த ரகசியம்.
அரவிந்தின் வெற்றிகரமான பிசினஸ் மாடல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பல வருடங்களாக ஒரு பாடமாக, case study யாக இருக்கிறது..
ஹார்வர்டின் பேராசிரியர் கஸ்தூரி ரங்கன் இந்தியாவிற்கு வந்து அரவிந்தின் மேலாண்மை வெற்றி ரகசியத்தைப் பற்றித் தம் ஆய்வை நிகழ்த்திய போது , டாக்டர் V அவருடன் பேசியது , தன் ஆன்மீகத் தேடல் பற்றியே..
“Spirituality என்பதை , சம்பந்தமில்லாமல் , யதேச்சையாக அவர் பேசுவதாக நினைத்துக் கொண்டிருந்தேன்.. ஆனால் அரவிந்த் என்னும்வெற்றிகரமான பிசினஸ் மாடலில் spirituality என்பது ஆணிவேர் போன்றது “என்பதைத் தாம் பின்னர் உணர்ந்ததாகவும் அதையே மாணாக்கர்களுக்கு போதித்ததாகவும் பேராசிரியர் கஸ்தூரி ரங்கன் சொல்கிறார்..
அமெரிக்காவின் பல்கலைக்கழங்களில் கண் சம்பந்தப்பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அரவிந்த்துக்கு, பயிற்சிக்காக வந்து செல்வது ஒரு லட்சியக்கனவாக இருக்கிறது…
பல நகரங்களில் கிளைகள், பல லட்சம் இலவச அறுவை சிகிச்சைகள், இந்திய, வெளிநாட்டு மாணவர்களுக்கான மேற்படிப்பு , பல்வேறு விதமான பயிற்சிகள்( fellowship programs) , மிகக்குறைந்த செலவில் லென்ஸ் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி, மருந்துகள், சர்ஜிகல் பொருட்கள் தயாரிப்பு என விரிவடைந்து கொண்டே சென்ற டாக்டர் V யின் கனவு எட்டிய உயரம் அளப்பரியது.
Lions Aravind Institute of community ophthalmology ( Laico) என்னும் சேவை அமைப்பு இந்திய மற்றும் பல பின்தங்கிய, வளரும் நாடுகளின் மருந்துவமனைகளுக்குப் பயிற்சி அளிக்கிறது.
Dr. GV Institute of Research என்னும் ஆராய்ச்சி மையம் உலக அளவில் immunology, genetics துறைகளில் ஆராய்ச்சியில் தலை சிறந்து விளங்குகிறது..
கூகிள் நிறுவனத்துடன் இணைந்து சரக்கரை நோய் விழித்திரை சம்பந்தமான அவர்களின் சமீபத்திய ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பு , தொழில் நுட்பமும், மனித மூளையும் இணைந்து இந்த நூற்றாண்டில் ஏற்படுத்தும் ஒரு மருத்துவ வரலாற்று மைல்கல் எனக் கொள்ளலாம்..
ஜூலை 7, 2006 அன்று அவர் பூதவுடல் இவ்வுலகை விட்டு நீங்கிய போது , உலக அளவில் மருத்துவர்கள் , மேலாண்மை நிபுணர்கள், அரசியல் தலைவர்கள் , அவருடைய பல்லாயிக்கணக்கான மாணவர்கள் மட்டுமின்றி அவரால் பார்வை பெற்ற பலகோடிக் கண்களும் கண்ணீர் சிந்தி தம் இறுதி அஞ்சலியைச் செலுத்தின.
அரவிந்த் என்பது ஒரு கார்பரேட் நிறுவனமன்று…….. தொலை நோக்குப் பார்வையின் பிதாமகராகிய, டாக்டர்.வெங்கடசாமி அவர்களால் ஏற்படுத்தப்பட்ட, “ஒரு வாழ்வியல் முறை, நெறி,…தர்மம்…..”
வியாபார நோக்கத்திலேயே செயல்படும் பல கார்பரேட் மருத்துவமனைகளுக்கு நடுவில், “குறைந்த செலவில் தரமான சேவை” என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் ஒரு நம்பிகை ஒளி , “அரவிந்த்”
தம் தள்ளாத வயதில் சுவரில் சாய்ந்து நின்றிருந்தார் டாக்டர் V. ஓடிப் போய் , “என்ன ஆச்சு ?” என்று உதவ முயன்ற செவிலியரிடம் சிரித்துக் கொண்டே சொன்னாராம், “மருத்துவமனையை நான் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்” என…
அது உண்மையும் கூட..
அவர் இவ்வுலகில் இல்லாவிட்டாலும், aurofarm என்னும் அரவிந்தின் பண்ணையில் அவர் நட்ட ஆலமரம் போல அரவிந்த் கண் மருத்துவமனைகளும் காலத்தை வென்று வேரூன்றித் தழைத்தோங்கும்..
ஒரு மருத்துவர் அல்லது மருத்துவமனை சமூகத்தை , மக்களை எப்படிப் பார்க்க வேண்டும் , எதிர் கொள்ள வேண்டும் என்பதைப் போதிக்கும் கீதை, அவருடைய வாழ்க்கை வரலாறு..
_டாக்டர் .ரோஹிணி கிருஷ்ணன். தஞ்சாவூர்.
( அவருடைய வாழ்க்கை வரலாற்றை முற்றிலும் அறிய Infinite vision என்ற புத்தகத்தைப் வாசிக்கவும்..)