குரு கோவிந்த சிம்மனின் பலிதான தினம் – அக்டோபர் 7

இன்றிருக்கும் வகையில் சீக்கிய மதத்தை வடிவமைத்தவரும், சீக்கிய இனத்தவரை போராடும் குணம்கொண்ட குழுவாக மாற்றியவரும், மாவீரரும், கவிஞரும், தத்துவ ஞானியும், சீக்கியர்களின் பத்தாவது குருவுமான குரு கோவிந்த சிம்மனின் பலிதான தினம் இன்று. 

சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான குரு தேஜ் பகதூரின் ஒரே மகன் குரு கோவிந்தசிங். 1666ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் நாள் இன்றய பாட்னா நகரில் பிறந்தவர் கோவிந்தசிங் அவர்கள். அவரது இயற்பெயர் கோவிந்த் ராய். முதல் நாலாண்டுகளை பாட்னா நகரில் கழித்த கோவிந்தராய் அதன் பிறகு பஞ்சாபிற்கும் பின் இமயமலை அடிவாரத்தில் வசித்து வந்தார். அங்கேதான் அவரது படிப்பு ஆரம்பமானது. 

1675ஆம் ஆண்டு காஷ்மீர் பண்டிதர்கள் குரு தேஜ்பகதூரை காண வந்தனர். பண்டிதர்களை இஸ்லாமியர்களாக மதம் மாற்றினால், அதனைத் தொடர்ந்து மற்ற மக்களை எளிதாக மதம் மாற்றிவிட முடியும் என்று எண்ணிய முகலாய அதிகாரிகளின் வற்புறுத்தல் மற்றும் பயமுறுத்துதலில் இருந்து தங்களை காப்பாற்றுமாறு அவர்கள் குரு தேஜ்பகதூரிடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து குரு தேஜ்பகதூரை மதம் மாற்ற முடிந்தால், தாங்களும் அதன் பிறகு மாறுகிறோம் என்று அவர்களை அவுரங்கசீப்பிடம் பதில் அளிக்க குரு தேஜ்பகதூர் அறிவுரை கூறினார். 

ஹிந்துஸ்தானத்தின் பாதுஷா அவங்கசீப்பை நேரில் வந்து காணுமாறு தேஜ்பகதூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இஸ்லாம் மதத்தை ஏற்க மறுத்த குரு தேஜ்பகதூர் 1675ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சீக்கியர்களின் பத்தாவது குருவாக கோவிந்த் ராய் நியமிக்கப்பட்டார். 

1699 ஆம் ஆண்டு பைசாகி திருவிழாவின்போது சட்லெஜ் நதிக்கரையில் அமைத்துள்ள அனந்தபூர் நகருக்கு வருமாறு சீக்கியர்களுக்கு குரு கோவிந்த்ராய் அழைப்பு விடுத்தார். நாடெங்கெங்கும் இருந்து சீக்கியர்கள் குழுமிய அந்த கூட்டத்தில் தர்மத்தைக் காப்பாற்ற அங்கேயே பலிதானமாக யார் தயாராக இருக்கிறார் என்று குரு வினவ, ஒருவர் முன்வந்தார். அவரை அழைத்துக்கொண்டு தனது கூடாரத்திற்குள் சென்ற குரு சிறிது நேரத்தில் ரத்தம் சொட்டும் வாளோடு வெளியே வந்தார். ” இன்னும் பலிதானிகள் தேவை” இடி முழுக்கம் என எழுந்தது குருவின் குரல். 

அடுத்தவர் வந்தார், குருவோடு கூடாரத்திற்குள் சென்றார், குரு மீண்டும் வெளியே வந்து தர்மம் காக்கும் போரில் இன்னும் ஆள் தேவை என்று கூற அடுத்தது வீரர்கள் வந்தனர். மொத்தம் ஐந்து பேர் தங்களைப் பலியிட முன்வந்தனர். சிறிது நேரத்தில் அந்த ஐவரோடும் வெளியே தோன்றிய குரு அப்போதுதான் சீக்கிய மார்க்கத்தை முழுவதுமாக மாற்றியமைத்தார். 

பாய் தயாசிங், பாய் தரம்சிங், பாய் ஹிம்மத்சிங், பாய் மோகும்சிங், பாய் சாஹிப்சிங் என்று அறியப்படும் அந்த ஐவரும்தான் கல்சாவின் முதல் வித்தாக அமைந்தனர். இரும்பு கொள்கலத்தில் சர்க்கரை சேர்க்கப்பட்ட தண்ணீரை தனது இருபுறமும் கூர்மையான குத்துவாளால் கலக்கி புனித குரு கிரந்தசாஹிப் மந்திரங்கள் ஓத அந்த ஐவருக்கும் அளித்து அவர்களை முறைப்படி சீக்கியர்களாக குரு கோவிந்தசிங் அறிவித்தார். பிறகு அவர்கள் கல்சாவின் புது உறுப்பினராக குருவை ஏற்றுக்கொண்டனர். சீக்கியம் என்ற மதம் முழுமையாக உருவான தினம் அதுதான். கேஷ் ( வெட்டப்படாத தலைமுடி ) கங்கா ( மரத்திலான ஆன சீப்பு ) காரா ( இரும்பினால் ஆனா கைவளை ) கிர்பான் ( கத்தி ) காசீரா ( அரையாடை ) ஆகிய ஐந்தும் சீக்கியர்களின் அடையாளமாகியது. புகையிலை பயன்படுத்துவது, ஹலால் முறையில் கொல்லப்பட்ட இறைச்சியை உண்பது ஆகியவை தடை செய்யப்பட்டது. இஸ்லாமியர்களின் கொடுமைகளில் இருந்து இந்துக்களையும் சீக்கியர்களையும் காப்பாற்றுவது ஒவ்வொரு சீக்கியர்களின் கடமையாக அறிவிக்கப்பட்டது. குரு கோவிந்த்சிங்கின் காலத்திற்குப் பிறகு நிரந்தர குருவாக குரு கிரந்த சாஹிபே இருக்கும் என்றும், இனி சீக்கியர்கள் தங்கள் பெயருக்குப் பின்னர் சிங் என்ற அடைமொழியை இணைத்துக் கொள்ளவேண்டும் என்று குரு ஆணையிட்டார். 

ஏற்கனவே சீர்கெட்டிருந்த மொகலாயர்களோடான உறவு குரு தேஜ்பகதூரின் பலிதானத்திற்குப் பிறகு இன்னும் விரிவடைந்தது. குருவின் படைகளும் மொகலாய படைகளும் பல்வேறு இடங்களில் மோதின. ஹிந்து தர்மத்தில் கிளைத்தெழுந்த சீக்கிய குரு தர்ம யுத்தத்தையே எப்போதும் மேற்கொண்டார். தேவையில்லாமல் போரில் இறங்குவதோ, பொதுமக்களை துன்புறுத்துவதோ அல்லது எந்த ஒரு வழிபாட்டுத்தளத்தை அழிப்பதோ ஒருபோதும் சீக்கியர்களால் முன்னெடுக்கப்படவில்லை. 

குருவின் தாயாரும் அவரின் இரு சிறு பிள்ளைகளும் முகலாய தளபதி வாசிம்கான் என்பவனால் சிறை பிடிக்கப்பட்டனர். எட்டு வயதும் ஐந்து வயதான குழந்தைகளை சித்தரவதை செய்து முகலாயர்கள் கொண்டார்கள். இதனை கேட்டு மனமுடைந்து குருவின் தாயாரும் மரணமைடைந்தார்கள். பதினேழு மற்றும் பதிமூன்று வயதான மற்ற இரண்டு பிள்ளைகளும் போர்க்களத்தில் பலியானார்கள். 

1707ஆம் ஆண்டு அவுரங்கசீப் மரணமடைய, முகலாயப் பேரரசில் வாரீசுப் போர் உருவானது. கோதாவரி நதி கரையில் முகாமிட்டிருந்த குருவை கொலை செய்ய முகலாயத் தளபதி வாசிம்கான் இரண்டு ஆப்கானியர்களை அனுப்பினான். பலநாட்களுக்குப் பிறகு அவர்கள் குருவின் கூடாரத்தில் நுழைந்து அவரை தாக்கி படுகாயமுற வைத்தார்கள். அவர்களில் ஒருவரை குரு கோவிந்தசிங்கே கொன்றார், மற்றவனை குருவின் படைவீரர்கள் கொன்றார்கள். தனது  மொத்த குடும்பத்தையும் தர்மம் காக்கும் போரில் பலிதானமாகிய குரு கோவிந்தசிங் 1708ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் நாள் மரணமடைந்தார். 

தர்மத்தை காக்க சீக்கியர்கள் மீண்டும் இஸ்லாமியர்களோடு மோதிக் கொண்டேதான் இருந்தார்கள். பாண்டாசிங் பகதூர், மஹாராஜா ரஞ்சித்சிங் ஆகியோரின் அயராத முயற்சியாலும், தொடர்ந்த மராட்டியர்களின் தாக்குதலாலும் முகலாய பேரரசு நாட்டில் இருந்து அகற்றப்பட்டது. 

நெருக்கடியான காலகட்டத்தில் தர்மத்தை காக்க அவதரித்த குரு கோவிந்தசிங்கை என்றும் நாம் நினைவில் வைத்துப் போற்றுவோம். 

(Visited 86 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *