ஜனநாயகத்தை மீட்ட தபஸ்வி – லோக்நாயக் ஜெயப்ரகாஷ் நாராயணன் – அக்டோபர் 11.

லோக்நாயக் என்றால் மக்கள் தலைவர் என்று பொருள். இந்த அடைமொழிக்கு சொந்தக்காரர் பிஹார் மாநிலத்தில் பிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், நெருக்கடியான நேரத்தில் பாரத நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றியவருமாகிய ஜெயப்ரகாஷ் நாராயணன். 

விடுதலைப் போராட்ட வீரர், சோசலிஸ கருத்துவாக்கத்தில் அமைந்த அரசியல் கட்சிகளின் ஆரம்பப்புள்ளி, சுதந்திரத்திற்குப் பிறகு எந்த பதவிக்கும் ஆசைப்படாமல் தேசிய புனர்நிர்மாணப் பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர், ஆச்சார்யா வினோபா பாவே நடத்திய சர்வோதய இயக்கத்தின் பெரும் தலைவர், இந்திரா அறிவித்த நெருக்கடி நிலையை எதிர்த்த அனைவருக்கும் தளபதியாக இருந்து வழிகாட்டியவர் என்ற பெருமைக்குரியவர் திரு ஜெபி அவர்கள். 

ஜெபியின் வாழ்க்கையை மூன்று பிரிவாகப் பிரித்துப் பார்க்கலாம். சுதந்திரப் போராட்டத்தில் அவரின் பங்கு, சுதந்திரத்திற்குப் பிறகான காலகட்டத்தில் அவரது பங்களிப்பு, பிறகு 1970 முதல் ஊழலுக்கு எதிராக, நெருக்கடி நிலையை எதிர்த்த அவரது போராட்டம் என்று பார்க்கலாம். 

ஹர்ஸ்தயாள் – புல்ராணி தேவி தம்பதியரின் மகனாக 1902ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் நாள் பிறந்த ஜெபி, பீஹாரிலும் பின்னர் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் துறையில் பயின்றவர். அப்போதுதான் அவருக்கு கம்யூனிச / சோசலிச சித்தாந்தத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. ரஷ்ய நாட்டில் முனைவர் பட்டம் படிக்கச் வந்த வாய்ப்பை நிராகரித்து விட்டு 1929ஆம் ஆண்டு அவர் பாரதம் திரும்பினார். 

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜெபி விரைவில் முக்கியமான தலைவர்களில் ஒருவரானார். காங்கிரஸ் கட்சி தடைசெய்யப்பட்ட நேரத்தில் தலைமறைவாக இருந்து போராட்டத்தை வழிநடத்தினார். கைது செய்யப்பட்டு நாசிக் சிறையில் அடைக்கப்பட்ட ஜெபி அங்கே ராம் மனோகர் லோஹியா, மினு மஸானி, அசோக் மேத்தா, அச்சுத பட்வர்தன் ஆகியோரோடு தோழமை பூண்டார். அவர்களுக்கிடையே நடந்த தொடர் விவாதங்கள் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே காங்கிரஸ் சோசலிஸ கட்சி என்ற அமைப்பை உருவாக்குவதில் அடித்தளம் ஆனது. ஆச்சாரிய நரேந்திர தேவ் தலைவராகவும் ஜெ பி செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். 

நாடு விடுதலை அடைந்த உடன், நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சியாக பிரஜா சோஷலிச கட்சி விளங்கியது. நேரடி அரசியலில் ஆர்வம் காட்டாத ஜெ பி, ஆச்சாரிய வினோபா பாவேயின் சர்வோதயா இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பூதான இயக்கம் என்ற பெயரில் நாடெங்கும் பணக்காரர்களிடம் உள்ள நிலங்களைப் பெற்று அதனை நிலமற்ற ஏழைகளுக்கு அளிக்கும் பெரும்பணியும், சம்பல் பள்ளத்தாக்கில் வசித்து வந்த கொள்ளைக்காரர்களை திருத்தி அவர்களை அரசாங்கத்திடம் சரணடைய வைக்கும் பணியையும் வினோபா பாவே நடத்தி வந்தார். இந்த சேவைகளில் வினோபா பாவேவிற்கு உறுதுணையாக ஜெ பி விளங்கினார். 

சுதந்திரம் அடைந்து இருபதே ஆண்டுகளில் லட்சிய கனவுகள் கலைந்து, பதவியைத் தக்க வைக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் வலுப்படத் தொடங்கியது. அதனைத் தடுத்து நாட்டை நல்வழிக்கு திருப்பும் பொதுமக்களின் மனசாட்சியாக மீண்டும் ஜெ பி அரசியலுக்கு வரவேண்டிய நேரமும் வந்தது. 

அன்றய பிஹார் மாநிலத்தில் ஊழலுக்கு எதிரான மாணவர் போராட்டம் வெடித்துக் கிளம்பியது. தங்கள் போராட்டத்திற்கு தலைமை ஏற்க மாணவர்கள் ஜெ பியை அழைத்தனர். இன்று தேசத்தின் அரசியலில் முக்கியமான தலைவர்களாக இருக்கும் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார், ராம் விலாஸ் பாஸ்வான், முலாயம் சிங் யாதவ் ஆகியோர் அன்று ஜெபியின் பின் அணிவகுத்த இளம் தலைவர்கள். 

அன்று பிரதமராக இருந்த இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது. இந்திரா நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். எல்லா தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஜெ பியும் கைது செய்யப்பட்டு சண்டிகரில் வைக்கப்பட்டார். நெருக்கடி நிலையை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. இந்திராவை எதிர்க்க எல்லா கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு பெரும்கூட்டணியை உருவாக்க ஜெ பி முயற்சி எடுத்தார். ஏறத்தாழ பதினெட்டு மாதங்கள் நாடு தனது ஜனநாயக உரிமையை இழந்து இருந்தது. 1977 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திரா நெருக்கடி நிலையை விலக்கிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் இந்திராவின் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்தது. 

சுதந்திரம் அடைந்த நேரத்திலும் சரி, நெருக்கடி நிலையை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சமயத்திலும் சரி, ஜெ பி நினைத்து இருந்தால் எந்த பதவியை வேண்டுமானாலும் அடைந்து இருக்கலாம். பதவியை நாடாத உத்தமர், வாழ்நாள் முழுவதும் எளிய மக்களின் நலனைப் பற்றியே சிந்தித்த தவயோகி, நாட்டு நலனே உயிர்மூச்சாகக் கொண்ட லோகநாயகர் 1979ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள் காலமானார். நாட்டின் உயரிய விருதான பாரத்ரத்னா விருதை அவருக்கு 1998ஆம் ஆண்டு வழங்கி நாடு அவருக்கு தனது மரியாதையைச் செலுத்தியது. 

சந்தேகத்தின் மேகங்கள் சூழும் போது, ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற தலைவர்களின் வாழ்க்கையே நமது வழிகாட்டியாக விளங்கும். 

(Visited 17 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *