புரட்சிவீரர் அஷ்பாகுல்லாகான் பிறந்தநாள் – 22 அக்டோபர்.

பாரதநாட்டின் விடுதலை என்பது பல்லாயிரக்கணக்கான தியாகிகளின் பலிதானத்தால் கிடைத்த ஓன்று. கத்தியின்றி ரத்தமின்றி என்று கூறப்பட்டாலும், தூக்குமேடையை முத்தமிட்டவர்கள், பீரங்கி குண்டுகளில் தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள், பல்வேறு வெளிநாடுகளில் இருந்து புரட்சிகீதம் இசைத்தவர்கள் என்று பலப்பல தியாகசீலர்களின் உதிரத்தால் உருவானது நாம் இன்று அனுபவித்துக்கொண்டு இருக்கும் சுதந்திரம். திட்டமிட்டு பல்வேறு தியாகிகளின் வரலாறு மறைக்கப்பட்டது என்றாலும் அதனைத் தாண்டி அந்த வீரர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்வதும், அதனை ஆவணப்படுத்துவதும் நமது கடமையாக இருக்கவேண்டும். எரிநட்ஷத்திரம் போல மிகக் குறுகிய காலமே வாழ்ந்தாலும், சர்வ நிச்சயமாக மரணம்தான் என்பதை உணர்ந்து, இன்று உந்தன் பாதத்தில் தாயே! நானே அர்ப்பணம் என்று பலிதானியான புரட்சிவீரர்களில் முக்கியமானவர் அஷ்பாகுல்லாகான். 

இன்றய உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூரில் ஷபியுல்லாகான் – மெஹரின்நிசா   தம்பதியரின் ஆறாவது மகனாக 1900ஆவது ஆண்டில் அக்டோபர் 22ஆம் நாள் பிறந்தவர் அஷ்பாகுல்லாகான். இவர்கள் ஆப்கானிஸ்தானைச் சார்ந்த பட்டாணி இனத்தவர். அஷ்பாகுல்லாகான் வளரும் காலம் என்பது இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காலம். வங்கப் பிரிவினையும், திலகரின் பூரண ஸ்வராஜ் முழக்கமும், பின்னர் காந்தியின் விஸ்வரூபமும், ஜாலியன்வாலாபாக் படுகொலையும், பல்வேறு ஆயுதம் ஏந்திய போராட்ட முயற்சிகளும் என்று நாடு ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டு இருந்தது. இதன் தாக்கம் அஷ்பாகுல்லாகான் வாழ்க்கையிலும் எதிரொலித்தது. 

1922ஆம் ஆண்டில் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார். நாடெங்கும் ஆங்கில ஆட்சிக்கு பாரத மக்கள் ஒத்துழைக்கப் போவதில்லை என்று போராடத் தொடங்கினார்கள். ஆனால் சவுரிசவுரா என்ற இடத்தில் தங்கள் கட்டுப்பாட்டை இழந்த மக்கள் ஒரு காவல் நிலயத்தைத் தாக்கி அதனை தீக்கிரையாக்கினார். இதில் சில காவலர்கள் இறக்க நேரிட்டது. மக்கள் அஹிம்சை முறையிலான போராட்டத்திற்கு இன்னும் தயாராகவில்லை என்று கூறி காந்தி போராட்டத்தை திரும்பப் பெற்றார். 

இதனால் மனசோர்வுற்ற பல்வேறு இளைஞர்கள் ஆயுதப் போராட்டப் பாதைக்கு திரும்பினார். பாரத நாடெங்கும் பல்வேறு குழுக்களாக ஆயுதப் போராட்டத்திற்கு மக்கள் தங்களைத் தயார் செய்து கொண்டுதான் இருந்தார்கள், அவர்களுக்கு உலகத்தின் பல்வேறு நாடுகளில் வசித்துவந்த பாரத மக்கள் உதவிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆயுதம் ஏந்திய போராட்டத்திற்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு என்பதுதான் உண்மை. அஷ்பாகுல்லாகான்ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோஸியேஷன் என்ற அமைப்பில் இணைந்துகொண்டார். அதாவது அஷ்பாகுல்லாகான் புகழ்பெற்ற புரட்சிவீரர்களான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, சந்திரசேகர ஆசாத் ஆகியோரின் தோழரும், சகபோராளியுமாவார். 

ஆயுதம் தாங்கிய போராட்டம் என்றால் ஆயுதம் வேண்டாமா ? ஆயுதம் வாங்க பணம் வேண்டாமா ? எப்படி பணம் சம்பாதிக்க ? ஒரே வழி கொள்ளை அடிப்பதுதான், ஆனால் அதற்காக சக பாரத மக்களிடம் கொள்ளை அடிப்பது தவறு, வேறு என்ன செய்ய ? ஆங்கில ஆட்சியாளர்களிடம் இருந்து கொள்ளை அடிப்போம், அந்தப் பணத்தை வைத்து ஆயுதம் வாங்குவோம், அந்த ஆயுதங்களைக் கொண்டு ஆங்கில ஆட்சியை விரட்டுவோம் என்று வீரர்கள் முடிவு செய்தனர். 

1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் நாள் – ஷஹரான்பூரில் இருந்து லக்நோ நகருக்கு வந்து கொண்டிருந்த புகைவண்டியை ககோரி என்ற இடத்திற்கு அருகே அபாயச்சங்கிலியை இழுத்து நிறுத்தினார்கள் புரட்சியாளர்கள். அதில் இருந்த பணம் ஏறத்தாழ ஒருலட்சம் ரூபாயை கொள்ளை அடித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். துணிகரமான இந்த செயலில் அஷ்பாகுல்லாகான் உடன் ராம் பிரசாத் பிஸ்மி, சந்திரசேகர ஆசாத், சசீந்திர பக்ஷி, கேசப் சக்கரவர்த்தி, மன்மத்நாத் குப்தா, முராரிலால் குப்தா, பன்வாரிலால், முகுந்த்லால் ஆகியோர் பங்கெடுத்தனர். இதில் நடைபெற்ற கைகலப்பில் அஹ்மத் அலி என்ற பயணி கொல்லப்பட்டார். 

நாடெங்கும் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. நாற்பது போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தமான் சிறை வாசம் உள்பட பல்வேறு தண்டனைகள் வீரர்களுக்கு விதிக்கப்பட்டது. ராம் பிரசாத் பிஸ்மி, தாகூர் ரோஷன்சிங், ராஜேந்திரநாத் லஹரி, அஷ்பாகுல்லாகான் ஆகிய நால்வருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. 

1927ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் நாள் அஷ்பாகுல்லாகான் தூக்கிலிடப்பட்டு மரணம் அடைந்தார். இருபத்தியேழு ஆண்டுகளே வாழ்ந்த அந்த வீரன் நாட்டின் விடுதலைக்காக தன்னையே தியாகம் செய்தார். 

பல்லாயிரம் வீரர்களின் பெரும் தியாகத்தால் கிடைத்தது நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரம். அந்த வீரர்களை ஒரு நாளும் மறக்காமல் இருப்பது நமது கடமை. 

(Visited 16 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

Comment (1)

  1. இது போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறைத் தேடிப் பிடித்து மக்களிடம் சேர்ப்பிக்கும் ஒரே இந்தியா இதழுக்கு தேசபக்தர்கள் சார்பாக அடியேனின் நன்றிகளும் நமஸ்காரங்களும்.
    வந்தே மாதரம்

    0

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *