திரைப்பட இயக்குனர் V சாந்தாராம் – நவம்பர் 18

வெற்றிகரமான இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் என்ற பல முகங்களைக் கொண்ட திரு சாந்தாராமின் பிறந்தநாள் இன்று. திரைப்படங்களில் ஒலியையும் ஒளியையும் புகுத்திய கலைஞர்களில் இவர் ஒரு முன்னோடி. 

1901  ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் நாள் இன்றய மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோல்ஹாபூர் நகரில் பிறந்தவர் சாந்தாராம். இள வயதிலேயே கலையார்வம் கொண்டவராக விளங்கிய சாந்தாராம், பாபுராவ் என்பவர் நடத்திய திரைப்பட நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். 1921ஆம் ஆண்டு சுரேகா ஹரன் என்ற மௌன படத்தில் அறிமுகமானார். நேதாஜி பால்கர் என்ற படத்தை முதல்முதலாக 1927ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டார். சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் படைத் தளபதி நேதாஜி பாலகர் பற்றிய படம் இது. 

அதனைத் தொடர்ந்து 1929ஆம் ஆண்டு நண்பர்கள் சிலரோடு இணைந்து பிரபாத் திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் 1932ஆம் ஆண்டு தயாரான அயோத்திசா ராஜா என்ற படம்தான் மராட்டி மொழியில் தயாரான முதல் படம். அதற்கு முன் அநேகமாக மௌனப் படங்கள்தான் பாரதத்தில் தயாரிக்கப் பட்டு வந்தன. ஒரே நேரத்தில் மராத்தி மொழியிலும் ஹிந்தி மொழியிலும் சாந்தாராம் இயக்கி இருந்தார். 

சமகால வாழ்க்கையைப் பதிவு செய்ததிலும், பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் இயக்குனர் சாந்தாராம் இன்றும் நினைக்கப்படுகிறார். காவல்துறையைச் சார்ந்த ஒருவருக்கும் பாலியல் தொழில் செய்து வந்த பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட காதலை மனூஸ் என்ற மராத்தி மொழிப் படத்தில் கையாண்டார் சாந்தாராம். மஹாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய ஹிந்து சமயத் துறவியான ஏகநாதரைப் பற்றி தர்மாத்மா, வயதான முதியவரை திருமணம் செய்ய மறுக்கும் இளம் பெண்ணைப் பற்றி துனியா ந மானே ஆகியவை இவர் ஆரம்ப காலங்களில் இயக்கிய முக்கியமான படங்களாகும். 

பிரபாத் திரைப்பட நிறுவனத்தில் இருந்து விலகி 1942ஆம் ஆண்டு ராஜ்கமல் கலாமந்திர் என்ற திரைப்பட நிறுவனத்தை அவர் தொடங்கினார். ஏறத்தாழ அறுபதாண்டு காலத்திற்கும் மேலாக சாந்தாராம் திரைத்துறையில் பங்களித்து வந்தார். ஜனக் ஜனக் பாயல் பஜே என்ற பெயரில் இவர் இயக்கிய திரைப்படம்தான் முதல் வண்ணப்படம். நடனக் கலைஞர்களை கதாநாயகர்களாகக் கொண்ட இந்தப் படம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. 

சிறைத்தண்டனை என்பது கைதிகளை நல்வழிப்படுத்தவே அமைக்கப்பட்டவை என்ற எண்ணத்தை விதைக்கும் தோ ஹங்கேன் பாரா ஹாத் ( இரண்டு கண்களும் பனிரெண்டு கைகளும் ) என்ற படம் திரையுலகில் ஒரு மைல்கல் என்று கூறலாம். பெர்லின் நகரில் நடந்த திரைப்பட விழாவில் வெள்ளிகரடி விருதையும் அமெரிக்காவிற்கு வெளியே எடுக்கப்பட்ட படங்களில் சிறந்த படம் என்ற விருதையும் பெற்ற படம் இது. பல்லாண்டு வாழ்க என்ற பெயரில் எம் ஜி ஆர் நடிப்பில் தமிழிலும் இந்தப்படம் எடுக்கப்பட்டது. 

திரைப்படத் துறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது சாந்தாராமுக்கு 1985ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவரது மரணத்திற்குப் பின்னர் 1992ஆம் ஆண்டு இவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது. 

1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் நாள் இயக்குநர் சாந்தாராம் காலமானார். 

(Visited 37 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *