தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்கடே – நவம்பர் 25

கன்னட மாநிலத்தின் தெற்குப் பகுதியில் மங்களூர் நகருக்கு 75 கிலோமீட்டர் தொலைவில் நேத்ராவதி நதியின் கரையில் அமைந்துள்ள சிறு நகரம் தர்மசலா. மஞ்சுநாத ஸ்வாமி என்ற பெயரில் சிவபெருமான் குடிகொண்டு இருக்கும் நகரம் அது. அந்த கோவிலின் பரம்பரை அறங்காவலராக, தர்மாதிகாரியாக எட்டு நூறாண்டுகளாக செயல்பட்டுக்கொண்டு வரும் சமண சமயத்தைச் சார்ந்த  பெர்கடே குடும்பத்தின் வாரிசாக ஹெக்கடே என்ற பட்டதோடு இருபத்தியோராம் தர்மாதிகாரியாக இருக்கும் திரு வீரேந்திர ஹெக்கடே அவர்களின் பிறந்ததினம் இன்று. 

திரு ரத்னவர்ம ஹெக்கடே –  திருமதி ரத்னம்மா ஹெக்கடே தம்பதியரின் முதல் மகனாக 1948ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் நாள் பிறந்தவர் திரு வீரேந்திரா. தந்தையின் மறைவுக்குப் பிறகு  தர்மசாலாவில் இருபத்தியோராம் தர்மாதிகாரியாக 1968ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் திரு வீரேந்திரா நியமிக்கப்பட்டார். அது முதல் அவர் வீரேந்திர ஹெக்கடே என்று அழைக்கப்படத் தொடங்கினார். 

தர்மத்தின் இருப்பிடத்தின் அதிகாரி என்பதால், பெர்கடே குடும்பத்தினர் பசியில் இருந்து, பிணையில் இருந்து, பயத்தில் இருந்து அறியாமையில் இருந்து விடுதலை என்ற சேவையை எட்டு நூற்றாண்டுகளாகச் செய்து வருகின்றனர். மாறிவரும் சமுதாயத்தின் தேவைங்களை இனம் கண்டு வீரேந்திர ஹெக்கடே இந்த சேவைகளை கடந்த ஐம்பதாண்டுகளாக முன்னெடுத்து வருகிறார். 

மஞ்சுநாத ஸ்வாமி கோவிலுக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக உணவு அளிக்கப்படுகிறது. கேரள மற்றும் கர்நாகத்தில் அனைத்து கோவில்களிலும் நடைபெறும் இயல்பான ஒன்றுதான் இது. ஆனால் முழுவதும் மரபு சாரா எரிசக்தியைப் பயன்படுத்தி உணவு தயாரிப்பதிலும், உணவு பரிமாறப்படும் இலைகள் முதல் அனைத்து உணவுப் பொருள்களையும் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உருவாக்குவதிலும் தர்மசாலா கோவில் தனித்து விளங்குகிறது. வீரேந்திர ஹெக்கடே பொறுப்புக்கு வந்த பிறகு பக்தர்கள் உணவருந்த பிரமாண்டமான உணவுக்கூடத்தை உருவாக்கினார். நாள் ஒன்றுக்கு சராசரியாக முப்பதாயிரம் பக்தர்களும் பண்டிகை தினங்களில் எழுபதாயிரம் பக்தர்களும் இங்கே உணவு உண்கிறார்கள். 

கர்நாடகத்தின் தெற்குப் பகுதி என்பது மலைப் பிரதேசம். அங்கிருந்து மருத்துவ உதவிக்காக நகரங்களுக்குச் செல்ல முடியாத கிராமவாசிகளுக்காக வீரேந்திர ஹெக்கடே நடமாடும் மருத்துவமனைகளை அமைத்துள்ளார். தேவையான மருந்து மற்றும் உபகாரணங்களோடு மருத்துவர்கள் கிராமப்புற மக்களைத் தேடிச் சென்று சேவை புரிகின்றனர். தர்மசாலாவில் அருகில் உள்ள உஜிரி  நகரில் 100 படுக்கை கொண்ட மருத்துவமனை, மங்களூர்  நகரில் கண்மருத்துவமனை, தார்வாத் நகரில் ஒரு பல் மருத்துவமனை மற்றும் 400 படுக்கைகள் கொண்ட பொது மருத்துவமனை பல்வேறு அரசு மருத்துவமனைகளில் தனி கட்டிடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அழிப்பது என்று மருத்துவத் துறையிலும் ஹெக்கடேயின் சேவை மகத்தானது. 

மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு கல்வி நிறுவனங்களையும் ஹெக்கடே தொடங்கி உள்ளார். ஆரம்பக் கல்வி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள், கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டப் படிப்பு, மருத்துவம், மேலாண்மை என்று பல்வேறு துறைகளில் உயர் கல்விக்கான நிறுவனங்களை ஹெக்கடே நடத்தி வருகிறார். 

பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற முன்னேற்றம், கிராமப்புற சுயசார்பு, கைத்தொழில் வளர்ச்சி,  நலிவடைந்த கோவில்களை சீரமைப்பு செய்தல் என்று பல்வேறு துறைகளில் வீரேந்திர ஹெக்கடே செயலாற்றி வருகிறார். இது போக பல்வேறு வழக்குகளைத் தீர்த்து வைக்கும் நீதிபதியாகவும் அவர் உள்ளார். அவரது தீர்ப்பை பொதுவாக மக்கள் மீறுவது இல்லை. 

பலனில் பற்று வைக்காமல் கடமையை கடமைக்காகவே செய் என்று கீதை கூறுகிறது. எந்த செயலுக்கும் அதற்கான பலன் வந்தே சேரும் ஆனால் பலனுக்காகவே செயல் செய்வது தவறு என்பது கீதை காட்டும் பாதை. நீண்ட காலம் சமுதாய சேவையை தனது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட வீரேந்திர ஹெக்கடே அவர்களுக்கு பல்வேறு பட்டங்களும் விருதுகளும் தானாகவே வந்து சேர்ந்தது. 2009ஆம் ஆண்டு  கர்நாடக அரசு அவருக்கு கர்நாடக ரத்னா என்ற விருதை வழங்கியது. பாரத அரசு 2000ஆம் ஆண்டில்  பத்ம பூஷன் விருதையும் பின்னர் 2015ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது மதிப்பு மிக்க விருதான பத்மவிபூஷண் விருதையும் வழங்கி அவரை சிறப்பித்தது. 

அறம் காக்க அறம் நம்மைக் காக்கும் என்ற மொழிக்கு உதாரணமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் திரு வீரேந்திர ஹெக்கடே அவர்களுக்கு  ஒரே இந்தியா தளம் தனது வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.  வீரேந்திர ஹெக்கடேயின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக என்றும் இருக்கும். 

(Visited 13 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *