விண்வெளி ஆராய்ச்சியாளர் சதிஷ் தவான் நினைவு நாள் – ஜனவரி 3

சந்திரமண்டலத்தியல் கண்டு தெளியும் விண்வெளி ஆய்வில் தனியிடம் பெற்று பாரதம் விளங்குகிறது என்றால் அதற்கான அடித்தளம் இட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான பேராசிரியர் சதிஷ் தவான் அவர்களின் நினைவுநாள் இன்று. 

காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்த சதிஷ் தவான் 1920ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி பிறந்தவர். இன்று பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரத்தின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தையும், இயந்திரவியல் துறையில் இளங்கலைப்  பட்டத்தையும் அதனைத் தொடர்ந்து ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றவர். பின்னர் அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் விண்வெளி  பொறியியல் துறையில் முதுகலை பட்டமும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வானூர்தி பொறியியல் துறையில் முதுகலை பட்டமும் பின்னர் கணிதம் மற்றும் வானூர்தி பொறியியல் ஆகிய இரண்டு துறைகளிலும் முனைவர் பட்டத்தையும் பெற்றவர். 

தனது உயர்கல்வியை அமெரிக்காவில் முடித்த பிறகு சதிஷ் தவான் 1951ஆம் ஆண்டு தாயகம் திரும்பி பெங்களூரு நகரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். 1962ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தில் இயக்குநராகப் பொறுப்பேற்ற பேராசிரியர் தவான் 1981ஆம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் நீடித்தார். தவான் பொறுப்பில் இருந்த காலத்தில் கூடுமான வரை நாட்டில் தயாரான பொருள்களை வைத்தே அறிவியல் ஆய்வுகளை நடத்தவும், புதிதாக சுதந்திரம் அடைந்த நாட்டின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் துறைகளிலும் ஆய்வு செய்யவும் அவர் தூண்டுகோலாக இருந்தார். 

புதிதாக சுதந்திரம் அடைந்த பாரத நாடு அறிவியல் துறையில் முன்னேறவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த விக்ரம் சாராபாய் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தைத் தொடங்கி, திறமை வாய்ந்த இளைஞர்கள் துணையோடு செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் மர்மமான முறையில் சாராபாய் இறக்க,  மிகக் குறுகிய காலம் பேராசிரியர் எம் ஜி கே மேனன் தலைமையில் விண்வெளி ஆய்வு மையம் செயல்பட்டது. இந்த முக்கியமான ஆய்வு மையத்தை வழிநடத்த பேராசிரியர் சதிஷ் தவான்தான் பொருத்தமான மனிதராக இருப்பார் என்று கருதிய அரசு அவரை விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக நியமித்தது. 1972ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் பொறுப்பேற்றுக்கொண்ட தவான் ஏறத்தாழ பனிரெண்டு ஆண்டுகள், 1984ஆம் ஆண்டு வரை விண்வெளி ஆய்வை வழிநடத்தினார். 

பாரத நாட்டின் விண்வெளி ஆய்வு  பேராசிரியர் சதிஷ் தவானால் மிக உறுதியாக அடித்தளம் இடப்பட்டது. அவர் காலத்தில்தான் ஆரியபட்டா, பாஸ்கரா போன்ற துணைக்கோள்களை விண்ணில் ஏவப்பட்டது. துணைக்கோள்களை விண்வெளியில் செலுத்தும் ஏவுகணைகளின் ஆரம்பகால வெற்றிகளும் எட்டப்பட்டன. விண்வெளி ஆய்வின் மூலம் தொலைத்தொடர்பு துறையிலும், பருவநிலை மாற்றம், மழை பொழிவு போன்ற தகவல்கள் திரட்டப்பட்டு மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டன. 

விண்வெளி ஆய்வில் பின்னடைவு ஏற்படும் போது அதற்கான பொறுப்பை தானே ஏற்றுக்கொண்டும், வெற்றியடையும் காலத்தில் அதற்கான பாராட்டைத் தன் அணியைச் சார்ந்தவர்கள் பெறச் செய்வதும் என்று பேராசிரியர் சதிஷ் தவான் ஒரு சிறந்த தலைவருக்கான உதாரணமாக விளங்கினார். அடுத்த தலைமுறை ஆய்வாளர்களும், தலைவர்களையும் உருவாக்கி தனக்கு அளிக்கப்பட பணியை தவான் திறம்பட நடத்தினார். 

பாரத நாட்டின் முக்கியமான ஆய்வாளரான சதிஷ் தவானின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் 1971ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதையும், 1981ஆம் ஆண்டு பத்மவிபூஷண் விருதையும் வழங்கி நாடு அவரை கௌரவித்தது. 

பேராசிரியர் சதிஷ் தவான் 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் நாள் காலமானார். ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திற்கு பேராசிரியர் சதிஷ் தவானின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. சதிஷ் தவான் அமைத்துக் கொடுத்த வலிமையான அடித்தளத்தில் நாடு இன்று விண்வெளி ஆய்வில் உலகில் முன்னணியில் உள்ளது. 

பேராசிரியர் சதிஷ் தவான் உள்பட அறிஞர் பெருமக்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. 

(Visited 15 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *