தேவார தரிசனம் – 1

“யாராவது இங்கே இருந்தால் அவர்களிடம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுப் நாம் போய் ஸ்நானம் செய்யலாம். இன்றைக்கு எனப் பார்த்து யாருமில்லை பகவதி நீ என்ன சொல்லுகின்றாய்”

“ஸ்வாமி!!! நாம் இருவரும் சேர்ந்து ஸ்நானம் செய்ய வேண்டியது அவசியம் குழந்தையை வீட்டில் விட்டும் வர முடியாது என்ன செய்யலாம்.. எனக்கு ஓர் எண்ணம். சொல்லவா”

“சொல்லும்மா”

“குழந்தையை இங்கே புஷ்கரணி கரையில் விட்டுச் செல்லுவோம். நாம் சீக்கிரம் நீராடி வந்துவிடலாம். ஒன்றும் ஆகாது”

“அதுவும் சரிதான் ஈஸ்வர சந்நிதிக்கு எதிரே என்ன தீங்கு நடக்கும் .. சரி வா போகலாம்.”

தன் மீது அந்த தெய்வீகத் தம்பதியர் கொண்ட நம்பிக்கைக்கு ஈசன் திருவிளையாடல் புரிந்து பதில் நல்க சித்தம் கொண்டான்

புஷ்கரணியின் படிக்கட்டுகளில் தம்பதியினர் திரும்பிப் பார்த்துக் கொண்டே இறங்கினர்.

சிறு பாலகன் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான். தந்தையும் தாயும் நீரில் மூழ்கி நீராடத் தொடங்கினர்.
ஈசன் திருவுளம் பசியுருவில் தொடங்கியது

பாலகனுக்கு திடீரென பசி கிளம்பியது.. அழுகை பீறிட்டது. ஆனால் சிறிது நேரத்தில் பசி அடங்கி அழுகையும் அடங்கியது

தாயாருக்கும் தந்தையாருக்கும் புஷ்கரணி ஆழத்திலும் குழந்தையின் அழுகுரல் கேட்டது

நீச்சலில் உடலை உந்தி மேலெழும்பிப் பதட்டமாக வெளியில் வந்து தலை நீட்டிப் பார்த்தனர். படிக்கட்டுகள் மட்டுமே தெரிந்தன. பதற்றத்துடன் நீந்தி கரையை அடைந்து விரைந்து படியேறி, நடந்து குழந்தைக்கு அருகே வந்தார். பாலகன் சிரித்துக் கொண்டிருந்தான். அழுத சுவடு இல்லை

ஆச்சரியமாக தன் மனைவியைக் கவனித்து கண்ணால் வினவினார். ” பகவதி என்ன ஆனது நம் குழந்தை அழுத சப்தம் கேட்டது தானே”

“ஆம் ஸ்வாமி.. அழும் குரல் கேட்டது. அதுவும் நம் பாலகன் குரல்.. ஆனால் இங்கே இவன் சிரித்துக் கொண்டிருக்கிறான். அதிலும் ஆச்சரியம் குழந்தையின் வாயில் பால் சிந்தியிருக்கிறது. யரோ குழந்தைக்கு பால் கொடுத்திருக்கிறார்களே.. ரொம்ப பயமாக இருக்கிறதே

” ஈசன் சந்நிதியில் என்ன பயம்.. இரு அவனிடமே கேட்போம்.. குழந்தாய் ஏன் அழுதாய்.. உன் வாயில் பால் சிந்தியிருக்கிறதே. யார் உனக்குப் பால் கொடுத்தார்கள்.. விபரமாக சொல்லுவாயா

இறைவனின் திருவிளையாடல்,

அந்தச் சின்னஞ்சிறு பாலகன் யார் தனக்கு பாலூட்டியது என்பதைச் சொல்வதைக் கேட்போம்

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்

காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே

இதோ இந்த பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்துக்கானவன், படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் அந்த நான்முகன் தன் படைப்புத் தொழிலை எங்கனம் செய்வது என்ற ஞானத்தை இவரிடமிருந்தன்றோ பெற்றார். இடப்பாகத்துச் செவியில் தோடு அணிந்திருந்தார், காளை மீதமர்ந்து வந்தார். தலையிலே பிறைச் சந்திரன் சூட்டியவராக இருந்தவர், மேலெல்லாம் சுடுகாட்டுச் சாம்பல் பூசியிருந்தாரே, எனது உள்ளம் அவர் வசத்தில் களவு கொண்டார்

குறிப்பு:

பாலகன் என உரிமை கொண்டு அழைத்தாலும் போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரிய ஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம் அது

மூவர் தேவாரத்தினையும் கொண்டு சிவ தரிசனக் காட்சிகளை எழுதும் எண்ணம் இரண்டு மாதங்களுக்கு முன்பு தோன்றியது.
அது எனக்காகத் தோன்றியது எனச் சொல்வதைக் காட்டிலும், அது ஈசன் விளையாட்டாக அமைந்தது.
தம் மகளின் திருமணத்திற்கு தாங்கள் செய்யும் முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லை என பரிகாரப் பிரார்த்தனைகள் கேட்டு வந்த ஒரு தம்பதியினருக்கு ஜாதகத்தின்படி பரிகாரங்கள் சொல்லி சில சிவ ஸ்தலங்களில் வழிபாடு செய்து கொள்ளும்படி சொல்லியிருந்தேன்.
அவர்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிவிட்டு திருமணம் கை கூடி வந்திருப்பதாகச் சொல்லிவிட்டு வாட்சப்பில் ஒரு படம் அனுப்பியிருந்தனர்.

ஆலயத்தின் உட்பக்கச் சுவரொன்றில் எழுதப்பட்டிருந்த சுந்தரர் தேவாரத்தின் பதிகம் கொண்ட படம் .

நீங்கள் திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி இதெல்லாம் குறித்து எழுதுகின்றீர்கள். அதே போல ஆழ்வார் பாசுரங்களை வைத்தும் எழுதுகின்றீர்கள். அதே போல தேவாரப் பதிகங்களுக்கும் எழுத வேணும் எனக் கேட்ட போது இதை நினைத்துக் கொண்டேன்

எங்கே தொடங்குவது என யோசித்த போது தேவாரம் தொடங்குமிடமே என நினைத்துத் தொடங்குகின்றேன்.

சந்திரமௌலீஸ்வரன் விஸ்வநாதன்

(Visited 20 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *