ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! 20

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழில் என் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்!

பெண்களைத் திருமணத்தில் தாரை வார்த்துக்கொடுக்கும்போது மணமகனைப் பார்த்துப் பெண்ணின் தந்தை கூறுவார்: உன் கையில் ஒப்படைக்கும் இந்தப் பெண்ணின் உடல், பொருள், ஆவி அனைத்தும் உன்னைச் சேர்ந்தது. இவளை நீ உன் கண்ணினும் மேலாகக் காத்துவரவேண்டும்.” என்று வேண்டுவார். இப்படி ஒரு உறுதிமொழி இன்றளவும் திருமணங்களில் கொடுக்கப் படுகிறது.

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று= உன்னிடம் கைப்பிடித்துக்கொடுத்திருக்கும் இந்தப்பெண்பிள்ளை உனக்கே அடைக்கலம் அப்பா, கவனம் எனப் பெண்ணின் தந்தை கூறுவது போல்

அங்கு அப்பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்= இப்போது எங்களுக்கு வந்திருக்கும் அச்சமே என்னவெனில், ஒருவேளை அப்படி எங்களுக்குத் திருமணம் செய்விக்க வேண்டி எங்கள் தந்தையார்களால் பார்த்து நிச்சயிக்கும் மணமகன் சிவனைடியாராக இல்லாவிட்டால் என்ன செய்வது என் அப்பா, என் ஈசனே, ஆகவே எங்கள் வாழ்க்கையே பயனற்றுப் போகும் வண்ணம் அத்தகையதொரு மணமகன் எங்களுக்கு வேண்டாம் என்ற கோரிக்கையை நாங்கள் இப்போது புதுப்பிக்கின்றோம்.

ஈசா, எங்கள் பெருமானே, உனக்கொன்று சொல்லுகிறோம், விண்ணப்பம் வைக்கிறோம் உன்னிடம், தயவு செய்து உன் திருச்செவிகளால் அந்த விண்ணப்பத்தைக் கேட்டுப் பரிசீலித்து எங்கள் மனம் மகிழும் வண்ணம் நிறைவேற்றுவாய்.

எங்கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க= எங்கள் ஈசனே, எங்களைத் திருமணம் செய்யும் அன்பர் சிவனடியாராக இல்லை எனில் எங்களால் முழுமனதோடு அவருடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது. அவர் எங்களை வலிய அணைத்தால் நாங்களும் எங்கள் மார்பகங்கள் அழுந்தும் வண்ணம் அவரை அணைக்க முடியாது. ஆகவே நின் அடியார்களாக இருப்பவர்களே அன்றி மற்றொருவர் எங்களைத் திருமணம் செய்யாமல் நீதான் அருள் புரியவேண்டும்.

மேலும் நாங்கள் செய்யும் சேவைகள், வழிபாடுகள், விரதங்கள் அனைத்தும் கணவரோடும் சேர்ந்து, அல்லது கணவர் இல்லாமல் பெண்டிர் மட்டும் நோற்கும் நோன்பு எதுவானாலும் அந்த வழிபாடுகள், விரதங்கள் அனைத்தும் உன் வழிபாட்டுக்கன்றி, உனக்காக நாங்கள் இருக்கும் விரதங்கள் அன்றி வேறொரு கடவுளுக்காக இருத்தல் வேண்டாம். எங்கள் கைகளால் பூத்தொடுத்தல், கோலமிடுதல், மற்றும் பலவேறு இறைப்பணிக்ள் செய்தல் எல்லாம் உனக்காகவே அன்றி மற்றக் கடவுளருக்காகச் செய்யாமல் இருக்கவேண்டும்.

கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க= இரவிலும், பகலிலும் எங்கள் கண்கள் உன் திருவுருவைத் தவிர மற்ற வேறு எந்தப்பொருளையும் காணக் கூடாது. ஈசனின் நினைவிலேயே அழுந்தி அழுந்தி காணும் பொருளில் எல்லாம் ஈசனையே காண்கின்றனர் இந்த அடியார்கள். பரமனை அன்றி மற்றவர் எவரையும் தங்கள் தலைவனாக ஏற்க மாட்டார்கள்.

இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழில் என் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்!= இத்தகையதோர் அருமையான பரிசிலை நீ எங்களுக்குத் தந்தருளவேண்டும். எங்கள் கோவே, எங்கள் தலைவா, இதை மட்டும் நீ நாங்கள் கேட்டவண்ணம் அருளிச் செய்தால், இந்தச் சூரியன் உதித்தாலோ, அல்லது உதிக்காவிட்டாலும் கவலை இல்லை. கிழக்கே உதிக்காமல் மேற்கே உதித்தாலும் கவலைப் படமாட்டோம். எங்களுக்குத் தேவை உன் அருள் ஒன்றே. உன் கருணை ஒன்றே. ஈசனின் கருணா கடாக்ஷம் இருந்துவிட்டால் இவ்வுலக வாழ்க்கையே துச்சம் என்கின்றனர் இந்தப் பெண்கள்.

(Visited 15 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *