சினிமா

சோலா (Chola) – மலையாளப் படம் – திரை விமர்சனம்

எனக்கு படங்களை அதிக அளவுக்கு விமர்சனம் செய்து எழுத வராது . ஏனெனில், என்னுடைய விமர்சனத்தை நம்பி, படம் பார்த்து  படத்தை ரசிக்கவே தெரியாதவன் என்று என்னைத் திட்டக் கூடாது,  என்ற முன்னெச்செரிக்கை கொடுத்து விட்டே எழுதுகிறேன். சில படங்களை முக நூல் விமர்சனத்தில் ஆஹா ஓஹாவென பலரும் பாராட்டியும், சில படங்கள் எனக்குப் பிடிக்காமல் இருப்பதுதான் காரணம். அதைத் தலைகீழாக போட்டால் போதும், எனக்குப் பிடித்த படம் உங்களுக்குப் பிடிக்க எந்த அவசியமும் இருக்க வேண்டியதில்லை.

பெரும்பாலும் நான் திரைப்படங்களில் லாஜிக் பார்த்து படத்தை, பிடித்திருக்கிறது அல்லது இல்லை என்ற வகைக்குள் அடக்குவதில்லை. நான் பார்க்கும் படங்களில் எனக்குப் பிடித்த படங்கள் என்பது இரண்டே வகையானவைதான். ஒன்று, ஒரு படம் இரண்டரை மணி நேரமும் , கதை செல்லும் வேகம் தெரியாமல், அத்தனை வேகமாக படம்  செல்ல வேண்டும். அது ஜன ரஞ்சமான படமாக இருக்கலாம். விறுவிறுப்பான திரில்லர் படமாக இருக்கலாம். அதாவது எந்த லாஜிக்கும் இல்லாமல் கூட இருக்கலாம். இரண்டாவது வகை, கதையை விட்டு சற்றும் விலகாமல், அதே வேளையில் கதையின் ஆழம் கதைக்குள் என்னை அழுத்த வேண்டும். எனக்குள் அது ஒருவித பாதிப்பை சில மணி நேரத்திற்காகவாவது ஏற்படுத்த வேண்டும். அது எவ்வளவு மெதுவாக செல்லும் படமாக இருந்தாலும் சரி. இப்படித்தான் படங்களைப் பிரித்துப் பார்க்கிறேன். சொல்லப் போனால் தரமான படம்/தரமற்ற படம் என்று பிரித்துப் பார்ப்பதைக் காட்டிலும் பிடித்த படம்/பிடிக்காத பொறுமையைச் சோதித்த படம். அந்தளவுக்கே படங்களைப் பிரித்துப் பார்க்கிறேன்.

சோலா நான் ரசித்ததில் இரண்டாவது வகை. கதையை  விட்டு வேறெங்கும் படத்தின் காட்சிகள் விலகிச் செல்லவில்லை. அடுத்து இந்தப் படத்தைப் பிடிக்க இன்னொரு முக்கியக் காரணம், ஒரு படத்தின் கதை சாதாரணமாகக் கூட இருக்கலாம். அதன் திரைக்கதை நம்மை கதைக்குள் அழுத்திச் செல்வது. அது இந்தப் படத்தில் இருக்கிறது. கதை இதுதான். பள்ளிக்கூட மாணவி, அவளது காதலன், இருவரும் காதலனின் நண்பன் வாகனத்தில் ஜாலியாக சுற்றிப் பார்க்க நகரம் செல்கிறார்கள். அவர்களின் கிராமம் ஒரு மலைவாழ் கிராமம். காடு, மலைகளைக் கடந்தே நகரம் வர வேண்டும். அவ்வாறு சுற்றி விட்டுத் திரும்பி வருகையில் இருட்டி விடுகிறது. அவர்கள்  பாதுகாப்புடன் ஊர் திரும்பினார்களா? ஊர் திரும்புவதற்குள் என்ன பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள்? அதை அவர்கள் சமாளித்தார்களா என்பதுதான்  கதை.

படத்தின் ஒளிப்பதிவும், இசையும் நம்மை மிரளவைக்கிறது. காடு எத்தனை அபாயகரமானது, தரதரவென வேகமாக விழும் அருவி ஏற்படுத்தும் பயம் இவ்வாறாகக் காட்டுகிற ஒவ்வொரு காட்சியையும் ஒளிப்பதிவிலும் பின்னணி இசையிலும் மிரள வைத்திருகின்றனர். இப்படத்தின் இயக்குனரின் கனவை நடிகர்கள் நனவாக்குகிறார்கள். அதுதான் இந்தப் படத்தின் பலம்.

இம்மியளவும் கதையை விட்டு விலகிச் செல்லாத காட்சிகள், கதாபாத்திரங்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பார்க்கிற நமக்கு ஆங்காங்கே பாத்திரங்கள் மீது நமக்கு ஏற்படுகிற  கோபம், பயம், கவலை, அனுதாபம் இறுதியாக இயலாமை ஆகியவற்றை நமக்குள் செலுத்திச் செல்கிறது படம். படத்தின் ஆகப்பெரிய பலவீனம் படம் மெதுவாக நகர்கிறது. இதுதான் இந்தப்படத்தை ஒருவனுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பார்க்க வேண்டாம் என்று தூண்டச் செய்யும். அதையும் தாண்டி கடைசி வரை படம் பார்த்து விட்டவனுக்கு படம் மிகப் பெரிய வெறுப்பையும் வெறுமையையும் மனதிற்குள் கொண்டு செலுத்தும். அதுதான் ஒரு படத்தின் ஆகப்பெரிய வெற்றி. அது கமர்ஷியல் சம்பந்தப்பட்ட வெற்றியல்ல. ஆனால் பார்வையாளனை கதைக்குள் செலுத்தி , கதாபாத்திரத்தின் வலியை /மகிழ்ச்சியை/சோகத்தை/ நமக்குள் தாக்கம் செலுத்திச் செல்வது. அத்தகைய அனுபவத்தைப் பெற விரும்புபவர்கள் இந்தப் படத்தைத் தாராளமாக பார்க்கலாம்.

பெண்ணை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப் படுத்துவது தான் கதை. மூன்றே பாத்திரங்கள்தான் படம் முழுவதும் வருகிறது. காதலனின் நண்பனை அவன் ‘ஆசான்’ என்றே அழைக்கிறான். பலசாலியான அவனிடம் மாட்டிக் கொண்ட இளம் ஜோடிகள் மீண்டதா? குறிப்பாக, அவன் இரவில் தங்க பிராத்தல்கள் நடமாடும் லாட்ஜிற்கு முன்பாக வண்டியை நிறுத்தும் போதே கதை புரிந்து விடுகிறது. பலசாலியான காதலனின் நண்பன் அவனை இரவுணவு வாங்கி வாடா என்று சொல்லும் போது இன்னமும் ஊர்ஜிதமாகிறது. அடுத்து கதாநாயகியை குளி என்று சொல்கிறான் ஆசான். இதற்கு மேலாக எழுதினால் நம்முடைய எழுத்திலும் வக்கிரம் குடியேறிச் சென்று கொண்டே இருக்கும். நான் உதாரணப்படுத்திச் சொல்லும் காட்சிகள் மிக ஆரம்பக் கட்டமான காட்சிகள். அப்படியானால் அடுத்தடுத்த காட்சிகள் எப்படி இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். இடைவேளைக்குப் பிறகு வரும்  காட்சிகள் நமக்கு வெறுப்பையும், கோபத்தையும், பயத்தையும், இயலாமையையும் காட்சிகள் எடுத்துச் செல்கின்றன.  அடுத்தடுத்த காட்சிகள் வக்கிரத்தின் உச்சியில் இருக்கும் ஒருவனையும், அவனிடமிருந்து காதலியைக் காக்க முடியாமல் உடல் பலவீனத்தில் இருக்கும் ஒருவனின் தோல்வியும் நம்மை அழுத்துகிறது.  இறுதியில் நாயகி என்ன முடிவெடுத்தாள் என்பதுதான் கிளைமாக்ஸ்.

இயக்குனர் சனல் குமார் சசிதரன். ஒளிப்பதிவாளர் அஜித் ஆச்சார்யா. இசை செர்ஹி செரிமிஸ்னோவ். நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ், அகில் விஸ்வநாதன், நிமிஷா சஜயன்.

(Visited 417 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close