ஸ்டாண்ட் அப் (Stand up) –மலையாளப் படம் – திரைப்பார்வை
தமிழ் படங்களில் ஹீரோ குடித்து விட்டோ அல்லது தான் ரௌடி என்பதை வைத்து ஹீரோயினை கெடுத்து விடுவான். அப்படி அவன் கெடுத்த உடன் , அவனையே கல்யாணம் செய்து அவனுக்குள் இருக்கும் மிருகத்தை களைந்து அவனை மனிதனாக மாற்றுவதே தமிழ் படங்களில் ஹீரோயின்கள் செய்யும் புரட்சியாக இருக்கும். ஆனால், தற்போது வரும் மலையாளப் படங்களில், தொடர்ச்சியாக நான் பார்த்து வந்த படங்களில் , தான் காதலித்த ஹீரோவே , அவனது விருப்பப்படி காதலியை நடந்து கொள்ள வற்புறுத்தும் போது, ஹீரோயின் துணிச்சலான முடிவுகளை எடுப்பாள். அதைப் பொறுத்துக் கொள்ளாத ஹீரோ, அவளை ஏதோ ஒருவிதத்தில் துன்புறுத்தி விடுவான். அதை அவள் எப்படி எதிர்கொண்டாள் என்கிற புரட்சியை வெளிப்படுத்தி வருகின்றன மலையாளப் படங்கள்.
“ உயர “ என்ற படத்தில் விமான ஓட்டிக்கான படிப்பைப் படிக்க டெல்லி செல்ல விரும்பும் நாயகியை ஒரு இடத்தில் சந்தேகத்தின் பெயரிலும், தான் சொன்னதை மீறி வந்து படிக்கிறாளே என்ற கோபத்தில், அவளது முகத்தில் ஹீரோவே ஆசிட் அடித்து விடுவான். முடங்கிக் கிடந்த அவள் விமான பணிப்பெண்ணாக வேலை பார்ப்பதற்கு ஒரு தனியார் விமானத்தின் ஓனர் மகனே உதவுவான். தன் முகத்தில் ஆசிட் அடித்தவனின் தண்டனையை உறுதி செய்வாள் ஹீரோயின்.
“ஸ்டாண்ட் அப் “ என்ற படத்தில் ஹீரோயினை பலவந்தமாக கெடுத்தது யார் ? அதனால் அவள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? சமூகம் அதற்கு முன்வைக்கும் தீர்வு என்ன? சமூகத்தின் பார்வையை அவள் ஏற்றுக் கொண்டாளா? பாதிக்கப்பட்ட பெண்ணொருத்தி அதிலிருந்து எப்படி மீள்கிறார்? அவள் மீள்வதற்கு அவளது தோழி உடன் நிற்பதுதான் கதை.

ஹீரோயினின் தோழி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன். அவள் காமெடிக்கு இடையே தனது தோழியின் வாழ்க்கையில் நடந்த விஷயத்தைப் பற்றி பேசுகிறார். ஹீரோயினை பலவந்தமாக கெடுத்தது ஒரு நபரா அல்லது கூட்டுப் பாலியல் பலாத்காரமா என்ற கோணத்தில் படம் நகர்கிறது. இதற்கிடையே ஒரு கட்டத்தில் கெடுத்தது யார்(ஹீரோ) என்று தெரிய வந்ததும், அவனையே திருமணம் செய்து கொள் என்ற கோரிக்கையும் , அறிவுரையும் பெற்றோராலும், கெடுத்தவன் வீட்டிலிருந்தும் முன் வைக்கப்படுகிறது. அதை அவள் நிராகரித்து தன் விருப்பத்தை மீறித் தன்னைப் பலாத்காரம் செய்தவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பது தான் கதை.
“இஷ்க் “ “சோலா” போன்ற படங்கள் ஹீரோக்களின் இயலாமையை வெறுத்து அவர்களை ஒதுக்கித் தள்ளும் படங்கள். இஷ்க் படத்தில் நடுவிரலைக் காட்டிச் செல்லும் ஹீரோயின், “சோலாவில்” தன் மானத்தைக் காப்பாற்ற இயலாத கையாலாகாத காதலனை இறுதியில் அவளே கொன்று விட்டு தானும் இறப்பது போன்ற கதைக்களம்.
மலையாளப் பட இயக்குனர்கள் பலரும் வலுவான கதையைச் சொல்ல வருகிறார்கள். ஆனால் அவர்கள் திரைக்கதையில் சொதப்பி விடுகிறார்கள். ஒன்று படத்தின் முதல் பாதியை மிக மெதுவாக செல்லும் திரைக்கதையை வைத்து இரண்டாவது பாதியில் படத்தை ரசிக்க வைப்பார்கள். அல்லது முதல் பாதியில் செமையாக செல்லும் கதை, இயக்குனர்கள் தான் எடுத்த கதைக்களனை எப்படி எடுத்துச் செல்வது என்பதில் திணறி நிற்கின்றனர். முழுப் படத்தையும் பொறுமையாக பார்த்து முடித்தால் தான் , அப்படம் பற்றிய நமக்கான பார்வையை முன்வைக்க முடியும். “ஹெலன்” என்ற படம் முதல் பாதியில் பட்டையைக் கிளப்பும். அதன் பிறகு திரைக்கதையில் சொதப்பி இருக்கும். “ஸ்டாண்ட் அப்” “ சோலா” , “கும்பளாங்கி நைட்ஸ்” போன்ற படங்களில் முதல் பாதி பொறுமையைச் சோதிக்கும். ஆனால் இரண்டாவது பாதி கதைக்கு வலுவைக் கொடுத்து நம்மை படத்தோடு ஒன்றச் செய்யும். கும்பளாங்கி நைட்ஸ் அளவுக்கெல்லாம் ஸ்டாண்ட் அப் படம் கிடையாது என்பதைச் சொல்லி விடலாம்.
“இஷ்க்” படம் ஆரம்பித்த இருபதாவது நிமிடத்திலிருந்து விறுவிறுப்பான திரைக்கதையால் நம்மை முற்றிலுமாக ரசிக்க வைக்கும். அப்படியான திரைக்கதையை அமைத்தால் படம் எளிதாக வெற்றி பெறும். ஆகச் சிறந்த கமர்சியல் வெற்றிக்கான படமாகவும் மாறும். அந்த விஷயம் ஸ்டாண்ட் அப் படத்தில் மிஸ்ஸிங். ஆனால் மிஸ் பண்ணக் கூடாத படங்களில் ஸ்டாண்ட் அப்பும் ஒன்று என்றால் மாற்றுக்கருத்தில்லை.