சர்வதேச ஆயுத வியாபார ரகசியங்களைச் சொல்லும் வெப் சீரீஸ் – The Night Manager
காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏகே அந்தோணி 2013ல் அகஸ்டா வெஸ்ட்லான்ட் ஹெலிகாப்டர் வாங்கியதில் லஞ்சம் தரப்பட்டது என்றார். 2019ல் முக்கியத் தரகர் கிறிஸ்டியன் மிஷல் கைதான உடனே ஆதாரம் இருந்தால் யாரையும் கைது செய்யட்டுமே என்றார் அதே அந்தோணி. அதென்ன லஞ்சம் கொடுத்தோம் என்கிறார். ஆள் ஒருவன் சிக்கியதும் ஆதாரம் இருந்தால் யாரையும் கைது செய் என்கிறார்.இதெப்படி?
போஃபோர்ஸ் ஊழலில் இப்படித்தான் யார் ஏஜென்ட் யார், சப் ஏஜென்ட் என்று எந்தப் பேப்பரும் சிக்கவில்லை. சிக்கியவை எல்லாமே சின்ன மீன்கள். ஜெய்ப்பூரில் 1500 ரூபாய்க்குத் தயாராகும் சிறப்பு ஷுக்களை ஒரு இஸ்ரேலிய ராணுவம் வாங்கிப் பயன்படுத்தியது. நம் ராணுவத்துக்கு அதே ஷுக்களை இஸ்ரேலில் இருந்து 20000 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டிருந்தார்கள். கண்டுபிடித்துக் கேட்ட போது சரியான பதில்கள் இல்லை. இப்போது அந்தக் கம்பெனியிடம் நம் அரசு ஒப்பந்தம் போட்டு 1,500 ரூபாய்க்கு ராணுவத்துக்கு ஷு வாங்குகிறது. பாக்கி 18,500 ரூபாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு எரிகிறது.
இது போன்ற பேரங்களில் முக்கிய புள்ளிகள் என்று பலர் சம்பந்தப்பட்டிருந்தாலும் யாரும் சிக்குவதில்லை. தெரிந்தாலும் ஆதாரம் என்று காட்டி நீதிமன்றத்தில் தண்டனை வாங்கித்தர முடியாது. உருப்படியான ஆதாரம் எதுவும் இருக்காது. இது எப்படி இப்படி நடக்கிறது. இந்த சட்ட விரோத ஆயுத சந்தை எப்படி இயங்குகிறது என்பதை இந்த வெப் சீரீஸ் ஓரளவுக்கு விளக்குகிறது.
பிரித்தானிய உளவுத்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்ற ஜான் லே கார் என்பவர் எழுதிய The Night Manager என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. சூசன் பியா என்ற டென்மார்க் நாட்டு இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த வெப் சீரீஸ் 36 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 11 விருதுகளைப் பெற்றது. சிறந்த இயக்குனர், சிறந்த இசை இவற்றுக்கு எம்மி அவார்ட், மேலும் சிறந்த நடிகர் நடிகை என்று 3 கோல்டன் க்ளோப் அவார்டுகள் இந்தப் 11ல் அடக்கம்.
புத்தகம் சொல்லியுள்ள அளவுக்கு விவரங்கள் திரையில் இல்லை. விவரமாகத் தெரிந்துகொள்ள The Night Manager நாவல் அமேசானில் கிடைக்கிறது. படிக்கலாம்.
கதை இதுதான்:
ரிச்சர்ட் ஆன்ஸ்லோ ரோப்பர் என்பவர் பெரிய என்றால் பெரிய பணக்காரர். தன்னை ஒரு சமூக சேவகராக முன்னிலைப்படுத்திக் கொள்கிறார். ஐநா அகதிகள் சேவைக்கு கோடிகளில் நன்கொடை அளிக்கிறார். அவ்வப்போது சிரியா, இராக், லெபனான் என்று போய் அங்கே முகாம்களில் இருக்கும் அகதிகளுக்கு மருந்து என்று டப்பாக்களில் கொடுக்கிறார். ஆனால் இவரை எம்.ஐ 6ம் சிஐஏவும் தொடர்ந்து கண்காணிக்கின்றன. மனிதன் ஆயுத வியாபாரி. ரசாயனம், கிருமி உள்ளிட்ட எப்படிப்பட்ட ஆயுதமும் விற்பான். ஆனால் சிக்கமாட்டான். அவன் பெயரில் ஒரு கம்பெனி கிடையாது. ஒரு கையழுத்துக் கிடையாது. ஒரு இடத்தில் கூட அவன் பெயர் இருக்காது. வருமானத்துக்கு வரி காட்டுவான். கேட்டால் வங்கி, இன்ஷுரன்ஸ் கம்பெனிகளில் முதலீடு என்பான்.
ஆயுத வியாபாரம் நடப்பது அவனுடைய அடியாள் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கொர்கோரன் என்பவன் பெயரில். ஒவ்வொரு விற்பனையும் ஒரு புதுக் கம்பெனி. ஒரு சின்ன நாட்டில் ஆரம்பித்து விற்பனை முடிந்தவுடன் மூடிவிடுவான். இவனது எகிப்திய கூட்டாளி ஒரு வியாபாரம் சம்பந்தப்பட்ட காகிதங்களை அவன் வைத்துக் கொண்டுள்ள சோஃபி என்ற பெண்ணின் ஓட்டல் அறையில் பத்திரப்படுத்தி வைக்கிறான். அவள் தனது பாதுகாப்புக்காக அதை பிரதி எடுக்கிறாள். அந்த ஓட்டலின் இரவுப் பணி மேலாளர் ஜோனதன் பைன் கையில் அவை சிக்குகின்றன.
ஜோனதன் முன்னாள் ராணுவத்தான். ஆங்கிலேய தூதரகத்தில் தன நண்பனிடம் அதைக் கொடுக்கிறான். அத்தனையும் பயங்கர ஆயுதங்கள் விற்பனைக்கான தஸ்தாவேஜிகள். அதை எம்.ஐ 6 தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிய மறுநாள் சோஃபி கொல்லப்படுகிறாள்.
ஜோனதன் கெய்ரோவில் இருந்து வேலையை விட்டுவிட்டு ஸ்விட்சர்லாந்தில் ஒரு ஓட்டலில் இரவுப்பணி மேலாளராக சேர்கிறான். அந்த ஓட்டல் ரிச்சர்டு ரோப்பரின் நண்பருக்கு சொந்தமானது. அங்கே வரும் ரோப்பரின் ரகசிய போன் தொடர்புகளை எம்.ஐ 6க்கு தருகிறான் ஜோனதன். பல பயங்கர ஆயுத விற்பனைகளை எம்.ஐ 6 மோப்பம் பிடிக்கிறது.
ஜோனதனை எம்.ஐ 6 அதிகாரி ஏஞ்சலா பர் என்பவர் வேலைக்கு எடுக்கிறார். திட்டப்படி ஓட்டலில் திருடிவிட்டு தப்பி லண்டன் போய் அங்கே ஒரு கொலை செய்து (செட்டப்) ஜோனதன் பைன் என்ற பெயரை தாமஸ் க்வின் என்று மாற்றி ஸ்பெயினுக்கு வருகிறான். அங்கே வரும் ரோப்பரின் மகனை உள்ளூர் ரவுடிகள் கடத்த முயல காப்பாற்றப் போய் அடிபடுகிறான். மகனைக் காப்பாற்றியதால் ரோப்பர் ஜோனதனை அழைத்துச் சென்று வைத்தியம் பார்க்கிறான். அவன் தேறியதும் அவனைப்பற்றி விசாரிக்கிறார்கள். எம்.ஐ 6 கட்டி வைத்த கதை விலைபோகிறது. அதே நேரம் ரோப்பரின் வக்கீல் கொர்கோரன் ஓட்டை வாய், அதனால் அவனை எகிப்தியர்களிடம் செய்யும் அடுத்த வியாபாரத்தில் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் பிரச்சனை என்கிறார்.
ரோப்பர் யோசித்து ஜோனதனை பெயர் மாற்றி (ஆண்ட்ரு பர்ச்) தன் புதுக்கம்பெனிக்கு எம்டி ஆக்குகிறான். வியாபாரம் முடிந்தவுடன் உனக்கு வேறு பெயர், வேறு சரித்திரம், வேறு நாடு. நாலைந்து ஆண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு பிறகு வேறு வேலை செய் என்கிறான் ரோப்பர். ஜோனதன் ஒப்புக்கொண்டு எம்.ஐ 6க்கு தகவல் தருகிறான். மேற்கொண்டு விசாரிக்கையில் எம்.ஐ 6ல் ஒரு ஆளும் சிஐஏவில் ஒரு ஆளும் ரோப்பரின் கைக்கூலிகள் என்று தெரிகிறது. ஆனால் நிரூபணம் இல்லை. வியாபாரம் பேச வந்த ஆள் லண்டனில் படித்தேன் என்று அறிமுகம் செய்து கொள்கிறார். ஜோனதன் பலமுறை முயன்றும் வியாபாரத்தைத் தடுக்க முடியவில்லை. உள்ளடி ஆட்கள் போட்டுக் கொடுத்து ரோப்பர் தப்பிக்கிறான்.
கடைசியில் எகிப்தில் இவர்கள் செய்யும் வியாபாரத்தை விவசாயக் கருவி இறக்குமதி என்று அனுமதிப் பத்திரம் பெறுகிறார்கள். அதையும் இவர்களது வியாபார தஸ்தாவேஜிகளையும் ஜோனதன் அனுப்புகிறான். ஆனால் சந்தேகம் கொர்கோரன் மீது விழுகிறது. அவன் கொல்லப்படுகிறான். அமெரிக்க ராணுவத்துக்கு தகவல் சொல்லி வண்டிகளை சோதனை செய்தால் எல்லாம் கோதுமை. ஜோனதன் டபுள் ஏஜென்ட் என்கிறார் சிஐஏ அதிகாரி. ஜோனதன் ஆயுதம் கைமாறும் இடத்தைச் சொல்ல அதற்குள் கறுப்பாடு உயரதிகாரிகள் ஆபரேஷனை நிறுத்திவிடுகிறார்கள். ஆனாலும் கடைசி முயற்சியாக எகிப்து வரும் எம்.ஐ 6, சிஐஏ ஆட்கள் திட்டம் போட்டு பிடிக்க முயல ஜோனதன் முதல் தவணையாக வந்த 300 மில்லியன் டாலர்களை தன் கணக்குக்கு மாற்றிக் கொள்கிறான்.
எகிப்தில் தன நண்பர்களை வைத்து ஆயுத வண்டிகளுக்கு வெடி வைக்கிறான். விற்பனை முடிந்து இரண்டாம் பாதி 300 மில்லியன் கைமாறும் சமயத்தில் வண்டிகள் வெடிக்கின்றன. அரேபியர்கள் பணத்தை திருப்பித் தரக் கேட்கிறார்கள். பணம் இல்லை. பணத்தை தருவதாக ஒருமணி நேரம் தவணை கேட்டு ஓட்டலுக்கு வருகிறான் ரோப்பர். அங்கே எகிப்து போலீஸ் அவனை கைது செய்கிறது. ஒரு மணிநேரத்தில் வந்து உன்னைத் தீர்த்துக் கட்டுகிறேன் என்று ஜோனதனிடம் சவால் விட்டு போகிற ரோப்பர் அரேபியர்களால் சிறைப்பிடிக்கப்படுகிறான். கறுப்பாடு உயரதிகாரிகள் ரோப்பரை கைவிடுகிறார்கள். எம்.ஐ 6, சிஐஏ ஆட்கள் நம்மிடம் ஆதாரமில்லை. ரோப்பர் இவர்களிடம் சிக்கி சாகட்டும் என்று கிளம்புகிறார்கள்.
இறுதிவரை ஒரிஜினல் வியாபாரி ரோப்பர் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்க ஆதாரமில்லை. கருணாநிதியை விட கில்லாடித்தனமாக வேலை செய்கிறார்கள் இந்த பிராடுகள். இவர்களை பிடிக்க எமகாதகன் வேண்டும். அதுவும் இவர்களை விட கிரிமினலாக யோசிக்கும் ஒரு ஜித்தனாக இருக்க வேண்டும்.
இந்த வெப் சீரீஸ் அமேசான் பிரைமில் இருக்கிறது. விவரம் தெரிந்துகொண்டு நாட்டு நடப்பு விவகாரங்களில் கருத்துப் பேசலாமே.
Could have avoided the following unwanted comments. It gives a biased view.
கருணாநிதியை விட கில்லாடித்தனமாக வேலை செய்கிறார்கள் இந்த பிராடுகள். இவர்களை பிடிக்க எமகாதகன் வேண்டும்.