ஆன்மிகம்

அநுயாத்திரை செய்தேனோ அணில்களைப் போலே!

”சீதையைக் கடத்திச் சென்று இலங்கையில் சிறை வைத்தான் ராவணன்” என்று கதையை ஆரம்பித்தாள் அந்தச் சின்னப் பெண். சீதையைத் தேடி ராமரும் லக்ஷ்மணனும் காடுகளில் தேடி அலைந்தார்கள். அப்போது சுக்ரீவனின் நட்பு கிடைத்தது. சுக்ரீவனுக்காக ராமர் வாலியை வதம் செய்தார்.

அனுமார் உதவியுடன் சீதை அசோகவனத்தில் இருக்கிறாள் என்று தெரிந்தது. ராவணனை வதம் செய்து, சீதையை மீட்க இலங்கைக்குச் செல்ல வேண்டும். சுக்ரீவனிடம் பெரிய குரங்குப் படை இருந்தது. குரங்குகளின் உதவியுடன் சமுத்திரத்தில் அணை கட்ட தீர்மானித்தார்.

சுக்ரீவனிடம் இருந்த குரங்குகள் எல்லாம் நாம் இப்போது பார்க்கும் குரங்கு மாதிரி கிடையாது. பெரிய குரங்குகள். பலசாலிகள். அந்தக் குரங்குகள் ராமருக்காக இங்கும் அங்கும் சென்று பெரியப் பெரிய மலைகளைத் தூக்கிக்கொண்டு வந்தன. ஒரு குரங்கு மலையைத் தூக்கி வீச, இன்னொரு குரங்கு அதைத் தாவிப் பிடித்து இன்னொரு குரங்கிடம் வீசும். இப்படி மலைகளை மாற்றி மாற்றி அனுப்பியது. இதை. பார்ப்பதற்கு மலைகள் அந்திரத்தில் பறப்பது போல இருந்தது.

இதை எல்லாம் அங்கே இருந்த அணில்கள் பார்த்தது. அடடா நாம ராமருக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லையே, என்று யோசித்தன. எல்லா அணில்களும் நேராகச் சமுத்திரத்தில் போய்க் குளித்தன. ஈர உடம்புடன் கரைக்கு வந்து மணலில் புரண்டன. ஈர உடம்பில் மணல் ஒட்டிக்கொண்டது. அலுங்காமல் குலுங்காமல் மணலுடன் குரங்குகள் கடலில் போட்ட கற்களுக்கு இடையில் உடம்பை உதறிக்கொண்டன. உதறிய பின் அணில்கள் மீண்டும் கடலில் மூழ்கி, புரண்டு, உதறும். இதைத் திரும்பத் திரும்பச் செய்தன.

”பெண்ணே அணில்கள் மணலை ஏன் கற்களுக்கு இடையில் உதறிக் கொள்கிறது ?” என்று ராமானுஜர் கேட்க அதற்கு அந்தப் பெண் “ கட்டும்போது காரைப் பூச்சு மாதிரிக் கற்களுக்கு இடையில் மணல் பூச்சு பூசியது அணில்கள்” என்றாள்.

ராமானுஜர் “அநுயாத்திரை என்று சொன்னாயே அதற்கு என்ன பொருள் ?” என்றார். குட்டிப் பெண் “சாமி, குரங்குகள் கற்களுடன் சென்றது யாத்திரை, அவைகளுக்குப் பின் அணில்கள் சென்றது அநுயாத்திரை!” என்றாள்

“அடடா இப்படியொரு விளக்கம் எனக்குத் தோன்றவில்லையே!!” என்றார் ராமானுஜர். “சாமி அணில்கள் சமுத்திரத்தில் மூழ்கி ஈரத்துடன் வெளியே வந்து மீண்டும் கடலைப் பார்த்தது”
“அப்படியா ? அணில்கள் ஏன் அப்படிச் செய்தது ?” என்றார் ராமானுஜர்.

அதற்கு அந்தக் குட்டிப் பெண் “சாமி கடலில் மூழ்கி எழுந்து வெளியே வந்த அணில்கள், கடல் நீரை அணை கட்ட சவுகரியமாக வெளியேற்றுகின்றன என்று நினைத்தனவாம். கரைக்கு வந்த அணில்கள் கடலின் நீர் மட்டம் குறைந்திருக்கிறதா என்று பார்த்ததாம்!” என்றாள்.

ராமானுஜர் “குழந்தாய், இந்த மாதிரி எல்லாம் எப்படி யோசிக்கிறாய்!” என்று வியந்தார்.

குட்டிப் பெண் சிரித்துக்கொண்டு “ராமர் இந்த அணில்கள் செய்யும் தொண்டை நினைத்துப் பூரித்துப் போனார். அனுமார் சீதையைக் கண்டுபிடித்துச் செய்த உதவிக்கு அவரை இரு கைகளாலும் கட்டிக்கொண்டார் ஆனால் அணில்களை எப்படிக் கட்டிக்கொள்ள முடியும் ? அதனால் அன்புடன் அவைகளைத் தடவிக் கொடுத்தார்”

“சாமி இந்த அணில்கள் போல நான் தாவிக் குதித்து எந்தத் தொண்டும் செய்யமுடியவில்லையே, அதனால் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள்.

ராமானுஜர் ஆழ்ந்த யோசனையிலிருந்தார் . “சாமி என்ன யோசிக்கிறீர்கள் ? “ என்றாள் அந்தப் பெண் குட்டி.

“குழந்தாய்! அணில்கள் தாவிக் குதித்து என்று சொன்னவுடன் எனக்குத் திருமங்கை ஆழ்வார் பாசுரம் நினைவுக்கு வந்தது!” என்றார்.

“அது என்ன பாசுரம் சாமி ?” என்றாள் அந்தப் பெண்.

சொல்கிறேன் என்று ராமானுஜர் ஆரம்பித்தார் “ஒரு நாள் காழிச் சீராமவிண்ணகரம் பாசுரத்தைச் சிஷ்யர்களுக்குச் சொல்லிக்கொண்டு இருந்தேன். ஆழ்வார் நீண்ட இலைகளை உடைய கரிய பாக்கு மரங்களின் செங்காய்கள் அணில்கள் தாவியதால் கட்டுக் குலைந்து கீழே விழுந்தன என்ற இடத்தில் ஆழ்வார் ‘தெட்ட பழம்’ என்று ஒரு சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். அந்தச் சொல்லுக்குப் பொருள் புரியவில்லை.

ஒரு முறை யாத்திரையாகக் காழிச் சீராமவிண்ணகரம் சென்று கொண்டு இருந்தபோது, ஒரு பெரிய நாவல் மரத்தின் கிளையில் அமர்ந்துகொண்டிருந்த ஒரு பையன் கிளைகளை அசைக்க, கீழே உதிர்ந்த நாவற்பழங்களைச் அவன் தோழர்கள் பொறுக்கிக்கொண்டு இருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் ’தெட்ட பழமாகப் பார்த்துப் பறித்துப்போடு’ என்றபோது தெட்ட பழம் என்றால் பழுத்த பழம் என்று புரிந்தது! சிறுவனாக இருந்தாலும், ஆழ்வார் பாசுரத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள உதவினான் இந்த அணில் போல!” என்றார்.

“ஆகா அருமை சாமி!” என்றாள்.
ராமானுஜர் “குழந்தாய்! ராவணனை வதம் செய்யத் திருமாலிடம் வேண்டினார்கள் தேவர்கள். அவர்களுக்கு உதவிடத் திருமாலும் ராமராக அவதாரம் செய்தார். தேவர்கள் குரங்குகளாகப் பிறந்தார்கள் ராமருக்குத் தொண்டு செய்ய. தேவர்களுக்கு ராமரின் உதவி தேவைப்பட்டது. ஆனால் இந்த அணில்கள் எந்தப் பலனையும் எதிர்பார்க்கவில்லை” என்றார்

அப்போது ஒரு சிஷ்யர் “அணில்கள் குசேலரைப் போலே எதையும் எதிர்பார்க்கவில்லை” என்றார்.

குட்டிப் பெண் தாமதிக்காமல் “அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே!” என்றாள்

”வெறும் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி ஆகிவிட்டது!” என்றார் ராமானுஜர் சிரித்துக்கொண்டே!

(Visited 72 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close