Waive OFF and Write OFF என்ன வித்தியாசம் ?
கடந்த இரு தினங்களாக கார்ப்பரேட்டுகளுக்கு மத்திய அரசு கடன் தள்ளுபடி செய்துவிட்டது என்று தமிழக பத்திரிகைகள் மற்றும் ராகுல்காந்தி வரை மாபெரும் புரளியைக் கிளப்பி விட்டனர். ஆகையால் கடன் தள்ளுபடிக்கும்(Waive OFF), கடன் ஒத்தி வைப்புக்குமான(Write OFF) வித்தியாசத்தை எனக்குப் புரிந்த அளவில் நடைமுறை விஷயங்களுடன் விளக்க முற்படுகிறேன்.
கடன் தள்ளுபடி (Waive OFF) :
கடன் தள்ளுபடி என்பது விவசாயிகள், மாணவர்கள், முத்ரா மூலம் கடன் பெற்றவர்கள் போன்றவர்கள் நீண்ட காலம் கடன் செலுத்தாமல் உள்ளனர் என்று வைத்துக் கொள்வோம்.இதில் பெரும்பாலோர் நேர்மையாகக் கடனை அடைத்துக் கொண்டு வருவார்கள். அல்லது குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அடைக்க இயலாமல் அப்படியே விடுவார்கள். வங்கிக்கோ கடன் தொகை அதிகமாகும். இது Non Performing Asset ஆக மாறுகையில், மாநில அரசோ/ மத்திய அரசோ தள்ளுபடி செய்து விடும். அதாவது தனி நபர்கள் அடைக்க வேண்டிய கடனை அரசே வங்கிகளுக்குச் செலுத்தும். உதாரணமாக 50,000 கோடியை அரசே அடைத்து விடும். முற்றிலுமாக அரசுக்கு வருமான இழப்பு. இதில் தனி நபர்கள் கடனை அடைக்க வேண்டியதில்லை. மேலும் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க அரசே வழிவகை செய்து விடும். இதையெல்லாம் அரசே ஒருநாள் செய்யுமென்ற நம்பிக்கையில், இந்தத் தரப்பு கடனைத் திருப்பி அடைக்காமல் காலம் தாழ்த்திச் செல்வதும் இயல்பாக நடக்கத் தான் செய்கிறது. வங்கி எவருடைய விவசாய நிலத்தையாவது இதுவரை கையகப்படுத்தி உள்ளதா என்ற கேள்விக்கு யாரிடமாவது விடை இருந்தால் தரலாம்.
அனைத்து ஆளும் கட்சிகளும் /எதிர்க்கட்சிகளும் வாக்குகளுக்காக தேர்தல் நேரத்திலேயே இந்த வாக்குறுதியைத் தருவதும் ஆட்சியில் அமர்ந்தவுடன் அதை நிறைவேற்றுகின்றன என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கடன் ஒத்தி வைப்பு ( Write OFF) :
கடன் ஒத்தி வைப்பு என்பது வங்கி ஒருவருக்கு(நிறுவனத்திற்கு) கடனாகக் கொடுக்கிறது. அதற்கான வட்டியைக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செலுத்தாமல் ஒருவர்(நிறுவனத்திற்கு) உள்ளார். வட்டி குட்டி போடும். Principal Amount ஐயே திருப்பிப் பெறுவதில் சிக்கல் எழும். இவ்வாறு லோன் கொடுப்பதற்கு வங்கிகள் பல வழிகளைக் கையாள்கின்றன. பணம் கொடுத்து கடனை மட்டும் வட்டியோடு திருப்பிச் செலுத்தச் சொல்வது, நிறுவனத்தின் வணிகத்தில் வங்கியே ஒரு முதலீட்டாளராக பங்கெடுத்துக் கொண்டு லாபத்தைப் பகிர்ந்து கொள்வது போன்ற பல வழிகளைக் கடைப்பிடிக்கின்றன. ஆனால் இந்த கடன் கொடுப்பதற்கு முன்பாக சொத்து மதிப்புகளைக் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும். அதுதான் முறை.
இங்குதான் வங்கிகள் நேர்மையாகவும் தவறாகவும் செயல்பட ஆரம்பிக்கின்றன. சொத்து மதிப்பை அதிகமாகும் என ஒரு Assumption பண்ணி அதற்கு ஒரு கணக்கீடு செய்து (கடன் )மதிப்பை அதிகமாகக் கொடுக்கக் கூடும். இப்படி ஒருவருக்குக் கடன் கொடுத்த பின்னர் , அவர் அடைக்கவில்லை எனில் வங்கிகள் குறிப்பிட்ட கால அளவு வரை நோட்டிஸ் கொடுக்கும். வங்கிக்கு Non Performing Asset ஆக மாறுகிறது எனத் தெரிந்தவுடன், தனது வங்கியின் அக்கௌண்டிங் சீட்டை Balance செய்ய செலவுக்கணக்கில் கொண்டு காண்பிக்கும். அப்படி காண்பிக்க வேண்டுமானால் அதை வாராப் பணமாகக் காண்பித்தால் மட்டுமே செலவாகக் காட்டமுடியும். வரியும் குறையும். இல்லையெனில் அந்த ஆண்டில் வாராப்பனத்திற்கு வங்கி நிறைய வரி கட்ட வேண்டி வரும். இதைத் தான் வங்கிகள் கடன் ஒத்தி வைப்பு (Write off) மூலம் செய்கின்றன. இதன் பொருள் அந்த வருடக் கணக்கில் தேவையில்லாமல் வரி கட்டுவதிலிருந்து விடுபடவும் , எதிர்காலத்தில் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று கணக்குக் காட்டிக் கொள்ளலாம் என்றும் செயல்படும். இதற்குப் பொருள் அவரிடமிருந்து பணம் வராது என்பதே இல்லை. அதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் வங்கி மேற்கொள்ளும். வங்கியின் பாணியில் சொல்வதால் பலருக்கும் இது புரியாமல் இருக்கலாம்.
ஆகையால் எனது அனுபவத்தையே பகிர்கிறேன். உதாரணமாக ஒரு கஸ்டமர் எங்களது நிறுவனத்திற்கு ஒரு ஜாப் தருகிறார். ஆனால் அவர் அந்த ஜாப்பில் எந்த முன்பணமும் (advance) ம் தர முடியாது என்று சொல்லி விடுகிறார். அந்த கஸ்டமர் முன்பு நாம் பண்ணுகிற பல ப்ரொஜெக்ட்ஸ்க்கு பணம் செலுத்திய கம்பெனி என்பதால் நாம் ரிஸ்க் எடுப்போம். அல்லது தங்கள் நிறுவன பாலிசி படி முன்பணம் தரமாட்டோம் என்று நாம் வணிகம் செய்யப் போகும் பெரிய நிறுவனம் நம்மிடம் சொல்லலாம். இப்போது அந்த ப்ரொஜெக்டை ரிஸ்க் எடுத்து செய்து முடித்து விடுகிறோம். நாம் Invoice செய்கிறோம். இது பெரிய தொகையும் கூட என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கஸ்டமர் ஏற்கனவே ஒத்துக்கொண்ட 30நாட்களோ, 60 நாட்களோ முடிந்து விடுகிறது. ஆனால் அவருடைய கம்பெனிக்கு வரவேண்டிய பணம் வரவில்லை. அல்லது அவரது நிறுவனம் இப்போது பெரும் நட்டத்தில் உள்ளது அல்லது வேண்டுமென்றே பணத்தைத் திருப்பித் தரவில்லை என்று வைத்துக் கொள்வோம்.

வருட முடிவில் நான் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். ஆடிட் செய்யும் போது, நான் செலவுக் கணக்கில் காட்டி விட்டால் மட்டுமே நான் வரியைக் குறைவாக செலுத்த முடியும். இப்போது அவரது கணக்கை அடுத்த வருடம் கொண்டு செல்லக் கூடாது, இதனால் நமக்கு நட்டம் அதிகரிக்கிறது என்று தெரிந்தவுடன் அதை வாராக் கடனாக மட்டும் அப்போதைக்கு காண்பிப்பேன். ஆனால் இணையாக அதே கஸ்டமரை அப்படியே விடுவதில்லை. தொடர் Follow ups, அடுத்து legal notice அனுப்பப்படும். சட்ட ரீதியாகவும், வணிக ரீதியாகவும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடக்கும். இதில் அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு அதிகமாக இருந்தது என்றால், சில நிறுவனங்கள் Prestige கருதி அல்லது பயந்து பணத்தைத் திருப்பித் தரும். சில நிறுவனங்கள் என்னிடம் எதுவுமே இல்லை, என்ன வேண்டுமானாலும் எடுத்துக் கொள் என்று விட்டுவிடும். அப்போது வேறு வழியே கிடையாது. அவரது(அந்த நிறுவனத்தின்) சொத்தை விற்று நமக்குக் கிடைக்கக் கூடிய பணம் மட்டுமே கிடைக்கும். அல்லது எதுவுமே கிடைக்காமல் கூட போகும்.
அந்த நிறுவனத்தோடு வணிகம் செய்யலாம் என்ற ரிஸ்க் எடுத்தது நமது நிறுவனம். இப்போது அதனை எதிர்கொள்ள வேண்டிய இடத்தில் நமது நிறுவனம் உள்ளது. இப்படி ஒரு நிறுவனம் தராமல் போய் விட்டது என்பதற்காக முன்பணம் தராமல் எவருக்கும் வேலை செய்ய மாட்டோம் என்று ஒரு நிறுவனம் முடிவெடுக்குமா? அதைச் செய்யாது. ஏனெனில் வணிகத்தில் எடுக்கப்படுவது அனைத்தும் ரிஸ்க் தான். 90% பேர் கால தாமதாமகவாவது தந்து விடுவார்கள். அப்படி ஏமாற்றுகிற லிஸ்ட் என்று பார்த்தால் ஒரு சில நிறுவனங்களே மிஞ்சும். இப்போது டாக்ஸ் டிபார்ட்மென்டில் தான் , வாராக் கடனாகக் காண்பித்து கணக்குக் காட்டி இருப்போம். இப்போது நாம் எடுக்கும் முயற்சியால் பணம் வரும் பட்சத்தில் அதை நாம் அடுத்த ஆண்டு கணக்கில் காட்டிவிடப் போகிறோம். இதைத் தான் Write OFF முறையில் வங்கிகள் மேற்கொள்கின்றன.
ஒவ்வொரு நிறுவனமும் பொருளை வைத்து, ஆட்களை வைத்து , பணத்தை முதலீடு செய்து வணிகம் செய்கின்றன. வங்கிகள் பணத்தை மட்டும் வைத்து வணிகம் செய்கிறது. பத்து கார்ப்பரேட்டுகளில் பலரும் திருப்பிச் செலுத்தலாம். ஒரு சிலர் வணிகம் நட்டத்தில் சென்றாலோ, வேண்டுமென்றே கூட திருப்பிச் செலுத்தாமல் இருக்கலாம். இந்த கடனைக் கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுப்பதில் லஞ்சம் உள்ளது. அதை மறுப்பதற்கு இல்லை. அதைப் போலவே அதிகமாக எஸ்டிமேட் செய்து கடன் கொடுப்பதில் லஞ்சம் உள்ளது. அதையும் மறுப்பதற்கு இல்லை.
ஒவ்வொரு பெரிய டெண்டர்களிலும் ஆட்களுக்கு லஞ்சப் பணம் கொடுத்து நிறுவனங்கள் எடுத்து வணிகம் செய்வது போலவே இங்கும் உள்ளது. அதிலெல்லாம் மாற்றுக் கருத்தில்லை.
வங்கியைப் பொறுத்தவரை நம்மைப் போலவே ரிஸ்க் எடுக்கிறது. அதில் ஒரு சில பணக்காரர்களும் வணிகம் செய்பவர்களும் செலுத்தாமல் போகலாம்.
Waive OFF என்பதில் தனி நபர்களோ/ நிறுவனங்களோ செலுத்தவே வேண்டியதில்லை. ஆனால் Write OFF அப்படி அல்ல. அதன் மூலம் பணம் திரும்பப் பெற சட்ட ரீதியாக பல வாய்ப்புகள் உள்ளன. அதுதான் சொத்து முடக்கம், நிறுவனத்தை ஏலத்தில் விடுவது என பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பணத்தைத் திரும்பப் பெறச் செய்ய வழிவகைகள் உள்ளன. அது வங்கிகள் அதிக எஸ்டிமேட் பண்ணிக் கொடுத்திருந்தால் வங்கிக்கு நட்டமாக முடியும். முறையாக எஸ்டிமேட் செய்து வழங்கி இருந்தால் Principal Amount ஐயாவது பெற இயலும்.
நிறுவனங்களை போலவே வங்கிகளும் இவ்விஷயத்தில் ரிஸ்க் எடுக்கின்றன. நிறுவனங்களில் உள்ளவர்களைப் போலவே அரசியல்வாதிகளும், வங்கி மேலதிகாரிகளும் லஞ்சம் பெற்றுக் கொண்டு அளவுக்கு அதிகமாக சொத்துக்களை எஸ்டிமேட் செய்து கடன் வழங்குகின்றன. இவையெல்லாம் வேறு,. Waive OFF வேறு. Write OFF வேறு என்கிற அடிப்படைப் புரிதல் அனைவருக்கும் வேண்டும்.