இந்தியாசிறப்புக் கட்டுரைகள்
Trending

கடன் தள்ளிவைப்பும் காட்டுக்கூச்சலும்

Story Highlights

  • தற்போதைய சட்டங்கள் இனிவரும் நாட்களில் இத்தகைய சூழல் ஏற்படாதிருக்க பெருமளவு உதவும் என்பதை நினைவில் நிறுத்த வேண்டியது மிக அவசியம்.

68000 சொச்சம் கோடி பெருமுதலாளிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டது மோதி தலைமையிலான பாஜக அரசு என்று ஓரிரு நாட்களாக உரத்த ஓலங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போதுமான அல்லது அதற்கும் மேலாக விளக்கமளித்த பிறகும், இரத்தமும் வியர்வையும் சிந்தி உழைக்கிற சாதாரணக் குடிமகனின் வரிப்பணத்தை பெருநிறுவனங்களுக்கு வாரியிறைக்கிறது மோதி அரசு என்று ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கூச்சல் குறைந்தபாடில்லை. இது குறித்து அலுப்பின்றி விளக்கங்களைப் பலர் தொடர்ந்து அளித்துக் கொண்டிருந்தாலும், அந்த விளக்கங்களை முற்றிலுமாக உதாசீனம் செய்கின்ற முரண்டான போக்கே பெருமளவில் காணப்படுகிறது.

வங்கிகளின் செயல்பாடு, கடன் தள்ளுபடி, தள்ளிவைப்பு ஆகியவற்றைக் குறித்து மிக நுணுக்கமாக விவரிப்பதற்குப் பதிலாக, அடிப்படையான விஷயங்களை எளிமையாகச் சொல்ல விழைவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

வங்கிகளுக்கும் தனியார் நிதி நிறுவனங்களுக்கும், ஏன், கந்துவட்டிக்குக் கடன் தருகிற தனியார்களுக்குமே கூட ஒரு முக்கிய ஒற்றுமை உண்டு. அது, கடன் கொடுத்து அதற்கு ஈடாக வசூலிக்கப்படுகின்ற வட்டித்தொகைதான் அவர்களுக்கு வருமானம். ஆனால், வங்கிகளுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள இரண்டு வித்தியாசங்களில் முதலானது, வட்டி விகிதம் குறைவு; இரண்டாவது, கடன்வாங்கியவரின் கழுத்தில் துண்டைப்போட்டு ‘கட்டுகிறாயா இல்லையா?’ என்று மிரட்டாமல் இருப்பது. சில தனியார் வங்கிகளின் அடாவடிகளை அடக்குமளவுக்கு தற்போது சட்டங்களும், ரிசர்வ் வங்கியின் விதிகளும் வலுவாகவே உள்ளன.

ஆகவே, ஒரு இருசக்கர வாகனம் வாங்குவதற்கும் சரி, ஒரு மிகப்பெரிய தொழிற்சாலையை நிறுவுவதற்கும் சரி, விதிமுறைகளுக்கு உட்பட்டு கடன் வழங்க வேண்டியதுதான் வங்கிகளின் தொழில்; கடமையும் கூட! வங்கிகள் கடன் வழங்குவதற்குத் தயக்கம் காட்டினால், நமது தெருக்களில் இவ்வளவு ஆட்டோ ரிக்ஷாக்கள் ஓடுவதை நம்மால் பார்த்திருக்க முடியாது. தற்போது வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் அனைத்துத் தொழில்களுமே ஏதோ ஒரு வகையில் வங்கியிலிருந்து ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் கடன்வாங்கியே நடத்தப்பட்டுக் கொண்டிருப்பவை ஆகும். இன்னும் சொல்லப்போனால், போதுமான அளவு நிதிவசதி இருந்தாலும், ஒரு புதிய தொழில் தொடங்குவது என்றால், அதற்கு வங்கியிடமிருந்து கடன் பெறுவது என்பது ஒரு புத்திசாலித்தனமான வியாபார உத்தியாகவே கருதப்படுகிறது.

நிதியமைச்சகம் எடுக்கின்ற முடிவுகளுக்கு ஏற்ப, ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்கிணங்கவே வங்கிகள் கடன் வழங்குகின்றன. மத்திய அரசு ஒரு திட்டம் தீட்டினால், அதற்கு ஏற்ப புதிய கடன் திட்டங்களை அறிவிக்க ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து வங்கிகளும் கடமைப்பட்டுள்ளன. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக, முத்ரா திட்டத்தைக் கூறலாம்.

வங்கிகளில் கடன் வழங்குகின்ற அதிகாரம் என்பது பல்வேறு அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. ஒருவர் தன்னிடம் உள்ள நகை மட்டும் ஆவணங்களை வங்கியில் அடமானம் வைத்து, அதற்கு ஈடாக ஒரு குறிப்பிட்ட தொகைவரையிலும் கடனளிக்க, அந்தந்தக் கிளை மேலாளர்களுக்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பிட்ட வங்கிகளின் அதிகாரத்துக்கு மிகைப்பட்ட தொகை கடனாகக் கோரப்பட்டால், அதற்கு அடுத்தடுத்து பல மேலிடங்களின் அனுமதி தேவைப்படுகிறது. அவ்வாறு கடன் வேண்டுகிற நபர்களின் விண்ணப்பங்களையும், சமர்ப்பிக்கப்படுகின்ற ஆவணங்களையும் பல கட்டங்களில் சரிபார்த்தபின்னரே கடன் வழங்கப்படுகிறது. சில சமயங்களில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

தொகை அதிகமாக ஆக, பயனாளிகள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள், கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள், அடமானம் வைக்க வேண்டிய சொத்துக்களின் மதிப்பு ஆகியவையும் பெருமளவு மாறுபடும். அதுவும், அதிகபட்சமாக பெரும்பான்மையாக ஒரு சதவிகிதம் வரை கடன் வழங்கப்பட்டு, மீதமுள்ள தொகையை பயனாளியே கொண்டுவரவும் நேரிடும். எனவே, கடன் வழங்குகின்றபோது பல கட்டங்களில், பல நுணுக்கமான சரிபார்த்தலுக்குப் பிறகே கடன் பட்டுவாடா செய்யப்படுகிறது.

தற்போது விவாதத்துக்குள்ளாகியிருக்கிற கடன் தள்ளுபடி, தள்ளி வைப்பு குறித்து ஒரு சிறிய உதாரணத்தோடு விளக்கலாம்.

Waiver – தள்ளுபடி என்பது, ஒரு கடன் தொகையின் ஒரு பகுதியையோ, முழுமையையோ திரும்பிச் செலுத்த வேண்டிய அவசியமே இல்லை என்று அரசு அறிவிப்பது! அப்படி அறிவித்து விட்டால், அவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை மீண்டும் வசூலிக்க அரசாங்கத்துக்கு எந்த விதமான சட்டபூர்வமான உரிமையும் கிடையவே கிடையாது. ஆனால், தள்ளி வைப்பது – Write-Off எனப்படுவதே வேறு!

ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட வங்கியில், தனது வீட்டை அடமானம் வைத்து, கடன் வாங்கியிருப்பதாக வைத்துக் கொள்வோம். கடன் ஒப்பந்தப்படி, வாங்கியவர் மாதாமாதம் செலுத்த வேண்டிய தவணையைச் செலுத்தாமல் தொடர்ந்து இழுத்தடித்தால், வங்கிக்கு வர வேண்டிய வட்டி நின்றுவிடுவதோடு, அசலுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால், ‘இந்த நபரிடமிருந்து வசூலிப்பது அவ்வளவு எளிதில்லை,’ என்று, அந்தக் கடன்தொகையை பின்வருகின்ற ஆண்டுகளுக்குத் தள்ளி வைப்பது வங்கிகளின் வழக்கம். அப்படித் தள்ளி வைக்காவிட்டால் என்னாகும்?

ஒவ்வொரு வங்கிக்கும் கடன் வழங்குகின்ற அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளபோது, அந்தக் கடன்தொகை குறையாமல் அப்படியே தொடர்ந்தால், பின்னாளில் கடன் கோரி வருகிறவர்களுக்குக் கொடுப்பதற்கு அந்தக் கிளையில் போதுமான ஒதுக்கீடு இருக்காது அல்லவா? எனவே, வாராக்கடன் என்று கருதப்படுகிறவை, கிளை மட்டத்திலிருந்து அடுத்த அதிகார மட்டத்துக்கு மாற்றப்படுகிறது. அப்படி மாற்றப்பட்டவுடன், சட்டபூர்வமான நடவடிக்கைகள் முடுக்கப்படும். எந்தச் சொத்தை அடமானமாக வைத்து கடன் வழங்கப்பட்டதோ, அந்தச் சொத்து கையகப்படுத்தப்படும்; ஏலம் மூலமாக விற்பனை செய்யப்பட்டு, கடன் தொகை மீட்கப்படும். அபூர்வமாக, ஏதேனும் மிச்சம் மீதமிருந்தால், உரியவருக்குத் திருப்பியும் அளிக்கப்படும். இதுவே வங்கிகளின் நடைமுறை.

இது வங்கிகளுக்கு மட்டுமல்ல; பல நிறுவனங்களிலும் பின்பற்றப்படுகின்ற நடைமுறைதான்! உதாரணமாக, ஒரு வியாபார நிறுவனத்திலிருந்து கடனுக்குப் பொருட்களை வாங்கிக்கொண்டு செல்பவர், அதற்கு உரிய தொகையைச் செலுத்தாமல் இருந்தால், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, அந்தத் தொகையை வசூலிப்பது சாத்தியமா என்ற சந்தேகம் எழும்போது, அதை Write-off செய்வது வழக்கம். காரணம், தொகை வசூலிக்கப்படாமலே இருந்தாலும், வர வேண்டிய தொகையை வருமானத்தின் ஒரு பகுதியாகவே கருதி அதற்கு வரியும் கட்டியாக வேண்டும். அதுதான் விதிமுறை! எனவே, வருமா வராதா என்றே சொல்லமுடியாத பணத்துக்கு நாம் ஏன் வரிகட்ட வேண்டுமென்றுதான், சந்தேகத்துக்குரிய தொகைகளை கணக்குப் புத்தகங்களில் தள்ளிப்போடுகிற வழக்கம் இருக்கிறது. இது சட்டபூர்வமானது; நியாயமானதும் கூட!

ஆனால், கணக்குப்புத்தகத்தில் ஒரு தலைப்பில் இருந்த கடனை வேறோர் தலைப்புக்குக் கொண்டுபோன காரணத்தினாலேயே, மேற்படி கடன் தீர்ந்துவிட்டதாகவோ, அதை இனி வசூலிக்க முடியாது என்றோ அர்த்தமல்ல. தங்களுக்கு வர வேண்டிய பணத்தை உரிய முறையில் வசூலிக்க, அரசு வங்கிகளுக்கு மட்டுமல்ல, தனியார் நிறுவனங்களுக்குமே கூட சட்டபூர்வமாக முழு உரிமைகள் உள்ளன.

இதற்கு உதாரணமாக சொல்ல வேண்டுமானால், கடந்த ஆண்டு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்ஸார் ஸ்டீல்ஸ் நிறுவன வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை வாசித்தால் புரியும். எஸ்ஸார் ஸ்டீல்ஸ் நிறுவனத்துக்கு ஸ்டேட் பாங்க் வழங்கிய கடனை, கணக்குப் புத்தகங்களில் தள்ளி வைத்தாலும், (Write-off), எஸ்ஸார் நிறுவனம் வங்கிக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்கியதோடு, அந்த நிறுவனத்துக்குப் பொருட்களை வழங்கிய வியாபாரிகளுக்கும் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

ஒரு காலத்தில் அரசியல்வாதிகளின் அழுத்தங்களினாலும், வங்கித்துறையிலிருந்த ஒரு சில கறுப்பாடுகளாலும், விதிமுறைகளைப் புறந்தள்ளியும், உரிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும் விருப்பம்போல பல தொழிலதிபர்களுக்குக் கடன் வழங்கியதாலேயே, அவை இன்றைய தினம் பூதாகரமாக உருவெடுத்து வங்கிகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளன. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இத்தகைய வாராக்கடன்கள் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய சட்டங்கள் இனிவரும் நாட்களில் இத்தகைய சூழல் ஏற்படாதிருக்க பெருமளவு உதவும் என்பதை நினைவில் நிறுத்த வேண்டியது மிக அவசியம்.

(Visited 43 times, 1 visits today)
Tags

One Comment

  1. இதெல்லாம் தெரிந்தாலும் தெரிந்தது போலக் காட்டிக் கொள்ள மட்டுமே.்். எங்கள் வெறுப்பை, ஆத்திரத்தை அப்புறம் எப்படிக்காட்டி பிழைப்பு நடத்த?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close