ஆன்மிகம்
Trending

இடை கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே !

Story Highlights

  • ராமானுஜர் “பெண்ணே பொய்கையில் பிறந்ததால் பொய்கை ஆழ்வார் என்பது சரி, ஆனால் பூதம், பேய் என்ற பெயர்கள் எல்லாம் எப்படி வந்தது ?” என்று கேட்டார்.

சாமி ! முதலாழ்வார்கள் கதையைச் சொல்லப் போகிறேன்” என்றதும் ராமானுஜரும் அவர்களுடைய சிஷ்யர்களும் ஆர்வமாகக் கேட்க ஆரம்பித்தார்கள்.ஆழ்வார்களிலே முதலில் தோன்றியதால் இவர்களை முதலாழ்வார்கள் என்பார்கள்.

வரிசையாக ‘பொய்கை, பூதம், பேய்’ என்று இவர்களுடைய பெயர்கள் என்று அடுக்கினாள். அந்தக் குட்டிப் பெண்.ராமானுஜர் “பெண்ணே ! பெயர்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கிறதே?” என்றார்.

ஆம் சாமி! பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு குளத்தின் தாமரைப் பூவில் தோன்றினார். அதனால் அவருக்குப் பொய்கை ஆழ்வார் என்று பெயர். பூதத்தாழ்வார் திருக்கடல் மல்லையில் ஒரு குருக்கத்தி மலரிலே தோன்றினார். பேயாழ்வார் மையிலையில் ஒரு கிணற்றில் பூத்த செவ்வல்லி மலரில் தோன்றினார்” என்றாள்.

ராமானுஜர் “பெண்ணே பொய்கையில் பிறந்ததால் பொய்கை ஆழ்வார் என்பது சரி, ஆனால் பூதம், பேய் என்ற பெயர்கள் எல்லாம் எப்படி வந்தது ?” என்று கேட்டார்.

அந்தப் பெண் “ நீங்கச் சொல்ல வேண்டும்! எனக்குத் தெரியாது” என்றாள் அந்தப் பெண்.ராமானுஜர் சிரித்துக்கொண்டு “குழந்தாய்! சொல்கிறேன். நம்மாழ்வார் ‘பொலிக பொலிக பொலிக யோயிற்று வல்லுயிர்ச் சாபம்’ என்ற பாசுரம்மூலம் கலியுகத்துக்கு நற்செய்தி ஒன்றைச் சொன்னார். அந்தப் பாசுரத்தில் ’கடல்வண்ணன் பூதங்கள்’ என்று ஒரு வார்த்தை வருகிறது. அதாவது ‘கடல் போன்ற நிறத்தையுடையவனான பகவானுடைய பக்தர்கள்’ என்று பொருள். பூதம் என்றால் பெருமாளின் அடியவர்களைக் குறிக்கும். அதனால் இந்த ஆழ்வாருக்குப் பெயர் பூதத்தாழ்வார்.” என்றார்.

அப்போது ஒரு சிஷ்யர் “பெண்ணே இந்தப் பொலிக பொலிக பாசுரத்துக்கு நம்மாழ்வார் சொன்ன நற்செய்தி என்ன தெரியுமா ?” என்றார். உடனே ராமானுஜர் ”அதைப் பிறகு பார்க்கலாம்” என்று சைகை காண்பிக்க. சிஷ்யர் மௌனமாக இருந்தார்.

“அருமை சாமி ! பேயாழ்வார் என்பதற்கு என்ன பொருள்?” என்று ஆர்வமாகக் கேட்க“ பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே’ அதாவது எம்பிரான் மீது பித்தன் ஆனேன் என்கிறார் குலசேகர ஆழ்வார். அதுபோலத் திருமாலின் மீது பித்துப் பிடித்தவர் இந்த ஆழ்வார் அதனால் இவருக்குப் பேயாழ்வார் என்று பெயர்!” என்றார்.

“மிக்க நன்றி சாமி! இவ்வளவு நாள் எனக்கு இந்தப் பெயர்க் காரணம் தெரியாது. இன்று உங்கள்மூலம் தெரிந்துகொண்டேன்” என்று அவள் மேலும் தொடர்ந்தாள்.

ஒரு நாள் இந்த மூன்று ஆழ்வார்களும் வெவ்வேறு இடத்திலிருந்து, தனித்தனியே திருக்கோவலூர் என்ற திவ்ய தேசத்துக்கு வந்தார்கள். அன்று காற்றுடன் கூடிய நல்ல மழை. மலைப் பொழுது முடிந்து நன்கு இருட்டிவிட்டது.

மின்னலும் இடியுமாக இருக்க. மழைக்கு ஒதுங்க நினைத்த பொய்கையாழ்வார் மிருகண்ட முனிவர் ஆசிரமத்தில் உள்ள இடைகழியில் ஒதுங்கினார். (இடைகழி – ரேழி என்றும் சொல்லுவர். வீட்டின் வாசலுக்கும், உள்ளுக்கும் நடுவில் உள்ள இடம்).

பொய்கை ஆழ்வார் அந்த இடைகழியில் சற்று ஓய்வெடுக்க நினைத்தார். படுத்துக் கொண்டார்.சற்று நேரத்திற்கெல்லாம் அங்கே பூதத்தாழ்வார் வந்தார். கதவைத் தட்டிவிட்டு “வெளியே கடும் மழை பொய்கிறது. உள்ளே வரலாமா ?” என்றார். உள்ளே இருந்த பொய்கை ஆழ்வார் “ஓ தாராளமாக வரும். இது குறுகலான இடைகழி இங்கே ஒருவர் படுக்கலாம் இருவர் இருக்கலாம். நாம் இருவரும் சேர்ந்து அமரலாம். வாருங்கள்” என்று உள்ளே அழைத்து அவருக்கு இடம் கொடுத்தார்..

சற்று நேரம் கழித்து பேயாழ்வார் நனைந்துகொண்டு அங்கு வந்தார். அவரைப் பார்த்து “சீக்கிரம் உள்ளே வாருங்கள் என்று இருவரும் வரவேற்று ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்” என்று கூறியபடியே மூவரும் நின்றனர்.ஆழ்வார்கள் எந்தத் திவ்ய தேசத்திலிருந்து வருகிறீர்கள் என்று விசாரித்துக்கொண்டார்கள். அப்போது மூவரும் திருக்கோவலூர் பெருமாளைத் தரிசிக்க வந்திருப்பதாகத் தெரிந்துகொண்டு மகிழ்ச்சியடைந்தார்கள்.

திருக்கோவலூர் பெருமாளின் குணங்களையும், அவனுடைய விளையாட்டுக்களையும் பற்றி ஆனந்தமாகப் பேசிக்கொண்டு இருந்தபோது அவர்களை யாரோ நெருக்கினார்கள்.

பொய்கை ஆழ்வார் ”புதிதாக இங்கே இன்னொருவர் வந்திருப்பது போலத் தோன்றுகிறது ! அவர் நெருக்குவதால் எனக்கு மூச்சு முட்டுகிறது” என்றார். பூதத்தாழ்வார் ”ஆமாம் ஆமாம்! எனக்கும் அதே போலத் தான் மூச்சு முட்டுகிறது” என்றார். பேயாழ்வார் “நல்ல இருட்டு அதனால் யார் என்று தெரியவில்லை. விளக்கு இருந்தால் யார் முட்டுகிறார்கள் என்று பார்க்கலாம்” என்றார்.

பொய்கை ஆழ்வார் தன் யோகத்தால் பூமியை அகலாகவும், சமுத்திரத்தை நெய்யாகவும், சூரியனை விளக்காகவும் ஏற்றி ஒரு பாசுரம் பாடினார்.

உடனே பூதத்தாழ்வார் தன் யோகத்தால் அன்பை அகலாகவும், ஆர்வத்தை நெய்யாகவும், தன் நெஞ்சைத் திரியாகவும், ஞானத்தை விளக்காகவும் ஏற்றி ஒரு பாசுரம் பாடி முடித்தபின் மூன்று ஆழ்வார்களுக்கும் பெருமாள் மஹாலக்ஷ்மியுடன் காட்சி கொடுத்தார். அந்தத் தரிசனத்தின் பரவசத்தால் பேயாழ்வார் மிகுந்த மகிழ்ச்சியடைந்து “திருக்கண்டேன்” என்று அவரும் ஒரு பாசுரம் பாடினார்.

“சாமி இடைகழியில் பெருமாள் என்னை நெருக்கினாரா ? இல்லை எனக்குத் தரிசனம் தான் கொடுத்தாரா ? இல்லையே ! அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள்.

ராமானுஜர் ”பிள்ளாய்! மிக அருமையாகச் சொன்னாய். தூய்மையான மனிதாபிமானம் மிக்க அடியார்கள் கூடும்போது, அவர்களுடைய நெருக்கத்தை விரும்பி, பெருமாள் வருகிறார். பக்தனுடைய சம்பந்தம் கிடைக்கப் பெருமாள் மூச்சுமுட்டும் அளவு நம்மை நெருக்கித் தள்ளுகிறான்” என்றார்.

கூட இருந்த சிஷ்யர் ஒருவர் “ ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டித் திருக்கோவலூர் பெருமாள் திரிவிக்கிரமனாக உலகு அனைத்தும் அளந்தவனுக்கு இடைகழியில் இடம் இல்லையே!” என்றார்.

உடனே அந்தப் பெண் “இரு மன்னரைப் பெற்றேனோ வால்மீகியைப் போலே” என்றாள்.

ராமானுஜர் “கரும்பைப் பிழிந்தால் அதனுடைய சாறு வரும். அதுபோலப் பெருமாள் ஆழ்வார்களை நெருக்கியதால் நமக்கு அவர்களுடைய பாசுரங்கள் சுவையான கரும்புச்சாறு போலக் கிடைத்தது. இப்போது சுவையான கதை கிடைக்கப் போகிறது!” என்றார்.

(Visited 167 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close