ஆன்மிகம்
Trending

இரு மன்னரைப் பெற்றேனோ வால்மீகியைப் போல !

Story Highlights

  • அதற்குச் சீதை “தாய்மை அடைந்திருக்கும் எனக்கு ஓர் ஆசை இருக்கிறது என்று தன் ஆசையைக் கூறினாள். ராமரும் “நிச்சயம் அப்படியே செய்கிறேன்” என்றார்.

“சாமி ! ராமர் ராவணனை வதம் செய்த பின் சீதையுடன் அயோத்திக்குத் திரும்பினார். ஊர் முழுக்க கொண்டாட்டம். ஊரை அலங்கர்த்தார்கள். தோரணம் கட்டினார்கள். பூத்தூவினார்கள். வீதியில் மக்கள் மகிழ்ச்சியில் ஆடிப் பாடிக் கொண்டாடினார்கள். அயோத்தியை ராமர் எந்தக் குறையும் இல்லாமல் அவர் ஆட்சி நடத்தினார்.

ஆயிரம் வருடங்கள் நல்ல முறையில் ஆண்டார். அந்தச் சமயம் சீதை கருவுற்றாள். இதைக் கேள்விப்பட்ட ராமர் மிகுந்த சந்தோஷம் அடைந்தார் “சீதே நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன், உனக்கு ஏதாவது ஆசை இருந்தால் சொல் நான் உடனே நிறைவேற்றுகிறேன்” என்றார்.

அதற்குச் சீதை “தாய்மை அடைந்திருக்கும் எனக்கு ஓர் ஆசை இருக்கிறது என்று தன் ஆசையைக் கூறினாள். ராமரும் “நிச்சயம் அப்படியே செய்கிறேன்” என்றார்.

ராமானுஜரின் சிஷ்யர் “அது என்ன ஆசைப் பெண்ணே ?” என்று கேட்டார்.

அதற்கு அந்தக் குட்டிப் பெண் “சாமி அதைப் பிறகு சொல்லுகிறேன்” என்று கதையைத் தொடர்ந்தாள்.

ராமர் வழக்கமாக நாட்டில் நடக்கும் விஷயங்களைக் கேட்டு அறிவார். குறைகள் ஏதாவது இருந்தால் உடனே அந்தக் குறைகளைச் சரி செய்வார். அன்று ராமர் சபையில் “ ஊரில் நம் ஆட்சிபற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள்” என்று கேட்டார். அப்போது சபையில் ஒருவர் “ராமா எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஆட்சியைப் பாராட்டுகிறார்கள். ஆனால்…” என்று இழுத்தார். ராமர் “ஆனால் என்ன ? நம் ஆட்சியில் ஒருவருக்கும் குறை இருக்கக் கூடாது” என்றார்.

இழுத்தவர் தொடர்ந்தார் “ராமா தெருவில் வலம் வந்தபோது ஒரு வண்ணான் ஊர் வம்பு அளந்து கொண்டு இருந்தான் ஆனால் அவனைச் சட்டை செய்யத் தேவையில்லை” என்றார்.

ராமர் “யார் சொன்னாலும் அதை எந்த விருப்பு வெறுப்பும் இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.. தயங்காமல் சொல்லுங்கள்” என்றவுடன் அவர் சொன்னார் “சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போனான். இலங்கையில் ராவணன் கட்டுப்பாட்டிலிருந்தாள். பிறகு ராமர் சீதையை மீட்டு அழைத்துக்கொண்டு வந்து மறுபடியும் குடும்பம் நடத்துகிறார். நானாக இருந்தால் என் மனைவியைத் தள்ளி வைத்திருப்பேன் என்று அந்த வண்ணான் கூறினான்” என்றார்.

ராமரின் சகோதரர்கள் “ராமா யாரோ ஒரு வண்ணான் சொன்னதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என்றனர். இன்னொரு சகோதரன் “சீதை குற்றமற்றவள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். சீதையே அதை நெருப்பில் குதித்து உலகத்துக்கே நிரூபித்தாள்” என்றார்.

ராமர் “நீங்கள் சொல்லுவது எல்லாம் சரி. ஆனால் நான் இப்போது அரசன். மக்களின் எந்தப் பழிச் சொல்லுக்கு ஆளாகக் கூடாது. அதனால் நான் தீர்மானித்துவிட்டேன்” என்றார். ராமர் என்ன சொல்லப் போகிறார் என்று எல்லோரும் ராமரையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

சபையில் அமைதி நிலவியது. ராமர் சொன்னார் “லக்ஷ்மணா நாளைக் காலைச் சீதையை அழைத்துக்கொண்டு நம் ராஜ்யத்துக்கு வெளியே கங்கைக்கு அக்கரையில் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் விட்டுவிட்டு வந்துவிடு” என்றார். எல்லோருக்கும் அதிர்ச்சி ஒன்றும் பேசாமல் இருந்தார்கள். ராமர் சொன்னால் அதற்கு மறு பேச்சு இல்லை.

மறுநாள் லக்ஷ்மணன் சீதையை அழைத்துக்கொண்டு வால்மீகி ஆசிரமம் இருக்கும் இடத்துக்குச் சென்றான். போகும் வழியில் சீதையிடம் வருத்தத்துடன் முதல் நாள் சபையில் நடந்த விஷயங்களைச் சொல்லிவிட்டு வால்மீகி ஆசிரமத்துக்கு அருகில் சீதையை விட்டுவிட்டு அயோத்திக்குத் திரும்பினான். சீதை புன்னகையுடன் மனதில் சந்தோஷத்துடன் வால்மீகி ஆசிரமம் சென்றாள்.

சீதையைப் பார்த்த வால்மீகி ஞான திருஷ்டியால் என்ன நடந்தது என்று அறிந்துகொண்டார். சீதையை அன்புடன் வரவேற்றார். சில காலம் கழித்து, சீதைக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. வால்மீகி மிகுந்த சந்தோஷம் அடைந்தார்.

ஒரு தர்ப்பை புல்லை இரண்டாக அறுத்தார். வேத மந்திரங்களைச் சொல்லி அந்தத் தர்ப்பை புல்லைக் குழந்தைகளின் மீது தடவினார். தர்பப் புல்லின் கீழ் பாகம் லவம் என்று பெயர். நுனி பாகம் குசம் என்று பெயர். அதனால் இவர்களுக்கு லவ-குச என்று பெயர்.

வால்மீகி குழந்தைகளுக்கு வில் வித்தை, சாஸ்திரங்கள், இசையுடன் ராமாயணத்தைக் கற்றுக்கொடுத்தார். இவர்கள் பாடுவதை பார்த்த மற்ற ரிஷிகள் எல்லாம் “குழந்தைகள் என்ன அருமையாகப் பாடுகிறார்கள் !” என்று பாராட்டினார்கள் “லவகுசா இன்னும் கொஞ்சம் பாடு! இன்னும் கொஞ்சம் பாடு!” என்று கேட்கக் குழந்தைகளும் படினார்கள்.

ரிஷிகள் இந்தக் குழந்தைகள் ராமாயணம் பாடுவதைக் கேட்டுப் பரிசுகள் கொடுத்தார்கள். ஒரு ரிஷி அவர்களுக்குப் பூணூல் கொடுத்தார். இன்னொரு ரிஷி தான் வைத்திருந்த கமண்டலத்தைக் கொடுத்தார். இன்னொரு ரிஷி தான் உபயோகிக்கும் மான் தோலைக் கொடுத்தார். ஒரு ரிஷியிடம் ஒன்றும் இல்லை அவர் யோசித்தார் “லவகுசர்களே ! என்னிடம் ஒன்றும் இல்லை அதனால் நான் ஆசீர்வாதம் செய்கிறேன் “நீங்கள் பாடும் இந்தப் பாட்டை யார் கேட்க வேண்டுமோ அவன் கேட்கட்டும்’ என்றார்.

ரிஷியின் ஆசீர்வாதம் பலித்தது. அதற்குப் பிறகு வால்மீகி இந்தக் குழந்தைகளை ராமர் அசுவமேத யாகம் செய்யும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே லவ-குசர்கள் வீணையை மீட்டி ராமாயணத்தை இசையுடன் பாடினர். ராமரும் மற்றவர்களும் ஆனந்தப்பட்டனர். பிறகு லவகுசர்கள் தன்னுடைய மகன்கள் என்று அறிந்து பேரானந்தம் அடைந்தார் ராமர்.

இப்படி ராமனே ராமாயணம் கேட்கும் அளவுக்கு இந்தக் குழந்தைகளை வளர்த்தவர் வால்மீகி. இது மாதிரி பெருமாளின் குழந்தைகளை நான் வளர்த்தேனா ? இல்லையே ! அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள்.

”பெண்ணே ! ஏன் இந்த அவசரம் ராமரே ராமாயணம் கேட்டது பற்றிக் குலசேகர ஆழ்வாரும் கூறியிருக்கிறார்!” என்றார் ராமானுஜர்.

“ஆகா! அப்படியா சாமி!” என்றாள் அந்தக் குட்டிப் பெண்.

ராமானுஜரின் சீடர் ஒருவர் “பெண்ணே, இன்னும் சீதை ராமரிடம் சொன்ன ஆசை பற்றி நீ கூறவில்லையே ?” என்று நினைவுபடுத்தினார்.


”ஓ ! மறந்துவிட்டேன் சாமி! ராமர் சீதையிடம் கேட்டபோது சீதை சொன்னாள் தாய்மை அடைந்திருக்கும் எனக்கு ஓர் ஆசை. மீண்டும் கங்கைக் கரைக்குச் சென்று அங்கே வசிக்கும் முனிவர்களின் ஆசிரமங்களைப் பார்க்க வேண்டும். அவர்களை வணங்க வேண்டும். அங்கே சில காலம் தங்க வேண்டும்” என்று கூறினாள். ராமரும் வண்ணான் சொன்னான் என்று சீதையின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

ராமானுஜர் “பெண்ணே! நீ சொல்லுவது சரி. சீதை விருப்பத்தையே ராமர் அப்படி நிறைவேற்றி வைத்தார். ராமர் என்றுமே தப்பு செய்யமாட்டார்!”

அப்போது ஒரு சிஷ்யர் “பெண்ணே கிருஷ்ணாவதாரம், ராமாவதாரம் இரு அவதாரத்திலும் பெருமாள் வண்ணானை விடமாட்டார் போலிருக்கிறதே!” என்றார். உடனே அந்தப் பெண் சிரித்துக்கொண்டு “இரு மாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியர் போலே!” என்றாள்.

ராமானுஜரும், சிஷ்யர்களும் அந்தப் பெண்ணை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

(Visited 80 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close