மண் பூவை இட்டேனோ குரவ நம்பியைப் போலே!
”சாமி ! இது ஒரு குயவரின் கதை” என்று ஆரம்பித்தாள் அந்தச் சின்னப் பெண்.திருமலை பக்கம் குரவபுரம் என்ற சிறு கிராமம். அந்தக் கிராமத்தில் மண் பானைகளைச் செய்யும் ஒரு ஏழை குயவர் இருந்தார். அவர் பெயர் பீமன். குடும்பம் நடத்துவதற்கே கஷ்டப்பட்டார். திருமலைக்கு சென்று பெருமாளை தரிசிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் கையில் பணம் இல்லை. அதனால் திருமலைக்குப் போக முடியவில்லை. ஆனால் அவருக்கு எப்போதும் திருவேங்கடவன் நினைவு தான். அவன்மீது அடங்காத காதல்.
மண் பானை செய்யும் களி மண்ணில் திருமலை பெருமாள் உருவத்தைச் செய்து அதை வீட்டுக்குப் பக்கம் இருக்கும் மரத்தடியில் வைத்திருந்தார்.
தினமும் விடியற்காலை எழுந்துகொள்வார். குளித்துவிட்டு, மரத்தடியில் இருக்கும் பெருமாளை சேவிப்பார். பிறகு களி மண்ணை பிசைந்து, மண் பானை செய்ய ஆரம்பிப்பார். மாலை பானைகளைச் செய்து முடித்தபின். கீழே சிதறிக்கிடக்கும் சின்ன சின்ன மண் உருண்டைகளைப் பொறுக்கி பூக்கள் மாதிரி செய்வார். அதை மரத்தடியில் இருக்கும் பெருமாள் பாதத்தில் வைத்துக் கும்பிடுவார்.
குயவரை இவரை எல்லோரும் குரவநம்பி என்று கூப்பிடுவார்கள். இவருக்கு இன்னொரு பெயர் இருக்கிறது அது “குறும்பு அறுத்த நம்பி” என்றாள் அந்தச் சின்னப் பெண்.“குறும்பு அறுத்த நம்பி ! சுவாரசியமான பெயராக இருக்கிறதே குழந்தாய் !” என்றார் ராமானுஜர்

“ஆம் சாமி! இவருக்கு எந்த ஆசையும் கிடையாது. யார் மீதும் பொறாமை கிடையாது. நான் என்ற அகம்பாவம் கிடையாது. கோபமே வராது. இந்தக் குறும்பு எல்லாம் இல்லாததால் இவர் ’குறும்பு அறுத்த நம்பி!’ என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் “சாமி ! முன்பு தொண்டைமான் சக்கரவர்த்தி பற்றிச் சொல்லியிருந்தேன் நினைவு இருக்கிறதா ?” என்றாள்.
“பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே! நன்றாக நினைவு இருக்கிறது குழந்தாய்!” என்றார் ராமானுஜர்.“அந்தத் தொண்டைமான் சக்கரவர்த்திக்கும் திருமலை பெருமாள் மீது மிகுந்த ஈடுபாடு. தினமும் விதவிதமான உயர்ந்த பூக்களைப் பெருமாளுக்கு சம்பர்பிப்பான். முதல் நாள் அரசன் சம்பர்பித்த பூக்கள் கீழே கிடக்கும். அதற்குப் பதில் மண் பூக்கள் பெருமாள் சூடியிருப்பார். அரசனுக்கு வியப்பாக இருந்தது.
ஒரு நாள் அரசன் இதைப் பற்றி விசாரித்தான் “தினமும் நான் உயர்ந்த மலர்களைச் சமர்ப்பிக்கிறேன். ஆனால் மறுநாள் நான் சம்பர்பித்த மலர்கள் கீழே கிடக்கச் சாதாரண மண்ணால் செய்த பூக்கள் பெருமாள் மீது இருக்கிறது. யார் இந்த வேலையைச் செய்கிறார்கள் ?” என்றான். அர்ச்சகர் “அரசே, நானும் இதைக் கவனித்தேன். யார் என்று தெரியவில்லை. கண்டுபிடிக்க வேண்டும்” என்றார். அன்று இரவு அரச படைகள் கோவிலைக் காவல் காத்தார்கள்.
மறுநாள் காலை கதவைத் திறந்தபோது பெருமாள் மீது அதே மண் பூக்கள்!தொண்டைமான் சக்கரவர்த்தி பெருமாளிடமே ”மண் பூக்களின் ரகசியம் என்ன” என்று கேட்டான். பெருமாள் “அரசனே இந்த மண் பூக்களை எனக்கு வேண்டிய பக்தன் ஒருவன் சம்ர்பிக்கிறான். அவை எனக்குப் பிடித்திருக்கிறது” என்றார். “யார் அந்தப் பக்தன்?” என்று கேட்கப் பெருமாள் ”அது ரகசியத்தைக் கூற முடியாது!” என்று மறுத்துவிட்டார்.
அரசனும் தினமும் பெருமாளை நச்சரிக்க ஆரம்பித்தான். பெருமாள் ஒரு நாள் குறும்ப அறுத்த நம்பியிடம் “அரசன் தினமும் யார் இந்த மண் பூக்களைச் சமர்ப்பிக்கிறார் என்று என்னைக் கேட்டுத் தொந்திரவு செய்கிறான் உன்னிடம் அனுமதி கேட்டுவிட்டுச் சொல்லலாம் என்று இருக்கிறேன்” என்றார். அதற்கு நம்பி “சொல்லுங்கள் ஆனால் சொல்லும்போது எனக்கு மோட்சம் அளித்துவிட்டுச் சொல்லுங்கள்” என்றார்.
பெருமாள் அரசனிடம் சொல்லாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். ஒரு நாள் பெருமாள் இன்று அரசனிடம் சொல்லிவிடுவது என்று முடிவு செய்தார். அன்றும் அரசன் கேட்கப் பெருமாள் “குரவபுரம் என்ற ஊரில் ஒரு குயவன் இருக்கிறான். தினமும் தான் செய்த மண் பெருமாளுக்கு மண் பூக்களை அன்போடு சமர்ப்பிப்பான். அவனுடைய இந்த மண் பூக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தினமும் அங்கே சென்று அந்தப் பூக்களை எடுத்துவருவேன்” என்றார்.அரசன் அசந்து போனான்.
உடனே குரவபுரம் புறப்பட்டான்.அரசன் அங்கே சென்றபோது நம்பி முக்தி அடைந்து மோட்சம் பெற்றிருந்தார். பெருமாள் கொடுத்த வாக்கு!“சாமி நான் குரவநம்பி போலப் பெருமாளுக்கு பூக்களை அன்போடு கொடுத்தேனா ? அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள் அந்தச் சின்னப் பெண்.
ராமானுஜர் ஏதோ சிந்தனையிலிருந்தார்.“சாமி! என்ன யோசிக்கிறீங்க ?” என்றாள் அந்தச் சின்னப் பெண்.
”பெண்ணே எனக்குச் சில விஷயங்கள் தோன்றுகிறது. திருமலை பெருமாளுக்குப் புஷ்பம் பிடிக்கும். அதனால் திருமலையைப் புஷ்ப மண்டபம் என்பார்கள். அவருக்கு மண் புஷ்பம் சமர்ப்பித்து அந்தரங்க தொண்டு புரிந்தார் குரவநம்பி என்ற சாதாரண குயவன். ஆனால் அவரைப் பின் தொண்டர்ந்தவர் தொண்டைமான் சக்கரவர்த்தி !
திருவரங்கம் போக மண்டபம் என்பார்கள். திருவரங்கனுக்கு இசை என்றால் ரொம்ப பிடிக்கும். பாண் இசைத்துத் திருப்பாணாழ்வார் அந்தரங்க தொண்டு புரிந்தார். திருப்பாணாழ்வார் சாதாரண பாணர் குலத்தைச் சேர்ந்தவர். ஆனால் அவரைத் தொடர்ந்தவர் லோகசாரங்க முனிவர்”.
உடனே பக்கத்திலிருந்த சிஷ்யர் “புஷ்ப, போக மண்டபம் மாதிரி காஞ்சி தியாக மண்டபம். அங்கே திருக்கச்சி நம்பிகள் பெருமாளுக்கு விசிறி வீசும் அந்தரங்க தொண்டு செய்தார். அவரைப் பின் தொடர்ந்தது நம் ராமானுஜர் அன்றோ !” என்றார்
ராமானுஜர் புன்னகையுடன் “பெண்ணே ஆண்டாள் ’தூமலர் தூவி தொழுது’ என்று திருப்பாவையில் சொல்லியிருக்கிறாள். குரவநம்பி மண் பூவைச் சம்பர்பித்தாலும் அன்புடன் சம்ர்பித்தார்.
கஜேந்திரனை முதலை பிடித்துக்கொண்டாலும் தன்னலம் கருதாமல் பூவைப் பெருமாளுக்குச் சமர்ப்பிக்கத் துடித்தது.!” என்றார்.
உடனே அந்தப் பெண் “மூலம் என்று அழைத்தேனோ கஜராஜனைப் போலே!” என்றாள். ராமானுஜர் “பெண்ணே ! யானை கதையா அடுத்தது” என்று ஆவலுடன் காத்துக்கொண்டு இருந்தார்.