ஆன்மிகம்

வழி அடிமை செய்தேனோ லக்ஷ்மணைப் போலே !

“சாமி ! இது ராமனின் தம்பி லக்ஷ்மணனைப் பற்றியது. ஆதிசேஷன் எப்படி பெருமாளுக்கு எல்லா விதத்திலும் தொண்டு புரிகிறாரோ அதே போல் லக்ஷ்மணன்.” என்று ஆரம்பித்தாள்.

அந்தக் குட்டிப் பெண்ராமானுஜர் புன்னகையுடன் ”குடை முதலானதானேனோ அனந்தாழ்வானைப் போலே! நினைவு இருக்கிறது குழந்தாய்” என்று கேட்க ஆரம்பித்தார்.

”சாமி! நீங்க லக்ஷ்மணன் என்றால் தொண்டன் என்ற அடையாளம் என்று சொன்னீர்கள். செல்வம் என்றால் பணம், நகை. வீடு வாசல் போன்றவை. சிறுவயது முதலே லக்ஷ்மணனுக்கு ஏகப்பட்ட செல்வங்களை வைத்திருந்தான். ராமனின் தொண்டு தான் லக்ஷ்மணனுக்கு செல்வம். அண்ணனாகிய ராமர் எதை எப்போது விரும்புவார் என்று லக்ஷ்மணனுக்குத் தெரியும். மனதால், சொல்லால், சரீரத்தால் தொண்டுகள் பல புரிந்தார்.

ராமர் பிறந்தவுடன் தொட்டிலிலிருந்த குழந்தை ராமர் தூங்கவே இல்லை ஒரே அழுகை. எதனால் அழுகிறது என்று அங்கே இருப்பவர்களுக்குத் தெரியவில்லை. பால் புகட்டியும் அழுகை நிற்கவில்லை. ‘ஜோ ஜோ’ என்று தாலாட்டு பாடி தொட்டிலை ஆட்டிவிட்டார்கள். அழுகை அதிகமானது. 90 வயது கிழவி வந்து குடல் தட்டினாள், மருந்து கொடுத்தார்கள், சுமந்திரர் மாந்திரீகர்களை அழைத்து வந்து மந்திரித்தார்கள் எதற்கும் அழுகை நிற்கவில்லை.

கடைசியாக வசிஷ்டரிடம் சென்று முறையிட அவர் “ராமரை லக்ஷ்மணனுடன் ஒரே தொட்டிலில் விடச் சொல்லும்” என்றார். முனிவர் சொன்னது போலவே செய்தார்கள். அவ்வளவு தான். அழுகை நின்றது. குழந்தை தூங்கும்போது தனக்குப் பிடித்தவற்றைக் கட்டிக்கொண்டு தூங்கும். அதுபோல ராமர் எப்போதும் இளைய பெருமாளைக் கட்டிக்கொண்டால் தான் தூக்கம் வருமாம்.

ராமர் வேட்டைக்குக் குதிரையில் போகும்போது லக்ஷ்மணன் மற்றொரு குதிரையில் வில்லேந்தி பின் தொடர்வார். ராமருடைய வீரமும் ஆற்றலும் எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் ஒரு தாய்க்கு தன் பிள்ளையிடம் எந்த வயதிலும் ஒரு பரிவு இருக்கும். லக்ஷ்மணன் அதுபோல. எப்போதும் தாய் போல் பரிவுடன் இருந்தார்.

விஸ்வாமித்திரர் தசரதனிடம் என்னுடன் ராமரை அனுப்பு என்றார் (அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரையைப் போலே! ). முதலில் மறுத்த தசரதன் பின் வசிஷ்டர் சொல் பேச்சு கேட்டார் (அனுப்பி வையுமேன்றேனோ வசிஷ்டரைப் போலே!). விஸ்வாமித்திரர் லக்ஷ்மணனைக் கேட்கவில்லை ஆனால் தொண்டு செய்ய லக்ஷ்மணன் அண்ணன் பின்னே முன்பு சென்றான்.

கைகேயியின் சொற்படி ராமர் காட்டுக்குப் புறப்படுகிறார். அப்போது ராமர் லக்ஷ்மணனை ”அயோத்தியில் ராஜ்யத்தைப் பார்த்துக்கொள்” என்கிறார். ஆனால் லக்ஷ்மணன் அதைக் கேட்க வில்லை. பிடிவாதமாகச் சீதை, ராமர் கால்களில் விழுந்து உங்களுக்குத் தொண்டு புரிய உங்களுடன் வருவேன் என்று ராமருக்கு முன்னே புறப்படுகிறார்.

காட்டுப் பாதையில் முள், கூர்மையான கற்கள், விஷப் பூச்சிகளை அகற்றி பாதை அமைத்துக் கொடுக்க லக்ஷ்மணன் முன்னே செல்கிறார். காட்டில் சீதை, ராமருக்குப் பழம், கிழங்கு, தேன் முதலியவற்றைச் சேகரித்துப் பசிக்கும்போது உணவாக அளித்தார். சுத்தமான தண்ணீரைக் கொண்டு வந்து தாகம் தணித்தார்.

பல இடங்களிலும் நடப்பதால் பாதத்தைத் தாமரை இலைகளில் தண்ணீரை எடுத்து வந்து கழுவினார் .மரவுரிகளைத் துவைத்து அதைச் சுத்தம் செய்து வைத்தார். இரவு தூங்கும்போது கொடிய காட்டு விலங்குகள் வரலாம் என்று வில்லும் கையுமாக இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்துக் காவலாக இருந்தார்.

ஒரு சமயம் இலை தழைகளால் ஆன குடிசை ஒன்றைக் கட்டினார். அதைப் பார்த்ததும் ராமர் மகிழ்ந்தார், மிக மகிழ்ந்தான், மிக மிக மகிழ்ந்தான்!

’லக்ஷ்மணா நான் மனதில் என்ன நினைத்திருந்தேனோ அதே போல நீ கட்டியிருக்கிறாய்!” என்று தம்பியை இறுகக் தழுவிக்கொண்டார்.”

நீ இருக்கும்போது எனக்குத் தந்தை இல்லாத குறையே இல்லை என்று ராமர் லக்ஷ்மணனைப் பார்த்துக் கூறுகிறார். இப்படி நாட்டிலும், காட்டிலும் ராமர் போகும் இடம் எல்லாம் தொண்டு செய்த லக்ஷ்மணன் போல் நான் எந்தத் தொண்டும் செய்யவில்லையே! அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள்.

ராமானுஜர் யோசித்துக்கொண்டு இருந்தார்.“சாமி என்ன யோசிக்கிறீர்கள் ?” என்றாள் அந்தப் பெண் குட்டி.

“லக்ஷ்மணனின் கதையைக் கேட்கும்போது நம்மாழ்வார் ‘நீக்கமில்லா அடியார்’ என்று சொன்ன வாக்கியம் நினைவுக்கு வந்தது” என்றார்.”அருமை சாமி ! இதைத் தான் நமது ஆண்டாள் எந்தப் பிறவியானாலும் ‘உனக்கே நாம் ஆட்செய்வோம்’ என்கிறாள்” என்றாள் அந்தப் பெண்.“அடடே! “ என்றார் ராமானுஜர்.

அப்போது ஒரு சிஷ்யர் “ஸ்வாமி எனக்கு ஒரு சந்தேகம். எல்லா சமயங்களிலும் இரவு விழித்துக்கொண்டு தொண்டு செய்வேன் என்று கூறினார் லக்ஷ்மணன். ஆனால் ஒரு சமயம் காக்கை ஒன்று சீதையைக் கொத்தித் துன்புறுத்தியது. அந்தச் சமயம் லக்ஷ்மணன் இல்லையே ?”

எல்லோரும் ராமானுஜர் என்ன பதில் கூறப்போகிறார் என்று ஆவலுடன் காத்துக்கொண்டு இருந்தார்கள். ராமானுஜர் புன்னகையுடன் “சீதை ராமருடைய கருணை உள்ளம் அதனால் தானே நமக்குத் தெரிந்தது! இந்தக் கருணை உள்ளத்தை உலகிற்குக் கட்டுவதற்காக லக்ஷ்மணன் அப்போது இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தினார் ராமர் ! ராமரின் மனத்தை நன்கு அறிந்தவர் லக்ஷ்மணன்!” என்றார்.

அந்தச் சிஷ்யர் விடவில்லை “ஸ்வாமி அப்படி என்றால், பரதன் வரும்போது உங்களைக் கொல்வதற்காக வருகிறான் என்று நினைக்கிறேன். நான் பரதனைக் கொன்று விடுகிறேன். எனக்கு அனுமதி கொடுங்கள்! லக்ஷ்மணன் கூறுகிறாரே ? ” என்று கேட்க உடனே அந்தப் பெண் ”வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே!” என்றாள்ராமானுஜர்

“ராமாயணம் இன்னும் முடியவில்லை போலே!” என்றார்.

(Visited 96 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close