வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போல
ராமானுஜர் “பெண்ணே ! நீ பரதன் கதையைக் கூறு !” என்றார் ராமானுஜர் ஆவலுடன். குட்டிப் பெண் ஆர்வமாகத் தொடர்ந்தாள் “ராமருக்குப் பட்டாபிஷேக ஏற்பாடுகள் நடக்கிறது. அயோத்தியில் எல்லோரும் ஆனந்தமாக இருக்கிறார்கள். அந்தச் சமயம் பரதன் தன் மாமாவைப் பார்க்கக் கேகய நாட்டுக்குச் சென்றிருந்தான். மறுநாள் பட்டாபிஷேகம். அன்று இரவு கைகேயி கூனி பேச்சைக் கேட்டு ராமரைக் காட்டுக்கு அனுப்ப. அதிர்ச்சியில் தசரதன் இறந்து போனான். வசிஷ்டர் தூதுவர்களை அனுப்பி பரதனிடம் எதுவும் சொல்லாமல் அழைத்து வாருங்கள் என்றார்.
நடந்தது இது எதுவும் தெரியாமல், பரதன் அயோத்திக்குத் திரும்பினான். அரண்மனைக்கு வந்த பிறகே நடந்த விஷயங்களை அறிந்தான். தன் தாய் கைகேயி தான் எல்லாவற்றிருக்கும் காரணம் என்று அவளை ஏசினான். ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று புலம்பினான்.
வசிஷ்டர் பரதனைப் பட்டாபிஷேகம் செய்து கொள்ள அறிவுறுத்தினார். ஆனால் பரதன், இந்த நாடு ராமருடைய சொத்து. நானும் இந்த ராஜ்யத்தைப் போல ராமருடைய சொத்து. ஒரு சொத்து இன்னொரு சொத்தை எப்படி ஆள முடியும் ? என்றான். ராமரைத் திரும்ப அழைத்துக்கொண்டு வருகிறேன் என்று காட்டுக்குப் புறப்பட்டான்.
வழியில் குகன் பரதனைப் பார்த்து அவனுடைய பெருமைகளை உணர்ந்து “பரதா ஆயிரம் ராமர்கள் சேர்ந்தாலும் உன் ஒருவனுக்குச் சமம் ஆக மாட்டார்கள்” என்கிறான். குகன் லக்ஷ்மணனுக்கு ராமரிடம் உள்ள பரிவு பற்றியும் பரதனிடம் பெருமையாகப் பேசினான்.
அப்போது குகன் பரதனிடம் ராமர் படுத்துக்கொண்ட இடத்தைக் குகன் காண்பித்தான். உடனே பரதன் இங்கேயே நானும் இன்று உறங்கப் போகிறேன். அண்ணன் பட்ட கஷ்டங்களைப் நானும் படுவேன். அண்ணன் சாப்பிட்ட பழம், கிழங்கையே நானும் உண்பேன். அண்ணன் உடுத்திய மரவுரி போல நானும் அணிவேன் என்று சபதம் செய்தான்.
பிறகு பரத்வாஜ முனிவரைச் சந்தித்தான் பரதன். முனிவர் “பரதா இந்தப் பெரிய படையுடன் எங்கே போகிறாய் ? ராமனுக்கு ஏதாவது தீங்கு விளைவிக்கப் போகிறாயா ?” என்று சந்தேகத்துடன் கேட்டபோது அதற்கு “ராமரைத் திரும்ப அழைத்து வரப் போகிறேன்” என்று அழுதுகொண்டே பதில் கூறினான் பரதன்.
பரதனை வருவதைப் பார்த்த லக்ஷ்மணனும் சந்தேகப்பட “பரதன் என் உயிரைவிட மேலானவன்” என்றார் ராமர். ராமரைப் பார்த்த பரதன் ஓடி வருகிறான். தரையில் தாரைத் தாரையாகக் கண்ணீர் சிந்துகிறான். துக்கம் தொண்டையை அடைக்கப் பேச முடியாமல் தவிக்கிறான். என்ன செய்வது என்று தெரியாமல் தரையில் புரள்கிறான். ராமர் பரதனை அணைத்துக்கொண்டு தன் மடியில் வைத்துக் கொள்கிறார்.
நடந்த எல்லா விஷயங்களையும் பரதன் கூற ராமர் அதைக் கேட்கிறார். பரதன் ”அண்ணா ! திரும்ப நாட்டுக்கு வர வேண்டும். அயோத்தியை ஆள வேண்டும்” என்று ராமர் காலில் விழுகிறான். ஆனால் ராமர் மறுத்துவிடுகிறார். பரதன் எவ்வளவு கெஞ்சியும் ராமரின் மனம் இரங்கவில்லை. விடாப்பிடியாக இருக்கிறார். பரதனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ராமரின் விருப்பமே தன் விருப்பம் என்ற முடிவுக்கு வருகிறான்.
“இந்தப் பாதுகைகளின் மீது ஏறி நின்று எனக்குக் கொடுங்கள் அதை அயோத்திக்கு எடுத்துச் செல்கிறேன்” என்று கூற ராமர் பாதுகைகளைக் கொடுக்கிறார். ”நீங்கள் திரும்ப வரும் வரையில் இந்தப் பாதுகைகளே எனக்குக் கதி. அவையே அயோத்தியின் அரச பீடத்தை அலங்கரிக்கும்” என்று அந்தப் பாதுகைகளை தன் தலைமீது சுமந்து அயோத்திக்கு திரும்பச் செல்கிறான் பரதன்.

“சாமி ! பொருள் ஒன்றை ஓர் இடத்தில் வைத்தால் அது அங்கேயே இருக்கும். ராமர் பரதனை அயோத்திக்குத் திரும்பப் போ என்று சொன்னபோது பரதன் ஒரு பொருள்போலக் கேட்டுக்கொண்டான். நான் பரதனைப் போலப் பெருமாள் சொன்ன பேச்சைக் கேட்டேனா ? இல்லையே அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன்” என்றாள்.
சிஷ்யர் ஒருவர் ”போன கதையில் ராமரைத் தேடி பரதன் காட்டுக்கு வரும்போது, அதைப் பார்த்த லக்ஷ்மணன் “அண்ணா ! பரதன் உங்களைக் கொல்வதற்காக வருகிறான் என்று நினைக்கிறேன். நான் பரதனைக் கொன்று விடுகிறேன். எனக்கு அனுமதி கொடுங்கள்! என்று லக்ஷ்மணன் கோபத்துடன் கூறுகிறார்.
அதைப் பற்றி விளக்க வேண்டும் !” என்றார்.அந்தக் குட்டிப் பெண் ராமானுஜரைப் பார்த்து “ஆமாம் சாமி! நீங்கள் அதைச் சொல்ல வேண்டும்” என்றாள்.
ராமானுஜர் புன்னகையுடன் “சொல்கிறேன்!” என்று ஆரம்பித்து மேலே பார்த்தார். காற்றில் ஒரு சருகு ஒன்று பறந்துகொண்டு இருந்தது. கையை மேலே காண்பித்து “இதோ அங்கே காற்றில் ஒரு சருகு(காய்ந்த இலை) பறக்கிறது அதைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது ?” என்றார் ராமானுஜர்.மேலே பார்த்த ஒரு சிஷ்யர் “காற்று அடிக்கிறது… சருகு பறக்கிறது. வேறு ஒன்றும் தோன்றவில்லையே!” என்றார். மற்றவர்களும் தலை அசைத்து ஆமோதித்தார்கள்.
”இதே சருகு ஒரு எழுதிய ஓலைச்சுவடியாக இருந்தால் ?” என்று ராமானுஜர் கேட்க உடனே ”துரத்திச்சென்று பிடிக்க முயற்சி செய்வேன்” என்றார் அந்த சிஷ்யர்.ராமானுஜர் புன்முறுவலோடு “அந்த ஓலைச்சுவடி பறந்து ஆற்றில் விழுந்து அடித்துச் சென்றால் ?”“நீந்தி எடுக்க முயற்சி செய்வேன்” என்றார் இன்னொரு சிஷ்யர்.“ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது அப்பொழுது ?” என்று ராமானுஜர் கேட்க, சிஷ்யர் “ஓலைப் போய்விட்டதே என்று புலம்புவது தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது” என்றார்.
”இதே ஓலைக்குப் பதில் ஒரு குழந்தை தவறி விழுந்தால் ? உடனே அந்தக் குழந்தையின் தந்தை தன் உயிரே போனால் பரவாயில்லை என்று குதிப்பார் இல்லையா ?” என்றார். சிஷ்யர்கள் “ஆமாம்!” என்று ஆமோதித்தார்கள்.
ராமானுஜர் தொடர்ந்தார் “நம் ஒன்றின் மீது பற்று வைக்கிறோம். அதற்கு ஏதாவது தீங்கு ஏற்படும்போது அது பறிபோய்விடுமோ என்று பயம் ஏற்படுகிறது. ஒரு காய்ந்த சருகு காற்றில் பறக்கும்போது அதன் மீது நமக்குப் பற்று கிடையாது அதனால் அதைச் சட்டை செய்வதில்லை. ஓலைச்சுவடியும் ஒரு காய்ந்த சருகு தான். ஆனால் அதில் ஏதோ குறிப்பு உள்ளதால் அதன் மீது பற்று ஏற்படுகிறது. அதைத் துரத்திக்கொண்டு ஓடுகிறோம். வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகும்போது நம் துரத்தலை நிறுத்திவிடுகிறோம். குதிக்கப் பயப்படுகிறோம். காரணம் நம் உடல்மீது நமக்கு ஓலைச்சுவடியைக் காட்டிலும் அளவற்ற பற்று.
ஆனால் குழந்தை விழும்போது நம் உடலின் மீது பற்று நீங்கிக் குழந்தையைக் காக்க வெள்ளமாக இருந்தாலும் குதிக்கிறோம். நாம் நேசிக்கும் ஒன்றிருக்கும் ஆபத்து ஏற்படும்போது பயம் இயற்கையாக வருகிறது. பற்று கூடக் கூட எங்கே பறிபோய்விடுமோ எனப் பயமும் அதிகமாகும். பயத்தின் ஒரு வெளிப்பாடு கோபம்” என்று ராமானுஜர் நிறுத்தினார்.“அப்படியா சாமி ?” என்றாள் அந்தக் குட்டிப் பெண்.
ராமானுஜர் தொடர்ந்தார் “பரதன், லக்ஷ்மணன் இருவருக்கும் தங்கள் மீதோ தங்கள் தாய் தந்தையர் மீதோ அல்லது ராஜ்ஜியத்தின் மீதோ பற்றுக் கிடையாது. இருவருக்கும் ராமனிடம் மட்டுமே அளவு கடந்த பற்று. பரதன் தன் தந்தை தசரதன் மாண்டுவிட்டான் என்ற கேள்விப்பட்டபோது ஏற்படாத அதிர்ச்சி, ராமர் காட்டுக்குச் சென்றுவிட்டான்.
நீ தான் இனி அரசன் என்றபோது அதிர்ச்சியும் பயமும் கலந்து அது கோபமாக வெடித்தது. அதனால் தன் தாயைக் கண்டபடி ஏசினான். தன் குருவின் பேச்சைக் கேட்க மறுத்தான். இதே போல லக்ஷ்மணன் பரதன் வரும்போது பரதனால் ராமனுக்கு ஏதாவது தீங்கு நேரப் போகிறதோ என்ற பயம். அந்தப் பயம் காரணமாகப் பரதனைக் கண்டபடி பேசினான். பரதன், லக்ஷ்மணனின் இருவருடைய கோபமும் ராமர் மீது இருந்த அளவற்ற பற்றின் வெளிப்பாடு!” என்றார் ராமானுஜர்.
அப்போது ஒரு சிஷ்யர் “இங்கே லக்ஷ்மணன் உயர்ந்தவரா ? அல்லது பரதன் உயர்ந்தவரா ?” என்று கேள்வி கேட்க உடனே ராமானுஜர் ”ஒருவரைப் புகழ்ந்து பேசும்போது இன்னொருவர் தாழ்ச்சி என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.
நம்மாழ்வார் “கற்க விரும்புகிறவர்கள் ராமபிரானைத் தவிர வேறு யாரைக் கற்க முடியும் ? ” என்கிறார். ராமரை உயர்த்தி சொல்லுவதால் கண்ணனைத் தாழ்த்திப் பேசுவது ஆழ்வாரின் நோக்கம் கிடையாது இல்லையா ? அதுபோலத் தான் பரதனும், லக்ஷ்மணனும்” என்றார்.
ராமானுஜர் “பெண்ணே! பரதனால் ராமருக்கு ஏதாவது தீங்கு நேரப்போகிறதோ என்று லக்ஷ்மணன் பயந்தான். அந்த லக்ஷ்மணனால் ராமருக்கு ஏதாவது தீங்கு வந்துவிடுமோ என்று குகன் பயந்தான்!” என்றார்.உடனே அந்த பெண் “அக்கரைக்கே விட்டேனோ குகப் பெருமாளைப் போலே!”