சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்வரலாற்றில் இன்று

மஹாராணி காயத்ரி தேவி – மே 23

ராஜாஜியின் ஸ்வராஜ்யா கட்சியின் மூத்த தலைவரும், ஜெய்பூர் சமஸ்தானத்தின் முன்னாள் மஹாராணியுமான ராஜமாதா காயத்ரிதேவியின் பிறந்ததினம் இன்று. 

வங்காளத்தில் உள்ள கூச் பெஹர் சமஸ்தான அரசராக இருந்த மஹாராஜா ஜிதேந்த்ர நாராயணன் – இந்திரா ராஜே தம்பதியரின் மகளாக 1919ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி பிறந்தவர் இளவரசி காயத்ரி தேவி. பரோடா அரசர் ஷாயாஜிராய் கெய்வர்டின் மகள்தான் இந்திரா ராஜே. தனது ஆரம்ப கல்வியை லண்டன் நகரிலும் பின்னர் ரபீந்த்ரநாத் டாகுரின் சாந்திநிகேதனிலும், ஸ்விட்சர்லாந்து நாட்டிலும் பயின்றவர் காயத்ரி தேவி. ஜெய்பூர் சமஸ்தானத்தின் அரசரான மான்சிங் பகதூரை காயத்ரி தேவி மணந்து கொண்டு ஜெய்பூர் அரசியானார். 

நாடு விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து ஜெய்பூர் சமஸ்தானம் பாரத நாட்டோடு இணைந்தது. ராஜா மான்சிங் ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜபிரமுக் என்று அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் சுவீடன் நாட்டுக்கான பாரத நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டார். 

சுதந்திர சிந்தனையும், முற்போக்கு எண்ணங்களும் கொண்ட மஹாராணி காயத்ரி தேவி, ராஜாஜி தொடங்கிய ஸ்வதந்த்ரா கட்சியில் இணைந்து, அதன் முக்கியமான தலைவராக உருவானார். 1962, 1967 மற்றும் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஸ்வதந்திரா கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சோசலிச பொருளாதார கொள்கைகளை கடுமையாக எதிர்த்த காயத்ரி தேவியை நெருக்கடி நிலைமை காலத்தில் இந்திரா கைது செய்து திஹார் சிறையில் அடைத்தார். ராஜாஜியின் மறைவைத் தொடர்ந்து ஸ்வதந்த்ரா கட்சி அரசியலில் தன் முக்கியத்துவத்தை இழக்க, மஹாராணி காயத்ரி தேவியும் அரசியலில் இருந்து விலகினார். 

மஹாராணி காயத்ரி தேவி குதிரை சவாரி செய்வதிலும், போலோ விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். அதுபோலவே வனவிலங்குகளை வேட்டையாடுவதில் அவர் சிறந்து விளங்கினார். மஹாராணி காயத்ரி தேவி நினைவாக ஆண்டுதோறும் போலோ விளையாட்டுப் போட்டியை ஜெய்பூர் அரச குடும்பம் நடத்தி வருகிறது. தனது ஆட்சியில் இருந்த பகுதியில் பல்வேறு கல்வி நிலையங்களை மஹாராணி தொடங்கினார். அதுபோலவே நகை தயாரிப்பு, கைத்தறி துணிகள் போன்ற பல்வேறு கைவினைப் பொருள்கள் தயாரிப்பிலும், சந்தைப்படுத்துவதிலும் கலைஞர்களுக்கு மஹாராணி உறுதுணையாக இருந்தார். 

நெருக்கடி நிலையில் சிறையில் இருந்த மகாராணியின் உடல்நிலை மோசமடைந்தது. வாய் புற்றுநோயால் அவதிப்பட்ட ராஜமாதா காயத்ரி தேவி 2009ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள் காலமானார். 

பனிரெண்டு வயதில் சிறுத்தையை வேட்டையாடியது, மஹாராணி என்ற நிலையில் பர்தா முறையில் சிக்கிக் கொள்ளாதது, அரசியலிலும் சமூக சேவையிலும் ஒரே நேரத்தில் தீவிரமாக இயங்கியது, சிறை தண்டனை அனுபவித்தது என்று வாழ்வின் பல்வேறு பகுதிகளையும் வாழ்ந்து பார்த்தவர் மஹாராணி காயத்ரி தேவி. 

(Visited 31 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close