அரக்கனுடன் பெருதேனோ பெரிய உடையார் போலே !
“சாமி! இது ஜடாயு என்ற கழுகு அரசன் பற்றிய கதை” என்று ஆரம்பித்தாள் அந்தக் குட்டிப் பெண்.
ராமர், லக்ஷ்மணர்கள் வனவாசத்தின்போது பஞ்சவடியை என்ற இடத்தை அடைந்தார்கள். அங்கே ஒரு மிகப் பெரிய ஆலமரம் இருந்தது. அதில் மிகப் பெரிய கழுகு ஒன்று இருந்தது. ராமர் முதலில் பறவை உருவில் ஏதோ ஒரு அசுரன் என்று எண்ணினார். கழுகைப் பார்த்து “நீ யார் ?” என்றார்.
கழுகு பேசியது. “குழந்தைகளே! என் பெயர் ஜடாயு. உங்கள் தந்தை தசரதனின் பிரியமான தோழன்” என்றது.ராமர் உடனே அந்தக் கழுகை வணங்கி “உன் கதையைக் கூறு” என்று சொல்லத் தன் கதையை ஜடாயு கூறியது.காசியப முனிவரின் மனைவி பெயர் வினதை. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். அருணன், கருடன். அருணன் ஊனமுற்றவன் ஆனால் நல்ல பிரகாசமாக இருப்பான். அவனைச் சூரியன் தன் தேரோட்டியாக வைத்துக்கொண்டான்.
அருணனுக்கும் சியோனி என்ற பெண்ணுக்கும் நானும் சம்பாதியும் இரண்டு பிள்ளைகளாகப் பிறந்தோம். சம்பாதி என் அண்ணன். சிறுவயதில் யார் உயரப் பறக்க முடியும் என்று எங்களுக்குள் போட்டி. நானும் சம்பாதியும் மேலே பறக்கச் சூரியனுக்கு அருகில் சென்றோம். வெப்பம் தாங்காமல் நான் மயங்கி விழும் சமயம் என் அண்ணனான சம்பாதி தன் சிறகுகளை அகலக் குடை மாதிரி விரித்து என்னைக் காப்பாற்றினான். ஆனால் பாவம் சூரிய வெப்பத்தால் சம்பாதியின் சிறகுகள் பொசுங்கின. இருவரும் கீழே விழுந்தோம். சம்பாதி விந்திய மலைத் தொடரில் விழுந்தான். நான் இங்கே பஞ்சவடியில் விழுந்தேன். இப்போது உங்களைச் சந்தித்தேன்.
ராமர் தன் கதையைச் சொல்லிவிட்டு. ”பதினான்கு வருடங்கள் வனவாசம் எங்கள் வனவாசம் முடிய இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. என் நடு தாய் கைகேயி கேட்டுக்கொண்டதால் நாங்கள் காட்டுக்கு வந்தோம். என் தந்தை தசரதன் மாண்டார். இங்கே உங்களைப் பார்க்கும்போது என் தந்தையைப் பார்ப்பது போல இருக்கிறது. பாதுகாப்பாக உணர்கிறோம். இங்கேயே ஆசிரமம் அமைத்துத் தங்கலாம் என்று இருக்கிறேன் ”என்றார்.
“நான் இருக்கும் வரை உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது” என்று மிகுந்த சந்தோஷத்துடன் கூறியது. ஆனால் அதற்குப் பிறகு தான் ராமருக்கு ஆபத்தே வந்தது!சூர்ப்பணகை வந்தாள். மூக்கு அறுபட்டு போனாள். பிறகு பல ஆயிரம் ராட்சசர்களுடன் சண்டையிட்டார் ராமர். மாரீசன் மாய மானாக வந்து, ராமர் அதைத் துரத்திக்கொண்டு போக, சீதையைக் கவர்ந்து சென்றான் ராவணன்.ராவணன் ஆகாசத்தில் சீதையைத் தூக்கிச் செல்லும்போது ஜடாயு கீழே இருப்பதைப் பார்த்தாள் சீதை. “ஐயோ என்னை ராவணன் தூக்கிச் செல்கிறான். ராமனிடம் சொல்லுங்கள். என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கதறினாள்.
ஜடாயு மேலே பார்த்தது. உடல் பதறியது. விஷயத்தைப் புரிந்துகொண்டது. உடனே “ராவணா நீ சாஸ்திரம் அறிந்தவன். இப்படி ராமரின் மனைவியைத் தூக்கிக்கொண்டு போவது முறையற்ற செயல்” என்று அறிவுரை கூறியது. ராவணன் கேட்கும் நிலையில் இல்லை. ஜடாயு மேலே பறந்து சென்று ராவணனுடன் சண்டை போட்டது.
ஜடாயுவிற்கு வயதாகிவிட்டதால் ராவணன் என்ற அரக்கனின் சக்திக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஜடாயு அசந்த சமயமாகப் பார்த்து ராவணன் தன் வாளால் அதன் இறக்கை இரண்டையும் வெட்டித் தள்ளினான். கீழே விழும்போது அதன் கால்களையும் சீவினான். சீதை ஜடாயுவின் நிலைமையைப் பார்த்துக் கலங்கினாள். அழுதுகொண்டே ஜடாயுவைத் தழுவிக்கொண்டாள். ஜடாயு அப்படியே ரத்தம் சொட்டச் சொட்டக் குற்றுயிரும் குலையுயிருமாக ஜடாயு கீழே விழுந்தது.

ராம லக்ஷ்மணர்கள் சீதையைத் தேடிக்கொண்டு வரும் வழியில் ரத்த குட்டையில் ஜடாயு விழுந்து கிடக்கும் காட்சியைப் பார்த்து அதிர்ந்துபோனார்கள். ஜடாயு பேச முடியாமல் “ராவணன் என்னை வீழ்த்திவிட்டு சீதாபிராட்டியை எடுத்துக்கொண்டு ஆகாச மார்க்கமாகப் போனான் அவனிடம் சண்டை போட்டேன். என்னை வெட்டி விட்டான்” என்றபோது, ராமருக்குத் துக்கம் முன்பை காட்டிலும் அதிகமாகியது. தன் வில்லை விட்டெறிந்து ஜடாயுவைக் கட்டிக்கொண்டு கீழே விழுந்து புரண்டு அழுதார்.
அப்போது ராமர் ”லக்ஷ்மணா ! கையில் கிடைத்த ராஜ்யத்தை திடீரென்று இழந்தேன்; ராஜ்யத்தில் பிச்சை எடுத்துக்கொண்டு வாழ்ந்திருப்பேன். அப்படியும் இல்லை, காட்டுக்குத் துரத்தப்பட்டேன். இங்கும் நிம்மதி இல்லை, சீதையைப் பறிகொடுத்தேன். சொந்தம் பந்தம், தம்பிகள் பக்கத்திலிருந்தாலாவது கொஞ்சம் துக்கத்தை போக்கலாம். ஆனால் அவர்களும் பக்கத்தில் இல்லை. என் தந்தை போல மதிக்கும் ஜடாயுவின் அரவணைப்பில் சிறிது காலம் வாழலாம் என்று எண்ணியிருந்தேன். இப்போது ஜடாயுவிற்கும் இந்த நிலமை என்று புலம்பித் தீர்த்து ஜடாயுவைத் தடவிக் கொடுத்தார். ஜடாயு ராமர் மடியில் ஈனக்குரலில் “குழந்தாய்! சிரஞ்சீவியாக இருப்பாய்” என்று வாழ்த்திவிட்டு உயிரை விட்டது.
ஜடாயுவிற்கு ராமர் ஈமச் சடங்குகளைச் செய்தார் என்று அந்தப் பெண் சொன்னபோது ராமானுஜரின் கண் கலங்கியிருந்தது.பெண் பிள்ளை தொடர்ந்தாள் “சாமி! இறக்கும் சமயத்தில் கூடப் பெருமாளைப் பார்த்துப் பெரியாழ்வார் போலப் பல்லாண்டு பாடியதால் ஜடாயுவிற்குப் பெரிய உடையார்” என்று பெயர் ஏற்பட்டது என்றாள்.
“பெண்ணே! பெரிய என்ற வார்த்தை பெரியாழ்வார் மாதிரி உடையார் என்பதற்கு என்ன பொருள் ?” என்றார் ராமானுஜர்“அது தெரியலைங்க சாமி! நீங்கத் தான் சொல்ல வேண்டும்” என்றாள்.
ராமானுஜர் “சீதாபிராட்டி ராமரைத் தவிர யாரையும் தொட்டதில்லை. அசோகவனத்தில் அனுமார் தோளின் மீது அமர்ந்தால் இப்பொழுதே ராமனிடம் கொண்டு சென்று விடுகிறேன் என்றபோது தோளில் ஏற மறுத்தாள். அப்படியிருக்க ராவணன் தூக்கிக்கொண்டு சென்றபோது, ஜடாயுவைத் இறுகத் தழுவிக் கொண்டு அழுதாள். பெரிய திரு என்றால் மஹாலக்ஷ்மி அவளுடைய அருள் கிடைத்தது ஜடாயுவிற்கு எனவே ‘பெரிய திருவுடையார்’. அது மட்டுமில்லாமல், ராமரால் தடவிக்கொடுக்கப்பட்டு சரம கைங்கரியம் செய்யப்பட்டார், அந்தப் பெரிய செல்வத்தை உடையவர் ஜடாயு” என்றார்.
“சாமி! மிக அருமையா சொன்னீங்க. ஜடாயு தன் உயிரையே ராமருக்குத் தியாகம் செய்தது. இதுபோலப் பெருமாளுக்கு எந்தத் தொண்டும் நான் செய்யவில்லையே ! அதனால் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள்அப்போது ஒரு சிஷ்யர் “ஜடாயுவிற்கு பெரிய உடையார் என்று ஒரு பெயர். நம் ராமானுஜருக்கு ‘உடையவர்’ என்று பெயர்” என்றார். “ஆமாம் சாமி! கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றாள் அந்தக் குட்டிப் பெண்.
அப்போது ராமானுஜர் “பேசாமல் இரு” என்று சைகை காண்பிக்க அந்தச் சிஷ்யர் “பெண்ணே! ஜடாயுவின் அண்ணன் சம்பாதி என்ன ஆனார் ?” என்று பேச்சை மாற்றினார்.
”சாமி! சொல்ல மறந்துவிட்டேனே! ராமர் வானரங்களுடன் இருக்கும்போது சீதையை ராவணன் எங்கே ஒளித்து வைத்திருக்கிறான் என்று சம்பாதி தன் கூறிய பார்வையால் சீதை இலங்கையில் இருக்கிறாள் என்று சொல்லியது. தன் தம்பி ஜடாயு உயிரை விட்ட செய்தி கேட்டு ”ராமா எனக்கு என் தம்பி செய்த தொண்டை நினைத்தால் பூரிப்பாக இருக்கிறது எனக்கும் அது மாதிரி ஏதாவது தொண்டு கிடைக்குமா ?” என்றது.
பக்கத்திலிருந்த சிஷ்யர் ராமருக்குத் தொண்டு புரியப் பறவைகள், குரங்குகள் ஏன் இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்ல அணிகள் கூடத் தொண்டு புரிந்தது” என்றார்உடனே அந்தப் பெண் “இக்கரைக்கே சென்றேனோ விபீஷணரைப் போலே!” என்றாள்ராமானுஜர் ”பிள்ளாய்! அடுத்து சரணாகதியா ?” என்றார் ஆவலுடன்.