இனியது என்று வைத்தேனோ சபரியைப் போலே!
”சாமி! இது சபரி என்ற வேடுவச்சியின் கதை” என்று ஆரம்பித்தாள் அந்தக் குட்டிப் பெண்.
சபரி ஒரு கீழ் ஜாதிப் பெண். அவள் காட்டில் மிருகங்களை அடித்துச் சாப்பிடுபவள். ஒரு நாள் அவளுக்கு நல்ல பசி, யாராவது வரமாட்டார்களா அடித்துச் சாப்பிடலாம் என்று காத்துக்கொண்டு இருக்கும்போது மதங்க முனிவரின் சிஷ்யர்கள் குளித்துவிட்டு வேதம் ஓதிக்கொண்டு சபரி இருக்கும் இடத்தை நோக்கி வந்தார்கள். அவர்கள் ஓதிய வேத ஒலியில் மயங்கி உருகினாள் சபரி. அவளுக்குள் ஒரு பரவசம் ஏற்பட்டது.
தினமும் அந்த இடத்தில் உட்கார்ந்து சிஷ்ய குழந்தைகள் வரும் காட்சியை மறைவாகக் கண்டு களிப்பது அவளுக்கு ஆனந்தம். இந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.
குழந்தைகள் போகும் பாதையில் உள்ள முள், கற்களை எல்லாம் சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்து அழகிய பூக்களால் கோலம் போட்டு வைத்தாள். இதைத் தினமும் கவனித்த குழந்தைகள் தங்களின் குரு மதங்க முனிவரிடம் ஓடிச் சென்று “குருவே! தினமும் யாரோ நாங்கள் நடக்கும் வழியைச் சுத்தம் செய்து வைக்கிறார்கள்” என்றார்கள். மதங்க முனிவர் “யார் என்று கண்டுபிடித்து அழைத்துக்கொண்டு வாருங்கள்” என்கிறார்.
குழந்தைகள் அன்று சீக்கிரமே சென்று ஒரு மரத்துக்குப் பின் ஒளிந்துகொண்டு பார்த்தார்கள். அங்கே ஒரு வயதான பெண் சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்தாள். குழந்தைகள் ”பாட்டி எங்கள் குரு உங்களைக் கூப்பிடுகிறார்” என்று சபரியை அழைத்துக்கொண்டு போனார்கள். சபரி மதங்க முனிவரைப் பார்த்தவுடன் அவரின் காலில் விழுந்து வணங்குகிறாள்.
முனிவர் அவளுக்கு ஆசி வழங்கி “இந்த ஆசிரமத்திலேயே தங்கி இங்கே ஏதாவது வேலை செய்துகொண்டு இரு” என்கிறார். அவளும் ஆசிரமத்தைச் சுத்தம் செய்வது. தோட்டம் அமைத்துப் பூச்செடி வளர்ப்பது.
முனிவர்களுக்கும், அவருடைய சீடர்களுக்கும் பழங்களைப் பறித்துக்கொடுப்பது என்ற சிறு சிறு வேலைகளைச் செய்து அங்கேயே தங்கினாள். முனிவர்களும், சீடர்களும் சாப்பிட்ட பிறகு மீதம் இருப்பதைத் தான் சாப்பிடுவாள். இப்படியே பல காலம் கழிந்தது.
மதங்க முனிவருக்கு வயதாகி கடைசிக் காலம் நெருங்கச் சிஷ்யர்களிடம் “நான் மோட்ச கதியை அடையப் போகிறேன். உங்களுக்கு என்ன தேவையோ கேளுங்கள்” என்றார். சிஷ்ய குழந்தைகள் அவர்களுக்கு என்ன என்ன மந்திரங்கள் தேவையோ அதை உபதேசமாகப் பெற்றுக்கொண்டார்கள்.
இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த சபரியிடம் “இங்கே வா” என்று அன்புடன் அழைத்தார் முனிவர். சபரி பணிவுடன் முனிவர் அருகில் சென்றாள். முனிவர் சபரியிடம் ” ‘ராம’ என்று சொல்லு” என்றார். சபரியும் ‘ராம’ என்று சொல்லிவிட்டு ’ராம’ என்பதற்கு என்ன பொருள் ?” என்று கேட்டாள்.
முனிவர் ‘ராம’ என்ற சொல்லையே தினமும் தியானம் செய்துகொண்டு இரு, இதன் அர்த்தமே உன்னைத் தேடி வரும். அப்படி உன்னைத் தேடி வரும்போது நீ அவருக்கு எல்லா பணிவிடைகளையும் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு முனிவர் மோட்சம் அடைந்தார்.
சபரி தினமும் காலை எழுந்து குளித்துவிட்டு, தன் குருவைத் தியானித்துவிட்டு, குருவின் சீடர்களுக்குப் பணிவிடை செய்துவிட்டு, ராம நாமத்தைத் தியானம் செய்வாள். இப்படியே பன்னிரண்டு ஆண்டுகள் ’ராம’ என்ற நாமத்தைத் தியானம் செய்தாள். ராமர் வந்தால் அவரை உபசரிக்க எந்த மரத்தின் பழம் இனிக்கிறது சோதித்து பார்த்து என்று அதை எல்லாம் சேகரித்து வெய்யில் காய வைத்து ராமருக்காக எடுத்து வைப்பாள்.
ஒரு நாள் ஆசிரமத்துக் குழந்தைகள் ‘பாட்டி பாட்டி யாரோ இரண்டு பேர் வில்லும் கையுமாக வருகிறார்கள்” என்று சொல்லச் சபரி விரைந்து சென்று பார்த்தபோது அங்கே ராமரும், லக்ஷ்மணரும் வில்லுடன் காட்சி கொடுத்தார்கள். குரு சொன்னது நினைவுக்கு வந்தது.
உடனே அவர்களை வரவேற்று, கைகளைக் கூப்பி வணங்கி, கீழே விழுந்து ராமரின் திருவடிகளை இருக்கையாலும் இறுகப் பற்றிக் கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடியது.
”ராமா ! நான் தவம் செய்த வார்த்தையை இப்போது நேராகப் பார்க்கிறேன். பல்லாண்டுகளாக மேற்கொண்டிருந்த தவத்தின் பயன் என்னை வந்தடைந்தது. ராமரின் திருவடிகளில் தண்ணீரால் அலம்பி விட்டாள். அலம்பி ஓடும் திருவடி பட்ட தண்ணீரை தன் தலையிலும் உடலிலும் எடுத்துப் பூசுக் கொண்டாள். அதைப் பருகினாள். நறுமணமுள்ள மலர்களால் அர்ச்சித்தாள்.
“ராமா என் குருவிற்குக் கூடக் கிடைக்காத உன் தரிசனம் எனக்குக் கிடைத்தது. நானோ ஒரு பெண், நல்லறிவு இல்லாதவள், தாழ்ந்த ஜாதியில் பிறந்தவள், நீயோ முனிவர்களாலும் அறிய முடியாதவள். உன் அடியார் அடியார் என்றபடி நூறாவது தொண்டனுக்குக்கூடக் கைங்கரியம் செய்யும் உரிமை எனக்கு இல்லை!” என்று ஆனந்தக் கண்ணீர்விட்டாள்.

ராமர் சபரியை அன்புடன் பார்த்து “சபரி என்னை ஒருவன் அடைவதற்கு ஆண்மையோ பெண்மையோ, உயர் ஜாதிப் பிறப்போ, பெயரோ, பிரம்மச்சரியம், இல்லறம், வானப்ஸ்தம், சன்னியாசி என்று எதுவும் கிடையாது. என்னிடம் உண்மையான பற்றும் பக்தியும் தேவை. அந்தப் பக்தி ஏற்படுவதற்குக் காரணம் நல்ல குருவின் சம்பந்தம் முக்கிய காரணம் என்று சொல்லிவிட்டு “சபரி! குருவிற்குச் செய்ய வேண்டிய கைங்கரியத்தை ஒழுங்காகச் செய்கிறாயா ? “ என்று ராமர் விசாரித்தார்.
உடனே சபரி “ராமா! என் குரு நீ வந்தால் உபசரிக்கச் சொன்னார். இதோ நான் உனக்காக அன்புடன் சேமித்து வைத்த பழங்களை நீ ஏற்க வேண்டும்” என்று கை நிறையப் பழங்களை எடுத்து ராமருக்கு நீட்டினாள்.
ராமர் அந்தப் பழங்களைச் சுவைத்து. சபரி உன் கையால் கொடுத்த பழங்கள் இனிய சுவையாக இருக்கிறது என்றார். அதற்குச் சபரி ”இதற்குக் காரணம் நான் இல்லை. என் குரு தான்! அவர் அருளால் உன் திருவடி அருளைப் பெற்றேன். அவர் அருளால் நான் செய்த தவம் சித்தியடைந்தது. அவர் அருளால் பிறவிப் பயன் பெற்றேன். அவர் அருளால் மோட்சமும் எனக்குக் கிடைக்கப் போகிறது. நான் கைங்கரியம் செய்த குரு நீ இங்கே வரும் சமயம் உங்களை வரவேற்று உபசரித்து வழியனுப்பிவிட்டு என்னையும் மோட்சம் பெறுவாயாக என்று கட்டளையிட்டார். அதனால் நீ வருவதற்குக் காத்துக்கொண்டு இருந்தேன்” என்று சொல்லிவிட்டு சபரி ஆர்வமாக ”ராமா என்னுடன் வா உனக்கு என் குரு மதங்க முனிவரின் ஆசிரமத்தைச் சுற்றிக் காட்டுகிறேன்” என்றாள்.
ராமர் சபரியின் பின் சென்றார். சபரி “இங்கே தான் குரு தினமும் பகவத் தியானம் செய்வார், இதோ இந்த இடத்தில் தான் காயத்திரி மந்திரத்தை ஜபிப்பார், இங்கே யாக ஹோமங்களைச் செய்வார். அங்கே மரத்துக்குப் பக்கம் தான் அவர் நீராடிய இடம், இது அவரின் மரவுரிகள்” என்று எதையும் விட்டு வைக்காமல் ராமரிடம் காண்பித்து தன் குருவின் மேன்மையைக் கூறினாள் சபரி.இதை எல்லாம் கேட்ட ராமர் உள்ளன்போடு ”நீ விருப்பபட்டதை பெறுவாயாக” என்று சொன்னார். சபரி ராமரை வணங்கினாள்.
தீ வளர்த்து அதில் இறங்கி தன் குருவின் திருவடியை அடைந்தாள்.”சாமி! சபரி போல நான் ராமருக்கு இனியப் பழங்களைக் கொடுக்கவில்லை, அவளைப் போல எனக்குக் குரு பக்தியும் இல்லை! அதனால் ஊரைவிட்டுப் போகிறேன்” என்றாள்.
ராமானுஜரின் சிஷ்யர் “எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா ?” என்றார்”கேளுங்கள் சாமி!” என்றாள் அந்தக் குட்டிப் பெண்.
“பெண்ணே! குகன், சபரி இருவரும் ஒரே குலம். காட்டுவாசிகள். குகன், சபரி இருவரும் ராமருக்கு அன்புடன் பழங்களைக் கொடுத்தார்கள். குகன் கொடுத்தபோது ராமர் “குகா நீ அன்புடன் கொடுத்த இந்தப் பழங்கள் அமுதத்தைவிட இனியவை. நான் தவக் கோலத்தில் இருக்கிறேன். அதனால் இந்த உணவை எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் நான் உண்டதாக நினைத்துக்கொள்” என்றார். ஆனால் சபரி கொடுத்த பழங்களை மட்டும் ராமர் சுவைத்தாரே ?” என்றார்அந்தப் பெண் “தெரியவில்லையே சாமி!” என்று ராமானுஜரைப் பார்த்தாள்.
ராமானுஜர் புன்முறுவலுடன் “பிள்ளாய்! ராமர் யாரிடமும் கை நீட்டமாட்டார். குகன் பழங்களைக் கொடுக்க, ராமர் அதைக் கண்ணாலே உண்டார். ராமர் அதை ஏற்றுக்கொண்டார். ராமர் கண்பட்டதால் அந்தப் பழங்கள் பிரசாதம் ஆகியது.
சபரியிடம் அவள் குரு மதங்க முனிவர் ராமர் வருவார். வந்தவுடன் அவரை உபசரி என்று கட்டளையிட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். சபரி தன் குருவின் சொற்படி அதை நிறைவேற்றினாள். ராமரும் அவளுடைய குருவின் வாக்குக்குக் கட்டுப்பட்டு பழங்களை எடுத்துக்கொண்டார். குருவின் வாக்கு அந்தச் சக்தி உண்டு ! குருவை வணங்கிவிட்டு பெருமாளை வணங்கினால் பெருமாளுக்கு அது இனிக்குமாம். அதனால் தான் சபரி கொடுத்த பழங்கள் இனிக்கிறது என்றார் ராமர்!”.
“சாமி ! அருமையா தெளிந்துவிட்டது!” என்றாள் அந்தக் குட்டிப் பெண். இன்னொரு சீடர் “இன்னொரு சந்தேகம்! ராமாயணம் முழுவதும் சரணாகதி இருக்கிறது. எல்லா சரணாகதியிலும் சீதையின் சம்பந்தம் இருக்கிறது. அதனால் அவர்கள் மோட்சம் பெற்றார்கள். ஆனால் சபரி சீதையைப் பார்க்கவே இல்லை அவளுக்கும் மோட்சம் கிடைத்துவிட்டது!” என்றார்.
ராமானுஜர் “குருவின் காலைப் பிடித்துக்கொண்டால் மோட்சம் நிச்சயம்! சபரி மோட்சம் போவதை பெருமாளே வேடிக்கை பார்ப்பார்! ஆனால் நல்ல வார்த்தைகளை உபதேசிக்கும் குருவாக இருக்க வேண்டும். பிரகலாதனுக்கு பள்ளியில் அமைந்த குரு மாதிரி இருக்கக் கூடாது !” என்றார் ராமானுஜர் சிரித்துக்கொண்டே.
அந்தப் பெண்ணும் சிரித்துக்கொண்டு “இங்கும் உண்டு என்றேனோ பிரகலாதனைப்போலே!” என்றாள்.
”குரு பக்திக்கு பெயர் போன மதுரகவிகள் பிறந்த திருக்கோளூர் பெண் பிள்ளையே! உன்னிடம் போட்டி போட என்னால் முடியாது” என்றார் ராமானுஜர்