அன்பார்ந்த இந்து செயல் வீரர்களே, நீங்கள் போராடுவது உங்களை காட்டிலும் உடல், பொருளாதாரம், ஆன்மிகம் மற்றும் கலாச்சார ரீதியாக, உங்களை காட்டிலும் பன் மடங்கு கீழ் நிலையில் இருக்கும் மக்களுக்காக.
நீங்கள் மார்க்ஸிசம், கம்யூனிசம், போன்றவற்றை வெறுத்தாலும், வர்கம், அடக்குமுறை போன்றவற்றை பற்றி விவாதிக்க விரும்பவில்லை என்றாலும் கூட ஹிந்துக்களின் போராட்டம் என்பது வர்க்க ரீதியான போராட்டமும் கூட என்பதே உண்மை.
ஒரு வர்க்க,இன,மத,மேலாதிக்கவாத சக்தியுடன் போராடும் போது நீங்கள் வலதுசாரி, புனிதவாத மற்றும் அதிகாரவர்க்க சார்பு நிலை கொண்டு “நிர்வாகம் சொல்வது சரி, தொழிலாளர்களின் நிலைப்பாடு தவறு” என்பது போன்று, பேசிக்கொண்டிருந்தால் உங்களால் உங்கள் பின்தங்கிய ஹிந்து சகோதர சகோதரிகளுக்காக வாதாட முடியாது.
உங்களில் பெரும்பாலானோர் இத்தகைய அதிகார வர்க்கத்தின் உலகை சார்ந்தவர்கள் இல்லை. ஏகாதிபத்தியம் மூலம் பல நூற்றாண்டுகளாக உலகை சுரண்டிய மற்ற மதங்களின் மேலடுக்கு தரப்பினரிடம் இத்தகைய வாதங்களை கொண்டு செல்ல உங்களுக்கு எந்தவித முகாந்திரமும் கிடையாது.
ஹிந்து நடுத்தர வர்கத்தினரான நீங்கள் இந்த பூமியை ஆள்பவர்களின் ஏவல் அடிமைகள் போலத்தான். ஆகவே பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான பகட்டுகள் வந்ததும் மயங்காதீர்கள். மாறாக ஏழை ஹிந்துக்கள் மற்றும் ஏனையோரின் உண்மை நிலையை எப்போதும் மனதில் இருத்துங்கள். இதில் நம்முடைய ஏழைகள் என்பதில் உள்ள நம்மில் தான் நம்முடைய நாம் என்ற உணர்வின் சாரமே உள்ளது.
வலையுலகில் நீங்கள் பயன்படுத்தி வரும் உங்களுடைய மேல்தட்டு வர்க்க மொழி ஹிந்துக்கள் தரப்பை தார்மீக ரீதியாகவும் உத்தி ரீதியாகவும் பலவீனமாக்கும்.( நீங்கள் எவ்வளவு பெரிய சனாதனியாகவும் அன்பை பொழியும் யோகியாகவும் நிஜ வாழ்வில் இருந்தாலும் இதுதான் நிஜம்). பிரச்சார உத்தியில் கைதேர்ந்த உங்கள் எதிரிகள் இந்த பலவீனத்தை உங்களுக்கு எதிராக பயன்படுத்துவர். அது உங்கள் குழந்தைகள் மூலமே துவங்கும். பேராசிரியர்களும்,நண்பர்களும்,சமூகத்தில் உள்ள பிரபலங்களும் ஹிந்து மதம் என்பது அடிப்படையில் சாதி, வர்க்கம் போன்றவற்றை தாங்கிபிடிப்பது, பாலின ரீதியிலான அடக்குமுறைகள், ஒழுக்க கேடுகள் ஆகியவை நிரம்பியது என்று சொல்லும்போது உங்கள் குழந்தைகள் அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்பார்கள். ஏனென்றால் அதை ஏற்றுக்கொள்ளும் விதத்திலான மொழியைத்தான் உங்களிடம் இருந்து அவர்கள் அதுவரையில் கேட்டிருப்பார்கள்.
எதிரிகள் இது போல பேசுகிறார்களே என்று கூறாதீர்கள். எதிர்தரப்பில் இருக்கும் குப்பைகளுடன் உங்களை எப்போதும் ஒப்பிட்டு கொள்ளாதீர்கள். இது உங்களுக்கு தெரிந்த விஷயமாக இருந்தாலும் கூட நான் மீண்டும் மீண்டும் இதனை கூறுவேன்.
போகிற போக்கில் நீங்கள் உதிர்க்கும் வார்த்தைகள் உங்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்த படும். நீங்கள் வேலையை இழக்கக் கூடும். உங்கள் தார்மீக உரிமையையும் நட்புகளையும் இழக்க நேரிடலாம் ஈகை, இரக்கம், சுயகட்டுப்பாடு ஆகியவற்றை நீங்கள் இழந்தால் உங்கள் குழந்தைகள் உங்கள் மீதும் ஹிந்து மதத்தின் மீதும் நம்பிக்கையை இழப்பார்கள்.
இப்போது இந்த “அரிசிப்பை” என்ற மேல்தட்டு வெறுப்பு தொனிக்கும் வார்த்தை எந்த அளவிற்கு நமக்கு எதிராக திருப்ப பட்டிருகிறது என்பதை பாருங்கள். நீங்கள் சமுக வலைதளங்களில் வாதாடி கொண்டிருக்கலாம். ஆனால், உண்மையான களத்தில் நீங்கள் தோற்று விட்டீர்கள் என்பதே உண்மை. புளியேப்பம் விடும் ஒரு நபர் பசியேப்பம் விடும் நபரை பார்த்து எகத்தாளமாக பேசிய பேச்சாகத்தான் அது இருக்கிறது. உங்கள் மண்ணை சுரண்டி கொழுத்த எகாதிபத்யவாதிக்கு எதிராக ஆயுதத்தை பிரயோகிக்காமல் அவனால் ஏழ்மையாக்கபட்ட ஏழைக்கு எதிராக பிரயோகித்து விட்டீர்கள். நீங்கள் உத்தேசித்து ஆற்றிய எதிர்வினை இல்லையென்றாலும் “அரிசிக்கு மதம் மாறியவர்கள்” என்ற சொல்லாடலின் விளைவு அதுதான்.
நீங்கள் ரோல்ஸ் ராய்ஸ் மிஷனரி என்றோ அல்லது வேறு பல வசைகளோ கூறி குற்றம் செய்தவர்களை குறை கூறலாம். ஆனால் பலன் இல்லை.
அரிசிப்பை, பஞ்சர்வாலா, பிச்சைக்காரன் ( இம்ரான் கான் பற்றி கேலி சித்திரங்கள்). இவைதான் எதிரிகள் குறித்த உங்களுடைய வார்த்தைகள்.
உங்கள் குழந்தைகள் நாளை சமத்துவமின்மை.இனவெறி, மற்றும் வலதுசாரிகள் இல்லையென்று சப்பைக்கட்டு கட்டும் அல்லது இடது லிபரல்கள் போல வாதாட தயங்கும் அத்தனை தீமைகளையும் பார்க்க நேரிடும் போது அவர்கள் யாரை மதிப்பார்கள்?
மிக முக்கியமாக உங்களுடைய வெற்று பீற்றல்களினாலும் முட்டாள்தனத்தாலும், ஹிந்து என்ற அடையாளம் குறி வைக்கப்படும் இலக்காக மாறி அது தங்கள் மீதும் ஒட்டபட்டிருப்பதை கண்டு அவர்கள் யாரை குற்றம் சொல்வார்கள்? அவர்கள் எந்த கருத்தாக்கத்தின் பால் ஈர்க்கபடுவார்கள்?
திரு வம்சி ஜூலூரி அவர்களின் கட்டுரை
மொழிபெயர்ப்பு திரு வி வி பாலா அவர்கள்