சிறுகதை

மது அண்ணன்

மழை குறைந்த பொழுதில் நூடுல்ஸ் பாக்கெட்டும், முட்டைக்கோஸும் வாங்கி வைத்துவிட்டால் நல்லது என்று புத்தி அச்சுறுத்தியது. பிள்ளையைக் கூட்டிக் கொண்டு ஞாயிற்றுக் கிழமை கல்யாணத்திற்கு வெள்ளி இரவே மதுரை புறப்பட்டுவிட்டாள் செல்வி. திங்களோ செவ்வாயோ வருவதாக சொன்னாள். செவ்வாய் என்று சொல்லும்போதே விக்னேஷ் கண்களில் ஒளிர்ந்த உற்சாகத்தில் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி வளாகம் தெரிந்தது. இரண்டாம் சனிக்கிழமை வங்கி விடுமுறை. மதுரைக்குப் போயிருக்கலாம், போகவில்லை.

சனி மதியம் மூன்று மணிக்கு ஆரம்பித்த மழை விடாமல் கொட்டியபடி இருந்தது.  ஐந்து மணி வாக்கில் வேகம் குறைய, அன்னை சூப்பர் மார்க்கெட்டுக்கு ஆக்டிவா அவனை சுமந்தபடி புறப்பட்டது. இந்த ஏரியா பழகவில்லை. முதலில் குடியிருந்த வீட்டருகே பள்ளிக்கூடம், இது சற்று தொலைவு, ஆனால் சூழல் நன்றாக இருக்கிறது. மெயின் ரோட்டில் வண்டி நுழைந்தவுடனே நின்று போனது. பலமுறை முயற்சித்தும் நகரவில்லை. பக்கத்திலேயே இருந்த டூ வீலர் மெக்கானிக் ஷாப்பிடம் வண்டி ஒப்படைக்கப்பட்டது.

மெக்கானிக் மூன்று முறை முயற்சித்தான். வண்டியின் உடுப்புகளை கழட்டினான். ஸ்பார்க் ப்ளக்கை கழற்றி “மாத்தணும்” என்றான். பழுதை சடாரென கண்டு கொண்டானே, மெக்கானிக்கை உற்று நோக்கினால் அவரை நினைவுபடுத்தினான். மது அண்ணன்.

நூற்றி முப்பது ரூபாய், அரை மணித்தியாலம்… வண்டி புறப்பட்டது. ஈரமான தார் சாலை, மழையில் நனைந்து சொட்டிக்கொண்டிருக்கும் அடி பம்ப், தண்ணீர் கேன்களுடன் விரையும் டிவிஎஸ் சூப்பர் எக்ஸல், ஏனத்தில் நிரம்பியிருந்த மழை நீரை உள்ளே ட்ரம்மில் ஊற்றும் டீக்கடைக்காரர், இரண்டுக்கு ஒன்று ஃப்ரீ என கடையில் வாங்கிய புது பிராண்ட் நூடுல்ஸ் என பல சங்கதிகள் பார்வையை இழுத்தாலும் மனம் தெளிவாக சாய்ந்தது. மது அண்ணன்.

மிளகுத் தூள், மிளகாய்த்தூள், சப்ஜி மசாலா, சாம்பார் பொடி… சொன்னபடி நிறைய கண்ணாடி பாட்டில்களில் வெள்ளைத் தாளில் செல்வி எழுதி ஒட்டி இருந்தது வசதியாக இருந்தது. முட்டைக்கோஸை நறுக்குவதை விடத் துருவுவது நகம் கடிப்பது போல் எளிதானது. வாணலியை, பற்ற வைத்த அடுப்பில் நிறுத்தி எண்ணை விட்டு சூடாக்கி கோசை வதக்கி முடித்த போதும்… மது அண்ணன்.

நூடுல்ஸ் சாப்பிட சுவையாகவே இருந்தது. கைப்பக்குவமோ? பாக்கெட்டை கொட்டி தயார் செய்வதில் என்ன பக்குவம் இருக்கப்போகிறது?, மனம் பகடி செய்ய புரியாத புதுக் கவிதை போல் தொங்கியது சிந்தனை.

சாப்பிட்டு முடித்து டிவியை உயிர்ப்பித்து சேனல்கள் மாற்றியபடி இருந்தாலும் லயிக்கவில்லை. ஜெ மூவீஸ் சானலில் ஓடிய பாடல் ரிமோட்டில் உள்ள கையை செயலிழக்க வைத்தது. எண்ணங்கள் எங்கெங்கோ பாய்ந்தோடியது.

“ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தானை சந்திக்கத்தான் ஆசை வெச்சேன்…” இந்த சனிக்கிழமைக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி அனைத்திலும் மது அண்ணன்.

பழுதான டிவி பெட்டிகள் ஏராளமாக குவிந்திருக்க, திருத்தப்பட்ட டிவியில் சேனல் தெரிந்தது. சால்டரிங் அயர்ன், எக்கச்சக்க டிவி பெட்டிகள், ஏதேதோ ஒயர்கள். அந்த சர்வீஸ் சென்டருக்கு இடப்பக்கம் இன்னொரு கடை. சுவற்றில் பிள்ளையார் சுழி லாபம். அகலமான நீல நிறப் பலகை அதில் விதவிதமாய், ரக ரகமாய் டூல்ஸ். ஸ்பானர்கள், ஸ்க்ரூ டிரைவர்கள், ஸ்பார்க் ப்ளக் ஸ்பானர், சுத்தி… கடை அருகே சென்றவுடன் நாசியைப் பதம் பார்க்கும் பெட்ரோல், இஞ்சின் ஆயில் வாசனை. வெளியே கறுப்பாய் மண் தரை.

வாகனத்துடன் காத்திருக்க, அழகேந்திரன் டீக்கடை தாண்டி டிவி கடையைக் கடந்து… பட்டறைக்கு மது அண்ணன் வரவில்லை. சர்வீஸ் சென்டரில் அண்ணனின் கண்கள் நிலைத்திருந்தன.

உள்ளூரு சந்தையில எல்லாரும் பாக்கையில
கண்டாங்கி வாங்கித்தர ஆசை வச்சேன்
குத்தாத முள்ளு குத்தி குதிகாலு வலிக்குதுன்னு 
மடி மேல காலைப்போட ஆசை வச்சேன் 

மது அண்ணன் கண்கள் சிருங்காரம் பூண்டன, முகம் சிவந்தது, உதட்டோரம் குறுநகை பூத்தது.

கடைக்குள் நுழைந்தவரைப் பார்த்து “பாட்டுல கிறங்கிக் கிடந்தீங்க போல?”

“அப்படி எல்லாம் இல்லை பாஸ், வண்டில என்ன ப்ராப்ளம்?”

“வண்டி கிடக்கட்டும், பாட்டுல அப்படி என்ன விசேஷம் சொல்லுங்கண்ணே?”

கல்யாணம் முடிஞ்சு மறு நாள் உங்க அண்ணி கிட்ட ஏதாவது வேணும்னா சொல்லும்மான்னு கேட்டேன், சினிமாக்கு போகணும் மாமான்னா, அன்னிக்கே ஃபர்ஸ்ட் ஷோ போய் பார்த்தோம், ‘பாஞ்சாலங்குறிச்சி’. அவளுக்கு ஸ்வர்ணலதான்னா உசுரு பாஸ்”

பழைய விஷயங்களை மனம் அசை போட்டபடி இருக்க, பார்வையிலிருந்தும், புத்தியிலிருந்தும் ஒரு சேர மறைந்த டிவி பாட்டுக்கு ஓட, சோபாவில் உறக்கம்.

ஸ்வதேஷ் பட டைட்டில் இசை, விமான அறிவிப்பு ஒலி காதில் சன்னமாகத் துவங்கி பலமாக கேட்க ஆரம்பித்தது… ரிங்டோன், மொபைலை எடுத்து மணி பார்க்க, 10.50 pm, சந்துரு காலிங் என்றும் காட்டியது.

“டேய் அட்வகேட் கிட்ட பேசினேன், அவருக்கு உன் ‘நெய்பர்’ தெரிஞ்சவர் போல, சுமூகமா பேசி முடிக்கிறேன்னு சொல்லிட்டார்”

“சீக்கிரம் முடிஞ்சா தேவல” 

‘ரெண்டு பேர் மேலயும் தப்பில்லை, ப்ளாட் ப்ரமோட்டர் மேல தப்பு, பரஸ்பரம் விட்டு கொடுத்தா வேலையை முடிக்கலாம்னு லாயர் சொல்றார், 600 சதுரடி தானே நீ நேர புறப்பட்டு வா”

“இப்போ தான் டா வைஃபும், பையனும் அவ ஃப்ரெண்ட் தம்பி கல்யாணத்துக்கு மதுரை போனாங்க”

“கிளம்பி வான்னா இப்பவே இல்லை, அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வா, ரெஜிஸ்டர் ஆபீஸ், தாசில்தார் ஆபீஸ்னு ஃபார்மாலிட்டீஸ் முடி, சனிக்கிழமை அட்வகேட், உன் ‘நெய்பர்’ ன்னு பேசி முடிக்கலாம்”

“ரெஜிஸ்டர் ஆபீஸ், தாசில்தார்…”

“எல்லாத்துக்கும் ஆள் இருக்கு, கவலைப்படாதா, குட் நைட்”

சந்துரு போனை கட் செய்துவிட்டான். டூ வீலர் மெக்கானிக் துவக்கி வைத்தது. இப்போது சந்துருவால் திருச்சி பயணம் என்று முடிவுக்கு வந்திருக்கிறது. மது அண்ணன்…

செல்வி விக்னேஷோடு எக்மோரிலிருந்து வீடு திரும்பும் போது சலித்துக் கொண்டாள்.

“எலெக்ட்ரிக் ட்ரெயின் புடிச்சு பழவந்தாங்கல்ல இறங்கினா முடிஞ்சுது, காலடிச்சா வரப் போற”     

“பரவால்ல இருக்கட்டும்”

“இவனுக்கு டிஃபன் வாங்கித் தந்திடு, லஞ்ச் ரெடி பண்ணி ஸ்கூல்ல போய் தந்திடறேன், நீ ரெண்டு வேளையும் வெளிய சாப்பிட்டு அட்ஜஸ் பண்ணிக்கோ, நைட் டின்னர் அமர்க்களப்படுத்திடறேன்”

“நான் இன்னிக்கு லீவ்”

“என்னாச்சு”

“சும்மா தான், ஏன் செல்வி வேணாமா?”

“பரவால்ல இருக்கட்டும்” 

மாலை மூன்று மணிக்கு செல்வி துவக்கினாள். “முறைக்காத, நீ சாப்பிடாட்டி என்ன, பையனுக்கு தெம்பு வேணும், ஸ்விம்மிங் போறான், ட்ரேயை எடுத்துக்கிட்டு போய் ஒரு டஜன் முட்டை வாங்கிட்டு வந்திரு”

செல்வி பேச்சுக்கு கோபம் வரவில்லை, இதழோரத்தில் சிரிப்பு தான் உற்பத்தியானது.

மது அண்ணன். நினைவுகளில் மனம் மிதக்க ஆரம்பித்தது.

“மது அண்ணன் இல்லியாப்பா?”

“சனிக்கிழமை இவ்ளோ லேட்டா வரீங்க”

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு, பதினோரு மணிக்கு தானே கடை சாத்துவீங்க”

“ஆமாண்ணே, கஸ்டமர் யாரும் இல்லைன்னு அண்ணன் மலையேற போயிட்டார்”

“அப்படியே வீட்டுக்கு போய்டுவாரா”

“நூடுல்ஸ் கடைல வந்து சாப்பிட்டு பார்ஸல் வாங்கிட்டு போவார், எனக்கு சம்பளமும் தந்துட்டார், பூட்டிட்டு கிளம்பிருவேன், என்ன ப்ராப்ளம் சொல்லுங்கண்ணே, பாக்கறேன்”

“வேணாம்”

டீக்கடையோடு முடியும் கட்டிடம். சிறிய மண் ரோடு அதைத் தாண்டி காலி மனை அருகே, மெயின் ரோடு தாராக இருந்தாலும் பக்கத்தில் தாராளமாக மண் சாலை. அந்த சாலை ஓரத்தில் நூடுல்ஸ் கடை. இருபது நிமிட காத்திருப்புக்குப் பின் மது அண்ணன் வந்தார். கடைப்பையன் பூட்டி விட்டு போயிருந்தான்.  

“எங்க பாஸ் இங்க?” என்று விசாரித்தார். குரல் நெடியுடன் குழறியது.

“நூடுல்ஸ் சாப்பிட வந்தேன்”

“இங்க சாப்பிடுவீங்களா பாஸ்?”

“சின்ன தவால இருக்கற வெஜ் நூடுல்ஸ்னா இஷ்டம்ணே, முறுக்கு போட்டு,  வாழைத்தண்டு குழம்பு ஊத்தி தர, ரெண்டு ப்ளேட் அடிக்காம போக மாட்டேன்”

“அப்படிப் போடு அருவாளா, பாஸா கொக்கா?”

“அண்ணன் நிதானத்துல இல்லை போல?”

நோ பாஸ், ஸ்டடி தான்” ஒரு எக் நூடுல்ஸ் ரெண்டு முட்டை தனியா போட்டு சாப்பிட, அதே இன்னொன்னு பார்ஸல், காரம் கம்மியா – ஆர்டர்.

“வழக்கம் போலவா வேற ஏதாவது?”

“வேணாம்”

வீடு திரும்பியபின் எஞ்சிய நினைவுகளைத் தற்காலிகமாக மகனும் மனைவியும் கலைக்கத் துவங்கினார்கள்.

புதன் காலை ஆபீசுக்கு கிளம்பும் போது திருச்சி பயணம் பற்றி சொல்லி, மாலை பயணச்சீட்டு உறுதியாகிவிட்டது என்று சொல்ல விழாயனன்று செல்வி உறுதியாய் சொன்னது “எப்படியாவது டீலை முடிச்சு, ப்ராபர்ட்டியை விக்கப் பாரு சங்கர்”    

ஒவ்வொரு முறை மெட்ராஸிலிருந்து வரும் போதும் பழகியவர்கள் சொல்வது “திருச்சி மாறிப்போச்சு”. பார்க்க மாறியது போல் இருந்தது உணர மாறியது போல் இல்லை. சிந்தனையை கலைத்தான் சந்துரு.

“ப்ரமோட்டர் செய்த சிக்கல், உன் பத்திரத்துல, தாய் பத்திரத்துல 600 சதுரடி கணக்கு இருக்கு, பக்கத்து ப்ளாட் ஆசாமி பட்டாவுல அந்த இடம் ஆரம்பத்துல இருந்து வருது, உனக்கு தெளிவாகிட்டா?”

“என்ன பண்ணலாம்?”

“அட்வகேட்டை பாத்தல்ல, என்ன சொன்னார்?”

“பேசி சரி செய்துடலாம்னு சொல்றார். இடம் நமக்குன்னா 300 சதுரடிக்கு அவருக்கு காசு தர சொல்றார், அவருக்குன்னா…”

“நீ என்ன முடிவு பண்ணி இருக்க?”

“அவரே எடுத்துக்கட்டும், மொத்த இடத்தையும் விக்கற ப்ளான்ல இருக்கேன்”

“எல்லாத்தையும் அவரே வாங்கிப்பாரான்னு கேட்போமா?”

“நல்லா இருக்கே, எனக்குத் தோணல பாரு” 

“நாளைக்கு மதியம் அக்ரிமெண்ட் போட்டுடலாம் ஒகே வா”

“ஓகே, திருச்சி வந்து எல்லாரையும் பார்த்துட்டேன் அந்த மது அண்ணன்?”

“யாரு?”

“ஹாஸ்டல் ஸ்டாப், சபரி மில்ஸ் ஸ்டாப் நடுவுல…”

“மெக்கானிக்கா?”

“ஆமா ஆமா”

“கடை அங்க இல்லை, சைல்ட் ஜீசஸ் ஹாஸ்பிட்டல் தாண்டி போனா நம்ம ஜிம் இருக்கா?

“ஆமா, பக்கத்துல நூடுல்ஸ் கடை”

“அங்க தான் பட்டறை இருக்கு”

“எனக்கு பாக்கணும்”

‘நாளைக்கு நைட் போகலாம்”

சனிப்பொழுது எதிர்பார்த்தபடி முடியவில்லை ஆனால் சங்கதிகள் முடிந்தன.

“பத்து ரூபாய் அட்வான்ஸ் வாங்கிக்குங்க, கிரையம் எப்போன்னு நல்ல நாள் பார்த்து  குறிச்சுருவோம், நாளைக்கு முடிச்சுடலாம்”

“எப்போ சார்?”

“சண்டே ஃப்ரீ தான், காலைல பதினோரு மணிக்கு தில்லை நகர் ஆபீஸ் வாங்க”

ஒரு நாள் கூடுதலாக திருச்சி இழுக்கிறது.

“சங்கரா, வேலை இருக்கு, முடிச்சுட்டு ரூமுக்கு நைட் ஒன்பதரை மணிக்கு வரேன்”

ஐயப்பன் கோயில், வெக்காளியம்மன் கோயில் போய் ரூமுக்கு எட்டரை மணிக்கு வந்தவுடன் குளிக்க வேண்டி இருந்தது… திருச்சி சீதோஷ்ணம். ஒன்பதரை மணிக்கு சந்துரு வர படபடப்பாக இருந்தது.

கடை பெரிது. வேறொரு பையன் ஸ்கூட்டிக்குள் மூழ்கி இருந்தான். விசாரிக்க, அண்ணன் பக்கத்தில் போயிருப்பதாக சொன்னான்… சனிக்கிழமை

பதினைந்து நிமிட காத்திருப்புக்குப் பின் மது அண்ணனைப் பார்க்க முடிந்தது.  பருமனாகி இருந்தார். தலையில் ஏராளமாக நரை… சாயம் பூசவில்லை. கண்களை குறுக்கியவர் அடையாளம் கண்டு கொண்டார்.

“சங்கர்… பாஸ் நீங்களா? எப்படி இருக்கீங்க? அடையாளம் தெரியல, வகிடெடுத்து வாரிய தலை, நெத்தி குங்குமம் அதை வெச்சு தான் கண்டுக்கிட்டேன், எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன்ணே, நீங்க?”   

“நல்லா இருக்கேன், வீட்ல எல்லாரும் செளக்கியமா? கல்யாணம் ஆச்சா? எத்தனை பசங்க?”

“நல்லா இருக்காங்க, ஒரு மகன், கடைப்பையன் எப்படி இருக்கான்? அண்ணி எப்படி இருக்காங்க, பாப்பா எப்படி இருக்கு?

“அவன் இந்தியன் பேங்க் காலனில கடை போட்டான், அண்ணி நல்லா இருக்கா, பாப்பா கல்யாணம் முடிச்சு இப்போ மாசமா இருக்கா”

“என்னண்ணே சொல்றீங்க?”

“காரைக்குடில கட்டிக் கொடுத்தேன், உங்க அண்ணி, பிரசவத்துக்கு அழைக்கப் போயிருக்கா, நாளைக்கு வெள்ளன கிளம்பறேன், சண்டே லீவ்”

சனி இரவு அண்ணன் பேச்சு, பழக்கவழக்கம் ஆச்சரியத்தைத் தந்தது.

“இங்கயும் நூடுல்ஸ் கடை, நம்ம ராசி அப்படி, சாப்பிடுவீங்க தானே?” 

“ஜிம் போகும் போது இங்க தான்ணே குடியிருப்பேன்”

மொபைலில் மது அண்ணனுக்காக பாட்டு ஓடியது. “ஆத்தோரம் தோப்புக்குள்ள” – அநியாயத்துக்கு வெட்கப்பட்டார்.

“பாஸ், இன்னுமா ஞாபகத்துல வெச்சுருக்கீங்க, தாத்தா ஆகப்போறேன் இப்ப போய்”

சந்துரு யாரிடமோ அலைபேசினான்… “அட்வகேட் நாளைக்கு ஈவ்னிங் நாலு மணிக்கு வர சொல்றார், ஏதோ பார்ட்டி இருக்காம், கவலைப்படாத நானும் வரேன்”

“பாஸ் உங்க கூட வந்தவருக்கு?”

சந்துரு, “எக் நூடுல்ஸ்” என்றான். 

“ஒரு எக் நூடுல்ஸ், ரெண்டு வெஜ் நூடுல்ஸ்” – மது அண்ணன் சொல்ல அதிர்ச்சி மண்டலம்…

“எப்போண்ணே மாறினீங்க?” 

“பாப்பா வயசுக்கு வந்த போது”

நெடியின்றி மது அண்ணன் தெளிவாக பதில் சொன்னார்.

(Visited 160 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close