பொன்மகள் வந்தாள் – மாற்று குறைவு | ஹரன் பிரசன்னா
முதல் ஓடிடி படம் என்கிற பெருமையுடன் அதிகாரபூர்வமாக வந்திருக்கிறது பொன்மகள் வந்தாள். கமல் விஸ்வரூபத்தில் செய்த தவறு, அதிக ஆசைப்பட்டது. ஒரு படத்துக்கு ஆயிரம் ரூபாய் அப்போது! இன்று ப்ரைமில் இலவசம். கடைசி வரை சூர்யா பின் வாங்காமல் இருந்தது நல்ல விஷயம். ஒரு கட்டத்துக்கு மேல் தொழில்நுட்பத்துடன் போட்டி போட முடியாது. அதனுடன் வாழப் பழகிக்கொள்வதே புத்திசாலித்தனம். ஆனால் இந்தப் படத்துக்கே 26 கோடி ரூபாய் (என்பது உண்மையாக இருந்தால்!) என்பது பெரிய அதிர்ச்சி.
மிக முக்கியமான ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதை சவசவ என்று சீரழிப்பது தமிழ் சினிமாவில் புதியதல்ல. அதன் வேர்களைப் பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் பேசாமல், யதார்த்தத்தை விட்டு விலகி, ஒரு த்ரில்லராகவோ ஒரு ஹாரராகவோ எடுத்துவிடுவதுதான் நம் இயக்குநர்களுக்கு எளிதாகக் கை வரும் ஒன்று. டோரா, அசுரவதம் ஆகியவற்றைச் சட்டென்று சொல்லலாம். இந்தப் படம் த்ரில்லர் வகைக்குள் சிக்கிக்கொள்ளவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக துப்பறியும் வகைக்குள்ளும், நீதிமன்றக் காட்சிகளுக்கு உள்ளும் சிக்கிக்கொள்கிறது. இவற்றையாவது ஒழுங்காகச் செய்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. நீதிமன்றம் தொடர்பான தொடக்கக் காட்சிகளில் சீரியஸாகப் போவதா காமெடியாகப் போவதா என்பதில் குழப்பம். அதனால் வரும் எரிச்சல். இப்படி தள்ளாட்டத்துடன் துவங்குகிறது படம்.
ஏன் ஜோதிகா இந்த வழக்கை கையில் எடுக்கிறார் என்பதைச் சொல்லவே நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். அதில் அதிர்ச்சியாக ஒன்றும் இல்லை. மிக எளிதாகக் ஊகிக்கத்தக்கதுதான். இதை சமன் செய்யவே இறுதிக்காட்சியில் ஒரு ட்விஸ்ட் வேறு. அதிலும் ஒரு அதிர்ச்சியும் இல்லை. இப்படியாகவே எல்லாக் காட்சிகளும் இருக்கின்றன.
நீதிமன்றம் நம்பத் தகுந்ததல்ல என்பதுவே படம் சொல்லும் செய்திகளுள் ஒன்று. போலிஸும் அரசியல்வாதியும் சேர்ந்து எப்படி ஒரு அராஜகத்தை மறைக்கிறார்கள் என்பதையும் அதை எப்படி ஒரு பெண் தனியே போராடி வெளியே கொண்டு வருகிறாள் என்பதையும் சுற்றி வளைத்துச் சொல்லி இருக்கிறார்கள். முழுக்கப் பார்க்கும் பொறுமையே போய்விடும் அளவுக்குப் போகிறது திரைக்கதை. அதிலும் இறுதிக் காட்சியில் எப்படி லாஜிக்குடன் முடிப்பது என்பது தெரியாமல் ஆதிகால டெக்னிக்கான வில்லனையே உணர்ச்சிவசப்பட்டுக் கத்த வைக்கும் ஐடியாவுக்குள் போய் விடுகிறார்கள்.
எல்லாக் கதாபாத்திரத்திலும் கமலே நடிக்க விரும்புவது போல, ஜோதிகாவுக்கும் ஆசை வந்திருக்கவேண்டாம். முக்கியமான ஃப்ளாஷ்பேக்கில் ஜோதிகா நடித்தது மிகப்பெரிய மைனஸ். முகம் தெரியாத ஒரு பெண் நடித்திருந்தால், நாம் இன்னும் ஈர்க்கப்பட்டிருப்போம். பாதிப்பும் கூடுதலாக இருந்திருக்கலாம்.
பார்த்திபன் ஒருவர் மட்டுமே மிக நன்றாக நடிக்கிறார். பாக்யராஜ், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் என எல்லாரும் சும்மா. தியாகராஜன் ரோபோ போல வந்தாலும் கெத்தாகவே இருக்கிறார். செக்கச் சிவந்த வானம், எமன் வரிசையில் தியாகராஜனின் முக்கியமான படங்களில் இதையும் சேர்க்கலாம்.
இனி அரசியல். இந்திய எதிர்ப்பு, மதங்களை வேண்டுமென்றே சீண்டுவது போன்றவை பெரிய அளவில் இல்லை என்பது ஆறுதல். தூய்மை பாரதம் என்பது வருகிறது, ஆனால் சீண்டல் எதுவும் இல்லை. மிக நேர்மையான வக்கீல் தன் இருக்கைக்கு வந்ததும் வெங்கடாஜலபதி படத்தைக் கும்பிடுகிறார். பின்னர் விலை போகிறார். அவர் விலை போவதெல்லாம் நம்பும்படியாகவே இல்லை. ஏன் வெங்கடாஜலபதி படத்தைக் காண்பிக்கிறார்கள் என்பதும் புரியவில்லை. பெத்துராஜாக வரும் பாக்யராஜ் கிறித்துவர் என்றே நினைக்கிறேன் அவரது மனைவியின் கழுத்தில் ஜீசஸ் டாலர் இருந்தது தெரிந்தது. அதேசமயம் அலெக்ஸாண்டர் என்னும் போலிஸ் அதிகாரி அராஜகவாதியாக வருகிறார். எனவே பெரிய அளவில் எந்த மதச் சீண்டல்களுக்குள்ளும் வம்படியாகச் செல்லவில்லை.
எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் வசனம் எழுதி இருக்கிறார். பல இடங்களில் வசனம் கூர்மையாக இருக்கிறது. ஆரம்பக் காட்சிகளில் வசனங்களில் கொஞ்சம் சுணக்கம் இருக்கிறது. லக்ஷ்மி சரவணகுமார் இன்னும் பல சாதனைகளைச் செய்வார் என்பதில் ஐயமில்லை. அவரது உப்புநாய்கள், கொமோரா போன்றவை மிக முக்கியமான நாவல்கள். இந்தத் திரைப்படமும் லக்ஷ்மி சரவணகுமார் தொடர்ந்து எழுதும் ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டிருக்கிறது. அதே சமயம் ஒரு திரைப்படத்தில் எந்த அளவுக்கு இதைச் சொல்ல முடியும் என்பதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. கூடவே ஒரு திரைப்படம் என்பது கூட்டு முயற்சி என்பது இன்னொரு கடிவாளம். இதற்கிடையில் எவ்வளவு செயல்பட்டுவிடமுடியும் என்பது முக்கியமான கேள்வி. மிகச் சுதந்திரமான களம் ஒன்று எழுத்தாளர்களுக்கு அமையவேண்டும், அப்போதுதான் அவர்களது முழு வெளிப்பாட்டைக் காண முடியும். அதுவரைக்கும் காத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
ஓடிடி வழியே வந்த முதல் படம் பொன்மகள் வந்தாள் என்பதைத் தாண்டி இப்படத்தில் ஒன்றும் இல்லை. அதுகூட, இந்தப் படம்தான் முதல்படமா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. தியேட்டர் கிடைக்காத படம், ஓடிடிக்கென்றே உருவாக்கப்பட்ட பிரபலமற்ற படம் என்று வேறு ஏதேனும் இதற்கு முன்பு நிச்சயம் வெளியாகி இருக்கும் வாய்ப்புகளே அதிகம்.
சிறுமிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் அநியாயங்கள் எப்போதுமே அதிர்ச்சி தரக்கூடியவை. அதைப் படமாகப் பார்க்கும்போது அதன் அதிர்ச்சி பல மடங்காக இருக்கிறது. அந்தப் பதற்றத்தைத் தக்க வைத்துக்கொள்வதில் தோற்றுப் போயிருக்கிறது பொன்மகள் வந்தாள்.
Image Credit: By Source, Fair use, https://en.wikipedia.org/w/index.php?curid=63814106