ஆன்மிகம்

கண்டு வந்தேன் என்றேனோ திருவடியைப் போலே !

”சாமி! முன்பே ஒரு திருவடியைப் பார்த்திருக்கிறோம். இப்போழுது இன்னொரு திருவடி” என்று ஆரம்பித்தாள் அந்தச் சின்னப் பெண்.

“கொண்டு திரிந்தேனோ திருவடியைப்போலே! என்று நீ கருடாழ்வார் பற்றிச் சொன்னது நினைவில் இருக்கிறது. இன்னொரு திருவடி அனுமார் ! சரிதானே பெண்ணே!” என்றார் ராமானுஜர்.”

ஆம் சாமி ! அனுமார் ராமரை எங்கும் நடக்கவிடவில்லை. அவரே எல்லா இடங்களுக்கும் ராமரை தூக்கிச்சென்றார். அவருக்காக அலைந்து திரிந்து சீதை கண்டுபிடித்தார். அதனால் அனுமாருக்கும் திருவடி என்று தான் பெயர்.

ராமாயணத்தில் சீதையைத் தேடிக் கண்டு பிடித்த ராமரிடம் வந்து சொல்லும் காண்டம் ‘சுந்தரக் கண்டம்’ என்று பெயர். சுந்தர என்றால் அழகு என்று பொருள். ராமர் எல்லோருக்கும் ஆனந்தத்தைக் கொடுப்பாவர். ராமருக்கு நல்ல செய்தி கொண்டு வந்து அவருக்கே ஆனந்ததைக் கொடுத்த காண்டம். அதனால் இது அழகான காண்டம் !

சுந்தரக் காண்டம்!சீதையைப் பிரிந்த ராமர் தன் தம்பி லக்ஷ்மணனுடன் தேடி அலைகிறார். சுக்ரீவனைச் சந்தித்து நட்பு பாராட்டுகிறார். வாலி வதம் செய்து சுக்ரீவனுக்கு உதவி செய்கிறார். பிறகு சுக்ரீவன் சீதையைத் தேட நான்கு திசைகளிலும் குரங்குகளை அனுப்புகிறான். அனுமார் ஒரு மூலையில் இருக்கிறார்.

அனுமார் ஒரு பிரம்மச்சாரி அதனால் பெண்ணின் பெருமையை அறியாதவர். ஒரு பெண்ணைத் தேட எல்லோரும் இவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்று மனதில் ஒரு எண்ணம். ராம, லக்ஷ்மணர்களை முதலில் பார்த்தபோது ராமர் வருத்தத்தில் இருக்கிறார். அப்போது அனுமார் தன் மனதில் “ஒரு தேசத்தின் மகாராஜா ராமர் ஒரு பெண்ணுக்காக இப்படி வருத்தப்படுகிறாரே! வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாதா ?” என்று நினைக்கிறார்.

ராமர் அனுமார் தான் சீதையைக் கண்டுபிடிப்பார் என்று நம்பினார். அனுமாரைக் கூப்பிட்டு தன் கணையாழியைக் கழட்டித் தருகிறார். அனுமார் கணையாழியை வாங்கிக்கொண்டு பல இடையூறுகளைத் கடந்து, கடலைத் தாவிச் சென்று சீதையைத் தேடி அசோகவனத்தில் சீதையைக் காண்கிறார்.

கறுத்த அரக்கிகள் புடைசூழ நடுவில் சீதை மின்னல் போல இருக்கிறாள். சீதையைச் சுற்றி அவள் அழுத கண்ணீரே குளம்போலக் காட்சி அளிக்கிறது. அந்தக் குளத்தின் நடுவே சீதை அன்னம் போல இருக்கிறாள்.

ஒரு பெண்ணுக்கு ஏன் ராமர் இவ்வளவு வருத்தப்படுகிறார் என்று முன்பு நினைத்த அனுமார் இப்போது “எப்படி ராமர் சீதையைப் பிரிந்து இவ்வளவு காலம் உயிருடன் இருக்கிறார்!” என்று எண்ணுகிறார். இந்தக் காட்சியைக் காண ராமருக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்று வருத்தப்படுகிறார்.

பிறகு அனுமார் மரத்தின் மீது ஏறி ராமருடைய கதையைச் சீதைக்குக் கூறுகிறார். கணையாழியைச் சீதையிடம் கொடுக்க, சீதை பேரானந்தம் அடைந்தாள். தான் தலையில் இருந்த சூடாமணியை ராமருக்கு அனுமாரிடம் கொடுக்கிறாள்.

சூடாமணியைப் பெற்றுக்கொண்டு அனுமார் ”விரைவில் ராமர் வந்து உங்களை மீட்பார்” என்று அறுதல் வார்த்தைகள் கூறி ராமரைக் காண முன்னிலும் வேகமாகச் செல்கிறார்.

கிளம்புவதற்கு முன் அனுமார் ராவணனைப் பார்த்து அறிவுரை கூற, ராவணன் கோபம் கொண்டு அனுமார் வாலுக்கு நெருப்பு வைக்கிறான். வாலில் நெருப்புடன் இங்கும் அங்கும் தாவினார் அனுமார். இதனால் இலங்கை தீப்பற்றி எறிந்தது.

அனுமார் கடலைக் கடந்து ராமர் இருக்கும் இடத்தை அடைந்து மற்ற குரங்குகளிடம் சீதையைப் பார்த்த கதையைக் கூற குரங்குகள் ஆர்வமாகக் கேட்டு அங்கே இருக்கும் காடுகளை எல்லாம் மகிழ்ச்சியில் தும்சம் செய்தன.எல்லாக் குரங்குகளும் இந்த நல்ல செய்தியை நான், நீ என்று போட்டிப்போட்டுக்கொண்டு ராமரிடம் கூற ராமரை நோக்கி வேகமாக ஓடின. நீண்ட குரங்கு வரிசையைப் பார்க்கிறார் ராமர்

.முதல் குரங்கு ராமர் அருகில் வந்து உற்சாகத்தில் ராமரை ஒரு தட்டு தட்டி ”கண்டேன் சீதையை !” என்கிறது. ராமர் “அப்படியா! எங்கே ? எப்போது ? எப்படி ? சீதை என்ன சொன்னாள் ?” என்று கேட்க அந்தக் குரங்கு ”நான் போகவில்லை பின்னாடி இருக்கும் அனுமார் பார்த்தாராம்!” என்கிறது. அடுத்த குரங்கு வந்து ராமரை ஒரு தட்டு தட்டி இதையே சொன்னது, அதற்கு அடுத்த குரங்குகள் இதையே செய்தது. கடைசியில் அனுமார் ராமரைப் பார்த்து “கண்டேன் சீதையை!” என்றார்.

”முழுக் கதையும் சொல்லு கேட்கிறான்” என்று ராமர் கூற அனுமார் ”அங்கே குல பிறப்பு, கற்பு, பொறுமை ஆகியவை மூன்றும் ஒன்றாக நாட்டியம் ஆடுவதை சீதையாகக் கண்டேன்!” என்று நடந்த விஷயங்களை முழுவதும் ராமரிடம் கூறுகிறார்.

ராமர் மனம் குளிர்ந்து “அனுமானே! நீ இரண்டு உயிர்களைக் காப்பாத்திருக்கிறாய். ஒன்று நான் இன்னொன்று சீதை. அதற்குப் பரிசாக என்னிடம் இருப்பது ஓர் உயிர் தான். நான் என்ன செய்வேன்! என்னையே உனக்குக் கொடுக்கிறேன்” என்று அனுமாரை தன் மார்புடன் ஆரத்தழுவிக்கொண்டார். ராமரின் நறுமணம் அப்படியே அனுமார் மீது பரவியது.”

சாமி! நான் அனுமாரைப் போல இனிய செய்தியைக் கூறி ராமருக்கு மகிழ்ச்சி ஊட்டினேனா ? அனுமாருக்குக் கிடைத்த மாதிரிப் பரிசு எனக்குக் கிடைக்கவில்லையே! அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்!” என்றாள்

.ராமானுஜர் யோசித்துக்கொண்டு இருந்தார்.“சாமி ! என்ன யோசிக்கிறீர்கள் ?” என்றாள்”

அனுமாருக்குக் கிடைத்த பரிசை நினைத்தால் ஆண்டாள் திருப்பாவையில் ‘யாம் பெறும் சம்மானம்’ என்று கூறியது நினைவுக்கு வந்தது!

“பெண்ணே! அனுமாருக்கு இரண்டு பரிசு கிடைத்தது தெரியுமா ?”“இரண்டா ? அனுமாரை ராமர் தழுவிக்கொண்டார் அது ஒன்று தானே பரிசு ?” என்றாள்.

ராமானுஜர் சிரித்துக்கொண்டு “ராம தூதனாகச் சென்றார் வாலில் நெருப்பு பரிசாகக் கிடைத்தது ! சீதா தூதனாகத் திரும்பி வந்து கண்டேன் சீதையை என்று சொன்னபோது ராமர் தழுவிக்கொண்ட பரிசு! அதனால் பெருமாள் சம்பந்தத்தைக் காட்டிலும் பிராட்டி சம்பந்தம் மிக முக்கியம்!” என்றார்“ஆம் சாமி !” என்றாள் அந்தப் பெண் சிரித்துக்கொண்டு

ராமானுஜர் “பெண்ணே வேடிக்கைக்காக அப்படி சொன்னேன். ஆண்டாள் ’யாம் பெறும் சம்மானம்’ என்பதற்குப் பிறகு ‘நாடு புகழும் பரிசு’ என்கிறாள் அது தான் இரண்டாவது பரிசு !

ராமருக்குப் பட்டாபிஷேகம் நடக்கிறது. ஊரே திரண்டு நிற்கிறது. தேவர்கள் எல்லாம் கூடிவிட்டனர். அப்போது சீதாபிராட்டி தன் கழுத்தில் இருந்த முத்து மாலையைக் கையில் வைத்துக் கொண்டு மனதில் ஒருவனை நினைத்துக் கொண்டே ராமனைப் பார்த்தாள். ராமரும் ஆமோதிக்க அந்தப் பரிசு அனுமாருக்குக் கிடைத்தது. கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஆமோதித்தார்கள். இது அனுமாருக்குக் கிடைத்த நாடு புகழும் பரிசு !”“அருமை சாமி !” என்றாள் அந்தப் பெண்.

”அனுமார் சூடாமணியை ராமரிடம் கொடுத்துவிட்டு ராமரை வணங்கவில்லை இலங்கையை நோக்கி வணங்கினார். ராமரைவிடச் சீதையைத் தான் உயர்ந்தவளாகக் கருதினார் அனுமார். ராவணன் அனுமாருக்கு நெருப்பு வைத்தபோது, அனுமாருக்கு எங்கே தீக்காயம் பட்டுவிடுமோ என்று பயந்தாள்.

‘நான் கற்புக்கரசி என்பது உண்மையானால் அனுமாருக்கு நெருப்பு குளிர்ச்சியாக இருக்கட்டும்’ என்றாள் சீதை” என்றபோது பக்கத்தில் இருந்த சிஷ்யர் “எப்படி கண்ணன் திரௌபதிக்கு இருந்த இடத்திலிருந்து புடைவை சுரக்க அருள் புரிந்தானோ அதே போலச் சீதை அனுமாருக்கு நெருப்பு குளிர்ச்சியாக இருக்க அருள் புரிந்தாள்” என்றார்.

அந்தப் பெண் “இருகையும் விட்டேனோ திரௌபதியைப் போலே!” என்றாள்.

(Visited 82 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close