கழகக்கூடாரத்தில் கலவரம் – VI
இந்தப் பதிவின் இப்பகுதியை எழுதிக்கொண்டிருக்கும்போது கிடைத்த தகவலையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மோடி 2.0 ஆட்சியின் ஓராண்டு நிறைவையொட்டி, பல மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஆணைகளை மத்திய தலைமை பிறப்பித்திருக்கிறது. இதன்படி, தமிழகத்திலும் பல்வேறு சாதனை விளக்க நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக, எல்.முருகன் தலைமையில் ஒரு அட்டவணை வெளியானது. அதில் யாரெல்லாம் பொறுப்பாளர்கள் என்பதைவிட யாருடைய பெயர்கள் எல்லாம் இல்லை என்பதைப் பார்த்தால் சில உண்மைகள் புலனாகும். அதுபோல கட்சி சார்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளிப்பவர்களின் ஒரு பட்டியலும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. இந்தப் பட்டியலில் உள்ள நபர்களைத் தவிர, மற்ற கட்சிப் பொறுப்பாளர்கள் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கக் கூடாது என்ற மறைமுகக் கட்டுப்பாடும் அமலுக்கு வந்திருப்பதாகவே கமலாலயத்திலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, மிகவும் தெளிவான செயல்திட்டங்களுடன், உறுதியான தலைவராக எல்.முருகன் செயல்படுவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்புவரை, எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் மற்றும் சொந்தக்கட்சி உறுப்பினர்களாலேயே பரிகசிக்கப்பட்ட ஒரு கட்சியின் தற்போதைய நிலை இது.
இதற்கிடையில் கடந்த வாரம் ஜூன் 3ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்ததினம். தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கட்டமைத்ததே தங்கள் தலைவர்தான் என்று திமுக சமூக ஊடகங்களில் கட்டமைக்கத் தயாரானது. ஆனால் அதற்கு எதிராக அரசியலில் ஊழலின் ஊற்றுக்கண்ணே கருணாநிதிதான் என்று பதில் முழக்கங்களும் எழுந்தன. நேரடியாக இதில் பாஜக ஈடுபடவில்லை என்றாலும் இந்த பதிலடியை திமுக எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.
சமூக ஊடகங்களில் திமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் அமைப்பினர் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும் நேரத்தில் அந்தக் களத்தில் அதிமுக இல்லவே இல்லை. சமூக ஊடகங்களில் இருப்பவர்களில் பலர் வெளிநாட்டில் இருப்பவர்கள் என்பதும், நாட்டில் இருப்பவர்கள் பலர் ஓட்டு போட வரமாட்டார்கள் என்ற எண்ணத்தில் அதிமுக இருக்கிறதா என்பது தெரியவில்லை. என்னதான் சொன்னாலும் அதிமுக அரசு மீது மக்களுக்குப் பெரிய அதிருப்தி இருப்பதுபோலவும் தென்படவில்லை. திமுக வெற்றி பெற்ற போதெல்லாம் பெரிய வலுவான கூட்டணியை வைத்தே வென்றுள்ளது என்பதும் நாம் பார்க்கவேண்டிய ஓன்று. இன்னும் எடப்பாடி ஒரு கவர்ச்சிகரமான, தனது கட்சிக்கு வெற்றியைத் தேடித்தரும் தலைவராக நிரூபணமாகவில்லை. இப்போதுள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களும் குறிப்பாக துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக மனமுவந்து ஏற்றுக் கொள்வார்கள் என்பது கேள்விக்குறிதான்.
தொடர்ச்சியாக தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகளில் 85% மேலாக திமுகவும் அதிமுகவும் பெற்று வருகின்றன. இதில் ஒரு கட்சியை களத்தில் இருந்து அகற்றாமல் மற்ற எந்த கட்சியும் ஆட்சி அமைப்பதைப் பற்றி கனவில்கூட எண்ண முடியாது.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொன்னூற்றி ஏழு தொகுதிகளில் வெற்றி என்பது பத்தாயிரம் வாக்குகளுக்கு உள்ளாகத்தான் வித்தியாசம்தான் இருந்தது, அதிலும் ஐம்பத்தி மூன்று தொகுதிகளில் இந்த வித்தியாசம் ஐயாயிரம் வாக்குகளுக்கு கீழே இருந்தது. தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளின் மூலம் இந்த வாக்குகள் சிதறாமல் வெற்றி அடைந்து விடலாம் என்பது திமுகவின் வியூகம். ஆனால் தொகுதிக்குப் பத்தாயிரம் வாக்குகளைச் சிதறடித்தால் திமுகவை வெற்றி பெறுவதில் இருந்து தடுக்கலாம் என்று பாஜக எண்ணக்கூடும்.
தொடர்ச்சியான ஹிந்து விரோதக் கருத்துக்கள், அளவுக்கு அதிகமான மற்ற மதங்களை சீராட்டுதல் என்பது குறிப்பிட்ட அளவிலான ஹிந்துக்களை எரிச்சல் உண்டாகி உள்ளது. எல்லாப் பழியையும் திமுகவின் மீது போடுவது என்பது இணையத்தில் வலம் வரும் பலரின் வேலையாகவே உள்ளது. அதை அவர்கள் வெற்றிகரமாகவே செய்து வருகிறார்கள்.
இதெல்லாம் போதாதென்று, மத சிறுபான்மை என்ற பெயரில் ஹிந்துக்களின் நம்பிக்கையை ஏளனம் செய்யும் போக்கை கிருத்துவக் கல்வி நிலையங்கள் தொடர்ந்து செய்து கொண்டே உள்ளது. ஹிந்து தெய்வங்களை தரக்குறைவாகச் சித்தரிக்கும் ஓவியக் கண்காட்சியை சென்னை லயோலா கல்லூரி நடத்தியது. தமிழ் இலக்கியத்தில் பெண் அடிமைத்தனம் என்ற கருத்தரங்கை திருச்சி வளனார் கல்லூரி நடத்துவோம் என்று அறிவித்தது. சென்னை பல்கலைக்கழகத்தின் கிருத்துவ இறையியல் துறையில் இருந்து பாரத நாட்டின் மதங்களைப் பற்றிய கருத்தரங்கை நடத்துவதாக தகவல் வந்தது. இவை இரண்டையும் ஹிந்து இயக்கங்கள் தடுத்து நிறுத்தியது.
இவை அனைத்தும் சேர்ந்து திமுக ஒரு ஹிந்து விரோதக் கட்சி என்ற பிம்பம் உறுதியாகத் தமிழகத்தில் பரவத் தொடங்கி உள்ளது. பல்வேறு செய்தித்தளங்கள், காணொலிக் காட்சிகள், கேலிச்சித்திரங்கள் என்று பலர் இதனை முழுமையாக முன்னெடுக்கின்றனர். திமுகவின் இந்த முக்கியமான சவாலை எதிர்கொள்வதற்கான உத்திகளோ, தொடர்ந்து வலுப்பெற்று வருகிற அந்த பிம்பத்தை வளரவிடாமல் நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகளோ, தற்போதைய பிரச்சார வடிவங்களில் காணப்படுகின்றனவா?
தொடரும்