பஞ்சாப் – சிக்கிய நூல் பந்தும் சிக்கிய விதமும் – விடுவிக்கும் பதமும்
பஞ்சாபில் பல்வேறு எஸ்பிக்கள், டிஐஜி, ஐஜிக்கள் பணிமாற்றம் இவை எல்லாம் நிர்வாகக் காரணம் என்று சப்பைக்கட்டு கட்டி, டிஜிபி மாற்றத்துக்கு யுபிஎஸ்சி மேல் பழி போட்டு வந்தார்கள் பஞ்சாப் காங்கிரசார். நவ்ஜோத் சித்து என்ன பெரிய பிரதமர் என்ன பெரிய பாதுகாப்பு என்ற வகையில் பேசிவந்தார். சமூக வலைத்தளங்களில் இவர்கள் காட்ட முயன்ற படத்துக்கும் பஞ்சாபில் நிகழ்ந்து வரும் நிகழ்வுகளுக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது.
சித்து எல்லை மீறிப் போகிறார் என்று காங்கிரஸ் தலைமை உணர்ந்தது மிகவும் தாமதமாக. அதன்பின் அவருக்கு கடிவாளம் போடுகிறேன் என்று அல்கா லம்பா என்ற பெண்மணியை பிரச்சாரக்குழுவில் போட்டுள்ளார்கள். பிரச்சாரத்தின் போக்கு மற்றும் உள்ளடக்கம் இவற்றை அல்கா தீர்மானிப்பார். இந்தப் பெண்மணி காங்கிரசில் இருந்து கேசரிவால் கட்சிக்குப் போய் அங்கிருந்து காங்கிரசுக்கு மீண்டும் வந்தவர். சித்துவைப் போலவே ‘well connected’. சித்துவும் பதிலடியாக முதல்வர் பதவி எவன் அப்பன் சொத்து? பஞ்சாப் மக்கள் யார் முதல்வர் என்று முடிவு செய்வார்கள், கட்சித் தலைமை அல்ல என்று சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில் முதல்வர் சன்னி சமீபத்தில் நடந்த இணையக் கூட்டம் ஒன்றில் மற்ற மாநில முதல்வர்கள் இருக்கும் போதே பிரதமர் மோடியிடம் “நீங்கள் பஞ்சாப் மக்களுக்குப் பிரியமானவர். உங்களுக்கு பஞ்சாபில் நிகழ்ந்தது மிகவும் வருத்தமான விஷயம்” என்று சொன்னதோடு ”நீங்கள் உலகம் உள்ளவரை வாழ்வீர்கள், அதுவே எங்கள் விருப்பம்” என்று பொருள்படும் உருதுக் கவிதையைக் கூறியுள்ளார்.
ஏன் இந்த திடீர் மாற்றம்? பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி என்பது கட்டுக்கதை என்று பேசிவந்தவர் சன்னி. பின்னர் போலீஸ் அதிகாரிகள் மாற்றம் பற்றிக் கேட்டபோது நிர்வாக வசதி என்றார். டிஜிபியை மாற்றக் கையெழுத்துப் போட மறுத்தார். சட்டச் சிக்கல்கள் விளக்கப்பட்ட பிறகு கையெழுத்துப் போட்டார்.
பஞ்சாபில் இப்போதைய டிஜிபி வீரேஷ் குமார் பாவ்ரா மூன்று மாதங்களில் நான்காவது காவல்துறைத் தலைவர். கடந்த செப்டம்பரில் கேப்டன் அமரிந்தர் சிங்கை நீக்கிவிட்ட பிறகு சன்னி ஆட்சி அமைந்த போது டிஜிபியாக இருந்த தினகர் குப்தாவை கேப்டனின் ஆள் என்று மாற்றியது பஞ்சாப் அரசு. இக்பால்ப்ரீத் சிங் சஹோடா என்பவர் டிஜிபி ஆனார்.
இவர் முதல்வர் சன்னியின் ஜாதிக்காரர். இவருக்கும் சன்னிக்கும் ஒத்துப்போனது. காங்கிரஸ் தலைமைக்கு ஏதும் பிரச்சனை இல்லை. ஆட்சியில் அதிகம் பேர் தலித்கள் என்று சொல்லி ஓட்டு அள்ளலாம் என்று திட்டமிட்டது காங்கிரஸ். ஆனால் ஒருவருக்கு இது பிடிக்கவில்லை. அவர் மாநில காங் தலைவர் சித்து. 2015ல் ஒரு விசாரணையில் அப்போதைய அகாலிதள துணை முதல்வர் பாதல் சொல்படி செயல்பட்டார் என்று பேசி சஹோடாவை மாற்றச் சொன்னார் சித்து.
மாற்ற வேண்டாம் என்று கட்சி மேலிடம், முதல்வர் என்று பலரும் கூறினர். பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று மிரட்டி ராஜினாமா கடிதம் கொடுத்தார் சித்து. அகாலிதள ஆதரவு டிஜிபி நமக்கு ஆதரவாக இருப்பாரா என்று முழங்கினார். மாற்றி ஆகவேண்டும் என்று கொடிபிடித்தார். தான் பாடும் பாட்டுக்கு ஏற்ப ஆடுவார் என்று சித்தார்த் சட்டோபாத்யாய் என்ற அதிகாரியைத் தேர்ந்தெடுத்தார் சித்து.
ஆனால் சிக்கல் சட்டத்தின் வடிவில் வந்தது. மோடி ஒழிக என்றும் சொல்லமுடியாது. ஏனென்றால் சட்டத்தினை இப்படி வரையறுத்தது உச்சநீதிமன்றம். ”டிஜிபி பதவிக்கு வரும் அதிகாரிகளுக்கு பதவிக்காலம் குறைந்தது இரண்டாண்டுகளுக்கு இருக்கவேண்டும். அவர்களின் தகுதிகளை UPSC உறுதி செய்யவேண்டும்.” என்பது உச்சநீதிமன்ற உத்தரவு. (Prakash Singh & Ors vs Union Of India And Ors – Writ Petition (civil) 310 of 1996 – DATE OF JUDGMENT: 22/09/2006)
மேற்சொன்ன இந்த வழக்கில் காவல்துறைச் சீர்திருத்தங்கள் பல பரிந்துரைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று டிஜிபி நியமனம். ஒரு மாதம் ஒரு வாரம் என்ற காலங்களில் ஓய்வு பெற உள்ள அதிகாரிகளை நியமித்து பிறகு பணி நீட்டிப்பு அளித்து அவர்களை ’ஆள்பவர்களுக்கு ஏற்பச் செயல்படச் செய்வதுமான’ வழக்கத்தை இந்தத் தீர்ப்பு வழக்கொழித்தது. இந்தத் தீர்ப்பை நீர்த்துப் போகச்செய்ய பல மாநிலங்கள் முயன்றன. ஆனால் தீர்ப்பே இறுதி என்றான பிறகு காவல்துறை சீர்திருத்தங்கள் பலவும் நிர்வாகக் காரணங்கள் காட்டப்பட்டுக் கிடப்பில் போடப்பட்டன. டிஜிபி நியமனம் உள்ளிட்ட சில விஷயங்களில் அவ்வாறு செய்ய இயலாமல் போனது.
இந்தச் சூழலில்தான் சித்து தனக்கு ஒத்துவரும் அதிகாரியான சித்தார்த் சட்டோபாத்யாய் டிஜிபி ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். ஆனால் மார்ச்சில் ஓய்வு பெற இருப்பவரை மூன்று மாத இடைவெளியில் டிசம்பரில் டிஜிபி ஆக்குவது இயலாத காரியம் என்று தலைமைச் செயலர் சொல்லியும் கேளாமல் இடைக்கால ஏற்பாடு என்று சஹோடா வெளியேற்றப்பட்டு சட்டோபாத்யாய் டிஜிபி ஆனார். பட்டியலில் இவர் பெயரைச் சேர்த்து புதிய டிஜிபி பரிந்துரைக்கு UPSCக்கு அனுப்பச் சொன்னார் சித்து. ஆனால் அப்படிப் பெயர் சேர்க்க சட்டத்தில் இடமில்லை என்று அதிகாரிகள் சொன்னபோது மீண்டும் ராஜினாமா என்றார் சித்து. ஒட்டகத்தை ஊசிமுனையில் நுழைக்க வழிதேடிக் கண்டும் பிடித்தனர் பஞ்சாப் அதிகாரிகள். 2019ல் அமரிந்தர் சிங் காலத்தில் தினகர் குப்தாவை டிஜிபி ஆக்கவேண்டும் என்று மூத்த அதிகாரிகளைப் புறந்தள்ளினார் என்றும் அப்போதைய மூப்புப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் சட்டோபாத்யாய் என்றும் சொல்லி அநியாயத்துக்கு நீதி தேடித்தரும் வகையில் அவரை டிஜிபி ஆக்கப் பரிந்துரைக்கிறோம் என்று கடிதம் எழுதியது பஞ்சாப் அரசு.
UPSC சன்னி அரசின் பட்டியலைக் குறுக்காகக் கோடு கிழித்துவிட்டு மூன்று அதிகாரிகளைப் பட்டியலில் போட்டு அனுப்பியது.
1.தினகர் குப்தா
2.வீரேஷ்குமார் பாவ்ரா
3.ப்ரபோத் குமார்.
சித்தார்த் சட்டோபாத்யாய் விரைவில் விடுவிக்கப்படவேண்டும் என்றும் ஓலை வந்தது. ஆனால் மாற்றல் உத்தரவில் கையெழுத்துப் போட்டால் பார் என்று சித்து ரகளை செய்துகொண்டிருந்தார்.
இந்நிலையில் பிரதமரின் பஞ்சாப் விஜயத்தின் திட்டமிடலில் கூடுதல் டிஜிபி (சட்டம் ஒழுங்கு) நரேஷ் குமார் அரோரா முழுதாகப் பங்கெடுத்துக் கொண்டார். ஆனால் டிஜிபி ஒப்புக்காகக் கூட்டங்களில் கலந்து கொண்டு, பொறுப்பை அரோராவிடம் விட்டுவிட்டார். அரோரா அனுப்பிய அறிவுறுத்தல்கள், சுற்றறிக்கைகள், டிஜிபி அலுவலகத்தின் மாற்று உத்தரவுகளால் பின்பற்ற இயலாது போயின. அரோராவின் அறிவுறுத்தல்களில் தெளிவாக 2 லட்சம் பேர் வரை பிரதமரின் கூட்டத்துக்கு வருவார்கள் என்றும், விவசாயிகள் போராட்டம் அங்கே கும்பல் கூடினால் சட்டம் ஒழுங்கு சிக்கலாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் போராட்டக்காரர்களுக்குப் பிரதமரின் பயணத்திட்டம் தெரிவிக்கப்பட்டு, போராளிகளை மறிக்கவோ நிறுத்தவோ கூடாது என்று காவல்துறையினருக்கு உத்தரவிருந்தது.
பிரதமர் பாதுகாப்பில் கோட்டை விட்ட பிறகும் சட்டோபாத்யாயை மாற்றுவதில்லை என்று சன்னி உறுதியாக நின்றார், சித்து ராஜினாமா செய்தால் சிக்கல் என்பது அவரது அரசியல் கணக்கு. காங்கிரஸ் தலைவர்களில் G23 என்று அழைக்கப்படும் 23 பேரில் பலரும் இந்தப் பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டித்தனர். மிகப்பெரும் தவறு என்று சொல்லிக் கண்டித்துவிட்டுப் பஞ்சாப் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் வெளிநாடு போய்விட்டார்.
சட்டோபாத்யாய் மாற்ற உத்தரவில் கையெழுத்துப் போட மறுத்துவந்த முதல்வர் சன்னி, அரசு தலைமை வக்கீலிடம் மார்ச் வரை இழுத்தடித்துவிடலாமா என்று யோசனை கேட்டுள்ளார். இப்போது மாற்றாவிட்டால் தேர்தல் நடத்தைவிதிகள் என்று தேர்தல் ஆணையம் ஆளை மாற்றும். UPSC பட்டியலில் மூத்த அதிகாரி என்ற வகையில் மீண்டும் தினகர் குப்தா வருவார் என்று சொன்னார் வக்கீல். இப்போது மாற்றிவிட்டால் ஆணையம் மாற்ற வேண்டாம் என்று பேசியாவது பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார். அதன்பிறகு ஜனவரி 8 அன்று தேர்தல் அறிவிப்புக்குச் சில மணி நேரம் முன்பு டிஜிபி மாற்ற உத்தரவில் கையெழுத்துப் போட்டார் சன்னி.
புதிய டிஜிபி பல்வேறு தீவிரவாத, குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரித்த கள அனுபவம் உள்ளவர். தேர்தலின் போது இவரே தொடர்வார் என்று தகவல். தேர்தலை பிரச்சனை ஏதுமின்றி நடத்திமுடிக்க பஞ்சாப் போலீஸ் உறுதி சொல்கிறது என்று பதவி ஏற்ற கையோடு அறிவித்தார்.
உச்சநீதிமன்றம் விசாரணை தொடங்கியிருக்கிறது. உள்துறை தடாலடியாக ஏதும் செய்யாமல், பஞ்சாப் போலீஸ் செய்த ஒவ்வொரு அசைவையும் விசாரித்து பிரதமர் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட நீலப்புத்தகம், SPG/NSG அறிவுறுத்தல்கள், உளவுத்துறைக் குறிப்புகள் என்று அலசி எங்கே கோட்டை வீட்டீர்கள் ஏன் என்று ஒவ்வொரு அசைவுக்கும் விளக்கம் கேட்டுக்கொண்டிருக்கிறது. அரசைக் கலைப்பார்கள் அனுதாபம் வரும், கலைக்காவிட்டால் சிக்கலிருந்தால் கலைத்திருப்பார்களே என்று கலாய்த்துவிடலாம் என்று எண்ணிய காங்கிரஸ், இப்படி முதல்வர் முதல் உள்ளூர் ஏட்டையா வரை NIA கூப்பிட்டு விசாரிக்கும் என்ற நிலையை எதிர்பார்க்கவில்லை.
ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் hit & run பதிவுகளை வைத்தும் மீம்ஸ் போட்டும் அரசியல் பிரச்சாரத்தைச் செய்திகள் என்ற பெயரில் கொண்டு சேர்த்து வந்த வழக்கத்துக்கும் புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டம் மூலம் முற்றுப் புள்ளி வைத்துள்ளது மத்திய அரசு. எந்த IPல் இருந்து ஒரு பதிவு வந்தது என்பது வரை அரசு கேட்டால் நிறுவனங்கள் தகவலைக் கொடுத்தே ஆகவேண்டும். அல்லது தகவலுக்குப் பொறுப்பேற்று நிறுவனத்தின் இந்தியத் தலைவர் சிறை செல்ல வேண்டும் என்பது சட்டம். நிறுவனம் சும்மா தளம் மட்டுமே தருகிறது என்றால் தகவல் வந்த தடம் பற்றிச் சொல்லவேண்டும். சொல்லாவிட்டால் தகவலுக்குப் பொறுப்பேற்க வேண்டும். ஆகவே சமூக வலைத் தளங்களில் முன்பு போல புகுந்து புறப்பட்டு பச்சோந்தி வேலை காட்ட முடியவில்லை.
இந்தப் பின்னணியில் சன்னியின் மன்னிப்பு, சித்துவுக்கு செக் வைக்க அல்கா களமிறக்கப்பட்டது, பஞ்சாப் அமைச்சர்கள் டிஜிபி டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும் என்று பேசிய பேச்சுகள், G23 உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் சற்றே விவேகம் இழையோடும் பேச்சு என்று பார்க்கிற போது களம் தெரிந்த ஒருவர் காங்கிரஸ் தலைமைக்கு அறிவுறுத்துகிறார் என்று தெரிகிறது. அதனால் தான் தேர்தலில் தடம் தெரியாமல் போவதைத் தவிர்க்கவே இந்த திடீர் மாற்றங்களைக் காங்கிரஸ் காட்டுகிறது. நாடகத்தின் அங்கம் தான் இந்தப் பேச்சுகளும்.
முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் காங்கிரசில் இருந்து விலகியதற்கு முக்கியக் காரணம் என்ன? விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடைபெறவுள்ள சில ஆபத்தான் செயல்கள் பற்றி அவருக்கு வந்த தகவல்களைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன் அவர் பகிர்ந்துகொண்டதும் அதன் மூலம் காவல் ராணுவம் ஆகிய துறைகளில் பணியாற்றும் சீக்கியர்களை உணர்வு பூர்வமாக மிரட்டியோ மனமுடைய வைத்தோ அரசுக்கு எதிராகத் திருப்பும் திட்டம் பற்றியும் தெரிந்து மேலும் பல சிக்கல்களைத் தவிர்க்கவே விவசாயச் சட்டத்தை வாபஸ் பெற்றதும் நடந்தது. இதில் அமரிந்தர் மோடி, அமித்ஷாவைச் சந்தித்தது தெரிந்ததுமே காங்கிரஸ் மேலிடம் கொதித்தது. அப்போதிருந்து சிக்கல் தொடங்கி அமரிந்தர் விலகலில் முடிந்தது. அமரிந்தர் சித்து கடைந்தெடுத்த தேசத்துரோகி என்றும் அவர் முதல்வராவார் என்றால் சட்டசபையைக் கலைத்துவிட சிபாரிசு செய்வேன் என்றும் பேசியது முக்கியமான நகர்வு.
பந்துபோல இருந்தாலும் நூல் கண்டபடி சிக்கியுள்ள உருண்டையாக பஞ்சாப் தற்போது உள்ளது. இதை நூல் அறுந்துவிடாமல் பிரித்தெடுக்க வேண்டும். காலம் ஆகும். பொறுமை அவசியம். இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் போல உடனடித் தீர்வு வேண்டுவோர் சிங்கம் திரைப்படம் 3 பாகங்களையும் பார்த்துக் கைதட்டி மகிழலாம்.