வரலாற்றில் இன்று – சரத் சந்திர சட்டோபாத்யா – ஜனவரி 16
ஜனவரி 16 – இன்று சரத் சந்திர சட்டோபாத்யாவின் நினைவுநாள். 1876ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் பிறந்த இவர் வங்க மொழியின் முக்கியமான எழுத்தாளர் ஆவார். பொருளாதார சூழல் ஒத்துழைக்காததால் இவர் பத்தாம் வகுப்புக்குமேல் முறையான கல்வியைப் பெறமுடியவில்லை. பர்மாவில் இவர் பொதுப்பணித்துறையின் நிதிப்பிரிவில் பணியாற்றிவந்தார். 1916ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய இவர் தன்னை முழுவதுமாக அரசியலிலும் இலக்கியத்திலும் ஈடுபடுத்திக்கொண்டார்.
1921ஆம் ஆண்டு முதல் 1936ஆம் ஆண்டுவரை இவர் ஹௌரா மாவட்ட காங்கிரஸ் தலைவராகப் பணியாற்றினார். இவரது இலக்கிய சேவைகளைப் பாராட்டி, டாக்கா பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. காதல் தோல்வியைப் பற்றி பேசும் புகழ்பெற்ற தேவதாஸ் நாவல் இவரால் எழுதப்பட்டதுதான். 1938ஆம் ஆண்டு இதே நாளில் ( ஜனவரி 16 ) புற்றுநோயால் சரத் சந்திர சட்டோபாத்யாய் சட்டர்ஜி மரணமடைந்தார்.