ஐந்து குண்டுகள் – சுதாகர் கஸ்தூரி – என் பார்வை
புத்தகத்தைப் பற்றி எழுதும் முன் திரு. சுதாகர் கஸ்தூரிக்கு என் அனந்தகோடி நமஸ்காரங்கள்.
அவர் நினைத்திருந்தால் சமகால பிரச்சனைகளான ஜிஎஸ்டி, டீ மானிடைசேஷன் ஆர்டிக்கிள் 370 போன்றவற்றை வைத்து ஒரு கதை எழுதி இருக்கலாம். அப்படி ஒன்றை எழுதி இருந்தால், அவர் இதற்கு எந்த விளம்பரமும் செய்யாமலேயே பல ஆயிரக்கணக்கில் ஹிட்ஸ் கிடைத்திருக்கும். அதை விட்டு சுதந்திர போராட்ட கால பின்புலத்தை தேர்வு செய்ததற்காக மீண்டும் ஓர் நமஸ்காரம்.
திருநெல்வேலி எழுச்சி கண்டிப்பாக நாம் பாடபுத்தங்களிலோ இல்லை புரட்டாய் எழுதப்பட்ட வரலாற்று நூல்களிலோ கண்டிப்பாக காணக் கிடைக்காது. அதன் பின்னணியில் எழுதப்பட்டுள்ளது இந்நாவல். இது தினமணியில் தொடராக வந்தது. இப்பொழுது கிண்டிலில் புத்தகமாக வந்துள்ளது.
கதை இரண்டு வேறு காலகட்டங்களில் நடைபெறுகிறது. ஓரளவு சுதந்திர போராட்டங்களைப் பற்றிய அனுபவம் இருந்தால் கதையை படிப்பது எளிது. அக்காலத்தில் எப்படி எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் விடுதலைப் போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர் என்பதை எண்ணினால் ரத்தக்கண்ணீர் வரும். உங்களை அறியாமல் இப்பொழுது கருத்துரிமை இல்லை என சொல்பவர்களை நினைக்கத் தோன்றும். ஸ்வதேசி கூட்டத்தில் கலந்துக் கொண்டார் என்பதற்காகவே கண்காணிக்கப்பட்டதெல்லாம் நடந்துள்ளது.
முத்துராசா மற்றும் ஆனி இடையிலான நட்பு கதையின் ஓட்டத்திற்கு முக்கியமானது. அதைத் தவறவிட்டால் இறுதி புரிவது கடினம். தூத்துக்குடி பகுதியில் சில காலம் வசித்த ஆனியின் வம்சத்தவள் என்று இந்தியா வரும் லிண்டா, முத்துராசாவின் வம்சத்தவர் என்று நம்பப்படும் முத்துக்குமார், கதையில் வரும் சிறு பாத்திரமாக இருந்து திருப்பத்தை ஏற்படுத்தும் மாடசாமி என்று அனைவரின் பாத்திரங்களும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
தங்களுக்கு ஒரு பெருந்தொகை வரப்போகிறது என்ற எண்ணத்தில் பல செலவுகளை செய்யும் குடும்பத்தினர் அந்நிலை மாறுகின்ற சமயத்தில் தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்வது கிராமத்து மனிதர்களின் மனஓட்டங்களை கோடிட்டுக் காட்டுகிறது. இதே நகரத்து மனிதர்களாக இருந்தால் என்றக் கேள்வி மனதில் எழாமல் இல்லை. கண்டிப்பாக கதையின் முடிவு நான் எதிர்பாராத ஒன்றுதான்.
அதிகமாய் கதையை விவரிக்க விரும்பவில்லை. விரிவாக நீங்களே படிக்கவேண்டும். இந்த புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. எழுத்தாளருக்கு இரண்டு வேண்டுகோள்கள்.
- முடிந்தால் இதை அச்சு புத்தகமாய் கொண்டு வரவும்
- இதே போன்று பல நாவல்களை எழுதவும்.
கிண்டில் செயலியில் வெறும் 99 ரூபாய்க்கு கிடைக்கிறது. புத்தகம் வாங்க கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்
https://www.amazon.in/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%