ராகுல் காந்தி மற்றும் பலரின் தேசப் பிரிவினைப் பேச்சு – சில அடிப்படைகள், அலசல்கள்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், வயநாடு எம்பி ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசினார். அவர் உரையின் போது சொன்னவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம். இதையே அடியொற்றி வழிமொழிந்து பலரும் பேசுகிறார்கள். இவை அடிப்படை தவறான வாதங்கள் என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம்.
1.இந்தியா ஒரு நாடல்ல – மாநிலங்களின் கூட்டமைப்பு.
2.இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் பண்பாடு வேறுபடும். ஆகவே வேறுபட்ட மக்கள்.
3.இந்தியாவைப் பற்றிய ஆளுங்கட்சியின் எண்ணவோட்டம் (Idea of India) தவறானது.
4.இந்தியாவின் வரலாறு ஆளுங்கட்சியினருக்குத் தெரியவில்லை.
5.இந்தியா எடுத்த சமீபகால நடவடிக்கைகளால் பாகிஸ்தான் – சீனா கூட்டுச் சேர்ந்துவிட்டது. இது ஆபத்து.
முதலில் நாம் Idea of India பற்றிப் பார்ப்போம்.
1919ல் இந்திய அரசாங்கச் சட்டம் என்ற சட்டத்தை பிரித்தானிய அரசு இயற்றியது. இதன் மூலம் Diarchy எனப்படும் இரட்டை ஆட்சி/நிர்வாக முறை அமலுக்கு வந்தது. ஒன்று பிரித்தானிய மன்னரின் பெயரில் அமைக்கப்பட்ட நிர்வாகக் குழு. மற்றது மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு கவர்னர் அமைக்கும் அமைச்சரவை. இவ்விரு குழுக்களுக்குள் நிர்வாக அதிகாரம் பிரித்து வழங்கப்பட்டது. பிரித்தானிய மன்னர் பெயரில் அமைந்த நிர்வாகக்குழு சட்டம் ஒழுங்கு, காவல், ராணுவம், நீதி, நில வருவாய், நீர்ப்பாசனம், போன்ற அதிகாரங்களைக் கொண்டிருந்தது. இந்தியர்களைக் கொண்ட மக்கள் பிரதிநிதி சபையின் அமைச்சரவை உள்ளாட்சி நிர்வாகம், கல்வி, சுகாதாரம், மருத்துவம், பொதுப்பணிகள், விவசாயம், மீன்வளம், வனவளம் ஆகியவற்றை நிர்வகித்தது.
இந்த நிர்வாக முறை மாண்டேகு-செம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தம் என்று பொதுவாக அறியப்பட்டது. இந்த அமைப்பைப் பத்தாண்டுகள் கழித்து பரிசீலித்து மாற்றங்கள் செய்வோம் என்றும் அப்போது தீர்மானிக்கப்பட்டது. அதன்படி பரிசீலனைக்காக அமைக்கப்பட்ட குழு சர் ஜான் சைமன் என்ற ஆங்கிலேயர் தலைமையில் 7 பேர் கொண்ட முழுக்க முழுக்க ஆங்கிலேயர்களால் ஆன குழு. இந்திய சட்டக் கமிஷன் என்று பெயரிடப்பட்ட இந்தக் குழுவை அதன் தலைவர் பெயரால் சைமன் கமிஷன் என்றும் அழைத்தனர்.
1928ல் சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தது. இந்தியர்கள் பலரும் எதிர்த்தனர். கமிஷனில் ஒரு இந்தியர் கூட இல்லை. இந்தியர்களுக்கு என்ன தேவை என்று இவர்கள் எப்படி முடிவு செய்வார்கள் என்று கேட்டனர். பெரும் போராட்டம் நடந்தது. அதில் கோபமுற்ற அப்போதைய பிரித்தானிய அரசின் இந்தியச் செயலர் லார்டு பிக்கர்ஹேண்ட் என்பார் இந்தியர்களுக்கு முடிந்தால் தங்களுக்கென்று ஒரு அரசமைப்பை உருவாக்கட்டும் பார்க்கலாம் என்று சவால் விட்டார். உடனே அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடி மோதிலால் நேரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் ஜவஹர்லால் நேரு செயலர், சுபாஷ் சந்திரபோஸ் அலி இமாம், தேஜ் பகதூர் சப்ரூ, மங்கள் சிங், எம் எஸ் அனே, ஷோயப் குரேஷி, ஜி ஆர் பிரதான் ஆகியோர் உறுப்பினர்கள்.
இந்தக் குழுவின் தலைவர் மோதிலால் நேருவும் செயலர் ஜவஹர்லால் நேருவும் (பல்வேறு எதிர்ப்புகளை நிராகரித்த பின்) பரிந்துரைத்த அரசமைப்பு இதுவே:
- இந்தியாவுக்கு பிரித்தானிய ஆட்சியின் கீழ் சுயாட்சி (டொமினியன் அந்தஸ்து)
- 21 வயதுக்கு மேல் உள்ள ஆண்/பெண் அனைவருக்கும் ஓட்டுரிமை உள்ளிட்ட 19 அடிப்படை உரிமைகள்.
- இருபாலருக்கும் சம உரிமை.
- அரசாங்க மதம் கிடையாது.
- ஜாதி, மத, இன அடிப்படையில் தனித்தனித் தொகுதிகள் கிடையாது.
- மாநிலங்களின் கூட்டரசாக இந்தியா இருக்கும். மாகாணங்களுக்கு உள்ள அதிகாரங்கள் போக எஞ்சிய வெளியுறவு, ராணுவம், ரயில், மாநிலங்களுக்கு இடையிலான செயல்பாடுகள், சட்டம் ஒழுங்கு, காவல், நிதி அகிய அதிகாரங்களை இந்த மத்திய அரசு கொண்டிருக்கும். இரட்டைப் பாராளுமன்றச் சபைகள் கொண்ட அமைப்பு மத்தியில் இருக்கும். அமைச்சரவை பாராளுமன்றத்துக்குப் பொறுப்பேற்கும்.
- கவர்னர் ஜெனரல் நாட்டின் தலைவராக இருப்பார். அவரை பிரித்தானிய மன்னர் நியமிப்பார்.
- நாட்டுக்கு மாகாண நீதிமன்றங்கள் தவிர ஒரு உச்ச நீதிமன்றம் இருக்கும்.
- மாகாணங்கள் மொழி அடிப்படையில் அமைக்கப்படும்.
- நாட்டின் மொழிகளாக இந்திய மொழிகள் இருக்கும். (ஸம்ஸ்கிருதம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, வங்காளி, குஜராத்தி ஆகியன). ஆங்கிலம் அனுமதிக்கப்படும்.
நேரு கமிட்டி அறிக்கை அல்லது நேரு அறிக்கை என்று அறியப்பட்ட இந்த அறிக்கை 1928 லக்னோ அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. விவாதத்தில் முஸ்லிம் லீக் சில கோரிக்கைகளை வைத்தது.
- 1/3 பிரதிநிதித்துவம் முஸ்லிம்களுக்கு எல்லாச் சபைகளிலும், அமைச்சரவையிலும் தேவை.
2.பஞ்சாப் வங்கம் ஆகிய மாகாணங்களில் முஸ்லிம்களுக்குத் தனியான ஒதுக்கீடு வேண்டும். - மத்தியில் இருக்கும் அதிகாரங்கள் என்று வரையறுக்கப்பட்டவை மாகாணங்களின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். மாகாணங்களின் ஒப்புதலின்றி மத்திய அரசு எதுவும் செய்யக்கூடாது.
இதை ஹிந்து மஹாசபை எதிர்த்தது. பஞ்சாப் வங்கம் இரு இடங்களிலும் மத அடிப்படையில் ஒதுக்கீடு கூடாது. ஒரே மாதிரியான அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே சபைகளில் இருக்கவேண்டும் என்றது.
கூட்டத்தில் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் குறைவாக உள்ள பகுதிகளில் பிரதிநிதித்துவம் தரும் வகையில் மாற்றம் செய்யப்படும் என்றும், மற்றபடி தனியான முஸ்லிம் தொகுதி என்று அவர்கள் மட்டுமே வாக்களிப்பதும் போட்டியிடுவதுமான அமைப்பு நிராகரிக்கப்படுகிறது என்றும் தீர்மானித்தது.
இதை ஜின்னா எதிர்த்தார். 1929ல் கல்கத்தா அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அவர் 14 கோரிக்கைகளைக் கொடுத்து உரிமைப் பிரச்சனை எழுப்பினார். விவாதங்கள் தொடர்ந்தன. ஜவஹர்லால் நேரு இவை ஜின்னாவின் முட்டாள்தனமான 14 கோரிக்கைகள் என்றார். அம்பேத்கர், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், வல்லப்பாய் படேல் உள்ளிட்ட தலைவர்கள் ஜின்னாவின் ஒவ்வொரு கோரிக்கைக்கும் தக்க பதில் கொடுத்தார்கள். ஜின்னா தன் கோரிக்கைகளின் நிராகரிப்பை ஒப்புக்கொள்ளாமல் தனி நாடு கேட்டார். இது தேசப்பிரிவினை என்ற கொடூரத்தில் வந்து முடிந்தது.
ஒரு நாடல்ல மாநிலங்களின் கூட்டமைப்பு என்ற ராகுலின் வாதத்தைப் பலரும் கிளிப்பிள்ளை போல ஒப்பித்துவரும் வேளையில் இது பற்றிய மற்றொரு தகவல் இவர்களது அடிப்படையற்ற வாதத்தைத் தகர்க்க உதவும்.
1948ல் அரசியல் நிர்ணய சபையிலும் இந்தக் கோரிக்கைகளில் சில விவாதிக்கப்பட்டு அம்பேத்கர், படேல் உள்ளிட்டோரால் ஆணித்தரமான தர்க்கங்களின் மூலம் நிராகரிக்கப்பட்டது.
அரசியல் நிர்ணய சபை வரைவுக்குழுவின் தலைவர் என்ற முறையில் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் விவாதத்தின் போது பேசியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வாதம்.
“வரைவுக்குழு ஒரு விஷயத்தை ஐயந்திரிபற தெளிவுபடுத்த விரும்புகிறது. இந்தியா ஒரு கூட்டமைப்பு என்று நாம் பேசிய போதிலும் இந்தக் கூட்டமைப்பு சமஸ்தானங்கள் மாகாணங்கள் சேர்ந்து உடன்படிக்கை அமைத்துக் கொண்டு இணைந்தது அல்ல. எந்த மாகாணத்துக்கும், சமஸ்தானத்துக்கும் இதிலிருந்து பிரிந்து செல்ல உரிமை இல்லை. பிரிக்கவியலாதது என்ற அடிப்படையில் தான் இந்தக் கூட்டமைப்பு ஒன்றியம் என்றாகிறது.
நிர்வாக வசதிக்காக நாடும், மக்களும் பல்வேறு பிரிவுகளாக இருந்தாலும் இந்த நாடு ஒருங்கிணைந்த முழுமையான அமைப்பாகும். இந்த நாட்டு மக்களும் ஒரே மக்களாக ஒரே மூல இடத்தினராக ஒரு குடையின் கீழேதான் இருப்பர். அமெரிக்கர்கள் மாகாணங்கள் ஒன்றியத்தில் இருந்து பிரிந்துபோக உரிமையில்லை என்பதை உள்நாட்டுப் போர் நடத்தி நிறுவினர். இந்த வரைவுக்குழு பிறகாலத்தில் ஊகங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் இடம் வைக்காமல் இதை முதலிலேயே தெளிவுபடுத்திவிடுகிறது.”
(http://164.100.47.194/Loksabha/Debates/Result_Nw_15.aspx?dbsl=144&ser=&smode=)
ராகுல் தற்போது பேசிய நாடல்ல கூட்டமைப்பு என்ற பேச்சுக்கு அடிப்படை அவரது எள்ளுத்தாத்தா மோதிலால் நேரு கொடுத்த அறிக்கை. மாகாணங்கள் சேர்ந்து அமைத்த கூட்டமைப்பாக இந்தியா இருக்கும் என்று தன் முன்னோர் பேசியதே Idea of India என்று எண்ணிப்பேசிவிட்டார் போலிருக்கிறது. இந்தியா குறித்த அந்த எண்ணவோட்டம் நிராகரிக்கப்பட்டு, ஒரே நாடு, ஒரே கொடி என்று நாம் ஒரே சுதந்திர நாடாகச் செயல்படுவது புரியவில்லையா அல்லது முப்பாட்டனாரின் சொல்லுக்கு மிஞ்சி வேறு யார் பேசலாம் என்ற மிதப்பில் ராகுல் காந்தி பேசுகிறாரா தெரியவில்லை.
நம் நாட்டின் வரலாறு பற்றியும் பார்க்கலாம்:
ஆட்சியில் இருப்போருக்கு வரலாறு தெரியாது என்று சொன்ன ராகுல் மேற்கொண்டு பேசுகையில் மன்னராட்சியைக் காங்கிரஸ் 1947ல் ஒழித்துவிட்டது என்றார். இதற்குச் சிரிக்கலாமா கோபப்பட்டு எதிர்வினை ஆற்றலாமா என்று ஒரு விவாதம் செய்யலாம். அரசவாரிசு போல நடந்து கொண்டு தனக்கு எதிர்க்கருத்துச் சொன்னவர்களைப் புறந்தள்ளிப் பதவி பெற்ற பெருமை 65 ஆண்டுகாலம் ஆண்ட பரம்பரையான ராகுலின் பாட்டனாரில் தொடங்குகிறது.
ஏப்ரல் 29, 1946ல் பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று மாகாண காங்கிரஸ் கமிட்டிகள் ஓட்டுப் போட்டன. மௌலானா அபுல்கலாம் ஆசாத் போட்டியிட விரும்பினார். ஆனால் தனக்குப் பிரதமராகும் கனவு இருக்கிறது என்று காந்திஜியிடம் சொல்லி அவர் மூலம் மௌலானாவைத் தடுத்தார் ஜவஹர்லால் நேரு. படேலும் நேருவும் போட்டியிட்டனர். அதில் 15ல் ஒரு ஓட்டுக் கூட ராகுலின் பாட்டனார் ஜவஹர்லால் நேருவுக்குக் கிடைக்கவில்லை. 12 மாகாணங்கள் சர்தார் வல்லப்பாய் படேலைத் தேர்ந்தெடுத்தன. 3 மாகாணங்கள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.
ஜனநாயக முடிவுக்கு மாறாக காந்திஜி தன் முழு ஆதரவை நேருவுக்குத் தந்து காரியக் கமிட்டியை நேருவைத் தேர்ந்தெடுக்கச் செய்தார். அதன்பிறகு காரியக் கமிட்டியின் முடிவைக் காட்டித் தன் முடிவையும் சொல்லிப் படேலை விலக்கிவிட்டு நேருவைக் கொண்டு வந்தார். இதில் இராகுலர் ஜனநாயகத்தைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தால் குறைந்தது பத்துப் பக்கங்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கலாம்.
ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கி அடிப்படை உரிமைகளை மறுத்து மக்களைப் பற்றிய கவலையில்லாத அரசர் போல நடந்து கொண்டது யார் என்று வரலாற்றைப் பார்ப்போம்.
Romesh Thappar vs The State Of Madras on 26 May, 1950 இந்த வழக்கில் ஒரு பத்திரிகையை சென்னை மாகாணத்தில் அப்போதைய அரசு தடை செய்தது. அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் பத்திரிகைக்காரர். நீதிமன்றம் தடை தவறு என்றது.
இந்தத் தீர்ப்பை அடுத்து அரசியல் சாசனப் பிரிவு 19ல் (அடிப்படை உரிமைகள்) முதல் திருத்தம் கொண்டு வந்து:
1. தக்க காரணங்களுக்காக
2. வெளிநாட்டு தலையீடுகள் தவிர்க்க, உறவுகளைப் பாதுகாக்க,
3. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க,
4. வன்முறையைத் தடுக்க
இந்த நான்கு காரணங்களுக்காக அடிப்படை உரிமைகள் மறுக்கப்படலாம் என்று அரசியல் அமைப்பைத் திருத்தினார் நேரு.
மஜ்ரூ சுல்தான்புரி என்ற கவிஞர் நேரு காமன்வெல்தின் அடிமையா என்று ஒரு கவிதை எழுதினார். அவரை ஒரு ஆண்டு முழுவதும் சிறையில் வைத்தார் நேரு.
1956ல் வெளியான The evolution of the British empire and commonwealth என்ற புத்தகம் ஆங்கிலேயர் மனம் புண்படும் என்று இந்தியாவில் தடை செய்யப்பட்டது. ஆனால் அமெரிக்காவிலும், கனடாவிலும், இங்கிலாந்திலும் அந்தப் புத்தகம் விற்பனையில் இருந்தது.
1960ல் Arthur Koestler என்பவர் எழுதிய The Lotus and the Robot என்ற புத்தகம் காந்திஜியின் பெண்கள் சம்பந்தப்பட்ட சில செயல்பாடுகளைப் பேசியதால் தடை செய்யப்பட்டது.
1962ல் ஸ்டான்லி வால்பர்ட் என்பவர் எழுதிய கற்பனைக் கதையான Nine Hours to Rama என்ற புத்தகம் தடை செய்யப்பட்டது. காரணம் காந்திஜியைச் சுடும் முன்பான 9 மணி நேரங்களில் கோட்சேயின் மனநிலையை இந்தப் புத்தகம் அலசியது.
நோபல் பரிசு பெற்ற பிரபல எழுத்தாளர் வி எஸ் நைபால் அவர்களின் An Area of Darkness என்ற புத்தகம் 1964ல் தடை செய்யப்பட்டது. காரணம் அது அன்றைய இந்தியாவின் குறைகளை எடுத்துச் சொன்னது.
1968ல் ஜான் டல்வி என்ற இந்திய ராணுவத்தின் 7ஆவது பிரிகேட் கமாண்டராக சீனப் போரில் சண்டையிட்டு சீனத்தால் சிறைப்பிடிக்கப்பட்டுச் சித்திரவதைகளுக்குப் பின் விடுவிக்கப்பட்ட ராணுவ அதிகாரி எழுதிய Himalayan Blunder என்ற புத்தகம் தடை செய்யப்பட்டது. காரணம் நேருவும் அவரது உறவினரான ராணுவத் தளபதியும் செய்த சொதப்பல்களை அலசியது இந்தப் புத்தகம்.
1975ன் அவசர நிலைப் பிரகடனம் என்று அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டது எந்த வகையிலான மக்களாட்சியின் மாட்சிமை என்று இராகுல காந்தியார் விளக்குவாரா?
அவசர நிலையின் போது நடந்த அத்துமீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஷா கமிஷன் “அவசர நிலையின் போது சஞ்சய்காந்தி, வி.சி.சுக்லா, பன்சிலால் போன்றோர் சிற்றரசர்கள் போலச் செயல்பட்டனர். சட்டம் என்ற ஒன்று இருந்ததாகவே இவர்கள் கருத்தில் கொள்ளவில்லை.” என்று கடுமையான சொற்களால் குற்றம் சாட்டியது. அரசாட்சியை காங்கிரஸ் 1947ல் ஒழித்தால் 1975ல் எப்படி காங்கிரசிலேயே சிற்றரசர்கள் இருந்திருக்க முடியும்? இவர்கள் சிற்றரசர்கள் என்றால் பேரரசர்/பேரரசி யார்?
1975ல் Michael Edwardes என்பவர் எழுதிய Nehru: A Political Biography என்ற புத்தகத்தை இந்திரா காந்தி தடை செய்தார். காரணம் நாட்டின் முதல் பிரதமரான வழிமுறைகள் முதல் சீனப் போரைக் கையாண்ட விதம் வரை நேருவின் அரசியல் செயல்பாடுகள், வழிமுறைகள் அனைத்தையும் அந்தப் புத்தகம் விதந்தோதாமல் உண்மை பேசியது.
1978ல் கிஸ்ஸா குர்ஸி கா (நாற்காலியின் கதை) என்ற திரைப்படத்தில் ஒரு ரீலைக்கூட விடாமல் தேடிப்பிடித்து அழித்தார் சஞ்சய் காந்தி.
1987ல் ராஜீவ் காந்தி Indian Post Office (Amendment) Bill என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் மூலம் யாருடைய கடிதத்தையும் அரசு சந்தேகத்தின் அடிப்படையில் பிரித்துப் படிக்க முடியும். அரசுக்கு எதிரான கருத்துக்கள் இருந்தால் மேல் நடவடிக்கை பாயும். இதை அப்போதைய குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் அங்கீகரிக்க மறுத்துவிட்டார். அதனால் குடியரசு தினத்தின் முந்தைய நாள் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையை ஆகாசவாணியும், தூர்தர்ஷனும் தணிக்கை செய்து பிரதமர் உத்தரவுப்படி சில பகுதிகளை நீக்கிவிட்டு ஒலி/ஒளிபரப்பின. (https://www.indiatoday.in/magazine/cover-story/story/19870228-president-zail-singh-questions-govt-decisions-much-to-pm-rajiv-gandhi-embarrassment-798591-1987-02-28)
14 ஆண்டுகள் நாடாண்ட ஜவஹர்லால் நேரு 8 முறைகள் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைத்தார்.
14 ஆண்டுகள் அரசாண்ட இந்திரா காந்தி 50 முறைகள் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைத்தார்.
5 ஆண்டுகள் அரசாண்ட ராஜீவ் காந்தி 6 முறைகள் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைத்தார்.
10 ஆண்டுகள் ஆண்ட மன்மோகன் சிங் 11 முறைகள் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைத்தார்.
இந்த நிகழ்வுகளின் போது வரலாறும் ஜனநாயகமும் லட்சத்தீவில் ஓய்வெடுத்ததா என்று கேட்கலாமா இராகுல காந்தியாரே?
இன்னொரு முக்கிய நிகழ்வைப் பார்க்கலாம். அவசரகால நிலையின் போது நமது அரசியலமைப்பில் Secular, Socialist ஆகிய சொற்களைப் பாராளுமன்ற விவாதம் இல்லை, மக்களிடம் கருத்துக் கேட்பும் இல்லாமல் சேர்த்தார் ராகுலின் பாட்டியார் இந்திராகாந்தி.
15, நவம்பர் 1948 அன்று அரசியல் நிர்ணய சபையில் அரசியல் சாசனத்தின் முகவுரையில் India shall be a Secular, Federal, Socialist Union of States என்றிருக்க வேண்டும் என்று பேராசிரியர் கே.டி.ஷா என்பவரால் திருத்தம் கொண்டுவரப்பட்டதற்கு பல உறுப்பினர்கள் எதிர்த்தார்கள். Secular என்பதைச் சொன்னால் அவரவர் மதங்களைக் கடைப்பிடிக்கலாம் என்ற உரிமைக்குப் பங்கம் வரும், Socialist என்று வரையறை செய்துவிட்டால் வேறு கொள்கைகளுக்குக் காலத்தின் தேவைகளுக்கேற்ப மாறுவதில் சிக்கல் வரும் என்று சொன்னார்கள்.
இதற்குப் பதில் சொல்லிப் பேசினார் வரைவுக்குழுவின் தலைவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.
“அரசியல் சாசனம் என்பது நாட்டையும் மாகாணங்களையும், பல்வேறு அமைப்புகளையும் நிர்வகிக்க ஒரு நுட்பத்தைத் தருகிறது. இது ஒரு சிலர் அதிகாரத்தில் இருப்பதற்கோ, சில குழுக்கள் ஆட்சி செய்வதற்கோ ஆன அமைப்பு இல்லை. நாட்டின் கொள்கை என்ன, சமுதாயத்தை எப்படி ஒருங்கிணைக்கவேண்டும், சமூகப் பொருளாதார விஷயங்கள் எப்படி இருக்கவேண்டும் ஆகியன மக்களால் முடிவு செய்யப்படவேண்டும். அரசியல் சாசனத்தில் ஒரு சமுதாயத்தை இப்படி வைத்துக் கொள்ள வேண்டும், பொருளாதாரத்தை இப்படி நிர்வகிக்கவேண்டும் என்று சொல்வது அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கிய சுதந்திரத்துக்கு முரணானது. இன்று பெரும்பான்மை முடிவு என்று எடுத்து பொருளாதாரம் சோஷலிச முறையில் நிர்வகிக்கப்படவேண்டும் என்று நாம் சொல்லிவிடலாம். பிற்காலத்தில் மக்கள் தங்கள் தேவைகள், காலத்தின் போக்கு இவற்றுக்கு ஏற்ப வேறு முறைக்கு மாற வேண்டும் என்றால் அதை நாம் தடுக்கக் கூடாது. மக்களை மத நம்பிக்கை அற்றவர்களாக, சோஷலிஸ பொருளாதார முறை கொண்டவர்களாக, கூட்டாட்சியில் இருப்பவர்களாக நாம் கட்டுப்படுத்தி வைக்க வேண்டியதில்லை. மக்களே அதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அதுதான் ஜனநாயகம்.
மேலும் மக்கள் நல்வாழ்வு என்ற காரணத்தை வைத்துச் சோஷலிஸத்தை நாம் ஆதரித்தோமானால் அதை சாசனத்தில் எழுதி வைக்கவேண்டியதில்லை. பகுதி 6ல் மக்கள் சபைகளும், நிர்வாக எந்திரமும் செயல்பட வேண்டிய அடிப்படைகளை வகுத்துள்ளோம். பிரிவு 31ல் சொல்லப்பட்டுள்ளதைப் பாருங்கள்:
அரசு தன் கொள்கைகளை பின்வரும் விஷயங்களை ஒத்து அமைக்க வேண்டும்:
- குடிமக்கள், ஆண் பெண் இருபாலருக்கும், அடிப்படை வாழ்வாதாரம் உறுதி செய்யப்படவேண்டும்.
- சமூகத்தின் நல்வாழ்வுக்குத் தேவையான மூலப்பொருட்கள் பொது நன்மைக்கு எதிரான வகையில் சொந்தம் கொண்டாடப்படவோ, கட்டுப்படுத்தப்படவோ கூடாது.
- செல்வமும் பொருளாதார வேலைகளுக்கான மூலப்பொருட்களும் தடையின்றி ஓரிடத்தில் குவியாது பரவலாக்கப்படவேண்டும்.
- ஆண் பெண் இருபாலருக்கும் சமமான வேலையும், சமமான ஊதியமும் வழங்கப்படவேண்டும்.
இந்த அடிப்படையில் India shall be a Secular, Federal, Socialist Union of States என்ற திருத்தத்தை நான் நிராகரிக்கக் கோருகிறேன்.”
(சபை திருத்தத்தை நிராகரித்தது) http://164.100.47.194/loksabha/writereaddata/cadebatefiles/C15111948.html
இப்படி நிராகரிக்கப்பட்ட திருத்தத்தை ஏன் 1975ல் அரசியல் சாசனத்தில் விவாதம் இன்றிப் புகுத்தினார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி? இராகுலர் தக்க பதில் சொல்வாரா?
இன்னும் நிறைய இருக்கிறது. கூகிளில் தேடினால் படித்து மாளாது ராகுலின் குடும்பமும் அவர்கள் வைத்த ஆட்களும் ஜனநாயகத்தைப் பாடுபடுத்திய வரலாறு. ட்விட்டரில் திரு ஆனந்த ரங்கநாதன் அவர்கள் கருத்துரிமையின் கழுத்து நெறிபட்டது பற்றி நீண்ட பட்டியல் கொடுத்திருப்பார், அதையும் படித்துக் கொள்ளலாம்.
இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் பண்பாடு வேறானது
தமிழ் மக்களின் பண்பாடு தனியானது, மொழி அடிப்படையிலான பிரிவினை பெரிய அளவில் பேசப்படும் மாநிலத்தைக் குறிப்பிட்டுப்பேசி தேசப் பிரிவினைக்குத் தூபம் போட்டார் ராகுல் காந்தி. இதனை மேற்கோள் காட்டி ”இந்திய மக்கள் வெவேறானவர்கள், பிரி நாட்டை” என்று பிரிவினைவாதிகள் குதிக்கிறார்கள்.
குழந்தைக்கும் இந்தத் தேசத்தின் ஒற்றுமையை கற்றுக்கொடுத்த மரபு தமிழனது.
வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் – இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.
வேத முடையதிந்த நாடு, – நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.
மஹாகவி பாரதியின் இந்த வரிகளைக் கற்று வளர்ந்த மரபு தமிழர்களது. இது சமீபத்தில் சொல்லப்பட்டது என்று பிரிவினைவாதிகள் கூறலாம். புறநானூற்றில் காரிக்கிழார் என்ற புலவர் எழுதிய பாடலைத் தருகிறேன். பொருள் புரிந்து கொள்ளட்டும், அவர்களால் முடிந்தால்!
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின்குடக்கும்
பாண்டிய மன்னன் முதுகுடுமிப் பெருவழுதியை வாழ்த்திப் பாடிய காரிக்கிழார் வடக்கில் பனிபடர்ந்த இமய மலையும், தெற்கே குமரி முனையும், கிழக்கே சகர புத்திரர்கள் தோண்டிய சாகரமும், மேற்கே தொன்மையான கடலும் கொண்ட இந்தப் பூமியை ஆள்பவன் என்று பாடியுள்ளார். இமயம் முதல் குமரி வரை நம்நாடு என்பது சங்ககாலம் முதலே இருக்கிறது.
இப்படியெல்லாம் இருக்கிறது என்பது இங்கிருக்கும் தமிழை வைத்து அரசியல் செய்பவர்களுக்கே தெரிந்திருக்க வாய்ப்புக் குறைவு. இராகுலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. இவர்கள் தமிழ் மக்கள் பற்றிப் பேசுகிறார்கள். கேட்டுச் சிரிப்பு வந்தாலும் கவலையும் கூடவே வருகிறது.
பாகிஸ்தான் சீனா கூட்டுச் சேர்ந்த கதை:
இது 1960களில் இருந்தே நடந்து வந்த விஷயம். இதை ஏன் யாரும் பட்டென்று ராகுலின் முகத்திற்கு நேரே சொல்லவில்லை? அவரது கொள்ளுத்தாத்தா காலத்தில் இருந்து சீனாவும் பாகிஸ்தானும் கூட்டுச் சேர்ந்ததும், காரகோரம் பகுதியில் நம் நிலத்தைச் சீனாவுக்குப் பாகிஸ்தான் தாரை வார்த்ததும் தெரியாதா என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் கேட்டுள்ளார். காரகோரம் நிலத்தைக் கொடுத்ததோடு நில்லாமல் எதிர்காலத்தில் இந்தியாவுக்கே முழுக்கஷ்மீரமும் சொந்தமாகிவிட்டால் சீனத்துக்குக் கொடுக்கப்பட்ட இடம் இந்தியாவுக்குச் சேரக்கூடாது என்ற எண்ணத்தில் யாருக்குக் கஷ்மீரம் முழுமையாக உரித்தானாலும் அவர்கள் சீனாவுடன் இந்த நிலத்தின் உரிமை பற்றிப் பேசி முடிவு செய்யவேண்டும் என்ற ஷரத்தை ஒப்பந்தத்தில் சேர்த்தனர் பாகிஸ்தானும் சீனாவும்.
அது எப்படி நம் இடத்தைக் கொடுக்கலாம் பாகிஸ்தான்? நம் சமாதானப்புறா தான் எடுத்துக் கொண்ட ஒரே சம்ஸ்தான ஒருங்கிணைப்பைச் செய்து முடித்த லட்சணக்கோலத்தின் விளைவு இது. அடித்து விரட்டி என் இடத்தில் கால் வைத்தால் பார் என்று சொல்லாமல் ஐநா சபைக்குப் போய் ஆளுக்குப் பாதி என்று அழுதுவிட்டு வந்தததில் விடிந்த விடியல் இது.
1971ல் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிங்கர் பாகிஸ்தானுக்கு வந்துவிட்டு ரகசியமாக சீனாவுக்கு விஜயம் செய்து 1972ல் அமெரிக்க அதிபர் நிக்ஸன் சீனாவுக்கு வந்ததற்கு அடித்தளமிட்டார். ஏற்பாடுகள் செய்தது பாகிஸ்தான். (அமெரிக்க தேசியப் பாதுகாப்பு மையக் காப்பகத்தின் ரகசியம் நீக்கப்பட்ட ஆவணங்கள் இதைச் சொல்கின்றன)
1960களில் இருந்து சீனம் பாகிஸ்தானுக்குப் பணமும் ஆயுதமும் வழங்கிவருகிறது. இதற்கான ஒப்பந்தம் 1956ல் போடப்பட்டது. (https://www.globalvillagespace.com/premier-zhou-enlai-modern-chinas-founding-leader-was-a-great-friend-of-pakistan/) பாகிஸ்தானின் நெருங்கிய நண்பரான இந்தச் சூ என் லாய் சொன்னார் என்று இந்தி – சீனி பாய் பாய் என்று நாம் சகோதரத்துவக் கனவில் மிதந்திருந்தோம் 1962 வரை.
1980களில் பாகிஸ்தான் சீனாவுக்கு அணு ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்களைக் கடத்திவிட்டது. பதிலுக்கு பாகிஸ்தானின் அணு உலைகளுக்குச் சீனா பணம் கொடுத்தது. The China-Pakistan Axis: Asia’s New Geopolitics என்ற ஆண்ட்ரூ ஸ்மால் என்பவர் எழுதிய புத்தகத்தில் சீனப் பாகிஸ்தான் உறவுகுறித்த விரிவான அலசல்கள் உள்ளன.
இதெல்லாம் சீனாவோடு 2008ல் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட ராகுல் காந்திக்குத் தெரியாதா? (W.P.(Crl.) No. 000192 – / 2020 – Diary No.- 13364 – 2020 – SHASHANK SHEKHAR JHA vs. INDIAN NATIONAL CONGRESS) இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு கட்சி மற்றொரு நாட்டோடு போட்ட ஒப்பந்தம் பற்றியும் அது ரகசியமாக வைக்கப்பட்டது பற்றியும் அதிர்ச்சி தெரிவித்தது.
ராகுல்காந்தி பற்றிக் கிண்டல் செய்தும், இடக்கையால் புறந்தள்ளியும் பேசுவோர் ஒரு விஷயத்தைக் கவனிக்கத் தவறுகிறார்கள்.
ராகுல் காந்தி பரவலாக சமூக ஊடகங்களில் நையாண்டி செய்யப்படுவதைப் போல கோமாளி அல்ல. அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வைத்துக் கொண்டு தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தேவைப்படும் நிகழ்வுகளை நிறைவேற்ற அச்சாரம் போட்டுக்கொள்கிறார். தன் எதிரிகள் வளர்வதைத் தடுக்க எந்த அதீத நிலைப்பாட்டையும் எடுப்பார் இவர் என்பதையே இந்தப் மொழி/பண்பாட்டுப் பிரிவினை, ஒரே நாடல்ல கூட்டமைப்பு, Idea of India போன்ற திரிபுப் பேச்சுகள் காட்டுகின்றன. அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் எச்சரிக்கை கொண்டுள்ளனர் என்பதைப் பிரதமர் தன் பதிலுரையில் சொல்லிவிட்டார். இந்த விஷயங்களை மக்களிடம் சேர்த்து மக்களை விழிப்படையச் செய்யவேண்டும். அதுவே இந்நிலையில் நம் தலையாய பணி. வந்தே மாதரம்.