ஆன்மிகம்
Trending

அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே!

”சாமி இது குசேலரின் கதை” என்று ஆரம்பித்தாள் அந்தக் குட்டிப் பெண்.

குசேலருடைய உண்மையான பெயர் சுதாமா. சிறுவயதில் கண்ணனும் சுதாமாவும் சாந்தீபினியின் ஆசிரமத்தில் தங்கி குருகுலக் கல்வி பயின்றார்கள். குருகுலம் முடிந்து அவர் அவர் தம் ஊருக்குத் திரும்பினார்கள். கிருஷ்ணர் ருக்மிணியைத் திருமணம் செய்துகொண்டு துவாரகையை ஆட்சி செய்து வந்தார்.

சுதாமா ஏழை பிராமணர். அவர் சுசீலா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். சுதாமாவிற்கு நிறையக் குழந்தைகள். குடும்பம் வறுமையில் தவித்தது. குழந்தைகளுக்குப் பால் வாங்கக் கூட முடியாமல் தவித்தார். குழந்தைகள் “அப்பா பசிக்குது” என்று கேட்கக் கூடத் தெம்பு இல்லாமல் இருந்தார்கள். சுதாமாவும் குழந்தைகளுக்கு ஏதாவது உணவு கிடைக்கிறதா என்று தேடி வெளியே செல்வார்.

சாலைகளில் அவரைக் கிழிந்த ஆடைகளுடன் பார்த்தவர்கள் ‘குசேலன்’ என்று அழைப்பார்கள். அதுவே நாளடைவில் அவருடைய பெயராகிவிட்டது(குசேலன் என்றால் வடமொழியில் கிழிந்த ஆடையை உடையவன் என்று பொருள் ). வெளியே சென்ற அப்பா ஏதாவது சாப்பிட எடுத்துக்கொண்டு வருவாரா என்று வாசத் திண்ணையில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டு இருப்பார்கள். சில நாள் உணவு கிடைக்கும், பல நாள் கிடைக்காது.

கணவர் இப்படிக் கஷ்டப்படுகிறாரே, குழந்தைகள் இப்படிக் கஷ்டப்படுகிறதே என்று வருத்தப்பட்டாள் அவர் மனைவி. ஒரு நாள் குழந்தைகளின் வாடிய முகத்தைப் பார்த்த சுசீலைக்கு ஏக்கம் அதிகமாகியது. தன் கணவரிடம் “கண்ணன் உங்கள் பள்ளித் தோழன். துவாரகைக்கே ராஜா. நண்பரின் குடும்பம் பசியால் வாடினால் அவருக்குத் தானே இழுக்கு. அவரிடம் நம் ஏழ்மை நிலையைச் எடுத்துச் சொன்னால், அவர் நமக்கு நிச்சயம் உதவி செய்வார்” என்றாள்.குசேலர் தயங்கினார் பிறகு கிளம்பினார்.

தயங்கியதற்கு காரணம் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் இருந்தது ஆனால் அவனிடம் செல்வத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆசை இல்லை. கிளம்பியதற்கு காரணம் – கண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை! அவனைப் பார்ப்பதே ஆனந்தம், பாக்கியம் என்று நினைத்துப் புறப்பட்டார்.

துவாரகைக்குக் கிளம்பியபோது சுசீலை பக்கத்து வீட்டுக்குச் சென்று ஒரு பிடி அவல் பொரியைக் கடனாக வாங்கி வந்தாள். குசேலரும் தன் கிழிந்த ஆடையை இன்னும் கொஞ்சம் கிழித்து அதில் அவலை முடிந்துகொண்டு புறப்பட்டார். துவாரகைக்குள் நுழைந்தார். நகரமே செல்வச் செழிப்பாக இருந்தது. கண்ணனின் அரண்மனை தெரிந்தது. முத்துக்கள் பதித்த தங்கக் கதவுகள். அடுக்கு மாடிகள். பிரமித்துப் போனார். தயங்கித் தயங்கி அதன் அருகே சென்றார். அரண்மனை வாசலுக்கு வந்த நின்றார். காவலாளிகள் அவரைத் தடுத்தார்கள். குசேலருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

மேலே நின்றுகொண்டிருந்த கண்ணன் குசேலரைப் பார்த்து ஓடோடி வந்து, தழுவிக்கொண்டான். உள்ளே அழைத்துச் சென்றான். அங்கே கண்ணன் அமரும் பொன்னாசனம் இருந்தது. ’வா சுதாமா இதில் உட்கார்ந்துகொள்’ என்று அதில் அமரச் செய்தான். பார்த்தவர்கள் வியக்க, சுதாமாவிற்கு வியர்த்தது. உடனே விசிறி எடுத்து விசிறினான். ’ரொம்ப தூரம் பாவம் நடந்து வந்திருக்கிறாய்’ என்று அவருடைய பாதங்களை வாசனை தண்ணீரால் கழுவினான். அதை தன் தலையில் தெளித்துக்கொண்டான்.

பிறகு அவருடைய உடம்புக்குச் சந்தனம் முதலியவற்றைப் பூசினான். அப்போது குசேலருடைய உடம்பெல்லாம் எலும்புக் கூடாகத் தெரிந்தது. அப்போது கண்ணன் அவர் இடுப்பிலிருந்த சின்ன மூட்டையைப் பார்த்து “சுதாமா இது என்ன ? அண்ணி சுசீலை எனக்குச் சாப்பிடுவதற்குக் கொடுத்து அனுப்பியதா ?” என்று கேட்டான். குசேலர் அந்த அவலைக் கொடுப்பதற்குக் கூச்சப்பட்டார். மௌனமாக இருந்தார்.

கண்ணன் புரிந்துகொண்டு அதை அவர் இடுப்பிலிருந்து பிடுங்கி திறந்து பார்த்து “அடடே அவலா ? எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று ஒரு பிடி எடுத்து வாயில் போட்டுக்கொண்டான். இரண்டாவது பிடியை எடுக்கும்போது ‘ஒரு பிடி அவலே போதுமானது.’ என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் ருக்மிணி.

பிறகு இருவரும் தங்கள் குருகுல வாசத்தின் பழைய நினைவுகளில் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். பேசிக்கொண்டு இருக்கும் அவர்களுக்குச் சாமரம் வீசினாள் ருக்மிணி. அவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை. குசேலர் அன்று இரவு அங்கே தூங்கிவிட்டு, மறுநாள் காலைப் புறப்பட்டார்.

தான் வந்த காரணம்பற்றி எதுவும் கூறவில்லை. திரும்பிப் போகும் வழி எல்லாம் கண்ணனின் கனிவை நினைத்து உருகினார். கண்ணன் என்னைக் கண்டதும் தழுவிக்கொண்டான் என்று தன் தோளைத் தொட்டுப்பார்த்தார். அவன் பூசிவிட்ட சந்தனத்தை முகர்ந்து பார்த்தார். கண்ணனின் வாசனையாக இருந்தது.. ஏழ்மை, வருமை இருந்ததால் தான் கண்ணனை நினைக்க முடிந்தது. ஒரு வேளை பணம் இருந்தால் கண்ணனை மறந்திருப்பேனோ என்று நினைத்தார். ஊர் வந்து சேர்ந்தார். அவருக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது.

அவருடைய குடிசையைக் காணவில்லை. குடிசை இருந்த இடத்தில் பெரிய அரண்மனை இருந்தது. பக்கத்தில் நீரோடைகளும், மயில்கள் நடனமாடிக்கொண்டும். நிறையப் பசுக்கள், பக்கத்தில் தன் குழந்தைகள் விளையாடிக்கொண்டும் இருந்தார்கள். குசேலரின் மனைவி அரண்மனையிலிருந்து வெளியே வந்தாள். பட்டுப்புடவையும், நகைகளும் அடையாளம் தெரியாமல் தவித்தார். பிறகு கண்ணனின் விளையாட்டைத் தெரிந்துகொண்ட குசேலர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

“நான் கேட்காமலே வேண்டியதைக் கொடுத்திருக்கிறான்” என்று அவன் கிருபையை நினைத்து உருகினார் என்று அந்தக் குட்டிப் பெண் கதையை நிறுத்திவிட்டு “குசேலர் போல நான் என்ன அவல் பொரியைக் கண்ணனுக்குக் கொடுத்தேனா ? அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன்” என்றாள்.

ராமானுஜர் “பெண்ணே குசேலர் குலசேகரை நினைவு படுத்துகிறார்” என்றார். “அப்படியா சாமி அதைச் கொஞ்சம் சொல்லுங்கள்” என்றாள் அந்தப் பெண்

“பெருமானே உன்னைத் தியானம் செய்து கொண்டு இருப்பவன் உலகச் செல்வத்தை விரும்பமாட்டான். ஆனாலும் அந்தச் செல்வம் தானே அவனைச் சென்று அடையும் என்கிறார்.

குலசேகரர் சொன்னதற்கு எடுத்துக்காட்டு குசேலர் தானே பெண்ணே!” என்றார் ராமானுஜர். அந்தப் பெண் “ஆம் சாமி” என்று தலையை ஆட்டினாள். அப்போது கூட இருந்த சிஷ்யர் ஒருவர்
“ குலசேகரர் சொன்னதற்கு குசேலர் எடுத்துக்காட்டுபோல, கூரேசரும் குசேலருக்கு எடுத்துக்காட்டு என்றார்.

“புதிராக இருக்கிறதே!” என்றாள் அந்தப் பெண் ஆர்வமாக.

“பெண்ணே ராமானுஜரின் வலது கைப் போன்ற சிஷ்யர் கூரேசர். அவருக்கு இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமண காலம் வந்தது ஆனால் திருமணம் தள்ளிபோனது. கூரேசரின் மனைவி ஆண்டாள் ’பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய வேண்டுமே’ என்றாள். கூரேசர் ’நம்பெருமாள் பார்த்துக்கொள்வார்’ என்றார்.

அதற்கு ஆண்டாள் இன்று கோயிலுக்குப் போகும்போது எதற்கும் நம்பெருமாளிடம் ஒரு வார்த்தை காதில் போட்டு வையுங்கள் என்றாள். ஆனால் தினமும் நம்பெருமாளை சேவிக்க செல்வார், ஆனால் கேட்க மாட்டார். ஒரு நாள் இன்று கேட்டுவிடுங்கள் என்று சொல்லி அனுப்பினாள் அவர் மனைவி. அன்று கூரேசர் நம்பெருமாளைச் சேவித்தார் ஆனால் கேட்காமல் தயங்கி நின்றார். நம்பெருமாள் ‘என்ன கூரேசரே ஏதோ சொல்ல வேண்டும் போல நிற்கிறீரே?” என்று கேட்கக் கூரேசர் மெதுவாக ‘ஆண்டாள், பிள்ளைகளுக்கு வயதாகி விட்டது’ என்று சொல்லச் சொன்னாள் என்றார். உடனே பெருமாள் அதற்கு நீர் ஏன் கவலைப்படுகிறீர்கள். நாம் பார்த்துக்கொள்கிறோம்’ என்று அனுப்பிவைத்தார். பிறகு பிள்ளைகளின் திருமணம் சிறப்பாக நடந்தது” என்றார்

ஆகா அருமை அருமை” என்றாள் அந்தச் சின்னப் பெண்.
ராமானுஜர் “பிள்ளாய்! தூய்மையான பக்தியும், வைராக்கியமுமே நமக்குச் சிறந்த ஆயுதங்கள்” என்றார்.

“ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே!” என்று அடுத்த கதைக்குத் தயாரானாள்.

(Visited 103 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close