மேற்குலகின் கட்டை பஞ்சாயத்து நியாயங்கள்
இந்த உக்ரைன் விவகாரத்தில் பல விதமான விஷயங்கள், வெளி வருவதை, உன்னிப்பாக கவனித்தால் சாமான்யனுக்கு மேற்கின் தகிடுதத்தம் நன்றாக விளங்கிவிடும்.
இந்த Big Tech கம்பெனிகள், வங்கிகள், நாடுகளின் கூட்டமைப்புகள், ஐ நா, சொஸைட்டிகள் பலதுமே, மேற்கின் கட்டுப்பாட்டில் இருப்பதை இந்த சண்டை நேரடியாகவே சொல்லிவிட்டது.
இந்த Big Tech கம்பெனிகள், அதாவது கூகுள், ஆப்பிள் போன்றவைகளுக்கு, அலைபேசி மற்றும் அலைபேசி மென்பொருள் மட்டுமே விற்பனை செய்வதில்லை. இவைகள், உங்களை ஆராய்ந்து, உங்களின் டேட்டாவை விற்பனை செய்கிறது. நாளைக்கு எத்தனை மணிக்கு, எதைப்பார்த்தால் பசி வரும், எந்த ஹோட்டலில் சாப்பிடலாம் என்பது வரை இவர்களிடம் டேட்டா இருக்கிறது. இவர்கள் புது உலக மாஃபியா. இவர்களை கட்டுப்படுத்துவது அமெரிக்காவும், மேற்கும்.
அமெரிக்காவிடம் பலன் எதிர்பார்த்து ரஷ்ய மக்களின் பண வர்த்தனைகளை கூகுள் பே, ஆப்பிள் பே போன்றவை முடக்கியது. இந்த பேமன்ட் ஆசாமிகள் மாஸ்டர், விசா கார்டுகளை வைத்து உங்களின் பேமன்டை ஆசீர்வதிக்கிறார்கள். இவர்களின் பிசினஸ் மாடலை பின்பு பார்ப்போம். இங்குதான் மத்திய அரசு UPI என்பதை தன்னகத்தே வைத்து, இதன் wrapperகளாக paytm, Google pay, போன்றவைகளை உபயோகப்படுத்தியது மாஸ்டர் ஸ்ட்ரோக். சந்தேக சிரோன்மணிகளும் தற்போது இதில் தைரியமாக பங்கெடுத்ததில், வெத்திலை பாட்டிகூட UPI அட்டையை காட்டி ஈறு தெரிய சிரிக்கிறாள்.
இரண்டாவதாக, இந்த ட்விட்டர், எப்பி போன்றவை, தன்னை தனி நாடுகளாக மட்டும் அறிவித்துக்கொள்ளவில்லை. மற்றபடி, இந்த தடி முண்டங்களால், நமது நிம்மதியும், ஹிஜாப், ஸ்கார்ஃப், தொப்பி, பனியன் என்று பலதும் கூறுகெட்டுப்போய் போராட்டம் நடத்த ஏதுவாகிவட்டது. இவர்களை சீனா துரத்தியடித்ததில் நஷ்டம் இந்த சமூக வலைதள தடியர்களுக்குத்தான்.
மூன்றாவதாக, நாம் மேலே விவாதித்த, யூபிஐ எல்லாம் அமெரிக்காவில் இல்லை. வங்கிகள் பேயாய் எதிர்க்கும். காரணம், க்ரெடிட் கார்டுகளும், டெபிட் கார்டுகளும், விசா, மாஸ்டர் போன்ற கம்பெனிகளுக்கும், காசை கொட்டுகிறது. கடைசியாய் நான் எப்போது டெபிட் கார்டோ, பணம் ஏடிஎம்மில் எடுத்ததையோ மறந்தே விட்டேன். இப்படியான ரத்தம் உறிஞ்சும் வங்கிகள் இதையெல்லாம் வர விடாது தடுக்கும். இவைதான் ரஷ்ய வங்கிகளின் அமெரிக்க அக்கவுண்டுகளை, பைடன், காலால் இட்ட கட்டளைகளை தலையால் செய்து முடித்தது. மோதி அரசின் ரூபே மாஸ்டர் விசாவிற்கு சாவுமணி அடித்துவிட்டது என்பது உபரிச்செய்தி.
சொஸைட்டி என்று சொன்னது, SWIFT. இதன் மூலம் வங்கிகள் செக்யூர்டு மெஸேஜ்களை அனுப்பி உலகமெங்கும் பணம் அனுப்பலாம். இங்குதான் ரஷ்யாவை இந்த சொஸைட்டி தடை செய்துவிட்டது. மேலே சொன்ன எல்லா தடைகளும் ஏதோ ஒரு அரசாங்கத்தின் தயவால் நடந்து விட்டது.
ரஷ்யாவின் தனி நபர்கள்,oligarchy களின் சொத்துகளை முடக்கியதும் நடந்து விட்டது. செல்ஸி க்ளப் விற்பனைக்கு என்று ரஷ்ய முதலாளி அறிவித்துவிட்டார். இதன் பணம், ஒரு தருமஸ்தாபனத்திற்கு போகிறது.
இந்த நியாயங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இதே அமெரிக்கா, இல்லாத குண்டை தேடி ஈராக் போனது. லிபியாவை உதைத்தது, ஆப்கனில் ஆண்டு, பின் ஓடி வந்தது. இதெல்லாம் செய்த அமெரிக்க அரசை ஏன் மேல் சொன்ன நிறுவனங்கள் தடை செய்யவில்லை. இன்று ரஷ்யா செய்ததைத்தானே அமெரிக்கா அன்று செய்தது..? என்ன வித்யாசம்.? ரத்தம் ஒரே நிறம்தானே..?
நாளை, POK வை இந்தியா நம் பக்கம் நகர்த்தினால் தடை வந்தாலும், உள்ளூர் வணிகம் இந்த UPI காரணம் தடை படாது. இரண்டாவதாக, வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளுக்கு ஸ்விப்டுக்கு மாற்றாக இருக்கப்போவது, பிட்காயின் அல்லது எதிரியம்தான். இதை எந்த கொம்பனாலும் தடை செய்யவே முடியாது. என்ன..? சரக்கு பரிவர்த்தனைகளை, இரண்டு மூன்று துறைமுகத்துக்கு மாற்ற வேண்டி வரலாம்.
நெட்ஃப்ளிக்ஸ் ரஷ்யாவை தடை செய்துவிட்டது. நாம் நெட்ஃப்ளிக்ஸை கைகழுவி பல நாள் ஆகிவிட்டது. மேற்கின் நியாயம், அமெரிக்காவின் நியாயம் மட்டுமே உலகளாவிய நியாயமில்லை.. உலக மக்களின் நியாயங்களும் முக்கியம். இதற்கு மேலை நாடு என்கிற ஒற்றை கோடு மட்டுமே நியாயங்களை தீர்மானிப்பதில்லை.