சிறப்புக் கட்டுரைகள்சினிமா

கணவர் பெயர் ரணசிங்கம் – இலக்கற்ற அம்பு

Spoilers ahead. கதையைத் தெரிந்துகொள்ளவேண்டாம் என்று விரும்புகிறவர்கள் நிச்சயம் படிக்கவேண்டாம். நீண்ட பதிவு.

நல்ல ஒரு கதையை வைத்துக்கொண்டு, அதில் தேவையே இல்லாமல் அரசியல் கலப்பதால் எத்தனையோ படங்கள் தங்கள் இலக்கைத் தொடாமலேயே தேங்கிப் போய்விடுகின்றன. அதிலும் தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலானவை இப்படித்தான். மீண்டும் மீண்டும் ஒரே அரசியல்தான் இதிலும் சொல்லப்படுகிறது. இந்தியா வாழ லாயக்கற்ற தேசம், இந்தியாவில் தனிமனிதனால் வாழவே முடியாது என்ற செய்திகள்தான். இந்திய அரசு (இந்தப் படத்தில் மாநில அரசையும் கொஞ்சமே கொஞ்சம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்) எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையையும் கண்டுகொள்வதே இல்லை. நீங்கள் இருந்தாலும் செத்தாலும் அரசுக்குக் கவலை இல்லை. இதைத்தான் இந்தப் படமும் சொல்கிறது. கவலைக்குரிய ஒரு பெண்ணின் வலியோடு. இந்த அரசியலில் கவனிக்கப்படவேண்டிய இந்தப் பெண்ணின் வலியும் அது சார்ந்த பிரச்சினைகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன.

ரணசிங்கம் வீரன், தீரன், முற்போக்காளன், எக்ஸட்ரா எக்ஸட்ரா. ராமநாதபுரத்தில் தன் கிராமத்தில் குடிநீருக்காகப் போராடுகிறான். கிராமத்தின் ஒற்றுமைக்காகப் போராடுகிறான். அவனை அத்தனை காதலித்து ஒரு பெண் திருமணம் செய்துகொள்கிறாள். அரியநாச்சி (ஐஸ்வர்யா ராஜேஷ்). படம் தொடங்கிய பத்து நிமிடத்துக்குள்ளாகவே அவனது மரணச் செய்தி வந்து சேர்கிறது. ரணசிங்கத்தின் வீர தீர காதல் எல்லாம் அவ்வப்போது நினைவலையாகச் சொல்லப்படுகிறது. இன்னும் எதாவது ஒரு நினைவு வந்து அங்கேயும் விஜய் சேதுபதி வந்துவிடுவாரோ என்ற அச்சம் வரும் அளவுக்கு அதீதமாக ரணசிங்கத்தின் காட்சிகள் வருகின்றன. பத்தாம் நிமிடத்திலேயே அவன் செத்துப் போய்விடுவதால், கதை எதைப் பற்றியது என்ற ஆர்வம் நமக்கு வருகிறது. ஆனால் படமோ ரணசிங்கத்தை விவரிப்பதிலேயே சுற்றுகிறது.

பின்னர் ஒரு வழியாகக் கதை என்பது ரணசிங்கத்தின் உடலை துபாயில் இருந்து தமிழ்நாட்டுக்குக் கொண்டு வருவதுதான் என்பது தெரிகிறது. ஏன் துபாய் அரசும், அங்கே ரணசிங்கம் வேலை பார்த்த பன்னாட்டு நிறுவனமும் அவன் உடலைத் தரவில்லை? அதற்குச் சொல்லப்படும் காரணம் நம்பும்படியாக இல்லை. நம்புவோம். ஏனென்றால் கதை அந்தக் காரணம் பற்றியது அல்ல. அப்படிச் செத்துப் போகும் இந்தியர்களின் உடல் இந்தியாவுக்கு வருவதைப் பற்றியது. இதிலுள்ள சிக்கலில் இந்தியாவின் அரசு நிர்வாகம் எத்தனை மெத்தனமாகச் செயல்படுகிறது என்பதைச் சொல்வதுதான் இப்படம் பற்றிய நோக்கம்.

ரணசிங்கத்தின் திருமணம் இரவோடு இரவாக நடக்கிறது. என்ன காரணம் என்றெல்லாம் படத்தைப் பார்த்து நொந்துகொள்ளுங்கள். அவர்களுக்குத் திருமணம் ஆனதற்கு ஆதாரமே இல்லை. அதாவது ஊரில் எல்லாருக்கும் தெரியும். ஆதாரம் மட்டும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக ரண சிங்கம் செத்துப் போனதோ துபாயில். அவன் உடலை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று மனுச் செய்ய அவரது மனைவிக்குத்தான் உரிமை இருக்கிறது. ஆனால் அவர்தான் மனைவி என்பதற்கு ஆதாரம் இல்லை. அதை அரசு கேட்கிறது. இதில் என்ன தவறு? இத்தனைக்கும் அரசு அதிகாரியாக வரும் பிராமணர், தங்கை மூலம் உடலைக் கோரலாம் என்று நியாயமான, நடக்கக்கூடிய ஒரு வாய்ப்பையும் சொல்கிறார். வசனம் எழுதியவர் அவரை அறியாமலேயே இந்த உண்மையை எழுதி இருக்கவேண்டும். இங்கே மட்டும் அல்ல, அரசின் குரலாகப் பல இடங்களில் உண்மையை எழுதி இருக்கிறார். இதற்காக இவரையும் இயக்குநரையும் பாராட்டவேண்டும். ஆனால் ரணசிங்கத்தின் மனைவி அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல், தான் தான் ரணசிங்கத்தின் மனைவி என்று நிரூபிக்கும் போராட்த்துக்குள் போகிறாள். ரணசிங்கம் எத்தகையவன் என்று சொல்வதை முக்கிய நோக்கமாகக் கொண்ட படம், இங்கே ரணசிங்கத்தின் மனைவி அரியநாச்சியே என்று நிரூபிக்கப் போராடும் பெண்ணின் படமாக மாறுகிறது.

ரணசிங்கத்துக்கு ஆதரவாகவே நல்லவராக வரும் கலெக்டர் (ரங்கராஜ் பாண்டே) தன்னளவுக்கு இயன்றவரை உதவி செய்கிறார். முதலில் ரணசிங்கத்துக்கும், பின்னர் அவனது மனைவிக்கும். ஆனால் பல மாதங்கள் ஆகியும் ரணசிங்கத்தின் உடல் இந்தியாவுக்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது. காரணம், பன்னாட்டு நிறுவனத்தில் நடந்த ஒரு விபத்தில் ரணசிங்கம் இறந்துவிட்டதால், அந்த விபத்தை மறைக்க நினைக்கும் நிறுவனம், ஏதேதோ பொய் சொல்கிறது. செட்டில்மெண்ட்டுக்கெல்லாம் வருகிறது. ஆனால் உடலைத் தர மறுக்கிறது. ஏனென்றால் உடலே அவர்களிடம் இல்லை. இது இறுதிக்காட்சியில்தான் நமக்குத் தெரிகிறது.

இதற்கிடையில் துபாயில் ஸ்ரீதேவி இறந்து போக, அதற்கு பிரதமர் இரங்கல் செய்தி போட்டு ட்வீட் போடுகிறார். அவரது உடல் மூன்றே நாளில் இந்தியா வருகிறது. இந்த ஒப்பீடு ஒரு நல்ல கற்பனைதான். ஆனால் யதார்த்தமும் இதுதான். ஒரு நடிகையின் மறைவுக்குப் பிரதமர் ட்வீட் போடுகிறார், ஆனால் ஒருத்தன் துபாயில் செத்துப் போய் பத்து மாதங்கள் ஆகின்றன, அவன் உடல் வரவில்லை என்பதுதான் யதார்த்தம். கம்யூனிஸ்ட் கட்சியிலும் இப்படித்தான். பாஜகவிலும் இப்படித்தான். ஊரிலும் வீட்டிலும் இப்படித்தான். ஆனால் இயக்குநர் இதைத் தெளிவாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.

ரணசிங்கத்தின் மனைவி சென்னைக்கு வந்து, மத்திய அமைச்சர் வரும் காரில் போய் விழுந்து நீதி கேட்கிறாள். மத்திய அமைச்சர் ஒரு பெண். பாதுகாப்பு அமைச்சர். ஆனால் நிர்மலா சீதாராமன் அல்ல! அவர் பரிவுடன் விசாரித்து, ரணசிங்கத்தின் மனைவி அரியநாச்சியுடன் ஒரு செல்ஃபியும் போட்டு, சக அமைச்சருக்கு டேக்-க்கும் செய்கிறார். விஷயம் இந்தியா முழுக்கவும் பரவுகிறது. ஆனால் பிரயோஜனமில்லை.

அரியநாச்சி தமிழ்நாட்டு முதல்வரைப் பார்க்க முயல்கிறாள். ஆனால் போலிஸ் தரப்பு அவளை முதல்வர் அருகில் கூட வரவிடுவதில்லை. இப்படியே வெளியுறவுத் துறை அதிகாரிகளும் செய்கிறார்கள். வேறு வழியே இன்று டெல்லி போகிறாள். அணையைத் திறந்துவிட வரும் பிரதமர் வரும் இடத்துக்குப் போய், அணையில் விழுந்து தற்கொலை செய்யப் போவதாகச் சொல்லிப் போராட்டம் நடத்துகிறாள். கையில் குழந்தையுடன். அதை லைவாகவும் ஒளிபரப்பாகிறது. பிரதமர் மோதி வருகிறார். அதாவது மோதியைப் போல ஒருவர் வருகிறார். அவருக்கு அப்போதுதான் அந்த விஷயம் தெரிகிறது. பரிவுடன் பரிசிலீக்கிறார். அடுத்த ஒரு மணி நேரத்தில் உடல் இந்தியா வரவேண்டும், அதுவரை நான் இந்த இடத்தை விட்டுப் போகப் போவதில்லை என்று அங்கேயே உட்கார்ந்து கொள்கிறார். இந்தியாவே பரபரக்கிறது. அடுத்த மூன்று மணி நேரத்தில் ரணசிங்கத்தின் உடல் இந்தியா வருகிறது. அரியநாச்சியே அணையைத் திறந்துவிடட்டும் என்று பரிவுடன் பிரதமர் சொல்ல, அரியநாச்சியே திறந்து வைத்துவிட்டுப் போகிறாள். இந்த அரசு சாமானிய மக்களுக்கானது என்று சொல்கிறார் பிரதமர்.

ரணசிங்கத்தின் உடல் வீட்டுக்கு வருகிறது. எரிக்கும்போது அரியநாச்சி கண்டுகொள்கிறாள், அது ரணசிங்கத்தின் உடல் இல்லை என. ஆனாலும் அது ரணசிங்கத்தின் உடல்தான் என்று கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறாள். இரவில் தனிமையில் ‘வேற எவனோ ஒருத்தன் உடம்பை கொடுத்து ஏமாத்திட்டாங்க தேவடியா பசங்க’ என்று சொல்கிறாள். தேவடியா பசங்க என்பது ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது.

கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் உருப்படியான படமாகவே எடுத்திருக்கலாம். தமிழில் அதிகம் விவாதிக்கப்படாத கதை இது. ஒரே கதையிலேயே கிராமத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் காட்ட நினைத்தது முதல் தவறு. விஜய் சேதுபதிக்காக கதையை அவரைச் சுற்றிப் பின்னிவிட்டது இரண்டாவது தவறு. அவனது உடலைக் கொண்டு வருவதற்கு ஏதேனும் காரணங்களைச் சொல்லவேண்டும் என்பதற்காக, கோர்ட்டில் அவன் மீது இருக்கும் வழக்குக்களை எல்லாம் சேர்த்து என்னவெல்லாமோ வசனங்களைச் சொல்லவிட்டது அடுத்த குழப்பம். பன்னாட்டு நிறுவனமும் துபாய் அரசும் சேர்ந்துகொண்டு செய்யும் பிரச்சினைக்கு இந்திய அரசும் தமிழக அரசும் என்ன செய்யமுடியும் என்ற பூதாகரமான கேள்விக்கு பதிலே சொல்லாமல் விட்டது பெரிய சறுக்கல். இதில் ஸ்ரீதேவியின் உடல் மட்டும் மூன்றே நாளில் வருகிறது என்பதை இத்துடன் எப்படித் தொடர்பு படுத்த முடியும்?

பன்னாட்டு நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் நடக்கும் ஒரு விபத்தை மூடி மறைத்தால், அதுவும் அது வேறொரு நாட்டில் நடந்தால், அதை இங்கிருந்தபடியே ஒரு கிராமத்துப் பெண் எதிர்கொள்வது உள்ளபடியே கஷ்டம்தான். இதன் பொருள் இந்திய அரசு அவளைக் கைவிட்டுவிட்டது என்பதல்ல. வேண்டுமென்றே இந்தியாவைத் திட்டவேண்டும் என்று நினைத்தால்தான் இப்படி யோசிக்கமுடியும். ரேஷன் அரிசியில் பெயர் சேர்க்க வரும் ஒரு அதிகாரியிடம் நாங்க இந்தியாவுலயே இல்லைன்னு எழுதிக்கோ என்று அரியநாச்சி சீறுகிறாள். ஆனால் வந்த அதிகாரி கேட்கும் கேள்வி நியாயமானது. அந்த நியாயத்தை மறைக்க அவர்கள் கேட்ட விதத்தை வேண்டுமென்றே மோசமாக்கி எடுத்திருக்கிறார் இயக்குநர். இப்படித்தான் அந்த பிராமண அதிகாரி விஷயத்திலும் நடக்கிறது.

பிராமண அதிகாரியின் விஷயத்தில் சில முக்கியமான விஷயங்களைச் சொல்லவேண்டி இருக்கிறது. படத்தில் வரும் எந்த ஒருவரின் சாதியும் மதமும் தெரிவதில்லை. இரண்டு பேரைத் தவிர. ஒருவர் பிராமணர். இவர் கலெக்டரின் உதவியாள். அதிகாரி. அரசுக்கு விழுந்து விழுந்து வேலை செய்யும் ஆள். கலெக்டரையும் மீறி, அரியநாச்சியுடம், வந்த பிணம் ரணசிங்கம்தான் என்று கையெழுத்து வாங்க அலைகிறார். அரியநாச்சியைப் பற்றி அலட்சியமாகப் பேசுகிறார். அவரை இப்படிக் காண்பிக்கிறார்கள். இன்னொருவர் முஸ்லீம். அவர்தான் ரணசிங்கத்தை, பணம் வாங்கிக்கொண்டு துபாய்க்கு வேலைக்கு அனுப்புகிறார். துபாய் பன்னாட்டு கம்பெனி இவர் மூலமாகத்தான் பண பேரம் பேசுகிறது. ஆனால் இவர் பேசும் வசனத்தில் ஒன்றில்கூட வெறுப்பு வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். தன் கையறு நிலையைப் பேசுகிறார் இந்த ஏஜெண்ட். மிகத் தெளிவாக இரண்டு கதாபாத்திரங்களையும் அமைத்திருக்கிறார்கள். முஸ்லீம் ஒருவரை நல்லவராகக் காண்பிப்பது, சூழ்நிலைக் கைதியாகக் காண்பிப்பதெல்லாம் இயக்குநரின் உரிமை. அதில் நமக்கு எந்தப் புகாரும் இல்லை. ஆனால் அதற்கு இணையாக இன்னொரு கதாபாத்திரம் வரும்போது எப்படி யோசிக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டி இருக்கிறது.

ஸ்ரீதேவி இறந்தபோது இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். அவருக்கு ஒரு ட்வீட் செய்தாலே போதும் எப்படி உதவுவார் என்று உலகமே வியந்தது. அவர் இறந்தபோது காங்கிரஸ் அமைச்சர்களே அதைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். ஆனால் இயக்குநருக்கு அது மட்டும் நினைவில்லை போல.

பிரதமரே வந்திருந்து ஒரு பெண்ணுக்கு உதவுகிறார். ஆனாலும் அந்தப் பெண் அரியநாச்சி தேவடியா பசங்க என்று யாரைத் திட்டுகிறாள்? அவளுக்கே அதில் தெளிவில்லை. இயக்குநருக்கும் தெளிவில்லை. யார் மீது கோபத்தைச் சொல்வது என்று தெரியவில்லை. திருமணத்தைப் பதிவு செய்யவில்லை. புகைப்படமும் இல்லை. பத்திரிகையும் இல்லை. அப்படியானால் அதிகாரிகளால் எப்படி உதவமுடியும்? அதற்கான வழிகளையும் ஒரு அதிகாரி சொல்கிறார். எல்லா இடங்களிலும், அரசு அலுவலர்களின் மெத்தனத்தோடும் அலட்சியத்தோடும், வேலை நடக்கத்தான் செய்கிறது.

வெளிநாட்டில் இறந்து போன ஒருவரின் உடலைக் கொண்டு வருவது என்பது நிச்சயம் சிக்கல் நிறைந்த ஒன்றுதான். அதற்கு இந்தியாவின் மீது கோபப்பட்டு, வெறுப்புடன் பேசுவதால் ஒரு பயனும் இல்லை. அரியநாச்சியாக அட்டகாசமாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் அற்புதமான நடிப்பு, இந்த அரசியலில் பின்னுக்குப் போய்விடுகிறது.

எப்படியாவது இந்திய, ஹிந்து, பாஜக வெறுப்பைக் காண்பித்தால்தான் ஆதரவு கிடைக்கும் என்பதையெல்லாம் விட்டுவிட்டு, இந்தப் படத்தை அதன் ஆதாரக் கருத்தை மட்டுமே சுற்றி எடுத்திருந்தால், முக்கியமான படமாக இருந்திருக்கும். ஆரம்பக் காட்சிகளில் வரும் கிராமம் மற்றும் குடும்பம் சார்ந்த காட்சிகள் மிக இயல்பாகவும் இயற்கையாகவும் இருந்தன. அதைவிட்டுவிட்டுப் படம் எப்போது புரட்சி வசனங்களை நோக்கிப் போகிறதோ அங்கேயே தன் பிடியை இழக்கத் துவங்குகிறது. அதிலும் உன் பேர் என்னப்பா என்ற கேள்விக்குக் கூட, ஊர் நியாயம் உலக நியாயம் சாதி மத இன வேறுபாடு என்று பக்கம் பக்கமாக விஜய் சேதுபதி பேசத் துவங்கும்போது கொட்டாவிதான் வருகிறது. அவர் செத்துப் போனாலும் மீண்டும் மீண்டும் வந்து கொல்கிறாரே என்று தோன்றுகிறது. இந்தக் குழப்பத்தையெல்லாம் விட்டுவிட்டு, அரசுடன் போராடும் ஒரு பெண்ணின் கதையை மட்டும் சொல்லி இருந்தால், அரசின் மெத்தனமும் அலட்சியப் போகும் பின்னணியில் அதுவாகவே வெளிப்படுவதாகக் காட்டி இருந்தால், இந்தப் படம் வேறு தளத்துக்குப் போயிருக்கும். அதைத் தவறவிட்டுவிட்டார் இயக்குநர்.

பின்குறிப்பு: சென்னைக்கு வந்து இறங்கிய உடனேயே தெரிந்த ஒருவர் உதவுவது, ஒரு கதாபாத்திரம் தலையை ஆட்டிக்கொண்டே வருவது (சோ-வின் சரஸ்வதி சபதம் நினைவுக்கு வந்தது) என்பதையெல்லாம் சினிமா உலகம் தாண்டி எத்தனையோ வருடங்கள் ஆகின்றன. இயக்குநர் கொஞ்சம் மனம் வைக்கவேண்டும்.

(Visited 2,394 times, 1 visits today)
Tags

2 Comments

  1. தமிழ் சினிமா உலகம் அர்பன் நக்சல் கையிலிருந்து பழையபடி மீளும் காலம் நல்ல படைப்புகள் வரும்,அதுவரை சீழ்பிடித்த ரணம்தான்,

  2. இனி இந்த மாதிரி படங்கள் வருவது குறைந்துவிடும். வெளிநாட்டு நிதி சகட்டுமேனிக்கு உள்ள வராதவாறு மூக்கணாங்கயிறு போட்டிருக்கே மத்திய அரசு. அதனால ஒரு நிறுவனத்தைக் கூட சமீபத்தில் மூடிட்டாங்களே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close