செய்திகள்

மத்திய பட்ஜெட் 2022 – முதல் பார்வை

இவ்வாண்டு வரவு செலவுத்திட்டம் வழக்கம் போல மக்களின் எதிர்பார்ப்பைக் கொண்டதாக இருந்தாலும், சீனத் தொற்றின் புதிய அலை, சற்றே வேகமெடுத்த வேலைகள் மீண்டும் முடங்குமோ என்ற அச்சம், மந்தமான பொருளாதாரச் சூழலுக்கான காரணிகள் என்று பலவும் கவலையையும் ஏக்கத்தையும் சற்றே ஏற்றத்தில் வைத்திருந்தன. இந்நிலையில் பொருளாதார நிலைமையைச் சமாளிக்க அரசு கடுமை காட்டக்கூடும் என்ற எதிர்பார்ப்பும், காட்டவேண்டும் வேறு வழியில்லை என்ற சில ‘நிபுணர்கள்’ கருத்தும் மக்களை நம்பிக்கையற்ற நிலைக்கு இட்டுச் சென்றன. நம்மூர் முன்கள ஊடகங்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

Highlights of Economic Survey 2021

இந்தப் பின்னணியில் நேற்று முந்தைய ஆண்டுக்கான பொருளாதாரக் கணக்கு பொதுவில் வைக்கப்பட்டது. அதில் பல்வேறு விஷயங்கள் நம்பிக்கை தந்தன.

2021 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான அரசின் வருவாய் முந்தைய தொற்று பாதித்த ஆண்டுகளை விடவும் 67% அதிகம். 2021 பட்ஜெட்டில் 2020ஐ விடவும் 9-10% அதிகம் எதிர்பார்த்துத் திட்டமிட்டிருந்தோம். இந்தக் காலத்தில் NPA எனப்படும் பயன் தராத சொத்துக்கள் கணிசமாகக் குறைந்ததும் ஒரு நன்மை. GST வருமானம் ஜனவரி 2022 மாதத்தில் ₹1.41லட்சம் கோடிகள். இது பொருளாதாரம் வளர்வதற்கும் வரிக் கட்டமைப்பின் செம்மையான செயல்பாட்டுக்கும் சாட்சி சொல்கிறது.

தடுப்பூசிகள் போடுவதில் மிகுந்த முன்னேற்றம் கண்டதில் மருத்துவம் சார்ந்த செலவுகளும் குறைந்தன, மருத்துவரீதியான பொருளாதார முட்டுக்கட்டைகளும் விடுபட்டன.

விலைவாசி ஏற்றம் என்பது CPI எனப்படும் Consumer Price Index (இறுதிப் பயனாளருக்கான விலை கொண்ட கணக்கீடு) 5.2% என்ற நிலையில் இருந்தது. உலகளாவிய நிலக்கரி, கச்சா எண்ணை உள்ளிட்ட விலையேற்றங்கள், போக்குவரத்துச் சிக்கல்கள், சீனத்தின் மீதான உலகின் பெரும்பாலான பொருளாதாரச் சார்பு என்று பல காரணிகள் இந்த விலையேற்றத்தைக் கொடுத்தது. இதிலிருந்து மீண்டு விலைவாசியைக் குறைக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இன்று காலை இந்த 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் பல்வேறு நம்பிக்கைகளுக்கு வித்திட்டுள்ளார். விடுதலை பெற்ற 75ஆவது ஆண்டு 2022. இதிலிருந்து 2047 (விடுதலை நூற்றாண்டு) வரையிலான பொருளாதாரப் பாதையை இந்த பட்ஜெட் வகுக்கும் என்றார். பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான ஏழு காரணிகள் குறிப்பிட்டார் அமைச்சர். 1. சாலைகள், 2.இருப்புப் பாதைகள், 3. விமான நிலையங்கள், 4. துறைமுகங்கள், 5. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து, 6. உள்கட்டமைப்பு, 7 பொதுப் போக்குவரத்து அமைப்பு.

இவற்றின் மூலம் மக்களையும் சரக்குகளையும் வேகமாகப் பயணிக்க ஏதுவாக்கும் திட்டங்களுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் முதலீடுக்கான செலவுகள் ₹7.5 லட்சம் கோடியாக இருக்கும். Emergency Credit Line Guarantee Scheme எனப்படும் அவசரகாலக் கடனுதவி 2020ல் சீனத் தொற்றின் பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க அறிவிக்கப்பட்டது. அந்த 20 லட்சம் கோடி ரூபாய்த் திட்டம் இவ்வாண்டும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Budget Key Takeaways: 25 key takeaways from Nirmala Sitharaman's fourth  Budget - The Economic Times

வடகிழக்கு மாகாணங்களில் முன்னேற்றத்துக்கு ₹1500 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிதியின் மூலம் வடகிழக்கு மாகாணங்களில் கட்டமைப்பு வசதிகள், சாலை, ரயில் என்று அடிப்படை வசதிகள் மேம்படுத்தவும், அவர்களது பாரம்பரியத் தொழில் முதற்கொண்டு பல்வேறு வேலை வாய்ப்புகள் உருவாக்கவும் பயன்படுத்தப்படும்.

க்ரிப்டோ கரன்ஸி எனப்படும் இணையத்தின் மூலம் செயல்படும் பணப்பரிவர்த்தனை முறைப்படுத்தப்பட்டுள்ளது. பாரத அரசு ரிசர்வ் வங்கியின் மூலமாக Blockchain முறையில் ஒரு அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பணம் அறிமுகப்படுத்தவுள்ளது. தனியார் டிஜிட்டல் பணம் அங்கீகரிக்கப்படவில்லை. அதில் செய்யப்படும் முதலீடுகளுக்கும் அதன் மூலமான வருமானத்துக்கும் 30% வரி விதிக்கப்பட்டுள்ளது. அரசு இதைக் கண்காணித்து வரி கேட்கும். மேலும் 1% TDS எனப்படும் விற்பனை அல்லது வருமானக் கட்டத்திலேயே வரிப்பிடித்தமும் செய்யப்படுகிறது. உலகெங்கிலும் கணக்கில் வராத காசு இந்தத் தனியார் பணத்தில் கொட்டிவைத்து அரசுகளுக்குக் கண்ணாமூச்சி காட்டப்படுவதாலும் இந்தக் கணக்கில்வராத பணம் போதை மருந்துகள், தீவிரவாதத்துக்கான நிதி என்று போவதாலும் கடுமை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் வருமான வரி வரம்புகளில் மாற்றங்கள் இல்லை. அதே நேரத்தில் PwD என்ற வரையறையில் வரும் உடல் ஊனம் இருப்போருக்குச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கான வரி வரம்பு 14% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசு ஊழியர்களும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான PF, ESI உள்ளிட்ட பிடித்தங்கள் மூலம் எதிர்காலத்துக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனிநபர் வருமான வரித்தாக்கல் செய்ததில் ஏதும் விடுபட்டுப் போன தகவல்களோ, தவறுகளோ இருந்தால் இரண்டு ஆண்டுகள் வரை வருமான வரித்துறையில் பேசிச் சரிசெய்து மறு தாக்கல் செய்யலாம். இரண்டாண்டுகள் தாண்டினால் அபராதம், வட்டி, கிஸ்தி என்று போகும். அதே வேளையில் வரி சம்பந்தப்பட்ட வழக்காடல்களைக் குறைக்க அரசு முக்கிய நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

சீனத்தொற்றின் காரணமாக பல்வேறு தரப்பில் மக்கள் மனச்சோர்வு, ஊக்கமின்மை என்று உள்ளம் சார்ந்த சிக்கல்களில் ஆழ்ந்துள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் National Institute of Mental Health and Neuro-Sciences என்ற அரசு மனநலம் மற்றும் நரம்பியல் மருத்துவ நிறுவனத்தின் கீழ் தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பில் வழிகாட்டுதல்களுக்கு வகை செய்யப்பட்டுள்ளது. கௌன்சிலிங், ஆறுதல்கள், சிகிச்சை என்று பல விஷயங்கள் இதில் செயல்படுத்தப்படும். மனச்சோர்வில் பாதிக்கப்பட்டு யாருக்கும் எவ்விதமான தீவிரச் சிக்கல்கள் வரக்கூடாது என்பதற்கான நடவடிக்கை இது. இதை நடத்தித் தர தொலை பேசி இணையத் தொழில்நுட்ப வேலைகளை பெங்களூரு IIIT எனப்படும் இந்திய தகவல் தொழிநுட்பக் கழகம் செயல்படுத்தும். அழைப்பவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.

புதிய, எரிசக்தி குறைவாக ஆனால் திறம்பட இயங்கும் 400 ரயில்கள் இவ்வாண்டில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். பழைய ரயில்கள் படிப்படியாக மாற்றப்படும். ரயில்வே போஸ்டல் சர்வீஸ் புதுப்பிக்கப்பட்டு பார்சல்கள், விரைவுக்கடிதங்கள் என்று கொண்டுபோக பட்ஜெட்டில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

PM Modi hails Union Budget 2022, calls it 'people-friendly and progressive'  | Deccan Herald

28.5% வட்டியில் இருந்து 23% ஆக பட்டியலிடப்படாத பங்கு பரிவர்த்தனைக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய தொழிகளில் முதலீடு செய்வொர் முதலீட்டைத் திரும்பப் பெறுவதில் இருந்த அதிக வரி என்ற சிக்கல் குறைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வீடுகட்டும் திட்டத்துக்கு ₹48000 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஐந்து நதி நீர் இணைப்புத் திட்டங்கள் தொடங்கப்படும். 25000 கிமீ சாலைகள் விரிவாக்கப்படும். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு ₹60000 கோடிகள் தரப்படுகிறது.

5G தொழில்நுட்பம் இந்த ஆண்டு நாட்டில் நிறுவப்படும். அதற்கான விரிவான திட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

ராணுவ கொள்முதலுக்கு ₹1.52 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 68% உள்நாட்டுக் கொள்முதலாக இருக்கும். ஆயுதங்கள்,ஆடைகள், வண்டிகள் என்று பலவும் இந்தியாவில் தயாரிக்க ஊக்கம் தரப்படும். வெளிநாட்டுக் கொள்முதல்கள் கட்டுப்படுத்தப்படும்.

அடுத்த 25 ஆண்டுகள் அமிர்த காலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வளர்ச்சியும் வளமும் பெருகவும், நலமும் நல்வாழ்வும் சிறக்கவும் இந்த பட்ஜெட்டில் வழிகாட்டப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் பயணித்து தேசத்தை வளர்ச்சிக்கு இட்டுச் செல்லவும், உலகில் முன்னிலை பெறவும் அரசு செயல்படுகிறது.

(Visited 119 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close