விண்ணை அளந்த பாரதியன் – விக்ரம் சாராபாய் – ஆகஸ்ட் 12.
வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்,
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்.
சுதந்திர பாரதம் எந்தெந்த துறைகளில் எல்லாம் தனது முத்திரையைப் பதிக்க வேண்டும் என்று மஹாகவி பாரதி கனவு கண்டானோ, அந்த துறைகளில் எல்லாம் இன்று பாரதம் கோலோச்சி நிற்கிறது. கவிஞனின் கனவை நனவாக்கி வானை அளக்க, சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிய பாதை அமைத்த விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் பிறந்த தினம் இன்று.
1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் நாள் குஜராத்தைச் சார்ந்த அம்பாலால் சாராபாய் – சரளாதேவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் விக்ரம் சாராபாய். சாராபாய் குடும்பம் பல்வேறு தொழில்களில் அன்று முன்னணியில் இருந்த குடும்பம். அம்பாலால் பல்வேறு தேசிய தலைவர்களோடு நெருங்கிய நட்பில் இருந்தவர். தனது ஆரம்ப கல்வியை வீட்டிலும், கல்லூரி படிப்பை அஹமதாபாத் நகரில் உள்ள குஜராத் கல்லூரியிலும் முடித்த விக்ரம் மேற்படிப்புக்காக இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்றார்.
அப்போது இரண்டாம் உலகப்போர் மூண்டதால் மீண்டும் தாயகம் திரும்பிய விக்ரம், சர் சி வி ராமன் மற்றும் ஹோமி பாபா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் பெங்களூரு நகரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் ( Indian Institute of Science ) தனது ஆராய்சியைத் தொடர்ந்தார். போர் முடிந்த பிறகு மீண்டும் இங்கிலாந்து சென்று தனது ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து முனைவர் பட்டம் பெற்றார். பாரதம் விடுதலை அடைந்திருந்த சமயம் அது. தனது அறிவு நாட்டிற்கு பயன்பட வேண்டும் என்று முடிவு செய்து விக்ரம் நாடு திரும்பினார்.
விக்ரம் அறிவியல் ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல, அவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர், பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கியவர். சந்தையின் மாறுதல்களை அளவிடும் Operations Research Group, நெசவுத்துறையின் முன்னேற்றத்திற்காக Textile Research Institute, அஹமதாபாத் நகரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் ( Indian Institute of Management – Ahamadabad ) போன்ற பல நிறுவனங்களை விக்ரம் சாராபாய் உருவாக்கினார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சியிலும் விக்ரம் சாராபாய் பெரும்பங்கு வகித்தார். இன்று சந்திரனுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் ஆய்வு செய்ய செயற்கைகோள்களை பாரதம் ஏவுகிறது என்றால், மிகக் குறைந்த செலவில் பல்வேறு செயற்கைகோள்களை பல்வேறு நாடுகளுக்கான விண்வெளியில் நிலைநிறுத்தும் திறமையை பாரதம் பெற்றுள்ளது என்றால் அதற்கான அடிக்கல் விக்ரம் சாராபாயால் தொடங்கப்பட்ட முன்னெடுப்புகள்தான் காரணம். இன்று தும்பாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு விக்ரம் சாராபாயின் பெயர்தான் சூட்டப்பட்டு உள்ளது.
விக்ரம் சாராபாயின் பங்களிப்பை மரியாதை செய்யும் வகையில் அரசு அவருக்கு பத்மவிபூஷண் விருதை வழங்கியது.
இன்னும் பல முன்னேற்றங்களை உருவாக்க தகுதியான விக்ரம் சாராபாய் 1971ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் நாள் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமடைந்தது இந்தியாவை உலுக்கியது. புகழ்பெற்ற அணு விஞ்ஞானி ஹோமி பாபா விமான விபத்தில் இறந்தார். பல்வேறு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் மரணித்ததும், நம்பி நாராயணன் போன்ற அறிஞர்கள் பொய் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி சிறைப்பட்டதும் பாரதம் அறிவியல் துறையில் முன்னேறுவதை தடுக்க முயலும் அந்நிய நாடுகளின் சதியாக இருக்கும் என்று நம்ப எல்லா காரணங்களும் இருக்கின்றன.
நாட்டுக்கு உழைப்பது என்பது ராணுவத்தில் பணியாற்றி எல்லையை காப்பது மட்டுமல்ல, பல்வேறு துறைகளில் நாட்டை முன்னேற்றுவதும் அதே தான்.