காட்டுக்கு போனேனோ பெருமாளைப் போலே !
“சாமி! ராமாயணத்தில் ராமர் காட்டுக்குப் புறப்படும் இடம் மிகவும் சோகமானது” என்று கதையை ஆரம்பித்தாள் அந்தக் குட்டிப் பெண்.
ராமருக்குப் மறுநாள் பட்டாபிஷேகம் என்று செய்தி கேட்டு அயோத்தி நகரமே சந்தோஷத்தில் மூழ்கியது. மக்கள் எல்லோரும் ராமர் நாளை இந்த வழியாக வருவார் என்று தத்தம் வீடுகளை அலங்காரம் செய்தார்கள். வண்ண வண்ணப் பொடிகள் கொண்டு தெருக்களில் கோலம் போட்டு அழகு செய்தார்கள். எங்கே ராமரைப் பார்க்காமல் போய்விடுவோமோ என்று மாடங்களில் ராமரைப் பார்க்க இடம் பிடிக்கச் சண்டை போட்டார்கள்.
ஊரே சந்தோஷமாக இருக்க, மந்தாரை என்ற கூனியின் மனம் மட்டும் நெருப்பில் கொதித்துக்கொண்டு இருந்தது. கைகேயியிடம் சென்று ‘ராமருக்குப் பட்டாபிஷேகம்’ என்றாள். இதைக் கேட்ட கைகேயி மனம் குளிர்ந்து அவளுக்கு முத்து மாலை ஒன்றைப் பரிசாகக் கொடுத்தாள்.
கூனியின் மனம் கொதிக்கும் விஷத்தைக் கக்கினாள். அவள் கைகேயியிடம் ”உன் மனம் பித்துப் பிடித்துவிட்டதா ? ராமர் இளவரசனானால் அதன் பின் நீ ஒரு அடிமையாக வாழ்க்கை நடத்த வேண்டும்” என்று மனத்தைக் கலைத்தாள்.
கைகேயி என்ன செய்வது என்று யோசிக்கும்போது “நீ முன்பு போர்க்களத்தில் தசரதனின் உயிரைக் காப்பாற்றினாய் அப்போது தசரதன் உனக்கு இரண்டு வரங்களைக் கொடுத்தார் நினைவு இருக்கிறதா ? அதை இப்போது கேள்! ராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குப் போக வேண்டும். பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வேண்டும்” வழியையும் கூறினாள்.
கைகேயி தசரதனிடம் வரங்களைக் கேட்டாள். தசரதன் துடிதுடித்து என் உயிரை வேண்டும் என்றாலும் தருகிறேன் ஆனால் ராமரை மட்டும் என்னிடமிருந்து பிரித்துவிடாதே என்று கெஞ்சினார். ஆனால் கையேயி மசியவில்லை.
தசரதன் மயங்கிக் கீழே விழுந்தார். கைகேயி தேரோட்டி சுமந்திரரை அனுப்பி ராமரை அழைத்துக்கொண்டு வரச் சொன்னாள். சுமந்திரர் ராமரைத் தேரில் அழைத்துக்கொண்டு வரும்போது அயோத்தி மக்கள் குதூகலமாக ஆரவாரம் செய்கிறார்கள்.
ராமர் வந்த தந்தையை வணங்கியபோது அவர் படுக்கையில் சோகமாகப் படுத்துக்கொண்டு இருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டார்.
“தந்தையே ஏன் பேசாமல் இருக்கிறீர்கள். ஏன் உங்கள் முகம் வாடியிருக்கிறது. நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா ? உங்களுக்கு ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள் உடனே நிறைவேற்றுகிறேன்” என்றார் ராமர்.
கைகேயி நடந்த விஷயங்களைச் சொல்லி “ராமா நீ உடனே காட்டுக்குப் போக வேண்டும்” என்றாள். ராமர் உடனே “நீங்கள் நெருப்பில் குதிக்கச் சொன்னாலும் உடனே குதிக்கத் தயார். இப்போதே காட்டுக்குக் கிளம்புகிறேன். ராஜ்யம் ஆளும் ஆசையே எனக்கு இல்லை. தந்தையின் பேச்சைக் கேட்பது தான் உயர்ந்த தர்மம். இதோ உடனே காட்டுக்குப் புறப்படுகிறேன்” என்று கிளம்பினார்.
”ராமர் முகத்தில் எந்தவித வருத்தமோ துக்கமோ இல்லை. பட்டாபிஷேகம் என்று சொன்னபோது எப்படி இருந்ததோ அதே போல இருந்தது அவர் முகம். காட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்னபோது அவர் நடை முன்பைவிட கம்பீரமாக இருந்தது!”.
“சாமி ! இந்த உலகத்துக்கே ராமர் தந்தை. ஆனால் தந்தை சொல்லைக் காப்பாற்ற தன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு காட்டுக்குச் சென்றார். ராமர் போல் நான் தந்தை சொல்லைக் காபாற்றினேனா ? இல்லை காட்டுக்குத் தான் போனேனா ? எதுவும் செய்யவில்லையே! அதனால் நான் ஊரைவிட்டு போகிறேன்” என்றாள் அந்தச் சின்னப் பெண்.
ராமானுஜர் “பெண்ணே ஒன்றைக் கவனித்தாயா ? ராமர் காட்டுக்குச் செல்லும்போது ராமரைத் தவிர எல்லோரும் வருத்தப்பட்டார்கள் !” என்றார்“இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்!” என்றாள் அந்தச் சின்னப் பெண்“ராமர் காட்டுக்குச் செல்லும்போது தசரதன், கௌசல்யை துயரப்பட்டார்கள், லக்ஷ்மணன் துயரத்தில் கோபப்பட்டார், அயோத்தி மக்கள் அழுதார்கள், செடி, கொடிகள், மரங்கள், நதிகள், மாடுகள், பறவைகள், ஞானிகள் எல்லோரும் வருத்தப்பட்டது !” என்றார்.
”அருமையாகச் சொன்னீர்கள் சாமி ! எனக்கு நீண்ட நாளாக ராமாயணத்தில் ஒரு சந்தேகம். ராமர் தந்தை சொல்லே தர்மம் என்று காட்டுக்குச் சென்றார். ராமரை அழைத்துக்கொண்டு சுமந்திரர் தேரை ஓட்டுகிறார். அந்தச் சமயம் தசரத சக்கரவர்த்தி “தேரை நிறுத்துத் தேரை நிறுத்து!” என்று கதறிக்கொண்டு பின்னே ஓடிவருகிறார். தந்தை பின்னால் வருவதைப் ராமர் பார்க்கிறார். ”சுமந்திரரே தேரை வேகமாகச் செலுத்து” என்கிறார் சுமந்திரருக்கு தர்மசங்கடம் .
”தசரதன் நிறுத்தச் சொல்லுகிறார். ராமர் ஓட்டச் சொல்லுகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார். ராமர் “சுமந்திரா தேரை வேகமாகச் செலுத்துங்கள். திரும்பி வந்தபிறகு தந்தை ஏன் நிறுத்தவில்லை என்று கேட்டால் காதில் விழவில்லை என்று சொல்லுங்கள்” என்கிறார்.
ராமானுஜர் புன்சிரிப்புடன் “தந்தை சொல்லைக் காக்க ராமர் காட்டுக்குச் சென்றார் ஆனால் அதே தந்தையிடம் பொய் சொல்லச் சொல்லுகிறார். சத்தியம் தவறாத ராமர் இப்படிப் பொய் சொல்லலாமா ? ஏன் இந்த முரண்பாடு ? இது தானே பிள்ளாய் உன் சந்தேகம் ?” என்றார்“ஆமாம் சாமி!” என்றாள் அந்தக் குட்டிப் பெண்.
”தசரதர் ஏற்கனவே துயரத்தில் இருக்கிறார். தேரை நிறுத்தினால் அவர் துயரம் மேலும் அதிகமாகும். அதனால் தேரை வேகமாகச் செலுத்தச் சொல்லி, காதில் விழவில்லை என்று பொய்யும் சொல்லச் சொன்னார்! அதனால் தான் ஆண்டாள் ராமரை ‘மனதுக்கு இனியான் என்கிறாள்” என்றார் ராமானுஜர்.
அப்போது ஒரு சிஷ்யர் ”ராமர் நம் மனதுக்கு இனியான் அந்த ராமரின் மனதுக்கு இனியான் அனுமார். அந்த ராமரே குடி கொண்ட கோயில் நம் ஆசாரியன் மனம் அன்றோ!” என்றார்.
குட்டிப் பெண் யோசிக்கவே இல்லை உடனே “கண்டு வந்தேன் என்றேனோ திருவடியைப் போலே!”