பலம் குறையாத கட்சி பாமக – அன்றும் இன்றும்
தமிழகத்தில் பாமக என்ற கட்சி தங்களது சமூக மக்களின் வாழ்வு மேம்பாட்டுக்கான இயக்கமாகத்தான் தன்னை ஆரம்ப காலத்தில் அடையாளப்படுத்தியது. பின்னர் அரசியல் செல்வாக்கு இருந்தால் மட்டுமே அதிகாரத்தைப் பயன்படுத்தி நலன்களை பெற முடியும் என்ற கட்டத்திற்கு நகர்ந்தது. ராமதாஸ் தலைவராக இருந்த காலக்கட்டம் முழுவதும் பாமக ஓர் சாதிக்கட்சியாக மட்டுமே இருந்து வந்தது அதன் பலவீனம். ஆனால் அக்கட்சிக்கான பலமும் அதுவாகவே இருந்தது. சாதிக்கட்சியாக மட்டுமே செயல்பட்டதால்/பார்க்கப்பட்டதால் , அக்கட்சியும் தங்களது சமூக மக்கள் அதிகமிருக்கும் இடங்களில் மட்டுமே போட்டியிட்டது.
பாமக ராமதாஸ் தலைமையில் இருந்தவரை, அதாவது 1991-2011 வரை, 20 ஆண்டுகளாக தன்னை வட மாநிலத்து கட்சியாக மட்டும் சுருக்கிக் கொண்டது. தனித்து நின்றாலும், கூட்டணியோடு நின்றாலும் 95% க்கும் மேலாக தமது சமூக மக்கள் இருக்கும் இடங்களில் தான், இடங்களைக் கேட்டுப் பெற்று தேர்தலை எதிர்கொண்டது. தன்னை ஒரு முழுமையான ஒட்டு மொத்த மாநிலத்திற்குமான கட்சியாக காட்டிக்கொள்ளவில்லை அல்லது செயல்படவில்லை. 2016 சட்டசபை தேர்தலில் மட்டுமே அக்கட்சி தமிழகம் முழுமைக்கும் தனது கட்சிக்கான வேட்பாளர்களை நிறுத்தியது. அன்புமணி ராமதாஸ் “மாற்றம் முன்னேற்றம்” என்ற கோஷத்துடன் பாமகவை தமிழகம் முழுமைக்குமான கட்சியாக மாற்ற முனைந்தார்.
ஒவ்வொரு தேர்தலிலும் பாமக பெற்ற வாக்குகள் , இடங்கள், வாக்கு சதவீதம் என்ன? அதன் பலம், பலவீனம் பற்றி பார்த்து விடலாம்.
1991, 1996 ஆகிய இரு தேர்தல்களை முதலில் பார்க்கலாம். 1991 ல் தமிழகம் முழுமைக்கும் 194/234 ஓரளவுக்கு வேட்பாளர்களை பாமக நிறுத்தியுள்ளது. முதல் தேர்தலில் ஒரு இடத்தில் வெற்றி பெற்றதோடு அல்லாமல் 5.89% வாக்குகளையும் பெற்றது. 1996 தேர்தலில் பாமக தனக்கு பலம் வாய்ந்த இடங்களில் மட்டும் கவனம் செலுத்தி சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது ஒன்றே நோக்கமாக செயல்பட்டது. அதற்கு பலன் கிடைத்தது. 4 இடங்களைப் பெற்றது , 1996 தேர்தலில் மட்டுமே பாமகவின் வாக்கு சதவீதம் 5% க்கும் குறைவு. அதற்குக் காரணமுள்ளது. 1996 தேர்தலில் ஜெயலலிதாவிற்கு எதிராக மாபெரும் எதிர்ப்பலை உருவாகி இருந்தது. திமுக தமாகா கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு வாக்குகள் விழுந்தன. ஜெயலலிதாவே, தான் நின்ற இரு இடங்களிலும் தோற்க, அதிமுக கட்சியே நான்கு இடங்களில்தான் வெல்ல முடிந்தது. பாமகவும் நான்கு இடங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதன் பிறகுதான் தமிழக அரசியலில் பாமகவிற்கு அதிமுக, திமுக இரு கட்சிகளும் அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தன. 1996 தேர்தல் தோல்வியிலிருந்து மீள ஜெயலலிதா எடுத்த முயற்சியே 1998 லோக்சபா தேர்தலில் பாமக, மதிமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை உருவாக்கி 31 இடங்களில் வென்று காட்டினார்கள். முதன்முதலாக தமிழகத்தில் காங்கிரஸ் தமாகா இல்லாவிட்டாலும் மாற்றாக உருவாக்கப்படும் அணி வெற்றியைப் பறிக்கும் என்பது உறுதியான தேர்தல்.
2001 தேர்தலில் அதிமுக, பாமக, தமாகா,காங்கிரஸ் ஓரணியில் தேர்தலை எதிர்கொண்டன. பாமக 27 இடங்களில் 20 இடங்களைக் கைப்பற்றியது. வாக்கு சதவீதம் 5.56%. 2004 தேர்தலிலேயே திமுகவின் பக்கம் அணி தாவியது பாமக. 2006 தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக 31 இடங்களில் நின்று 18 இடங்களில் வெற்றி பெற்றது. வாக்கு சதவீதமும் 5.65%.
2006 தேர்தலில் தான் தேமுதிக உதயமாகிறது. தேமுதிக அதிகம் பெற்ற வாக்குகள் வட மாவட்டங்கள்தான். அதிலும் பாமகவின் கோட்டைப் பகுதிகளில்தான் அதிக வாக்குகளைப் பெற்றது. பாமக வெற்றி பெறக் கூடிய பல இடங்கள் இழப்பிற்கு தேமுதிகவின் வருகையும் ஒரு காரணம். தேமுதிக தனித்து நின்று 2006 தேர்தலில் வாக்குகளைப் பிரித்தது. இருந்த போதிலும் பாமகவின் வாக்கு சதவீதம் குறையாமல் இருந்தது.
2009 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக 7 தொகுதிகளில் நின்று ஒரு இடத்தையும் பெறவில்லை. இதே தேர்தலில் தேமுதிகவின் வாக்கு சதவீதம் 8% லிருந்து 10% ஆகக் கூடியது. தேமுதிகவின் வருகைக்கு முன்னால் வரை பாமக இருக்கும் அணியே வெற்றி அணியாக இருந்து வந்தது. ஆனால் விஜயகாந்தின் வருகைக்குப் பிறகு பாமக இருக்கும் அணி வெல்லும் என்ற நிலை இல்லாமல் போனது. இதற்கு உதாரணம், 2011 சட்டசபை தேர்தல். அதிமுக அணியிலிருந்து தாவி திமுகவின் பக்கம் போனது பாமக. திமுக,காங்கிரஸ், பாமக என 2001 ,2006 போலவே தோற்றமளித்தாலும், எதிரணியில் அதிமுக தேமுதிக, இரு கம்யுனிஸ்ட் கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டன. 2011 தேர்தலில் தேமுதிக இருக்கும் அணியே வெல்லும் என்பது நிறைவேறியது. இதுவெல்லாம் பாமகவின் வெற்றியைப் பாதித்தாலும் பாமகவின் வாக்கு வங்கியைப் பாதிக்கவில்லை. 2011 தேர்தலிலும் 5.23 % வாக்குகளைப் பெற்று இருந்தது.
பாமகவின் பெயரும் அரசியலில் கெட்டுப்போய் இருந்தது. ஒவ்வொரு முறையும் கூட்டணி மாறி நின்றது போன்ற காரணங்களால் அதிக விமர்சனத்துக்கு உள்ளானது. இதன் பிறகு மெல்ல மெல்ல அன்புமணி ராமதாஸ் கட்சியில் முக்கியத்துவம் பெறுகிறார். அல்லது ராமதாஸின் வயது முதுமை காரணமாக அன்புமணி முன்னிறுத்தப்படுகிறார். அதிமுக , திமுக இரு கட்சிகளையும் எதிர்ப்பதே தங்கள் கொள்கை என்று கடுமையாக தாக்குகிறது பாமக. 2014 லோக்சபா தேர்தலிலும் பாஜக அணியில் இடம்பெற்று ஓர் இடத்தைப் பெறுகிறது பாமக. வாக்கு சதவீதமும் 5% க்கும் மேல். மீண்டும் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாகத் தன்னை நிருபித்துக் காட்டியது பாமக.
2016 தேர்தலை தனித்துச் சந்திப்பது என்ற முடிவுடன் களம் இறங்கியது பாமக. 232 தொகுதிகளில் நின்று 5.32% வாக்குகளைப் பெற்று தனித்து நின்றும் தானே தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்று நிரூபித்தது பாமக. அன்புமணி ராமதாஸ் பாமகவை சாதிக்கட்சி என்ற அடையாளத்திலிருந்து தூக்கி எறிய கடுமையாகப் பாடுபடுகிறார். இன்னும் சில தேர்தல்களைத் துணிந்து தனித்து எதிர்கொண்டால் பாமகவின் வளர்ச்சி கூட சாத்தியப்படலாம். மீண்டும் அதிமுக, திமுக கூட்டணிக்குள் சென்று தற்காலிக வெற்றி என்ற இலக்கை நோக்கிக் காய் நகர்த்தினால் பாமக வட்டாரக் கட்சியாகவே சுருங்கி விடும் அபாயமுள்ளது. குறைந்தது இன்னும் இரு சட்டசபை தேர்தல்களிலாவது பாமக தனித்து நின்று தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அன்புமணி மீதான நம்பிக்கையில் பயணம் செய்தால் அக்கட்சி இன்னும் வளரும். அதேபோல ரஜினி, கமல் போன்றவர்களின் வருகை இன்னும் பத்து வருடங்களுக்கு என்ன மாதிரியான மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. பாமக அன்றிலிருந்து இன்று வரை வாக்கு வங்கியை நிருபித்த ஒரே கட்சி. அதுவும் நிலையாக வாக்கு வங்கியைப் பதிவு செய்த கட்சி. அவ்வகையில் காங்கிரசைக் காட்டிலும் , தேமுதிக, மதிமுக, பாஜக ஆகிய கட்சிகளைக் காட்டிலும் உண்மையில் மூன்றாவது பெரிய கட்சி சர்வ நிச்சயமாக பாமக தான் என்றால் அது மிகையல்ல.