தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே!
குட்டிப் பெண் கதை சொல்ல ஆரம்பித்தாள்.
உத்தானபாதன் என்ற ஓர் அரசன். அவனுக்கு இரண்டு மனைவி. மூத்தவள் பெயர் சுநீதி. இளையவள் பெயர் சுருசி. மூத்தவள் சுநீதியின் மகன் துருவன். இளையவள் சுருசியின் மகன் உத்தமன்.
உத்தானபாதன் இளையவள் சுருசியிடம் அதிகமான பாசம் வைத்திருந்தான். மூத்தவள் சுநீதியையும், அவளுடைய மகன் துருவனையும் புறக்கணித்தான்.
ஒரு நாள், மன்னனின் மடியில் இளையவளின் மகனான உத்தமன் தந்தையின் மடியில் உட்கார்ந்து கொண்டு இருந்தான். அரசனும் அவனைக் கொஞ்சி விளையாடிக்கொண்டு இருந்தான். இந்தக் காட்சியைக் கண்ட துருவன் தனக்கும் தந்தையின் மடியில் ஏறி உட்கார வேண்டும் என்று ஆசைப்பட்டான்.
சுருசி அதைத் தடுத்தாள். துருவனோ ஏறி அமர வேண்டும் என அடம் பிடித்து அழுதான் ஆனாலும் அதற்கு இளையவள் சுருசி அனுமதிக்கவில்லை. தந்தை ஒன்றும் செய்ய முடியாமல் மௌனமாக இருந்தான். இது துருவனுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது மேலும் அழுதான்.
அப்போது சுருசி “நீ என் வயிற்றில் பிறந்தால் மட்டுமே அந்த பாக்கியம் உனக்குக் கிடைக்கும்” என்று கோபமாகத் திட்டினாள். அழுதுகொண்டே துருவன் துடுக்காக ”அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று ” கேட்க அதற்கு அவள்
“நீ காட்டுக்குப் போக வேண்டும்” என்றாள்.
“பிறகு என்ன செய்ய வேண்டும் ?” என்றான் துருவன்.
அதற்கு அவள் ”காட்டில் தவம் செய்ய வேண்டும்.! என் வயிற்றில் பிறக்க வரம் வாங்க வேண்டும், பிறகு உன் தந்தை மடியில் நீ உட்காரலாம்” என்று அடுக்கினாள்.
கண்ணீருடன் அவன் தாயிடம் ஓடிவந்தான் ”தாயே ! தந்தையின் மடியில் ஏறி அமர முடியாதா ? காட்டுக்குப் போக வேண்டுமாம். தவம் செய்ய வேண்டுமாம். சுருசி வயிற்றில் பிறக்க வேண்டுமாம்” என்று நடந்ததை கூறினான்.
அதற்கு அவள் தாய் சுருசி சொன்னது சரி தான் ”காட்டுக்குப் போக வேண்டும், . நம் எல்லோருக்கும் தந்தை திருமால் அவனை நோக்கி தவம் புரிந்தால் உனக்கு மடியில் அமர வாய்ப்பு கிடைக்கும்” என்றாள். அது துருவனின் மனத்தில் ஆழப் பதிந்தது.
எட்டு வயதில் தவத்துக்குப் புறப்பட்டான். வழியில் நாரதர் துருவனைப் பார்த்து “குழந்தாய் ! எங்கே வேகமாகப் புறப்பட்டாய் ?” என்று கேட்கத் துருவன் நாரதரை வணங்கித் தன் கதையைச் சொன்னான். நாரதர் துருவனுக்கு மந்திரங்களை உபதேசம் செய்தார். நாரதரிடம் ஆசி வாங்கிக்கொண்டு கடும் தவம் புரிந்தான்.
பெருமாள் அவன் முன் தோன்றியபோது துருவன் தான் கேட்க வந்த வரத்தை மறந்தான். பெருமாளின் பேரழகே போதும். இதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. அந்தப் பேரழகை எப்போதும் தரிசிக்கும் பாக்கியத்தைத் தர வேண்டும் எனப் பெருமாளிடம் கேட்டான். பெருமாள் தன்னுடைய கையிலிருந்த சங்கினால் துருவனின் கன்னத்தில் மெல்லத் தடவினார். அது அவனுக்கு நல்ல அறிவைக் கொடுத்தது.
தந்தை மடி எங்கே என்று தேடிக்கொண்டு வந்தான் துருவன். நம் எல்லோருக்கும் தந்தை பெருமாளே என்று அறிந்துகொண்டான்.
எங்க ஊர் ஆழ்வார் சொல்லுவது போல “அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான்” என்று நான் பெருமாளைத் துருவன் போல தந்தையாக ஏற்றுக்கொள்ளவில்லையே, அதனால் ஊரை விட்டுக் கிளம்புகிறேன்”.
ராமானுஜர் “ சிறு வயதிலேயே பக்தியில் மூழ்கியவர்கள் துருவன், பிரகலாதன், ஆண்டாள் என மொத்தம் மூன்று பேர். நீயும் சிறுவயதிலேயே பக்தியுடன் இருக்கிறாய் வா திரும்ப ஊருக்குப் போகலாம்” என்றார்.
குட்டிப் பெண் “மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே!” என்றாள்.
ராமானுஜர் புன்னகையுடன் “சரி கதையைச் சொல்ல ஆரம்பி” என்றார்