ஆன்மிகம்

அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே !

“சாமி! இது திருவரங்கத்தில் நடந்த சம்பவம்!” என்று ஆரம்பித்தாள் அந்தச் சின்னப் பெண்.ராமானுஜருக்கு இன்னொரு பெயர் ‘எம்பெருமானார் ’.

ஒரு நாள் திருவரங்கத்தில் ராமானுஜர் வழக்கம் போலத் திருப்பாவை பாடிக்கொண்டு பிக்‌ஷை(மாதுகரம்) எடுக்கக் கிளம்பினார். அப்போது அவர் எதிரே சில வண்டிகள் மூட்டைகளுடன் வருவதைக் கண்டார். அதில் ஒருவர் அமர்ந்து இருந்தார். அவர் பெயர் யக்ஞ மூர்த்தி. அத்வைதச் சன்னியாசி. மிகப் பெரிய அறிஞர், வேதம், உபநிஷத்தில் பண்டிதர். அத்வைதத் தத்துவத்தைக் கரைத்துக் குடித்தவர். காசி போன்ற வட தேசங்களுக்குச் சென்று பலரை வாதப் போரில் வென்றவர். அவருடைய புகழ் எல்லா இடங்களிலும் பரவியிருந்தது.

ராமானுஜரை பார்த்தவுடன் வண்டியிலிருந்து கீழே இறங்கினார் “நீர் தான் ராமானுஜரா ?” என்றார். ராமானுஜர் பணிவுடன் “ஆம் அடியேன் ராமானுஜன்” என்றார்.

”திருவரங்கத்தில் உமக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு இங்கே வந்தேன். உம்மை வாதத்தில் வென்று அத்வைதமே சிறந்த தத்துவம் என்று நிலை நாட்டப் பல வண்டிகளில் நான் எழுதிய நூல்களுடன் வந்திருக்கிறேன். இந்த மூட்டைகளில் எல்லாம் நான் எழுதிய ஓலைச்சுவடிகள். எப்போது வாதத்தை வைத்துக்கொள்ளலாம்? ” என்றார். பல வண்டிகளில் கட்டுக் கட்டாக ஓலைச்சுவடி மூட்டைகளும், யக்ஞ மூர்த்தியின் சீடர் கோஷ்டியும் திருவரங்க தெருவை அடைத்துக்கொண்டு இருந்தது

ராமானுஜர் “அரங்கன் விருப்பம் அப்படி என்றால் சரி” என்றார். யக்ஞ மூர்த்தி ராமானுஜரை விடவில்லை “நான் வாதத்தில் தோல்வியடைந்தால் உமது பாதுகைகளை என் தலை மீது சுமக்கிறேன். என் பெயருடன் உமது பெயரைச் சேர்த்துக்கொள்கிறேன். இவை மட்டும் இல்லை நீர் போதிக்கின்ற வைணவத்தை ஏற்கிறேன்!. நான் ஜெயித்துவிட்டால் ? நீர் என்ன செய்யப் போகிறீர்?” என்றார்.

ராமானுஜர் “ ஆழ்வார்கள் தொடங்கி, நாதமுனிகள், ஆளவந்தார் போதித்த வைணவம் என்றும் தப்பாகாது! திருகச்சிநம்பிகள் மூலம் அருளிய ஆறு வார்த்தைகளில் ஒன்று ’வேறுபாடே உண்மை’ என்பதாகும். அப்படி இருக்க நான் தோற்றால் அது எனது பலவீனத்தையே குறிக்கும்! தோல்வியை ஒப்புக்கொண்டு இனி வைணவத்தை யாருக்கும் போதிக்க மாட்டேன். வைணவம் சம்பந்தமாக எதையும் எழுதவும் மாட்டேன்!” என்றார்.

யக்ஞ மூர்த்தி “சரி! வாதத்துக்குத் தயாராக வாரும்!” என்று சிரித்துக்கொண்டு வண்டியில் ஏறிப் புறப்பட்டார். வண்டிகளும், சீடர்களும் சென்ற திருவரங்கம் வீதி முழுவதும் புழுதியில் நிரம்பியது.ராமானுஜர் “ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து…” என்ற திருப்பாவையைப் பாடிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

திருவரங்கம் தாயார் சந்நிதியின் எதிரில் கருத்துரை மண்டபத்தில் ராமானுஜர், யக்ஞ மூர்த்தி கோஷ்டிகள் எதிர் எதிரே அமர்ந்தார்கள். வாதம் தொடங்கியது. யக்ஞ மூர்த்தி வேதம், உபநிஷதம் எல்லாம் நன்கு கற்றவர் அதனால் வாதம் போர் போன்று காட்சி அளித்தது. வெற்றி தோல்வி இல்லாமல் பதினாறு நாட்கள் நடந்தது. நாட்கள் போகப் போக யக்ஞ மூர்த்தியின் வாதம் வலுப்பெற்றது.

பதினேழாவது நாள் யக்ஞ மூர்த்தியின் வாதம் வலுப்பெற்று ராமானுஜர் பதில் கூற முடியாமல் இருந்தார். யஞ்ன மூர்த்தி வெற்றி பெற்றதாகவே எண்ணி “என்ன ராமானுஜரே! நாளைக்குச் சந்திக்கலாம்! வெற்றி விழாவை ஏற்பாடு செய்யுங்கள்” என்றார்.

ராமானுஜர் வாடிய முகத்துடன் மடத்துக்கு வந்தார். ஆழ்வார் காலம் தொடங்கி ஆளவந்தார் காலம் வரை இணையற்று விளங்கிய வைணவத்துக்கு தன்னால் இழுக்கு நேர்ந்தது விடுமோ என்று கலங்கினார். அவர் நித்தியம் பூஜிக்கும் பேரருளாளன் விக்ரகத்தை சேவித்துவிட்டு “பல சோதனைகளிலிருந்து என்னை விடுவித்தாய். ஆனால் இன்றோ பெரிய சோதனை ஒன்றைக் கொடுத்துவிட்டாய்!” என்று வெறுத்த மனத்துடன் பெருமாளுக்கு அமுது படைத்துவிட்டு, தான் எதுவும் உண்ணாமல் உறங்க சென்றார்.

இரவு கனவில் காஞ்சி வரதராஜ பெருமாள் “இந்த தர்க்கத்தால் உமக்கு ஒரு நல்ல சிஷ்யனைத் தந்தோம். ஆளவந்தார் செய்த கிரந்தங்களை மறந்தீரோ ?” என்று கூறினார். ராமானுஜர் சட்டென்று எழுந்தார். அவர் மனதில் தெளிவு பிறந்தது. எப்போது பொழுது விடியும் என்று காத்துக்கொண்டு இருந்தார்.காலை நீராடிவிட்டு பேரருளாளனைச் சேவித்துவிட்டு ஆளவந்தாரையும் அவருடைய ஸ்லோகங்களையும் மனதில் தியானித்துக்கொண்டு சிங்கம் போல நடந்து சென்றார்.

யக்ஞ மூர்த்தி ராமானுஜரைப் பார்த்தார். அவர் முகத்தில் கம்பீரம் தெரிந்தது. அந்தக் கம்பீரத்தில் ஆணவம் தெரியாமல், ஞானம் ஒளிர்ந்தது. ராமானுஜருடன் பெருமாளும் எதிரே இருக்கும் திருவரங்க தாயாரும் துணை இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டார். உடனே ”நான் தோற்றேன்!” என்று ராமானுஜர் கால்களில் விழுந்தார் யக்ஞ மூர்த்தி.

இந்த திடீர் திருப்பத்தைக் கண்ட ராமானுஜரும் கூடியிருந்த சீடர்களும் வியந்தார்கள். ராமானுஜர் “தர்க்கம் வேண்டாமா ?” என்றார்.யக்ஞ மூர்த்தி “எம்மை மன்னிக்க வேண்டும். பெருமாளும், திருவரங்க ரங்க நாச்சியாரும் உம்ம பக்கம் இருக்கும் போது உங்களிடம் பேசக் கூட எனக்கு அருகதை இல்லை!” என்றார்.

யக்ஞ மூர்த்தியைத் தழுவிக்கொண்டு அவரை தாயார் சந்நிதி, பெருமாள் சந்நிதிக்கு அழைத்துச் சென்றார். பெருமாளைச் சேவித்துவிட்டு அவரை தன் மடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே ராமானுஜர் தினமும் பூஜிக்கும் பேரருளாளனைக் காண்பித்து “இந்தப் பேரருளாளன் அருள் தான் உம்மை என் பக்கம் சேர்த்தார்!” என்று கூறி யக்ஞ மூர்த்திக்கு “அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ என்ற பெயரைச் சூட்டிய போது ஆவர் பேரருளாளன் முன் விழுந்து சேவித்தார். ( பேரருளாளன் – அருளாளப் பெருமாள் அதையும் ராமானுஜரின் பெயரான எம்பெருமானார் இரண்டையும் சேர்த்து வைத்தார்)

ராமானுஜர் தன்னுடைய சிஷ்யர்களான அனந்தாழ்வான் எச்சான் போன்றவர்களை அவருக்குச் சிஷ்யராக்கினார். பிறகு ”வாரீர் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரே ! என்று அழைத்து இனி நான் தினமும் திருவாராதனம்(பூஜை) செய்யும் பேரருளாளப் பெருமானுக்கு நீரே திருவாராதனம் செய்ய வேண்டும்!” என்றார்.

“சாமி! இப்படி அத்வைத வாதத்தை முறியடிக்கும் அளவிற்கு எனக்கு பெருமாள் அருளும், அறிவு இல்லையே! அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள்.

அப்போது ஒரு சிஷ்யர் “பெண்ணே! ராமானுஜர் செய்த வாதங்கள் பற்றித் தெரியுமா ?” என்றார்“சாமி! அந்த அளவிற்கு எனக்கு அறிவு இல்லையே, உலகமே மாயை என்கிறது அத்வைதம். ஆனால் அப்படி இல்லை என்கிறது வைணவம். இதற்கு மேல் நீங்கள் தான் அதை விளக்க வேண்டும்!” என்று ராமானுஜரைப் பார்த்தாள்.

ராமானுஜர் சிரித்துக்கொண்டு “பெண்ணே! நாராயணனே பரம் பொருள். அவனே பிரம்மம். இந்த ஆகாசத்துக்குப் பிறகு என்ன இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா ? “ என்றார்.”ஆகாசத்துக்குப் பிறகு ஆகாசம் அதற்கு பிறகு என்ன என்று தெரியாது!” என்றாள்.

.

”உண்மை அதற்குப் பிறகு என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. அதை அறிந்துகொள்ள முடியாது. அது போலத் தான் பிரம்மம் என்ற நாராயணன். அவனை அறிந்துகொள்ள முடியாது. அவனை அறிந்துகொள்ள முடியாது என்று அறிந்துகொள்வது தான் ஞானம்” என்றார்.

அந்தப் பெண் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று கூர்ந்து கவனிக்க ராமானுஜர் ”பெண்ணே நாராயணன் ஒருவனே இருந்தான். இந்த நீர், காற்று, அக்னி, நிலம், ஆகாயம், மரம், செடி, கல், மண், விலங்குகள், மலை, நீ, நான், பிரம்மாவும் மற்ற தேவதைகள் எல்லாம் தன்னுள்ளிருந்து தோற்றுவித்தான் நாராயணன். பிரளய காலத்தில் இவை எல்லாம் மீண்டும் நாராயணன் உள்ளே சென்றுவிடும்!” என்றார்.

இது எப்படிச் சாத்தியம் என்று அந்தப் பெண் புரியாமல் விழித்தாள். ராமானுஜர் “பெண்ணே அந்த மரக்கிளையில் என்ன தெரிகிறது ?” என்றார்அந்தப் பெண் “ஒரு சிலந்தி வலை பின்னியிருக்கிறது” என்றாள்.”இந்த வலையைச் சிலந்தி தன்னிடமிருந்து உருவாக்குகிறது பிறகு அதைத் தானே விழுங்கவும் செய்கிறது. ஒரு சாதாரணச் சிலந்தி இதைச் செய்ய முடிந்தால், நாராயணன் என்னவெல்லாம் செய்ய முடியும் ? நாராயணனே எல்லா இடத்திலும் இருக்கிறான் அவனே எல்லாவற்றையும் செய்விக்கிறான்!” என்றார்.

அப்போது சில தூறல் விழ “பெண்ணே! மழை வரும் போல இருக்கிறது உன்னுடைய தயிர்ப் பானைகளை மரத்துக்குக் கீழே நனையாத அந்த இடத்தில் வை!” என்றார். சில சிஷ்யர்கள் அவளுக்கு உதவியாக பானைகளை எடுத்து மரத்துக்குக் கீழே வைத்தார்கள்.”பெண்ணே! இந்தப் பானை உள்ளே தயிர் இருக்கிறது நெய்யும் , புல்லும் கூட இருக்கிறது அல்லவா ?” என்றார் ராமனுஜர். அந்தப் பெண் யோசித்துவிட்டு “ஆம் சாமி ! மாடு புல்லைத் தின்று பால் கொடுத்தது. பால் தயிர் ஆனது. தயிரைக் கடைந்தால் வெண்ணெய். அதைக் காய்ச்சினால் நெய்!” என்றாள்.

“இது போலத் தான் பெருமாள் எல்லோரிடத்திலும் மறைந்து கொண்டு பல ரூபங்களில் இருக்கிறார்!” என்றார்அந்தப் பெண் வியந்து பார்த்த போது மேலும் சில தூறல் விழுந்தது.“குழந்தாய்! இந்த மழைத் துளியும் பெருமாள் தான்!” என்றார் ராமானுஜர்.

அந்தப் பெண் புரியாமல் விழித்த போது. “பிள்ளாய்! மேலே மேகத்தில் தண்ணீர் இருக்கிறது ஆனால் நம் கண்களுக்கு அவை தெரிவதில்லை. அது போல பெருமாள் பரம் பொருளாக மேலே இருக்கிறார்.கடலில் தண்ணீர் இருக்கிறது ஆனால் கடலின் அளவு, அதன் ஆழம் நமக்குத் தெரியாது அது போல பெருமாள் வியூகம் அமைத்துக்கொண்டு வியூக மூர்த்தியாகவும் இருக்கிறார். அவர் என்ன வியூகம் அமைக்கிறார் என்று நமக்குத் தெரியாது.இதோ இந்தத் தூறல் கீழே விழுகிறது. பெருமாள் பல அவதாரங்கள் செய்து கீழே மழை போல வருகிறார். மழையினால் இந்தப் பூமி செழிப்பு அடைகிறது அது போல அவதாரங்களால் நம்மை ரக்ஷிக்கிறார். ( விபவம் )

நாம் உருவாக்கும் ஏரிகளிலும், கிணறுகளிலும் தண்ணீர் இருக்கிறது. அது போல பெருமாள் விக்கிரக ரூபத்தில் ( அர்ச்சை) குடிகொண்டு இருக்கிறான்.இந்தப் பூமிக்கு அடியிலும் தண்ணீர் ஓடுகிறது. அது நம் கண்களுக்குத் தெரியாது அது போல அந்தரியாமியாக எல்லா இடத்திலும் மறைந்தும் இருக்கிறான்.ஆழத் தோண்டினால் நீர் புலப்படும். ஆழ்வார்களைப் போல ஆழ்ந்த பக்தியில் ஆழத் தோண்டினால் பெருமாள் நம் கண்களுக்குப் புலப்படுவான்!” என்றார்.குட்டிப் பெண் பேசமுடியாமல் அப்படியே நின்றுகொண்டு இருந்தாள்.

ராமானுஜர் தொடர்ந்தார் “இதே தண்ணீருக்கு நிறம் இல்லை ஆனால் மரத்துக்கு அடியில் தண்ணீரைப் பார்த்தால் பச்சையாகத் தெரியும், குளத்தைப் பார்த்தால் நீல நிறமாக இருக்கும். கையில் எடுத்தால் தண்ணீருக்கு நிறம் கிடையாது. அது போலத் தான் பெருமாள். அவனை இந்த நிறம் என்றும் நிறம் அற்றவன் என்றும் கூற முடியாது!

”“அருமை சாமி!” என்றாள் அந்தப் பெண்“பெருமாள் நீர் போன்றவன். நீரின் தன்மை பள்ளத்தை நோக்கியே பாய்வது. அது போல நம்மை நோக்கியே பெருமாள் வருவார். நீரில் இல்லாமல் இந்த உலகத்தில் ஒரு ஜீவனும் பிழைத்திருக்க முடியாது. இந்த மரத்துக்கும் நீர் வேண்டும், அதில் இருக்கும் குருவிக்கும், கீழே நிற்கும் உனக்கும் எனக்கும் நீர் வேண்டும். நீர் போல எல்லா ஜீவனுக்கும் பெருமாளே ரட்சகன்.

நீரின் தண்மை குளிர்ச்சி, வெந்நீராக இருந்தாலும் சற்று நேரத்தில் அது குளிர்ந்துவிடும். அது போல பெருமாள் பக்தர்களுக்குக் குளிர்ச்சியானவன்.அதே வெந்நீர் நம் மீது பட்டுவிட்டால் அதற்கு மருந்தும் நீரே ( குளிர்ந்த நீரை ஊற்றுவது) அது போல பெருமாளே நமக்கு மருந்தும் ஆகிறான்.

நீருக்கு ஒரு வடிவம் கிடையாது. பானையில் இருந்தால் பானையின் வடிவத்தை எடுத்துக்கொள்ளும், கிணற்றில் இருந்தால் கிணற்றின் வடிவத்தை எடுத்துக்கொள்ளும். அது போல பெருமாள் நாம் விரும்பும் வடிவத்தை எடுத்துக்கொள்வார்.நீர் பிறருக்கே பயன்படும். நீர் என்றுமே நீரைக் குடிக்காது.

அது போல பெருமாள் பக்தர்களுக்கே எப்போதும் பயன்படுவார்.கொஞ்சம் இடம் கொடுத்தாலே நீர் உள்ளே புகுந்து அந்த இடத்தை ஆக்கிரமித்துவிடும். அது போல ‘ராமா! கிருஷ்ணா! கோவிந்தா !’ என்று அஜாமிளன் போல் தெரியாமல் அவன் பெயரை உச்சரித்தாலே அவன் நம் மனத்தின் உள்ளே புகுந்து நம்மை ஆக்கிரமிக்கத் தொடங்குவான்.

மிகச் சிறிய கல் நீரில் விழுந்தால் மூழ்கிவிடும். ஆனால் பெரிய மரக்கட்டை நீரில் மிதக்கும். தலை கணம் இருந்தால் மூழ்கிவிடுவோம். பக்தி இருந்தால் அதில் மிதக்கலாம்.வற்றிய ஆற்றில் மேடு பள்ளம் எல்லாம் தெரியும். ஆனால் ஆற்றில் நீர் ஓடும் போது மேடு பள்ளம் தெரியாது அது போலப் பக்தர்களிடம் ஏற்ற தாழ்வு பார்க்க மாட்டார் பெருமாள்.

”அருமை சாமி! பெருமாளின் குணங்களைப் புரிய வைத்துவிட்டீர்கள்!” என்றாள் அந்தச் சின்னப் பெண். ராமானுஜர் ”என்ன புரிந்துகொண்டாய் பெண்ணே ?” என்று கேட்க அதற்கு அந்தச் சின்னப் பெண்

வனே எல்லோரையும் படைப்பவன்
அவனே எல்லா இடத்திலும் இருப்பவன்
அவனே அல்லவற்றையும் நடத்தி ஆள்பவன்
அவனே பெரும் சக்தி படைத்தவன்
அவனே தெய்வம்.
அவன் தான் நாராயணன்”

அப்போது ஒரு சிஷ்யர் “பெண்ணே! ஆழ்ந்த விஷயங்களைச் சுலபமாய் சொல்லிவிட்டாய்!” என்றார்

“அருளாழி(ழங்) கண்டேனோ நல்லானைப் போலே!”

”கார்மேகம் பொழியப் போகிறதா அடுத்து! நீர் நம்மை இன்று விடாது போல இருக்கிறதே!” என்றார் ராமானுஜர் சிரித்துக்கொண்டு.

(Visited 446 times, 1 visits today)
Tags

One Comment

  1. Can i get a total story of thirukolur pen pillaiyar ragasiyam in PDF in Tamil.

    Because i wanted to take print in bold and big font and gift it to my mother. She is 82 years old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close