ஆன்மிகம்செய்திகள்

கந்த சஷ்டி கவசம் – பாரதி தமிழ் சங்கம்

இறை நம்பிக்கை கொண்டிருக்கும் தமிழர் ஒவ்வொருவரும் கந்த சஷ்டி கவசத்தினை ஒரு முறையாவது கேட்டிருப்பர். மனப்பாடமாகத் தெரியாவிட்டாலும் சில வரிகளாவது அவர்கள் வாய் முணுமுணுத்திருக்க, மனம் முருகனைத் தொழுதிருக்கும். சூலமங்கலம் சகோதரிகள் குரலில் கந்த சஷ்டிக் கவசத்தினைக் கேட்டிராதோர் யார்? மனப்பாடமாகக் கவசத்தினைப் பாராயணம் செய்யத் தெரிந்தவர்களுக்குக்கூட அதன் வரலாறு தெரியாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது. கந்த சஷ்டி கவசத்தை இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள். 12-ம் நூற்றாண்டு காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள் கொண்டது சஷ்டி கவசம்.

பாலதேவராய சுவாமிகள் ஒருசமயம் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். என்னென்னவோ செய்தும் குணமாகாத தீராத வலியால் அவதிப்பட்டவர் கடலில் விழுந்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அப்போது அங்கு கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது.

கந்த சஷ்டி ன்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையைக் கொண்டாடும் விழா. சஷ்டி என்றால் ஆறு. ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் விரத நாட்களாக கருதுகின்றனர். ஆறு நாட்கள் நடைபெற்ற சூர சம்ஹாரத்தின் முடிவில் முருகன் மாமரமாக நின்ற சூரனை வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும், மயிலுமாக மாறவும், சேவலைக் கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்த புராணத்தில் சொல்லப்பட்டுள்ள நிகழ்வு. கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று துர்குணங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஆன்மாவைத் துன்புறுத்தும் இக்குணங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்ஹாரமாகும்.

தீவிர முருக பக்தரான பாலதேவராய சுவாமிகள் அத்திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் தயங்கி, திருவிழா முடிந்ததும் உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என்று எண்ணி முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். முருகப் பெருமானின் அருளில் பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது. “சஷ்டியை நோக்க சரவண பவனர் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்…” என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார். அதற்கு அடுத்த ஐந்து நாட்களிலும் முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். ஆறு சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது.

கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார். அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார்.

முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி. இது ஆறு நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இதேபோல், முருகப்பெருமானுக்கு முகங்களும் ஆறு. முருகனின் படை வீடுகளும் ஆற. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் ஆறு பேர், சரவணபவ என்ற முருகப்பெருமானின் திருமந்திரமும் ஆற எழுத்து. ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றை குறிக்கும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான். அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற ஐந்து அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய சுவாமிகள் இயற்றிய சஷ்டி கவசங்களையும் பாராயணம் செய்வது நல்லது.

ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது, மனம் வாடாது, குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம், நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள், குழந்தை பாக்கியம் கிட்டும்…. இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.

சமீபத்திய காலங்களில் நாத்திகம் என்ற பெயரால் இந்து மதத்தையும், இந்துக்களின் நம்பிக்கையையும் இழிவு செய்யும் போக்கு மிகவும் அதிகரித்துள்ளது. இந்துக்கள் நல்லிணக்கத்தினை விரும்புபவர்கள். நாத்திகமும் ஆத்திகத்தின் ஒரு கூறே என்று நம்புபவர்கள். நம்பிக்கையற்றோர் நம்பிக்கையுள்ளோரை இழிவு செய்வது தகாது. எவ்விதமான மொழியறிவோ, இலக்கிய அறிவோ, ஆன்மீக அறிவோ இன்றி இறை மறுப்பு என்ற பெயரிலும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரிலும் இறை நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் காயப்படுத்தும் போக்கினை பாரதி தமிழ்ச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

உலகமெங்கும் பரந்திருக்கும் கோடனுகோடித் தமிழர்கள் தங்கள் தெய்வமாய்த் தொழும் கந்தனின் சஷ்டி கவசத்தினைப் பாராயணம் செய்ய நம்பிக்கையுள்ளோர் அனைவரையும் பாரதி தமிழ்ச் சங்கம் அழைக்கிறது.

வரும் ஞாயிறு ஜூலை 19, 2020 மாலை 6:00 மணி (PST) க்கு இணையம் மூலமாக அவரவர் வீட்டிலிருந்தே கலந்துகொள்ளும் வகையில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சியை பாரதி தமிழ்ச் சங்கம் நடத்துகிறது. விரும்புவோர் உடனடியாகத் திருமதி சியாமளா ரகுராம் அவர்களை syamala.raghuram@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
இந்நிகழ்ச்சி எமது முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பாகும்.

வெற்றி வேல்! வீர வேல்! ஓம் முருகா ஓம்!

(Visited 209 times, 1 visits today)
Tags

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close