இந்தியாசிறப்புக் கட்டுரைகள்செய்திகள்

வழக்கம் போல அவதூறுதான் 

பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் பிஎம் கேர்ஸ் நிதிக்கான தகவல்கள் அவற்றுக்கான வலைத்தளங்களில் விபரமாக இருந்த போதிலும் சமூக வலைத்தளங்களில் மீண்டும் மீண்டும் இது குறித்தான புரிதலற்ற சர்ச்சைகளைக் காண முடிகிறது. காங்கிரஸின் விஷமத்தனமான தகவற்பிழைகளுடன் மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்படும் குழப்பங்களைத் தாண்டி பிஎம் கேர்ஸ் நிதியின் பரந்துபட்ட நோக்கம், அமைப்பு, வருவாய் குறித்த தகவல்களைப் பார்ப்போம். எதிர்கட்சிகளால் முக்கியமாக காங்கிரஸால் எழுப்பப்படும் கேள்விகள்

  1. ஏற்கனவே தாராளமான நிதிகளுடன் பிரதம மந்திரி நிவாரண நிதி இருக்கும்போது புதிதாக பிஎம் கேர்ஸ் நிதிக்கான அவசியம் என்ன?
  2. பிரதம மந்திரி நிவாரண நிதியின் ட்ரஸ்டியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் இருக்கும்போது பிஎம் கேர்ஸில் அவர்களை ஏன் சேர்க்கவில்லை?

இது போக

  1. மத்தியத் தணிக்கை அதிகாரி பிஎம் கேர்ஸ் கணக்குகளை தணிக்கை செய்ய மறுத்தார்.
  2. தகவலறியும் சட்டம் பிஎம் கேர்ஸுக்கு ஏன் இல்லை போன்ற கூடுதல் அபத்தக் கேள்விகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வலம் வருகின்றன.

பிரதமரின் நிவாரண நிதி என்பது 1948ல் ஜவகர்லால் நேரு அவர்களால் பாகிஸ்தானிலிருந்து புலம் பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப் பட்டது. தற்போது இந்த பி.எம்.என்.ஆர்.எப். நிதி ஆதாரமானது, இயற்கைச் சீற்றங்களான வெள்ளம், புயல், பூகம்பம் போன்றவற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடி உதவி அளிக்க பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் பெரிய விபத்துகள், கலவரங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரணம் வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. மேலும், பி.எம்.என்.ஆர்.எப். உதவி மூலம், இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சைக்கான செலவு பகுதியளவு வழங்கப்படுகிறது. இந்த நிதியானது முற்றிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் மட்டுமே செயல்படுகிறது. இதன் தலைவராக பிரதமரும் அவருக்கு உதவியாக இணைச்செயலரும் அலுவலர்களும் இருப்பார்கள். சிகித்சைக்கான உதவித் தொகை அரசு மருத்துவமனை மற்றும் நிதியின் அங்கீகரிக்கப் பட்ட மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுபவருக்கு மட்டுமே வழங்கப்படும். இது பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப் பட்டதல்ல. வருமான வரிச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அறக்கட்டளை நிதியம் மட்டுமே. இந்தத் தகவல்களின் மூலம் இந்த நிதியின் பயன்பாடு இடற்பாடுகளுக்குப் பின்னான பாதிப்புக்குள்ளோருக்கான குறைந்த அளவிலான நிதியுதவியென்பது தெளிவாகிறது. இந்த உதவியைப் பெறத் தகுதிகள், சூழ்நிலைகள், நிதியுதவிக்கான ஆணைகளைப் பெறுவது ஆகியவை முன்பே வரையறுக்கப்பட்டவை என்பதுடன் சிக்கல் அதிகமில்லாததுமாகும்.

ஆனால் வருமுன் காக்கவோ பாதிப்புக்குள்ளாகும் சமயத்தில் ஏற்படும் அவசரநிலை இடர்களுக்கோ இந்த நிதியத்தின் நிதி நிலை மற்றும் உதவித் தொகை மிகச் சிறியது. இத்தகைய சூழல்களை எதிர் கொள்ள வேண்டுமாயின் பெரிய அளவிலான நிதிநிலை அவசியம். ஆகவே அதற்கான நிதிபெறும் வழி வகைகள் விரிவாக்கப் படவேண்டும். போலவே நிவாரணம் என்பது சிறிய அளவிலான தொகை என்பதிலிருந்து மேம்பட்ட ஆராய்ச்சி, கட்டமைப்புகள், இருக்கும் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் ஆகிய பல வழி முறைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதே பிரதம மந்திரி – கேர்ஸ் என்னும் பொது அறக்கட்டளை.

பிரதமரின் நிவாரண நிதி போலன்றி இந்த நிதியத்தின் குறிக்கோள்கள்

  1. மக்களின் சுகாதாரத்தை பாதிக்கும் அல்லது வேறெந்த வகையிலான அவசர நிலை, இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ உண்டாகும் பேரிடர் அல்லது இடர்ப்பாடுகளால் பாதிப்படைபவர்களுக்கான எல்லா விதமான நிவாரணங்கள் மற்றும் உதவிகள். இதில் மக்கள் சுகாதாரத்துக்கான மருத்துவ மனைகள், மருந்தியல் வசதிகள் ஆகியவற்றை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல், அதற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குதல், அது தொடர்பான ஆராய்ச்சிக்கான நிதியுதவி மற்றும் இதர உதவிகளை வழங்கல்
  2. அறங்காவலர்களின் முடிவின் படி தேவையான நிதியுதவி, கொடைகள் மூலமாக பணம் வழங்குதல் மற்றும் மேலதிகத் தேவையான நடவடிக்கைகள்
  3. மேற்கண்ட குறிக்கோள்களுக்குட்பட்ட வேரெந்த நடவடிக்ககைளை மேற்கொள்ளுதல் ஆகியன.

இவற்றின் மூலம் பிரதமரின் நிவாரண நிதியின் பயன்பாடுகளும் பிம் கேர்ஸ் நிதியின் பயன்பாடுகளும் எந்த அளவுக்கு மாறு பட்டவை என்பது எளிதில் விளங்கும். இந்தப் பரந்துபட்ட தேவைகள், அதற்கான உதவிகளை நிர்ணயிக்க, இது தொடர்பான நடைமுறைச் சட்டங்கள், ஆணைகளை முடிவு செய்ய நவீன முறையிலான ஒரு கட்டமைப்பின் தேவை இருப்பதால் பிரதமரைத் தலைவராகக் கொண்டு சுகாதாரத் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் நிதித் துறை மந்திரிகளை அரசுத் துறையிலான மூன்று அறங்காவலர்கள் கொண்ட அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது. அரசுத்துறை தவிர்த்து பொதுமக்களின் சார்பில் ஆராய்ச்சி, சுகாதாரம், விஞ்ஞானம், சமூகச் சேவை, சட்டம், பொது நிர்வாகம், கொடையாளிகள் ஆகியோரில் சிறந்தவர்களில் மூவர் கூடுதலாக அறங்காவலாராக பிரதமரால் நியமிக்கப்படுவர். இந்த அறங்காவலர்கள் முற்று முழுதாக ஒரு சேவையாகவே பணிபுரிவர். அதற்கான ஊதியம் எதுவும் வழங்கப்பட மாட்டாது.

பிரதமரின் நிவாரண நிதி போலவே தன்விருப்ப அடிப்படையில் தனிநபர்கள் அளிக்கும் பண உதவியோடு, மத்திய அரசின் நிதி உதவி பெறாத பொதுத் துறை நிறுவனங்களும், கம்பெனிகளும் பணம் வழங்கலாம். இதில் முக்கியமாகப் பாராட்டப் படவேண்டிய அம்சம் நிறுவனங்கள் வழங்கும் தொகையை கம்பெனிகள் சட்டத்தின் கீழ் சி எஸ் ஆர் எனப்படும் பெருநிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்பின் கீழ் வழங்க வேண்டிய கொடைகளில் கழித்துக் கொள்ளலாம். ஒரு நிறுவனம் தன்னிச்சையாக செலவழிக்கும் தொகை இந்த நிதியின் மூலம் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரு பெரிய நோக்கத்துக்காக தேசம் முழுவதுக்குமான ஒரு உதவியாக அமையும் என்பது இந்த நிதியின் சிறப்பு அம்சமாகும்.

பிரதமரின் நிவாரண நிதி போலவே அயல்நாட்டு தனி மனிதர்களின் உதவிகளோடு நிறுவனங்களின் உதவியும் பெற இந்த நிதிக்குத் தகுதி உண்டு.

காங்கிரஸால் தொடர்ந்து தவறாக பரப்பப்படும் தகவலான காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரதமர் நிவாரண நிதியின் அங்கத்தினராக இருப்பது போல் பி எம் கேர்ஸிலும் ஒரு ட்ரஸ்டியாக நியமிக்கப்பட வேண்டும் என்பது காலாவதியானது. 1985ல் ராஜீவ்காந்தி பிரதமரானதுமே பிரதமர் நிவாரண நிதியின் முழுப் பொறுப்பும் பிரதமருக்கே வழங்கப்பட்டது. அதன் பிறகு அதில் வேறெந்த அங்கத்தினரும் இல்லை.

அதைப் போலவே மத்தியக் கணக்கதிகாரி தணிக்கை செய்ய மறுத்ததாக வந்த தகவலும் திரிக்கப்பட்ட செய்தியாகும். பிரதமந்திரி நிவாரண நிதி மற்றும் பி எம் கேர்ஸ் நிதி இரண்டுமே அறக்கட்டளைகள் என்பதால் அது மத்திய கணக்கதிகாரியின் தணிக்கைக்கு உட்பட்டதல்ல என்பதே உண்மை நிலை.

தகவலறியும் உரிமைச் சட்டத்துக்கு இப்போதைக்கு பிரதமரின் நிவாரண நிதி மற்றும் பி எம் கேர்ஸ் இரண்டுமே உட்பட்டதல்ல. 2018ம் ஆண்டு பிரதமரின் நிவாரண நிதி தகவலறியும் உரிமைச் சட்டத்துக்கு உட்பட்டதா இல்லையா என்பது குறித்த ஒரு வழக்கில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் இரு வேறு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்ததால் உச்ச நீதி மன்றத்தில் நிலுவையிலிருக்கும்போது சட்டத்திற்குப் புறம்பாக பி எம் கேர்ஸ் நிதி மட்டும் தகவலறியும் சட்டத்திற்கப்பாற்பட்டது என விஷமத்தனமான கருத்துகளைப் பரப்புவது சட்டத்துக்கு புறம்பானதுமாகும்.

இரு வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளைகளை அடிப்படையிலிருந்து மாற்றிக் கட்டமைப்பதை விட, குறிப்பிட்ட நிவாரணங்களுக்காக எளிமையான வழி முறைகளோடு கடந்த 72 வருடங்களாக இயங்கி வரும் ஒரு அறக்கட்டளையின் வழி முறைகளை புதிய வழிமுறைகள்/சட்டங்களைப் புகுத்துவதன் மூலம் கடினமானதாக்குவதை விட, எல்லா விஷயத்தையும் கருத்தில் கொண்டு இரு வேறு அறக்கட்டளைகளாக அமைத்திருப்பது மிகவும் பாராட்டப் படவேண்டிய முடிவாகும். அதை விடுத்து மேம்போக்காக ஊகத்தின் அடிப்படையில் நோக்கம் கற்பித்து கேள்வி எழுப்புவது அறமாகாது.

(Visited 219 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close