சங்கப்பாடல்களை எப்பவுமே கோனார் நோட்ஸ் வச்சோ, அல்லது தமிழ் வாத்தியார்கள் துணையோடயோ படிக்கக்கூடாது…. அது சாறு புழியப்பட்ட சக்கையை சாப்பிடுவது மாதிரி…. நானு ப்ளஸ் 1, ப்ளஸ் 2 காலத்துலயே நோட்ஸ் படிச்சி அர்த்தம் தெரிஞ்சிக்க மாட்டேன்… அப்பப்ப பாட்டு பதம் பிரிக்கிறதுக்கு மட்டும் நோட்ஸ் புரட்டுவேன்… அசெம்ப்ளி இலக்கியம் வாசிக்கிறதுக்காக அப்பப்போ சரவணமுத்து சார்கிட்ட உரையாடுவேன்.. அவர் சொன்ன சின்னச் சின்ன குறிப்புகள்தான் எனக்கு ஆரம்பம்… ஆனா இது அவருக்கே தெரியுமான்னு எனக்கு தெரியாது… அப்புறம் மிக நீண்டகாலம் கழிச்சி ஜெயமோகனோட “சங்கச் சித்திரங்கள்” தொடர் விகடன்ல வந்தப்போ முதல் கட்டுரையை பார்த்த நினைவு இன்னும் நினைவிருக்கு.. முதல்முதல்ல ஒரு பாட்டை இப்டியெல்லாம் வாசிக்க முடியும்னு தெரிஞ்சிகிட்டப்ப மனசுக்குள் யாரோ வீணை மீட்டுற மாதிரி இருந்திச்சி எனக்கு.
ஒரு சங்கப் பாட்டை எடுத்துக்கிட்டோம்னா அதுல மிக நுட்பமான நிலவியல் குறிப்புகளும, வாழ்க்கை தரிசனங்களும் இருக்கும்… அதுவும் ஒண்னு ரெண்டு வார்த்தைகள்ல ரொம்ப பெரிய விஷயத்தை சொல்லி இருப்பாங்க…
நேத்து நைட்டு நானு யூட்யூப்ல முறைமாமன் படத்துல வர்ற “ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் வந்ததே “ பாட்டு தேடி எடுத்து கேட்டுட்டு இருந்தேன்.. அப்போ சைட் பார் லிஸ்ட்ல இன்னொரு பாட்டு காட்டிச்சு… “மஞ்சணத்திப் பூவே இளம் பிஞ்சுக்குருவிகளே” பாட்டு… எனக்கு சட்டுன்னு அந்த பூவோட பேர் ஈர்த்துச்சி… அந்த பாட்டை கேட்டுட்டு அந்த பூவைப் பத்தி கூகுள்ல செர்ச் பண்ணினேன்… மஞ்சணத்தி மரம் பத்தியும் பூ பத்தியும் நிறைய தகவல்கள். மஞ்சணத்தின்னா வேறொண்ணுமில்லை.. நம்ம ஏரியால நுணா மரம் பாத்துருக்கீங்களா?! அதான்..
நுணா மரத்தோட ஒவ்வொரு பகுதியும் மருத்துவ குணம் கொண்டது… பூ அழகா மல்லிகைப்பூ மாதிரியே இருக்கும் அசப்புல.. நல்ல வாசம் வரும்… முக்கியமா ரொம்ப லேசான எடை…. எடை லேசா இருக்குன்னு குறைச்சி எடை போட்டுட முடியாது… ரொம்ப ஸ்ட்ராங்க்… லேசான எடையும், ரொம்ப வலிமையும் இந்த மரத்தோட ஸ்பெஷல்ங்கிறதால வண்டிமாட்டுக்கான நுகத்தடி நுணா மரத்துல தான் பண்ணுவாங்க… நுணாப்பழமும் ரொம்ப சத்துக்களும், மருத்துவ குணமும் கொண்டது.. நோனி ஜூஸ் ஞாபகம் இருக்கா யாருக்காச்சும்?! நுணா மரம் இளவேனில் காலத்துல பூத்துக் குலுங்கும்…
இப்போ பாட்டுக்கு வருவோம். காதலி காதலனைப் பிரிஞ்ச ஏக்கத்துல மருகிகிட்டு இருக்கா…. அவனோ பணம் சம்பாதிக்க வெளியூர் போயிட்டான்.. இளவேனில் காலம்.. பூமியெங்கும் பூத்துக்குலுங்கும் காலம்.. எல்லா உயிர்களும் காதல்ல ஊறித் திளைக்கும் காலமது… அவளுக்கும் அந்த ஏக்கம் இருக்கும்தானே?! காதலனைத் தழுவி அவனுக்குள் தன்னைக் கரைச்சிகிட்டு மூழ்கணும்னு!!! அவ எப்படிப்பட்ட பொண்ணுன்னா ஏற்கனவே காதலனோட பிரிவுல ஏங்கித் தவிச்சி உடல் மெலிந்து எடையற்று இருக்கா… ஆனா அவளோட காதல்மனம் ரொம்ப வைராக்கியமானது…ஆமா… அவளும் ஒரு மஞ்சணத்தி மரம்தான்…. ஆயுள் முழுக்கக்கூட அவ அவனுக்காகக் காத்திருப்பா… அந்த மஞ்சணத்திப் பூ மாதிரியே அவளும் தன்னைச் சுற்றி அன்பெனும் நறுமணத்தை மலரவிடும் ஒரு பெண்… உடலால் மட்டுமல்ல… உள்ளத்தாலும் பேரழகியவள்… தன்னோட காதலனுக்கு நுணாவைப் போலவே நன்மையையும் சுகந்தத்தையும் மட்டுமே தருகின்ற காதலாள் அவள்!!!
பாடுறா… ”நல்லா ஆரோக்கியமா வளர்ந்த அடிமரத்தையும், பரந்து விரிந்த கிளைகளையும் கொண்ட நுணா மரம் இந்த இளவேனில்ல பூப்பூவா பூத்துக் குலுங்குதுடா (தன்னை மாதிரியே)… அந்த மஞ்சணத்திப் பூக்கள்ல ஊறும் தேனை வண்டினங்கள்லாம் குடிச்சிக் கிறங்கி ஆடிப் பாடிட்டு காதல் விளையாடிட்டு இருக்குதுங்க… காதல் பூக்கும் இந்த இளவேனில்ல நானும் உனக்காகப் பூத்து தேனூறி நிக்கிறேன் உனக்காக… ஆனா உன்னை இன்னும் காணலையே….”
எவ்ளோ ஏக்கம்! எவ்ளோ காதல்!! இப்படி காதலாகிக் குலுங்கும் ஒரு பொண்ணுகிட்ட பூரணச் சரணாகதி அடையாம அவனால இருக்க முடியுமா என்ன?!
“அவரோ வாரார் தான் வந்தன்றே
சுரும்புகளித் தாலும் இருஞ்சினைக்
கருங்கால் நுணவம் கமழும் பொழுதே,”
நுணவம் – நுணா
பாட்டு :ஐங்குறுநூறுல 342 வது பாட்டு… எழுதுனது ஓதலாந்தையார்..
எண்ணமும் எழுத்தும்
ராஜாராமன் – திருத்துறைப்பூண்டி